கொஞ்ச நாளாக நமது நாட்டில் ஒவ்வொரு நாளும் அரசியல் கிளர்ச்சிப் பத்திரிகைகளைப் படிக்க ஆவல் உண்டாக்கிக் கொண்டிருந்ததும், விடிந்து எழுந்தது முதல் படுக்கைக்குப்போகும் வரையிலும் வேலை யற்றவர்கள் வேலையுள்ளவர்கள் ஆகிய எல்லோராலும், எங்கும் பேசப்பட்டு வந்ததுமாகிய வட்டமேஜை மகாநாட்டின் இரண்டாவது கூட்டம் முடிந்துவிட்டது. ‘திரு.காந்தி அவர்கள் வட்டமேஜை மகாநாட்டிற்குப் போயிருக்கிறார், அவர் தமது அபாரமான சக்தியினால் பிரிட்டிஷாரை நடுநடுங்க வைத்துச் சுயராஜ்யத்தை வாங்கி முன்னதாக இந்தியாவுக்கு பார்சல் அனுப்பிவிட்டுத்தான் இங்கிலாந்தைவிட்டுப் புறப்படுவார்’ என்று ‘காந்தி பக்தர்கள்’ நினைத்துப் பேசிக் கனவுகண்டு கொண்டிருந்த சுயராஜ்யமும் இன்னதென்று தெரிந்து விட்டது.

ஆனால், இந்த சுயராஜ்யமும் காங்கிரசின் பிரதிநிதியாகிய திரு.காந்தி அவர்கள் வட்டமேஜை மகாநாட்டிற்குப்போன பிறகுதான் கிடைத்தது என்று சொல்லுவதற்கில்லாமற் போய்விட்டது பற்றி காங்கிரஸ்காரர்கள் ஆயாசப்படுவதோடுங்கூட ஆத்திரமும் படக்கூடும் என்பதில் சந்தேக மில்லை. காங்கிரஸ் பிரதிநிதிகள் இல்லாமல் நடைபெற்ற முதல் கூட்டத் திலேயே- சென்ற ஜனவரி மாதத்தில் பிரிட்டிஷ் முதல் மந்திரி வெளியிட்ட அறிக்கையிலேயே இன்னமாதிரியான சுயராஜ்யந்தான் கொடுக்கமுடியும் என்று கூறினார். அதே சுயராஜ்யத்தைத்தான் இப்பொழுதும் கொடுப்பதாக முதல் மந்திரி தமது அறிக்கையில் வெளியிட்டிருக்கிறார்.

periyar gemini ganesanமுதல் வட்டமேஜை மகாநாடு நடந்தபோது, அம்மகாநாட்டைத் ‘தேசத் துரோகிகள் கூட்டம்’என்றும், ‘சர்க்கார் தாசர்கள் கூட்டம்’ என்றும், ‘உத்தியோக வேட்டைக்காரர்கள் கூட்டம்’ என்றும், ‘வகுப்புவாதிகள் கூட்டம்’ என்றும் பலவாறு நமது நாட்டுத் தேசீயப் பத்திரிகைகள் என்பனவும், தேசீயத் தலைவர்கள் என்பவர்களும், தேசீயத் தொண்டர்கள் என்பவர் களும், கை வலிக்க எழுதினார்கள்; தொண்டை வலிக்கக் கத்தினார்கள். பிறகு, ‘காந்தி-இர்வின் ஒப்பந்தம்’ ஏற்பட்டதன் பலனாகத் திரு.காந்தி வட்டமேஜை மகாநாட்டிற்குப் போகும் படியான நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவரும் வட்டமேஜை மகாநாட்டிற்குப் போகாமல் நழுவவிடுவதற்கு எத்தனையோ வகையில் சாக்குப்போக்குகள் காட்டியும்கூட போக முடியாமல் இருக்க ஒன்றும் சரியான காரணம் கிடைக்காமையால் ‘கடவுள்’ தலையின்மேல் பாரத்தைப் போட்டுப் போய்ச் சேர்ந்தார்.

காங்கிரஸ்காரர்களும், ‘ஆசீர்வாதங்’கூறி ‘ஜே’போட்டுக் கப்பலேற்றி அனுப்பினார்கள். ஆனால், அப்பொழுதே திரு.காந்தியாரால் புதிதாக ஒன்றும் சாதித்துக் கொண்டு வரப் போவதில்லை என்று தெரிந்த ‘நவஜவான்’காரர்கள் கருப்புக் கொடி பிடித்தார்கள். ‘காந்திக்கு வெட்கம், காங்கிரசுக்கு வெட்கம், காந்தி ஒழிக, காங்கிரஸ் ஒழிக’ என்று கூச்சலிட்டார்கள். அப்பொழுதும் திரு.காந்தி யவர்கள் வெகு ஜாக்கிரதையாக ‘கடவுள்’ என்னைப் போகச் சொல்லுகிறார். ‘கடவுள்’எந்த மாதிரியான சுயராஜ்யத்திற்கு வழி விடுகிறாரோ அதன்படி நடக்கட்டும். என்னால் ஒன்றும் ஆகாது. எல்லாம் ‘கடவுள் சித்தம்’என்னும் பல்லவிகளைப் பாடிக்கொண்டு தான் போனார்.

திரு.காந்தி அவர்களுக்குத் துணையாக திரு.மாளவியா, திரு.ரங்கசாமி அய்யங்கார், திருமதி.சரோஜினி தேவி முதலியவர்கள் ‘காங்கிரஸ் பிரதிநிதிகள்’ என்ற பெயரில்லாவிட்டாலும் அநாமதேயப் பிரதிநிதியாகப் போய்ச் சேர்ந்தார்கள். இவர்கள் சென்றுங்கூட முதல் மகா நாடாகிய ‘தேசத் துரோக, வகுப்புவாத, உத்தியோக வேட்டை’க் கூட்டத் தில் எந்தவிதமான சீர்திருத்தம் கொடுப்பதாக பிரிட்டிஷ் அரசாங்கம் சம்மதித்ததோ, அதைவிட ஒன்றும் அதிகமாக கொடுத்துவிட இப்பொழுது சம்மதித்துவிடவில்லை. ‘அன்று கண்டதிற்கு அழிவில்லை’ என்பது போல முன்பு என்ன சொல்லப்பட்டதோ அதைத்தான் திரும்பவும் சொல்லப் பட்டது. ஆகவே, இவர்கள் போய்த்தான் என்ன பிரயோஜனம் உண்டாகி விட்டது? போகாமல் இருந்த காலத்தில் தான் என்ன நஷ்டம் வந்து விட்டது என்று கேட்கிறோம்.

திரு. காந்தியவர்கள் வட்டமேஜை மகாநாட்டில் பேசும்போதெல்லாம் ‘காங்கிரஸ் ஒன்றே தான் இந்தியாவுக்குப் பிரதிநிதி ஸ்தாபனம், அதனுடைய அபிப்பிராயமேதான் இந்தியாவின் அபிப்பிராயமாகும். காங்கிரசை ஆதரிக்காத வகுப்பினர்கள் இந்தியாவில் இல்லை. என்னைத்தான் காங்கிரஸ் தனது பிரதிநிதியாக அனுப்பியிருக்கிறது. ஆகையால் நான் கூறும் அபிப்பிராயந்தான் காங்கிரஸ் அபிப்பிராயம். என் அபிப்பிராயமே இந்தியாவில் உள்ள 35கோடி ஜனங்களின் அபிப்பிராயமாகும். நான் கேட்கும் சுயராஜ்யம் கொடுக்காவிட்டால் இந்தியா பிரிட்டிஷ் அரசாங்கத் தோடு மறுபடியும் ‘ஆத்மசக்தி’ கொண்டு போர் செய்யும் என்று இம் மாதிரியே தன்னையும், காங்கிரசையும் பற்றி வெகுவாகப் புகழ்ந்து 50 நிமிஷம் அதிகமான பிரசங்கம் செய்வார். அதன்பின் 10 நிமிஷத்தில் “காங்கிரசின் நோக்கம் பூரண சுயராஜ்யமே யாகும். பூரண சுயராஜ்யம் கொடுத்து விட்டால், இந்தியாவிலுள்ள வகுப்புக் கலகங்கள் யாவும் ஒழிந்து போகும். இந்தியாவிலுள்ள மதச் சண்டைகளும் ஒழிந்து விடும், பூரண சுயராஜ்யம் கொடுத்து விட்டால் இந்தியாவை எங்களால் காத்துக்கொள்ள முடியும்” என்று பல்லவி பாடி முடிப்பார்.

இவருடைய பல்லவி முடிந்தபின் ‘காந்தி பக்தர்’களாக இருக்கின்ற இரண்டொரு பிரதிநிதிகளும் அநுபல்லவியும் பின்பாட்டும் பாடிமுடிப்பார்கள். திரு. காந்தியின் பேச்சுக்கு மாறாக “ஒவ்வொரு வகுப்புக்கும் பாதுகாப்பு இருக்கவேண்டும். பூரண சுயேச் சைக்கு இந்தியா இன்னும் யோக்கியதை யடையவில்லை. பூரண சுயேச்சை கொடுத்துவிட்டால், சிறுபான்மை வகுப்புகளும், தாழ்த்தப்பட்ட வகுப்பு களும், செல்வாக்குப் பெற்ற பெரும்பான்மை வகுப்புகளிடம் அகப்பட்டு நசுங்குண்டு அழியும்படி சம்பவிக்கும். ஆகையால், தக்க பாதுகாப்போடு கூடிய சீர்திருத்தமே வேண்டும்” என்று பேசுகின்றவர்களையும், அவர்களை ஆதரிப்பவர்களையும், இந்தியாவின் பிரதிநிதிகள் அல்லவென்றும், அவர் களுக்கு இந்தியாவில் செல்வாக்கில்லை யென்றும், பிரிட்டிஷ் அரசாங்கத் தாரின் தரகர்களென்றும் மகாநாடு வெற்றிகரமாக முடியாமலிருக்க வேண்டு மென்றே பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் நியமிக்கப்பட்டவர்களென்றும், நியாயமின்றியும் நாணயமின்றியும் பேசிக் கொண்டு வந்தார். இதற்கு அவ்வப்போது மற்ற பிரதிநிதிகள் தக்க சாட்டை கொடுத்தார்களென்றாலும் அவர் தனது புலம்பலைக் கடைசி வரையிலும் விடவேயில்லை.

இவ்வாறு திரு.காந்தியவர்கள் என்னதான் கூறினாலும் கடைசியில் ஒன்றும் பலிக்காமல் போய்விட்டது. கடைசிக்கூட்டத்தில் பிரிட்டிஷ் முதல் மந்திரி வெளியிட்ட அறிக்கையில்,

“இந்தியாவிற்கு மாகாண முழு சுய ஆட்சியும், மத்திய அரசாங்கத்தில் பொறுப்புள்ள ஆட்சியுமே கொடுக்கப்படும். ராணுவ இலாகாவும், வெளி நாட்டு சம்பந்த இலாகாவும் கவர்னர் ஜெனரலின் பொறுப்பில்தான் ஒதுக்கப்படும். சில நிபந்தனைகளுடன் நிதி சம்பந்த மான பொறுப்பை மத்திய அரசாங்கத்திற்குக் கொடுக்கப்படும். இந்தியாவின் செல்வநிலைக்குத் தீங்குவராமல் பாதுகாக்கும் பொறுப்பு கவர்னர் ஜெனரலிடமே இருக்கும். குறைந்த வகுப்பினர் களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பும் கவர்னர்ஜெனரலி டமே இருக்கும். தேசத்தின் அமைதியைப் பாதுகாக்கும் பொறுப்பும் அவருடையதே. இனி ஐக்கிய அரசாட்சியின் அமைப்பு முறை யைப்பற்றி முடிவு செய்வது, சிறுபான்மை வகுப்புப்பிரச்சினையைப் பொறுத்தாகும். உங்களால் இதுவரையிலும் சிறுபான்மை வகுப்புப் பிரச்சினையைச் சமரசமாகத் தீர்த்துக் கொள்ள முடியவில்லை. இனியாவது நீங்கள் முயன்று ஒரு முடிவுக்கு வாருங்கள். இல்லாவிட்டால் நானே முடிவுசெய்து விடுகிறேன். இந்தியாவில் உள்ள எல்லா வகுப்புகளுக்குள்ளும் சமரசம் ஏற்படாத காரணமே பொறுப்பாட்சிக்குத் தடையாக இருக்கிறது. இனி ஐக்கிய அரசாங்கத் தில் ஒவ்வொரு விஷயமும் எப்படி எப்படி இருக்க வேண்டுமென்பதைப் பற்றி இந்தியாவில் கூடப்போகும் மூன்றாவது கூட்டத்தில் தனித்தனிக் கமிட்டிகளின் மூலம் முடிவு செய்யப்படும்.

என்று மிகவும் தெளிவாகக் கூறிவிட்டார். இதுதான் முதல் மந்திரியின் அறிக்கையில் உள்ள சாரமாகும்.

இவ்விஷயத்தை அறிந்தவுடன் திரு.காந்தியும், ‘தான் வந்தும் ஒன்றும் அதிகப்படியான காரியம் நடைபெறவில்லையே இதற்கு என்ன சமாதானம் கூறலாம்’என்று பல மணி நேரங்கள் ஆலோசனை செய்து பார்த்தார். கடைசியாக ‘நான் இந்தியாவை விட்டு வந்த காலத்தில் நம்பிக்கை இழந்ததைவிட இப்பொழுது ஒன்றும் அதிகமாக இழந்துவிடவில்லை’ என்று வெகு சாதுர்யமாகச் சமாதானங்கூறிவிட்டார். ஆனால், பூரண சுயராஜ் யம் வாங்கித் தருவதாக திரு.காந்தியும், காங்கிரசும் சட்டமறுப்புப்போர் நடத்தியதற்குப்பலனாக ஒன்றையும் காணோம். சட்டமறுப்பினால் நாட் டிற்கு ஒரு நன்மையும் உண்டாகப்போவதில்லையென்றும், அதற்குப் பதிலாக மக்களுக்குத் துன்பமே உண்டாகுமென்றும் நாம் ஆதி முதல் கூறி வந்தது இப்பொழுது என்னவாயிற்று?

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் என்பவர்கள் அடிபட்டதும், சிறைபட்டதுந்தான் லாபம். சுயராஜ்யம் வாங் கித் தருகிறோம் என்று ஏழை மக்களிடம் உண்டியல் வசூலும், பணவசூலும் செய்து காங்கிரஸ்காரர்கள் சாப்பிட்டு ஏப்பமிட்டதுதான் பலன். நாட்டில் உள்ள வியாபாரிகள் வியாபாரத்தில் நஷ்டமடையவும், அரசாங்கத்தின் செலவு அதிகரிக்கப்படவும், அதன் மேல் தபால், தந்தி, உப்புவரி, நிலவரி, இறக்குமதிவரி முதலிய பலவகையில் அதிகவரி ஏற்பட்டு ஜனங்கள் கஷ்டப்படவும், சட்டங்களை மீறுதல் என்ற எண்ணம் படிந்ததனால் மக்கள் ஒழுங்கீனமான வழிகளில் பிரவேசிக்கவும், கொள்ளைகளும், கொலைகளும், தாராளமாக நடைபெறவும், ‘தேசீய வீரர்கள்’, ‘தியாகிகள்’என்ற பட்டங்கள் பெறவும், செய்ததுதான் லாபம்.

வேலையில்லாமல் திண்டாடியவர்களும் பொழுதுபோக்குவதற்கு வழியில்லாத காலிகளும் ஏதாவது ஒரு கிளர்ச்சியான காரியத்தைச் செய்து கொண்டுதான் இருக்க வேண்டும் என்னும் எண்ணம் உடையவர்களும், ஏதாவது ஒரு இயக்கத்தின் பேரால் தனக்கு வேண்டாதவர்களை அவதூறு செய்ய வேண்டும் என்னும் நோக்க முடையவர்களும், ஜவுளிக்கடை மறியல், கள்ளுக்கடை மறியல் என்ற பெயர்களால் காலித்தனம் செய்ததுதான் லாபம். இம்மாதிரி பலவகையில் தேசத்திற்குக் கஷ்டமும், மக்கள் மனதிற்குத் தொல்லையும், தேசத்தின் செல்வத்திற்கு நஷ்டமும் ஏற்பட்டதைத்தவிர சட்டமறுப்பு இயக்கத்தினால் ஒரு கடுகளவு நன்மையும் ஏற்படவேயில்லையென்று முன்னமே கூறி னோம், இப்பொழுதும் கூறுகின்றோம்.

அல்லாமலும் காங்கிரசினால் நாட்டிற்கு ஏற்பட்ட மற்றொரு பெருங் கெடுதியையும் இச்சமயத்தில் சொல்லாமல் இருப்பதற்கில்லை. அதாவது காங்கிரஸ் பிரசாரம் செய்யும் ஆட்கள் வருணாச்சிரமவாதிகளாயிருந்து கொண்டு மக்களுக்கு ‘ஆத்மசக்தி’, ‘தெய்வபக்தி’, ‘புராண நம்பிக்கை’ முதலிய புரட்டுகளைப் போதித்துக் கொண்டு வந்தார்கள். திரு.காந்தியையும் ‘தெய்வ புருஷர்’ ஆக்கி அவர்மீது மூடநம்பிக்கை கொள்ளும்படி ஜனங்களுக்குப் போதித்தார்கள். இந்தக் காரணங்களால் இப்பொழுதும் திரு. காந்தியைப் பற்றி தெரிந்துக் கொண்டிருகிற பாமர மக்களில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பதே முக்காலே மூன்று வீசம் பேர் திரு.காந்தியை ஒரு ‘மகான்’, ‘அவதாரபுருஷர்’, ‘தெய்வீக சக்தி’ வாய்ந்தவர், ‘தெய்வீக சக்தி’ யினால் வெள்ளைக்காரர்களை நமது நாட்டைவிட்டு ஓட்டிச் சுயராஜ்யம் வாங்கிக் கொடுத்து விடுவார்’ என்ற அளவில் காங்கிரஸ் ‘பக்தர்’களால் சொல்லத் தெரிந்து கொண்டு ‘காந்திக்கு ஜே’ என்று கத்துகிறார்களே யல்லாமல் ‘அவர் ஒரு அரசியல்வாதி வருணாச்சிரம தருமி’ என்று தெரிந்து கொண்டிருக்கிறவர்கள் எத்தனை பேர் என்று கேட்கிறோம்.

ஆகவே, காங்கிரசும், திரு.காந்தியும் நடத்திய சட்டமறுப்பு இயக்கத்தால், காந்தி மதமும், வருணாச்சிரம தருமமும், மூடநம்பிக்கையும், காலித் தனமும் பரவியதைத் தவிர வேறு ஒன்றும் இல்லையென்பது நடுநிலைமையிலிருந்து சொந்த அறிவோடு யோசித்துப் பார்ப்பவர்களுக்கு விளங்காமல் போகாது. வேண்டுமானால் அடுத்த எலக்ஷனிலும், இப்பொழுது நடை பெறும் ஸ்தலஸ்தாபனத் தேர்தல்களிலும், காந்தி, காங்கிரஸ், தேசீயம், சுயராஜ்யம் என்னும் பெயர்களைச் சொல்லி ஓட்டு வாங்கவும், ஓட்டுக் கேட்பவர்களுக்குத் தரகர்களாய் இருக்கவும் பிரயோசனப்படும்; பிரயோ சனப்படுகின்றது என்று சொல்லிக் கொள்வதைப் பற்றி நமக்கு ஆட்சேபனை யில்லை. இவ்விஷயம் இவ்வளவோடு இருக்கட்டும்.

இனி வரப்போகும் அரசியல் சீர்திருத்தத்தால் நாட்டின் ஏழை மக்களுக்கு - தொழிலாளர்களுக்கு- தீண்டத்தகாதவர்களுக்கு- பெண் மக்களுக்கு- நாள் முழுவதும் கஷ்டப்பட்டு வேலை செய்து அரைவயிற்றுக்குக் கூட உணவில்லாமல் துன்பத்திலும், கவலையிலும், கொடுமையிலும் காலங் கழிக்கும் ஆதரவற்ற மக்களுக்கு ஏதாவது நன்மை விளையுமா என்பதை யும் சிறிது ஆலோசித்துப் பார்ப்போம்.

சிறுபான்மையோர், பெண் மக்கள், தாழ்த்தப்பட்டவர்கள், கஷ்டப் பட்டு உழைப்பவர்கள் முதலானவர்களுக்கு என்னதான் பாதுகாப்பு அளித்தாலும், அவர்கள் சமூக சமத்துவம் பெற்று, அவர்களுக்குள்ள கஷ்டங்களெல்லாம் நீங்கி, அவர்களுக்கு ‘உயர்ந்த ஜாதிக்காரர்’ என்ப வர்களால் செய்யப்படும் கொடுமைகள் தொலைந்து, மேலான நிலைமைக்கு வந்து விடுவார்கள் என்று சொல்ல முடியாது. இதற்குப் பதிலாக படித்தவர்கள் அதிகமான உத்தியோகங்களைப் பெறவும், பணக்காரர்களும், ஜமீன்தாரர் களும், பட்டங்களும், பதவிகளும் பெற்று ஏழைமக்களைக் கொடுமைப் படுத்தவும், வருணாச்சிரம தருமக்காரர்கள் இன்னும் தங்கள் சனாதன தருமத்திற்கு நிலையான ஆதரவு தேடிக் கொள்ளவும் தான் சௌகரியம் உண்டாகும்.மற்றபடி விவசாயிகளும், தொழில் செய்பவர்களும், கொடுத்து வரும் வரியில் ஒரு சிறிதும் குறைவேற்படப் போவதில்லை. இப்பொழுது இருப்பதைக் காட்டிலும் அவர்களிடம் வாங்கும் வரிகள் அதிகமாகவே ஆகக்கூடும். நமது செல்வம் பயனற்ற வழியில் மதத்திற்கெனவும், திருவிழாகளுக்கென்றும், புரோகிதர்களுக்கென்றும் செலவாகி வருவது குறைந்து, அச்செல்வம் தேசமக்களின் தரித்திரத்தையும், நஷ்டத்தையும், போக்குவதற்கும் பயன்படப் போவதில்லை என்றும் உறுதியாகக் கூறுகிறோம்.

மத்திய அரசாங்கத்தில் உண்டாகப் போகும் ஐக்கிய அரசாட்சியில், சுதேச ராஜாக்களும், சமீன்தார்களும், பணக்காரர்களுமே பதவி வகித் திருப்பார்கள். அங்கு திரு.மாளவியா, தர்பாங்கா மகாராஜா போன்ற வருணாச் சிரம தருமவாதிகளுக்கே செல்வாக்கு மிகுந்து நிற்கும். இத்தகைய சபையின் மூலம், கஷ்டப்படுவோர் நன்மைக்களுக்காகச் சீர்திருத்த சமதர்மச் சட்டங்கள் தோன்ற முடியுமா? என்று ஆலோசியுங்கள்.

ஆகவே, இனி வரப்போகும் சீர்திருத்தத்தினாலும், இப்பொழுது நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டங்களினாலும் எள்முனையளவு நன்மையும் நமது நாட்டிற்குக் கிடைக்க போவதில்லை என்பதை மீண்டும், மீண்டும் கூறுகிறோம்.

ஜாதிகளின் பெயராலும், மதங்களின் பெயராலும் நடைபெறபோகும் அரசியலால் பொதுவான சமதர்மத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்? சாதிகளும், மதங்களும் ஆயிரக்கணக்கான வருஷங்களாக நிலைத்து வேரோடி, மக்கள் மனத்திலும், இரத்தத்திலும் ஊறிக்கலந்து போயிருக்கின்ற நமது தேசத்தில் ஜாதி, மத ஆதிக்கமும் பாதுகாப்பும் உள்ள அரசியலைத் தவிர வேறு அரசியலை ஸ்தாபிக்கவும் முடியாதென்பது உண்மைதான். நமக்குள் ஜாதி, மத துவேஷங் கொண்டு வலுத்தவர்கள் இளைத்தவர்களைத் துன்பப்படுத்தி - கொடுமை புரிந்து ஆளுவதைவிட ‘ஜாதி, மதங்கள் ஒழிந்து சமரசமாக வேண்டும்’ என்பதற்கு அதிக அநுகூலஞ் செய்யாவிட்டாலும், பிரதிகூலம் செய்யாமலிருக்கும் அந்நியர் பாதுகாப்பிலிருப்பது ஒரு வகையில் மேன்மையானதென்று தான் நாம் சொல்லுகிறோம்.

நமக்குள்ளிருக்கும், சாதிப்பிணக்குகள், சமயச்சண்டைகள், அடிமை மனப்பான்மை, புரோகித ஆதிக்கம் முதலியவைகள் ஒழிந்து பகுத்தறிவு பெற்று விட்டால் அந்நியர்க்கு இங்கு வேலையில்லை. நாமும் நம் நாட்டைப் பாதுகாத்துக் கொள்ளும் திறமையுடைவர்களாகி விடுவோம். ஆகையால், நமது சுதந்திரத்திற்குத் தடைகளாக இருக்கின்ற ஜாதி, மதம், கடவுள், வேதம், புராணம், மூடப்பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை ஒழித்து ஏமாற்றுகிறவர்களுக்குக் கஷ்டப்படுகிறவர்கள் அடிமையாகாமல் எல்லா மக்களும் சுகமடைந்து வாழக்கூடியது சுயராஜ்யமானாலும், பூர்ண சுயேச்சையானாலும் ஐக்கிய ஆட்சியானாலும், அந்நிய ஆட்சியானாலும், வேறு யாருடைய ஆட்சியானாலும் அதை நாம் வரவேற்கத் தயாராக இருக்கிறோம் என்று கூறி முடிக்கின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 06.12.1931)