kuthoosi gurusamy 300காலி நெற்றி உலக இயற்கை. காலி மூளை அப்படியல்ல!

காலி நெற்றியினால் ஆபத்து எதுவுமில்லை! காலி மூளையினால் ஆபத்துண்டு!

உலகில் 220 கோடி மக்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். இவர்களில் 219 முக்காலே மூன்று வீச சொச்சம் பேருக்குக் காலி நெற்றிதான்! பிராமணர்களில் நல்லவர்கள் இருப்பது போல், ஏதோ ரொம்ப ரொம்ப அபூர்வமாகத்தான் நெற்றியில் சித்திரம் வரைகிறவர்கள் இருக்கிறார்கள்!

“டேய்! ரெங்கநாதா! அவன் நெற்றியிலே சாணியைப் பூசடா! நெற்றிக் கிட்டுக்காமல் வந்திருக்கிறான்,” - என்கிறார்களாம், சில பள்ளி ஆசிரியர்! மதமற்ற சர்க்கார் இது! மதம் பிடித்த பள்ளி ஆசிரியர்கள் இன்னமும் வீட்டுக்கனுப்பப் படாமலிருக்கிறார்கள்! பாடம் சொல்லித் தர வேண்டிய பள்ளி ஆசிரியர் நெற்றி ஆராய்ச்சி செய்வானேன்? நல்ல வேளையாக இந்த ஈனப்புத்தி பெண் ஆசிரியர்களிடம் இருப்பதில்லை. பெண்கள் விபூதியோ திருமண்ணோ சாத்திக் கொள்ளாமல் விதவிதமான பொட்டுக்கள் இட்டு வருவது கண்டிக்கத் தக்கது! நெற்றிக் குறி ஆராய்ச்சி ஆண் ஆசிரியர்கள் கச்சையை வரிந்து கட்டிப் புறப்படுவார்களாக!

இதே போல் கடவுள் வாழ்த்து என்ற பெயரால் கிட்டத்தட்ட எல்லாப் பள்ளிகளிலும் வலுக் கட்டாய ஆஸ்திக இஞ்செக்ஷன் தரப்பட்டு வருகிறது! இதில் மொழிச் சண்டை, மதச் சண்டை வரக்கூடிய முறைகளும் கையாளப்படுவதாகத் தெரிகிறது.

நெற்றிக் குறியும் கடவுள் வாழ்த்தும் பள்ளியில் அவ்வளவு முக்கியமென்றால், கீழ்க்கண்ட மாற்றங்கள் அவசியமாகும்:-

  1. கரும் பலகையை எடுத்துவிட்டு கிருஷ்ணன் சிலையோ அல்லது லிங்கமோ வைக்கப்பட வேண்டும்!
  2. அட்லாசுக்குப் பதிலாக எல்லா மாணவர்களும் நாள்தோறும் பஞ்சாங்கம் கொண்டு வர வேண்டும்!
  3. பென்சில், பேனா, ஸ்கேல் முதலியவைகளுக்குப் பதிலாக விபூதிப்பை, திருமண் பெட்டி, ஜால்ரா, கெஞ்சிரா முதலியவைகளைக் கொண்டு வர வேண்டும்!
  4. பூகோளம், ரசாயனம், சரித்திரம், கணக்கு இங்கிலீஷ்-முதலிய உதவாக்கரைப் பாடங்களைப் படித்து நேரத்தைப் பாழாக்குவதை விட்டு, தேவாரம், பிரபந்தம், கீதை, பைபிள், குரான் முதலியவைகளையே முழு நேரமும் படித்துக் கடவுளை விரட்டி விரட்டிப் பிடிக்க வேண்டும்!

- இவைகளை யெல்லாம் செய்தால்தான் நெற்றிக்குக் குறி போடுவதனால் பயனிருக்கும்!

ஆசிரியர்களிலும் இப்போதுள்ளவர்களைத் துரத்திவிட்டு, மேற்கண்ட காரியங்களில் கைதேர்ந்தவர்களையே நியமிக்க வேண்டும்!

இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்புகின்ற ஆசிரியர்களுக்கு உடனே சீட்டுக் கொடுக்க வேண்டும்! அதாவது அவர்கள் வயிற்றிலும் “நாமம்” (வைஷ்ணவ நெற்றிக்குறி) போட்டு விட வேண்டும்! “மதச் சார்பற்ற சர்க்கார் இந்தக் கூத்துக்களையெல்லாம் எப்படி அநுமதித்துக் கொண்டிருக்கிறது?” என்று சேலம் தோழர் ஒருவர் ஆத்திரத்துடன் கேட்கிறார்!

இதுவா மதச்சார்பற்ற சர்க்கார்? யார் சொன்னது சுத்தப் பொய் வெறும் படுக்காளித்தனம்! போஸ்டல் ஸ்டாம்புகளைப் பார்த்தாலே தெரிகிறதே, இவர்கள் லட்சணம்! இது ஒரு அசல் மதவெறி சர்க்கார்தான்! சந்தேகமில்லை! மதப் பண்டிகைகளுக்கு விடுமுறை தருகின்ற சர்க்காரை மதச் சார்பற்ற சர்க்கார் என்று கூறுகிறவர்கள் சர்க்கார் துரோகிகள்! விஷமிகள்! பொய்ப் பிரசாரகர்கள்! சர்க்காரைத் தூற்றுகிறவர்கள்! இவ்வாறு சர்க்கார் துரோகஞ் செய்கின்ற பித்தலாட்டக்காரர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று சென்னை சர்க்காரின் முத்திரையாகிய கோபுரத்தின் மீது ஆணையிட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன்!

-  குத்தூசி குருசாமி (25-03-1950)

நன்றி: வாலாசா வல்லவன்