periyar on marriageஇந்தியாவில் ஒரு புருஷனுக்கு பல பெண்ஜாதிகள் இருந்து வருவது சாதாரணமாகவும், அவ்வழக்கம் சமூகத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும், மதத்துடனும் மதச் சம்பந்தமான கடவுள்கள், மதாச்சாரியார் முதலியவர்களுக்குள்ளும் இருந்து வருவதாகவும் ஒப்புக் கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் ஒருவித சீர்திருத்தக்காரர்கள் என்பவர்கள் மாத்திரம், அதுவும் வெள்ளைக்கார தேசத்தை, அவர்களது நாகரீகத்தைப் பின்பற்றியவர்கள் என்கின்ற முறையில் சிலர் ஒரு புருஷனுக்கு ஒன்றுக்கு மேல்பட்ட பெண்கள் கூடாது என்று சொல்லுவார்கள். அதற்குக் காரணம் சொல்லவும் தெரியாது. இரண்டு பெண்டாட்டிகள் கட்டின மதாச்சாரியாரை வணங்குவார்கள். இரண்டு பெண்டாட்டிகள் கட்டின சாமியையும் கும்பிடுவார்கள். அதற்கு, கோயில் கட்டி, இரண்டு பெண்டாட்டிகளை வைத்து கும்பாபிஷேகம் செய்து, பூசை உற்சவமும் செய்வார்கள். தாங்களும் பல பெண்களிடம் சாவகாசமும் செய்திருப்பார்கள். தங்கள் காதலிகளாக பயன்படுத்தியும் வருவார்கள். ஆனால் வாயில் மாத்திரம் இரண்டு பெண்டாட்டிகளைக் கட்டிக் கொள்வது சீர்திருத்தத்திற்கு கொள்கைக்கு விரோதம் என்பார்கள். ஆகவே இக் கூட்டத்தார் சீர்திருத்தம் என்பதற்கு அருத்தம் தெரியாதவர்களும், அதில் பொறுப்பும், கவலையும் இல்லாதவர்களும் ஆனவர்கள் என்று சொல்லப் பட வேண்டியதோடு, வெள்ளைக்கார நாகரீகத்தைத் தாங்களும் வாயினால் பேசுவதின் மூலம் தங்களை “நாகரீகக்காரர்” என்று பிறத்தியார் சொல்ல வேண்டும் என்கின்ற ஆசையையும் உடையவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆகவே இதன் நன்மை தீமை என்பது எப்படி இருந்தாலும், ஒரு மனிதனுக்கு உள்ள சுதந்திரம் ஒரு மனுஷிக்கும் இருக்க வேண்டியது என்கின்ற முறையில் பார்க்கும்போது நமது புருஷர்கள் இரண்டு பெண்டாட்டிகளுடன் வாழுவது போலவே நமது பெண்கள் இரண்டு புருஷர்களுடன் வாழுவதில் குற்றமில்லை என்பதே நமதபிப்பிராயம் என்பதோடு, அம் முறையை இஷ்டப்படுபவர்கள் கையாளுவதில் எவ்விதத் தடையும் இருக்கக் கூடாது என்பதும் நமதபிப்பிராயமாகும்.

புருஷன் பெண்சாதியாக வாழுவது என்பது, புருஷன் பெண் சாதி என்பவர்களுடைய தனித்தனி சொந்த இஷ்டத்தைப் பொறுத்ததே தவிர, அதில் ஆதிக்கம் செலுத்த வேறு யாருக்கும் உரிமை இல்லை என்பதே அவ்விஷயத்தில் நமது அபிப்பிராயமாகும். இந்து மத ஆதாரங்களில் இவ்வழக்கம் இருந்து வந்ததாக எழுதப்பட்டிருப்பது ஒருபுறமிருந்தாலும், மலையாளப் பிரதேசத்தில் இவ்வழக்கம் இன்று பிரத்தியக்ஷத்தில் இருந்து வருவதைக் காணலாம். அதாவது, ஒரு வீட்டில் 2, 3 புருஷர்கள் இருந்தால் அவர்கள் 2, 3 பேருக்கும் ஒரு பெண்ணையே மனைவியாகக் கொண்டு வாழ்க்கை நடத்தி வரப்படுகின்றது. இது தவிர இந்தியாவின் வடகிழக்கில் உள்ள தீபேத்து என்கின்ற நாட்டில் இன்றும் பெண்மக்களில் அவ்வழக்கம் தாராளமாய் இருந்து வருகின்றது. ஒரு பெண்ணுக்கு நான்கு ஐந்து புருஷர்கள் கணவர்களாக இருந்து வருகின்றார்கள். இதனால் சிறிதும் சண்டை சச்சரவின்றி சந்தோஷமாகவே வாழ்ந்து வருகின்றார்கள். இப்படி யிருக்கின்ற இந்த ஜனங்களிடம் மிக்க நல்ல குணங்களும் நாணையங்களும் இருந்து வருகின்றதாம். இதை தீபேத்துக்கு இரண்டு தடவை பிரயாணம் செய்து நேரிலேயே சென்று பார்த்து விட்டு வந்த ஒரு பிரஞ்சு மாதாகிய திருமதி லாபூஜீ என்கின்ற ஒரு அம்மையார் இதைப் பற்றி வியக்தமாக எழுதுகிறார். (இந்த விபரம் 9-9-31-தேதி “நவசக்தி”யில் காணலாம்.) ஆகவே, நமது மக்களுக்குள் வாழ்க்கை முறையோ, சீர்திருத்தமோ, முற்போக்கோ என்பவைகளைப் பற்றி சுதந்திர உணர்ச்சியோ - சுதந்திர அபிப்பிராயமென்பதோ அநேகருக்கு இல்லை யென்றுதான் சொல்ல வேண்டும்.

எந்தப் பழக்க வழக்கம் சீர்திருத்தம் என்றாலும் நம் நாடு - நம் மதம் - நம் ஜாதி - நம் வகுப்பு ஆகியவைகளில் என்ன இருக்கின்றது? எப்படி நடந்து வருகின்றது? என்கின்ற அளவில் தான் அவரவர் புத்தியைச் செலுத்த அருகதை உள்ளவர்களாய் இருக்கின்றார்களே தவிர, உலகத்தில் மற்ற பாகங்களில் எப்படி இருந்தது? எப்படி யிருக்கின்றது? என்பவைகளைப் பற்றி கவனிப்பதோ, அல்லது இவ்விஷயங்களின் தன்மை என்ன? இதன் காரணமென்ன? நமது அறிவுக்கு எப்படிப் படுகின்றது? இப்படியிருந்தால் என்ன? என்பது போன்ற சுதந்திர அறிவோ, ஆராய்ச்சியோ கிடையவே கிடையாது என்று தான் சொல்ல வேண்டி யிருக்கின்றது. இந்தக் காரணமே தான் உலகத்தில் முற்போக்கும், சுதந்திரமும், விடுதலையும் இந்திய நாட்டிற்கு மாத்திரம் தடைப்பட்டிருக்கின்றது என்று சொல்ல வேண்டியும் இருக்கின்றது.

ஆகவே, எந்தக் காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து அனுபவ குண தோஷம் கண்டு, மனதின் சுதந்திரத்தை மறுக்காமல், அடக்காமல், சுயேச்சையாய் நடக்க வேண்டியது தான் மனித தர்மம் என்றும், அந்தப்படி உலகமே சுயேச்சையாயிருக்க சௌகரியம் இருப்பதுதான் மனித சமூக விடுதலை என்றும் சொல்லுகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 13.09.1931)

Pin It