காங்கிரசின் யோக்கியதையைப் பற்றி ஸ்ரீ காந்தி அவர்கள் தமது அபிப்பிராயம் வெளியிட்ட பிறகுதான் தமிழ்நாட்டு மக்களில் பலருக்கு ‘குடி அரசு’ இதுவரையில் உண்மையைத் தான் சொல்லி வந்திருக்கின்றது என்று புலப்பட்டு இருக்கின்றது. உண்மையை ஒழிக்காமல் பேசவேண்டுமானால் நமது நாட்டில் காங்கிரஸ் என்கின்ற ஒரு கொடிய யமன் போன்ற இந்த ஸ்தாபனம் இருக்கும் வரையில் ஏழை மக்கள் விடுதலை என்பதைக் கன விலும் நினைக்க வேண்டியதில்லை என்றே கல்லிலும் எழுதி விடுவோம்.

periyar with baby 500வெள்ளைக்காரனின் கொடுமையான ஆக்ஷிமுறை ஏதாவது ஒரு காலத்திலாவது நமது நாட்டை விட்டு ஒழிய வேண்டுமானால் முதலாவது காங்கிரஸ் ஒழிந்து தீரவேண்டும். பிறகு தான் இந்து மதமும் பார்ப்பன ஆதிக்கமும் ஒழியவேண்டுமென்று சொல்லுவோம்.

ஏனெனில் இந்து மதத்தின் பேரால் பார்ப்பனர்கள் மாத்திரம்தான் மக்களை ஏமாற்றி பாழ்படுத்த முடியும் காங்கிரசோ அப்படியில்லை. காங்கிர சின் பேரால் எல்லா வகுப்பு அயோக்கியர்களும் அன்னக்காவடி களும் அநாமதேயங்களும் காலிகளும் மக்களை ஏமாற்ற வசதியிருக்கின்றது. இந்து மதம் ஒரு மனிதன் செத்தபிறகு மோக்ஷம் (விடுதலை) கொடுப்பது என்கின்ற புரட்டான தத்துவத்தின் மீது கட்டப்பட்ட பொய்க் கோட்டையாகும். காங்கி ரசோ உயிருடன் இருக்கும்போதே விடுதலை (மோக்ஷம்) கொடுப்பது என் கின்ற புரட்டான தத்துவத்தின் மீது கட்டப்பட்ட பொய்க் கோட்டையாகும். பாமர மக்களும் ஏழை மக்களும் இதை வெகு சுலபத்தில் நம்பி ஏமாந்து போக தக்கபடி தந்திரங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

அதற்குத் தக்கபடி அரசாங்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் படி பிரசாரங்கள் செய்ய வசதிகள் ஏற்பட்டிருக்கின்றன. எனவே ஜனங்கள் ஏமாந்து போவதில் அதிசயம் இல்லை. சென்னை காங்கிரசைப் பற்றியும், தமிழ்நாட்டு காங்கிரஸ் ஸ்தாபனங்களைப் பற்றியும் அதை நம்பிக் கொண்டு வாழும் தலைவர்களைப் பற்றியும் ‘குடி அரசு’ ஒரு வருஷத்திற்கு மேலாக எவ்வளவோ தூரம் பிட்டுப் பிட்டு விளக்கி எழுதி வந்தும் எத்தனை பேர் அதை லக்ஷியம் செய்தார்கள் என்று பார்த்தால் மிகக் கொஞ்சம் பேர் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் சமீப காங்கிரசுக்கு தேர்திருவிழா என்கின்ற வேடிக்கைப் பார்ப்பவர்கள் போல திரள்திரளாக ஜனங்கள் ஓடி வந்தார்கள். காங்கிரஸ் முடிந்தபிறகு சத்தியகீர்த்தியென்று பெயர்வாங்க ஆசைப்பட்ட மகாத்மா காந்தி என்பவரும் “காங்கிரசுக்குப் போகும்போது வழியிலேயே நான் செத்துப் போவேன் என்று டாக்டர்கள் சொல்லுவதா னாலும், காங்கிரசுக்கு போய்த்தான் தீருவேன்” என்று சொன்னார். அதற்கு 15 நாளைக்கு முன்பு தான் “எனது மனச்சாக்ஷியை காங்கிரஸ் தலைவர் ஸ்ரீமான் சீனிவாச அய்யங்காரருக்கு ஒப்படைத்து விட்டேன்” என்று சொன் னார். இந்த இரண்டு வேத வாக்குகளும் எத்தனை பயித்தியக்காரர்களை மோசம் பண்ணியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் யோக்கியர்களின் மனம் பதறாமல் இருக்காது.

இவ்வளவு பணச் செலவையும் இவ்வளவு ஏமாற்றத்தையும் கொடுத்து விட்டு தானும் இருந்து காங்கிரசை நடத்தியதாக மக்கள் நினைக்கத்தகுந்த மாதிரி நடந்து கொண்ட பிறகு பொது ஜனங்கள் தாங்களாகவே காங்கிரசின் யோக்கியதையையும், தலைவர்களின் யோக்கியதையையும், தீர்மானங்களின் யோக்கியதையையும் தெரிந்து கொண்டார்கள் என்று ஏற்பட்டபிறகு, அதுவும் ஸ்ரீ சீனிவாசய்யங்காரே இது ஒரு விளையாட்டுத் தீர்மானம் என்று ஒப்புக் கொண்டபிறகு “காங்கிரஸ் விளையாட்டுப் பிள்ளைகள் கூட்டம்”, “பொறுப் பற்றவர்கள் கூட்டம்”, “யோசனையற்றவர்கள் கூட்டம்”, “முட்டாள் தனமான தீர்மானம்”, “உலகத்தார் பார்த்து சிரிக்கத் தகுந்தது”, “நேர்மையற்றது”, “நாணயமில்லாதது”, “மக்களை ஏமாற்றச் செய்தது”, “அவமானத்திற்கு இடம் தரக்கூடியது” என்று எழுதி விடுவதால் ஏற்பட்ட பயன் என்ன என்று கேட்கின்றோம்.

இனியாவது ஸ்ரீமான் காந்தி யோக்கியமாய் உண்மையை ஒப்புக் கொண்டு தைரியமாய் பொதுஜனங்களுக்கு விளங்கும்படியாக ஏதாவது சொல்ல வருகின்றாரா என்று பார்த்தால் அங்கும் சாமர்த்தியமாகவும் தந்திர மாகவும் நடந்து கொள்ளுகிறாரே ஒழிய அவர் வாக்குகளில் சத்தியம் தாண்ட வமாடுகின்றதா என்று கேட்கின்றோம். ஏன் இவர் தைரியமாய் “இந்த காங்கிர சினாலும் இதன் கொள்கைகளினாலும் இதற்கு ஏற்படக்கூடும் தலைவர்கள், அபிமானிகள் ஆகியவர்களாலும் நாட்டுக்குநலன் விளையாது. கேடுதான் விளையும்” என்று சொல்லிவிடக்கூடாதுயென்று கேட்கின்றோம்.

தவிரவும் பூரண சுயேச்சைத் தீர்மானத்தையும் பிரிட்டிஷ் சாமான் பகிஷ்காரத் தீர்மானத்தையும், இந்து முஸ்லீம் ஒற்றுமைத் தீர்மானத்தையும் பற்றி தமது அபிப்பிராயத்தை தெரிவித்த ஸ்ரீமான் காந்தி சைமன் கமீஷன் பகிஷ்காரத் தீர்மானத்தைப்பற்றி ஏன் தனது அபிப்பிராயத்தை தெளிவாய் தெரிவித்துவிடக்கூடாது என்றும் கேட்கின்றோம்.

இவ்வருஷ காங்கிரஸ் திட்டத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமைத் தீர்மானத்தின் மீதும் அதுபோலவே பூரண சுயேச்சைத் தீர்மானத்தின் மீதும் பிரிட்டிஷ் சாமான் பகிஷ்காரத் தீர்மானத்தின் மீதும் இப்போது செய்ய வேண்டிய வேலை ஒன்றும் இல்லை. எனவே இப்போது காங்கிரஸ் தீர்மானப் படி காரியத்தில் செய்யப் போகும் வேலையெல்லாம் கமிஷன் பகிஷ்காரத் தீர்மானத்தின்படி தான், ஆகவே இந்த சமயம் ஸ்ரீமான் காந்தி மக்களுக்கு ஏதாவது அபிப்பிராயம் சொல்லவேண்டுமானால் இதைப்பற்றிதான் சொல்லி யாகவேண்டும். இதுதான் பிரயோஜனப்படக்கூடியதாகும். இப்படிக்கிருக்க இத்தீர்மானத்தைப் பற்றி ஒன்றுமே பேசாமல் இருந்தால் இதன் பொருள் என்ன என்று பொதுஜனங்கள் நினைப்பது என்பது நமக்கு விளங்கவில்லை.

நம்மைப் பொருத்தவரை இதற்கு காரணம் என்னமாயிருக்கும் என்று யோசிப்போமானால் பொதுஜனங்களுக்கு தான் நல்ல பிள்ளையாவதற்கு காங்கிரசையும் தீர்மானங்களையும் தலைவர்களையும் வைவதற்கும், வைவ தற்கு வேண்டி பார்ப்பனர்கள் வாயை மூடிக்கொண்டு தன்னை திருப்பி வையாமலிருப்பதற்கு லஞ்சம் கொடுத்ததற்கு ஒப்பாகும் என்றுதான் காணக் கூடியதாயிருக்கின்றது. இது எப்படியோ இருக்கட்டும், இனி கமிஷன் பகிஷ்காரத்தைப் பற்றி கவனிப்போம்.

பகிஷ்காரம்

பகிஷ்காரம் என்பது கமிஷன் மெம்பர்களுக்கு நமது அபிப்பிராயத்தை அல்லது நமது தேவையை அல்லது நமது நிலையை தெரியப் படுத்தக் கூடாது என்பதா? அல்லது கமிஷன் முன்னால் போய் நின்று அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூடாது என்பதா? என்பது நமது கேள்வி.

முதலாவது விஷயமானால் கமிஷன் தீர்மானத்தில் ஏதாவது சிறிது பொருள் இருப்பதாக சொல்லிக் கொள்ளலாம். இரண்டாவதானால் இத் தீர்மானம் சுத்தசுத்தமாக ஏமாற்று தீர்மானம் என்று தான் சொல்லிவிட வேண்டும். முதலாவது சொல்வார்களானால் ஸ்ரீ மோதிலால் நேருவும், ஸ்ரீமான்கள் சீனிவாச அய்யங்கார் கூட்டமும் விஜயராகவாச்சாரியாரும் முறையே அரசியல் திட்டம் தயாரித்து கமிஷன் முன் சமர்ப்பித்து விட வேண்டும் என்பதிலும் திடடம் தயாரித்து ஏற்கனவே அனுப்பியிருப்பதிலும் பகிஷ்கார வாசனை ஏதாவது இருக்கின்றதா?

தவிர இந்தியாவின் சுயமரியாதைக்காக கமிஷனைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று சொல்லுகின்ற பெசண்ட்டம்மைக்கும் உண்மையில் சுய மரியாதை உணர்ச்சி இருக்குமானால் தாம் இது சமயம் பார்லிமெண்டில் தாக்கல் செய்து இருக்கும் ‘காமன்வெல்த்’ என்கின்ற இந்திய சுயாட்சி மசோதாவை வாபீசு வாங்கிக்கொண்டு விடவேண்டாமா?

இந்த கமிஷனை நியமித்த பார்லிமெண்ட்டினிடம் இந்தியாவின் பெய ரால் தனது சுயாக்ஷித்திட்டத்தை சமர்ப்பித்து பல்லைக்கெஞ்சிக் கொண்டிருப் பது சுயமரியாதை ஆகிவிடுமா? தவிர பார்லிமெண்டில் எந்த தொழிலாளர் கட்சியார் இந்த பில்லுக்கு சாதகமாய் இருப்பதாக சொல்லப்படுகின்றதோ அந்த தொழிலாளர் கக்ஷியாளர்களால் தானே இக்கமிஷன் ஆதரிக்கப் படுகின்றது?

தவிர காங்கிரசாவது வேறு எந்த இந்திய அரசியல் இயக்கங்களாவது இந்த கமிஷன் இந்தியாவிற்கு வந்துவிட்டு போய் தனது முடிவைத் தெரிவிக்கின்ற வரையிலும் எவ்வித அரசியல் திட்டமும் போடக்கூடாது என்பதாகவாவது. காத்திருக்கின்றனவா? அப்படிக்கில்லாமல் காங்கிரஸ் ஒருத் திட்டம், மிதவாதி ஒரு திட்டம், எல்லாக் கட்சியாரும் சேர்ந்து ஒரு திட்டம், ஒவ் வொரு தலைவரும் தனித்தனியாக ஒரு திட்டம் தயாரிக்க தீர்மானங்களும் ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கும்போது இந்தியாவின் சுயமரியாதை இந்த போலி பகிஷ்காரத் தீர்மானத்தால் மாத்திரம் எப்படி காப்பாற்றப் பட்டுவிட்டது என்பது நமக்கு விளங்கவில்லை.

தவிர இதே பார்லிமென்டினால் ஏற்பட்ட பழய சீர்திருத்தத்தை அமுல் நடத்துவதில் இவர்களும் பங்காளியாய் இருந்துகொண்டு அதில் µ 4000, 5000, 7000, பணம் பெற்றுக் கொண்டு சட்டசபை மெம்பர், இந்திய சட்டசபை மெம்பர், ராஜாங்க சபை மெம்பர், சட்டசபை தலைவர், மந்திரி என்கின்ற உத்தியோகங்களில் இருந்து கொண்டு இந்தியாவின் சுயமரியாதை யைக் காப்பாற்ற பார்லிமெண்டால் நியமிக்கப்பட்ட கமிஷனை பகிஷ்கரிக்க வேண்டுமென்று தீர்மானம் செய்வதில் நாணயம் இருக்கும் என்று யார் நம்பக்கூடும்.

இந்நிலையில் பகிஷ்காரத்தின் பேயரால் பிரசாரம் தொடங்கியாகி விட்டது. அப்பிரசாரங்கள் ஸ்ரீமான்கள் ஓ.கந்தசாமி செட்டியார், குழந்தை, மையிலை ரத்தினசபாபதி முதலியார், பஷீர் அகமது, சீனிவாச அய்யங்காரர். பி.வரதராஜுலு, கோவிந்தராஜு முதலியார், குப்புசாமி முதலியார், முத்துரங்க முதலியார், அண்ணாமலை பிள்ளை முதலியவர்களே ஆவார்கள். இவர்கள் செய்யும் பகிஷ்கார பிரசாரத்தின் புரட்டை வெளியாக்கவும் ஒரு தக்க கமிட்டி ஏற்படுத்த வேண்டியது பொது மக்கள் கடமையாயிருக்கின்றது. அநேகர் அதில் சேர பிரியப்பட்டு தெரியப்படுத்தியும் இருக்கின்றார்கள்.

எனவே பொதுஜனங்கள் ஆங்காங்கு வரும் இரு கூட்டத்தினர் சொல்வதையும் பொறுமையாக கேட்க வேண்டும். கூட்டங்களில் கலவரம் முதலியவைகள் செய்வதால் ஒரு நன்மையும் விளைந்துவிடாது. பிரசாரக் காரர்களை தாராளமாக பேசவிட்டால் தான் மறுப்புகள் பிரயோஜனப்படும். பாமர ஜனங்கள் கண்விழிக்கவும் நன்மை தீமை இன்னது என்று உணர்ந்து கொள்ளவும் இதை ஒரு தக்க சந்தர்ப்பமாய் உபயோகித்துக் கொள்ள வேண்டியது புத்திசாலித்தனமாகும்.

நமது கடமை

தவிர மற்ற எல்லா கட்சியார் என்பவர்களும் தங்கள் தங்கள் தேவை களையும் அபிப்பிராயங்களையும் கமிஷனுக்கும் பார்லிமெண்டுக்கும் போய்ச் சேரும்படி செய்து விட்டதாலும் இனியும் செய்யப்போவதாலும் கமிஷன் மூலம் அவர்கள் அடைய வேண்டிய பலன் அடைய அவர்கள் நடந்து கொள்ள வேண்டிய வேலை முழுதும் முடிந்து விட்டது. அது போலவே பார்ப்பனரல்லாத மக்களாகிய நாம் நம்முடைய நிலையை எடுத்துச் சொல்ல வும் நமக்கு வேண்டியது இன்னது என்பதை தெரிவிக்கவும் அதை கமிஷன் முன்னால் தெரிவித்துக் கொள்வதோ அல்லது மற்ற கூட்டத்தாரைப் போல் திட்டம் தீர்மானித்து அனுப்பிவிடுவதோ இரண்டில் ஒன்று செய்ய வேண்டியது அவசியம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நம்முடைய திட்டங்களெல்லாம் எல்லாமக்களுக்கும் எந்த மதம் எந்த வகுப்பானா லும் சமூக வாழ்விலும் அரசியல் வாழ்விலும் சரிசமத்துவம் இருக்க வேண்டும் என்பதும் பாமர மக்களை பார்ப்பனர்களும் படித்த கூட்டங்களும் ஏமாற்றி வாழத்தக்க தாயிருக்கும் அரசியல் முறைகளை அடியோடு திருத்த வேண்டியதென்பதும் பொதுமக்களுக்குள் ஒற்றுமையைக் கெடுத்து கட்சி களையும் பிரிவுகளையும் வளர்த்துக் கொண்டு நாட்டைப் பாழ்படுத்துவதற்கனுகூலமாய் இருக்கத்தக்கதாகச் செய்யும் அரசியல் பிரதிநிதி தத்துவமுறை அடியோடு ஒழிந்து மக்கள் ஒற்றுமைக்கும் நன்மைக்கும் ஆதாரமான பிரதிநிதி தத்துவமுறை ஏற்படுத்துவதற்கும் சாதுக்களுக்கும் தொழிலாளிகளுக்கும் உண்மையான சுதந்திரமும் மேன்மையும் உண்டாக்கத்தக்க கொள்கை ஏற்படுத்துவதற்கும் அனுகூலமான காரியங்கள் முதலியதுகளையே அடிப்படையாகக் கொண்டு ஒரு திட்டத்ததை ஏற்பாடு செய்யவேண்டியது என்பது தான்.

ஆகையால் பார்ப்பனரல்லாதார்கள் கூடுமானவரை ஒன்று சேர்ந்து சீக்கிரத்தில் இதற்கு ஒரு ஏற்பாடு செய்ய வேண்டியது அவசரமாயிருக் கின்றது. படித்த பார்ப்பனரல்லாதாரும் பணக்காரப் பார்ப்பனரல்லாதாரும் இதற்கு பெரும்பாலும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பது நமக்கு தெரிந்தது தான். ஆனாலும் பார்ப்பனரல்லாதார் இயக்கம் கட்சி என்பவைகளில் இவர்கள் சேர்ந்தவர்கள் அல்ல என்பதையாவது பொது ஜனங்கள் அறியும் படி செய்து விடவேண்டியது நமது கடமையாகும். ஆதலால் அதற்காகவும் ஏதாவது ஒரு மகாநாடு கூட்ட ஏற்பட்டால் எல்லோரும் தயாராயிருக்க வேண்டிக்கொள்ளுகின்றோம்.

(குடி அரசு -– தலையங்கம் - 15.01.1928)

Pin It