ஆகஸ்ட் 26 ஆம் நாள் தமிழ்த்தென்றல் திரு வி.க.வின் பிறந்தநாள். அதனையொட்டி, 1948 ஆம் ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில், திராவிட நாடு படத்தைத் திறந்து வைத்து அவர் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்...

திராவிட நாட்டுப்படத்தை நான் திறந்து வைக்கவேண்டும் என்கிற விருப்பத்தை என்னிடத்துத் தோற்றுவித்தவர் இவ்வியக்கத் தலைவரும் என் நெருங்கிய நண்பருமான பெரியார் ஆவார். அவர் என்னிடம் தன் விருப்பத்தை முதல்முதலாகத் தெரிவித்தபோது, நான் பேசாமல் இருந்து விட்டேன். அவரும் அதையே ஒப்புதலாகக் கொண்டு அதற்கேற்ப இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார்.

திராவிடர் கழக உறுப்பினன் அல்லாத நான் திராவிட நாட்டுப் படத்தைத் திறந்து வைப்பது பொருந்துமா என்று பலதடவை யோசித்துப் பார்த்தேன். முடிவில், இந்நாட்டு மக்கள் எல்லோருமே திராவிடர்கள்தான், நானும் திராவிடன்தான், எனவே தாராளமாகத் திறந்து வைக்கலாம், அதில் ஒன்றும் தவறில்லை என்கின்ற முடிவுக்கு வந்தேன். அம்முடிவுக்கு வந்தது முதற்கொண்டு என் மனத்தில் என்னென்னவோ எண்ணங்கள், என்னென்னவோ ஆதாரங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன.

thiru_vi_ka_360இந்தியாவென்பது பெரியநாடு. இதில் பலதிறப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள் என்றாலும் இந்த நாட்டில் இரண்டு பெரிய கலாச்சாரங்களே அடிப்படைக் கலாச்சாரங்களாகக் காணப்படுகின்றன. இவை இரண்டும் பெரிதும் முரண்பட்ட கலாச்சாரங்களாகவும் இருந்து வருகின்றன. இவற்றுள் ஒன்று ஆரிய கலாச்சாரமாகும். மற்றொன்று திராவிடக் கலாச்சாரமாகும். வடநாட்டில் பெரும்பாலும் ஆரியக் கலாச்சாரமும், தென்னாட்டில் பெரும்பாலும் திராவிடக் கலாச்சாரமும் நிலவி வருகின்றன.

இவற்றுள் ஆரியக் கலாச்சாரம் சுரண்டலையும், ஏமாற்றுதலையும் அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அதைப் பின்பற்றி வருபவர்கள் தம் சுரண்டலுக்காக அந்நிய நாடுகளை ஆக்கிரமிக்கும் எண்ணம் கொண்டு முயற்சி செய்து வருகிறார்கள்.

திராவிடக் கலாச்சாரம் சமதர்மத்தை, சோ­லிசத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருப்பதால் அதைப் பின்பற்றுபவர்கள் பிறர் சுரண்டலை ஒழித்துச் சுதந்திரமாக வாழ விழைகிறார்கள். எனவேதான் பிரிந்து வாழ நினைக்கிறார்கள், தென்னாட்டவர்கள்.

ஒரு காலத்தில் தமிழ்நாடு மிக மிக உயர்ந்திருந்தது. பிறகு ஆரியத்தின் சுரண்டலுக்கு ஆட்படவே, இன்று மிக மிகத் தாழ்ந்து விட்டது. சுரண்டலுக்கு உள்ளாக்கிய வடநாடு மிக மிக உயர்ந்து நிற்கின்றது, இன்று.

.........................................

எவ்வளவு எடுத்துக் கூறினாலும் ஆரியரும், திராவிடரும் ஒன்றென்று பிதற்றிக்கொண்டு வருகிறீர்களே! ஆராய்ச்சி நூல் எதையேனும் படித்துப் பார்த்ததுண்டா நீங்கள்? ஆரியக் கலை வேறு, திராவிடக் கலை வேறு. ஆரியப் பண்பு வேறு, திராவிடப் பண்பு வேறு என்பதை ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கூட ஒப்புக் கொண்டிருக்கிறார்களே!

திருக்குறள் ஒன்று போதுமே, ஆரியத்தையும் திராவிடத்தையும் பிரித்துக்காட்ட. திருக்குறளில் அறம், பொருள், இன்பம் இம்மூன்றைப் பற்றித்தானே எழுதியிருக்கிறது. வீட்டைப் பற்றி, மோட்சத் தைப் பற்றிக் குறிப்புக் கூடக் காட்டவில்லையே திருவள்ளுவர். திருவள்ளுவர் ஒன்றும் நாஸ்திகர் அல்லவே! இருந்தும் ஏன் மோட் சத்தைப் பற்றிப் பேசமறுத்தார்? திருக்குறள் திராவிடப்பண்பை விளக்கும் நூல். எனவே, ஆரியப்பண்பான மோட்சத்திற்கு அதில் இடம் இருக்கக் கூடாது என்பதுதானே!

.........................................

அன்று சொன்னேன் நிலக்கோட்டையில், எனது கடைசி மூச்சுக் கூட, திராவிடம் வாழ்க, திராவிடர் கழகம் வாழ்க என்பதாக இருக்கும் என்று.

.........................................

திராவிட மக்களுக்கு நல்வழிகாட்ட, அவர்கள்தம் அடிமை வாழ்க்கையை மாற்றி இன்ப வாழ்வு அமைத்துக்கொடுக்க இயற்கை தோற்றுவித்த பெரியார்தான் நமது ஈரோட்டுப் பெரியார்.

இயற்கையின் அருமைப் புதல்வர் இவர். அதனால்தான் காந்தியையும் மிஞ்சிய அளவுக்கு அகிம்சாவாதியாகவும், சாக்ரடீசையும் மிஞ்சிய அளவுக்குச் சமுதாயச் சீர்திருத்தக்காரராகவும் பெரியார் விளங்குகிறார். இவர்தம் முயற்சியால் தமிழர்கள் விழித்துக் கொண்டார்கள்.

.......................

கெட்டதிலிருந்து நல்லது பிறப்பதுபோல், அவிநாசியாரின் இந்தி நுழைப்பு, ஆரியம் இந்நாட்டைவிட்டு அகலக் காரணமாக இருக்கட்டும். திராவிடர்கள் யாவரும் பெரியாருக்கு எப்போதும் நன்றி அறிதல் உடையவர்களாக இருக்கட்டும். நாமும் நமது நன்றியறிதலைக் காட்டிக்கொள்ளும் முகத்தான் பெரியார் வாழ்க என்றும் அவர்தம் முயற்சி வெல்க என்றும் வாழ்த்துக் கூறுவோம்.

(1948 இல் தமிழ்நாடு கல்வி அமைச்சராக இருந்த அவிநாசிலிங்கம் (செட்டியார்) இந்திப்பாடத்தை மீண்டும் புகுத்தினார்)

Pin It