சைமன் கமீஷன் பகிஷ்காரம் என்பதாக மறுபடியும் கூச்சல் போட கிளம்பிவிட்டார்கள். இக்கூச்சலின் உள்கருத்து அடுத்து வரப் போகும் சட்டசபைத் தேர்தலில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு வழி தேடவேயாகும். இதற்காகவே இச்சூழ்ச்சி கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது என்றும், அதற்காகவே பார்ப்பனர் அல்லாதாரிலும் சில தேசீய வயிற்றுப் பிழைப்பு ஆசாமிகளையும் கஞ்சிக்கு வேறுவழியில் பிழைக்க வகையில்லாத ஆசாமிகளையும் பிடித்து கூலி கொடுத்து சைமன் பகிஷ்காரம் என்னும் பேரால் பார்ப்பனக்கக்ஷி ஆதிக்கப் பிரசாரமும் பார்ப்பனரல்லாதார் கக்ஷிகளை வைது அதன் முற்போக்குக்கு இடையூறான பிரசாரமும் நடத்த பார்ப்பனர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்றும், இதற்கு முன் பல தடவைகளில் எழுதி சைமன் கமீஷன் பகிஷ்காரம் என்பது புரட்டு என்பதற்கும், ஒரு வகுப்பாரின் சுயநலம் என்பதற்கும், பல ஆதாரங்களையும் எடுத்துக் காட்டி வந்தோம். அவைகளில் ஒன்றுக்காவது எந்த ‘தேசீயவாதி’யாவது ‘தேசீய பத்திரிகையையாவது அல்லது பார்ப்பனர்களின் தேசீயவாதியாவது, தேசீய பத்திரிகையாவது இதுவரை பதிலுரைத்தவர்கள் அல்ல.

periyar and anna 481நமது கேள்விகளை மூடி வைத்துக் கொண்டு பாமர மக்களின் மூடத்தனத்தை தங்களுக்கு ஆதரவாய் வைத்துக் கொண்டு தங்களால் கூடுமானவரை சூழ்ச்சிப் பிரசாரம் செய்த வண்ணமாகவே இருந்தார்கள். இச்சுயநலக்கூட்டத்தாரும் வயிறு வளர்ப்புக் கூட்டத்தாரும் எவ்வளவு சூழ்ச்சிப் பிரசாரம் செய்தும், எவ்வளவு போலி தேசீய வேஷம் போட்டும், இவர்களது நம்பிக்கைக்கு விரோதமாய் இப்போலிகளின் பிரசாரத்தால் தாங்கள் ஏமாறவில்லை என்பதைக் காட்டவும், போலிகளுக்கு இனி நாட்டில் இடம் கொடுக்க மாட்டோம் என்று முடிவு செய்ததைக் காட்டவும் பாமர மக்கள் அர்ட்டால் தினத்தை நன்றாய் உபயோகித்துக் கொண்டு தக்கபடி புத்தி கற்பித்து விட்டார்கள். அதன் பலனாகவே மறுபடியும் அர்ட்டால் என்கின்ற பேச்சுகூட பேச முடியாமல் செய்து விட்டார்கள். ஒன்றிரண்டு மாதம் வரை கூட்டம் போட்டுப் பேசவும் யோக்கியதை இல்லாமல் செய்ததோடு இப்போலி தேசீயவாதிகள் தாங்களே “நாங்கள் அர்ட்டால் செய்யப் போவதில்லை” என்று சர்க்காருக்குத் தெரிவிக்கும்படியான நிலைமையில் வைத்து விட்டார்கள். சர்க்கார் இனி அர்ட்டால் செய்யக்கூடாது என்று போட்ட 144-ஆம் தடை உத்திரவையும் வாங்கிப் பூஜை வீட்டில் வைத்து அதற்கு கீழ்ப்படிந்து பூஜை செய்து கொண்டிருக்கும்படியான நிலைமைக்கும் வந்துவிட்டார்கள்.

அன்றியும் இந்தியா முழுவதும் பகிஷ்காரத்தில் இருக்கின்றது என்றும், வெற்றி மேல் வெற்றி என்றும் கத்திக் கொண்டிருந்ததும் மறைந்து போய், அவர்கள் மாறிவிட்டார்கள்! இவர்கள் மாறிவிட்டார்கள்! அந்த மாகாண சட்டசபை ஒத்துழைக்கப் போகின்றது! இந்த மாகாண சட்டசபை ஒத்துழைக்கப் போகின்றது! இனி என்ன செய்வது! என்று கூடி ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த நிலையில் பகிஷ்காரப் போலிகளினுடையவும் கூலிகளினுடையவும் உண்மை வேஷம் வெளிப்பட்டுவிட்டது.

அதாவது, திருவாளர்கள் ஒ. கந்தசாமி செட்டியார், குழந்தை, அண்ணாமலை, நைனியப்பர், பஷீர் அகமது, அமீத்கான், இரத்தினசபாபதி முதலியோர்கள் திக்கு விஜயம் செய்ய தமிழ் நாட்டிற்குள் பிரசாரத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். பத்திரிகைகளையும் கூப்பாடு போட உசுப்படுத்தி விட்டிருக்கிறார்கள். இவர்கள் செய்யும் வேலைகளை கவனித்துப் பார்த்து வருபவர்களுக்கு இவர்களின் வேஷம் விளங்காமல் போகாது. அதாவது, பார்ப்பனரல்லாதார் கட்சியையும் அக்கட்சித் தலைவர்களையும் காரணமில்லாமல் இழிதுறைகளில் வைது குரைப்பதும், அவர்களுக்கு அடுத்த தேர்தலில் ஓட்டுக் கொடுக்காதீர்கள் என்றும் பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனக் கூலிகளுக்கும் அடிமைகளுக்கும் ஓட்டுக் கொடுங்கள் என்றும் எழுதுவதும் கூப்பாடு போடுவதுமான கூலிக்கு மாரடித்து வரும் காரியங்களாலும், எவ்வளவு எழுதினாலும், எவ்வளவு தொண்டை கிழிய கத்தினாலும், அதை நம்பி ஏமாந்து போகும் காலமே மலையேறிப் போய்விட்டதால் சென்றவிடமெல்லாம் தக்க மரியாதை கற்பிக்கப்பட்டும். கூட்டம் கலைக்கப்பட்டும் கூலிகள் ஓட்டப்பட்டும் நடந்து வரும் காரியங்களாலும் நன்கு உணரலாம்.

நிற்க, பகிஷ்கார விஷயத்தில் பார்ப்பனர்கள் கூலிகொடுத்து பார்ப்பனரல்லாதாரிடையில் மாத்திரம் பகிஷ்காரப் பிரசாரம் செய்யச் செய்திருக்கிறார்களே ஒழிய தங்கள் சமூகத்தைப் பொறுத்தவரை பகிஷ்காரத்திற்கு விரோதமாகவே பிரசாரம் செய்து ஜாக்கிரதையாய் இருக்கின்றார்கள். அதாவது, பார்ப்பன சபையும் வர்ணாசிரம பார்ப்பன சபையும் சைமன் கமிஷனை பகிஷ்கரிக்கக் கூடாது என்று சொன்னதோடு கமிஷனில் சாட்சி சொல்லவும் ஒத்துழைக்கவும் தீர்மானங்கள் செய்தும் யாதாஸ்த்து தயார் செய்தும் அனுப்பிவிட்டன. திருவாளர்கள் எம்.கே. ஆச்சாரியார், சத்தியமூர்த்தி சாஸ்திரியார் போன்ற “பிரபல தேசீயவாதிகள்” எல்லோரும் அதில் அங்கத்தினர்களாகவும் தலைவர்களாகவும் தான் இருந்து வருகின்ற சபைகளாகவே அவைகள் இருக்கின்றன.

தவிர ‘முதல் வகுப்புத் தேசியத் தலைவர்களான’ திருவாளர்கள் விஜயராகவாச்சாரியார், ஸ்ரீனிவாசய்யங்கார், எ. ரங்கசாமி அய்யங்கார் முதலியோர்களும் தங்கள் யாதாஸ்த்தை தனியாக அச்சுப்போட்டு சைமன் கமிஷனுக்குப் போய் சேரும்படி செய்தாய் விட்டது. அவைகள் கடைகளிலும் விற்க ஏற்பாடு செய்தாய் விட்டது. திருமதி பெசண்டம்மையார் கூட்டமும் தங்களது யாதாஸ்தை பகிரங்கமாகவே ஒப்படைத்தாகி விட்டது.

இனி பகிஷ்காரம் செய்திருக்கின்றவர்கள் யார் என்று பார்ப்போமானால் மேல்கண்ட கூலிப்பிரசாரக் கூட்டத்தைத் தவிர வேறில்லை என்பது புலனாகும். அவர்களும், யார் பகிஷ்காரம் செய்யாததற்காக வைகின்றார்கள் என்று பார்ப்போமானால், பார்ப்பனரல்லாதார் கட்சியார்களை மாத்திரந்தான் என்பது வெளியாகும். எனவே, இவ்வித கூலிபகிஷ்காரக் கூச்சலுக்கு இடம் கொடுக்காமலும் அதைக் கண்டு பயந்து விடாமலும் இருக்கும்படி பார்ப்பனரல்லாத மக்களுக்கு எச்சரிக்கை செய்கின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 15.07.1928)

Pin It