periyar karunanidhi and veeramani copyஸ்ரீமான் காந்தி அவர்களுக்கு இப்போது அழைப்புமேல் அழைப்பு வரத் தொடங்கி விட்டது. ஒவ்வொரு ஊர் ராஜாக்களும் வரவேற்கிறார்கள். ரயில்வே வியாபாரிகள் போன்று ஐரோப்பியர்கள் எல்லோரும் வரவேற்கிறார்கள். சர்க்கார் அதிகாரிகள் வரவேற்கிறார்கள். ராஜப் பிரதிநிதி வரவேற்கிறார், அழைக்கிறார். நமது நாட்டுப் பார்ப்பனர்களும் தாசானுதாசராய் இருக்கிறார்கள். ஆகவே அவர் அவ்வளவு தூரம் ஐரோப்பிய அரசாங்கத்திற்கும், ஐரோப்பிய வியாபாரிகளுக்கும், பார்ப்பனர்களுக்கும் பரமானந்த சாதுவாக ஆகிவிட்டார் என்பது நன்றாய் விளங்குகின்றது. இப்படி ஐரோப்பியருக்கும், பார்ப்பனருக்கும் பரமானந்த சாதுவாயும் வரவேற்றுக் கொண்டாடத் தக்கவராகவும் ஒருவர் இருந்தால் அவரால் நாட்டுக்கு என்னவிதமான நன்மை விளையக்கூடும்? மேல் கொண்டு இக்கூட்டத்தாரால் நசுக்குண்டு வாழும் கோடிக்கணக்கான ஐரோப்பியரல்லாத - பார்ப்பனரல்லாத ஏழை மக்களுக்கு என்ன பலன் உண்டாகக்கூடும்? ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு அரிசி பதம் பார்த்தால் போதும் அல்லவா?

(குடி அரசு - கட்டுரை - 30.10.1927)

***

ஆதித் திராவிட மகாநாடு

காட்பாடிக்கடுத்த பிரம்மாபுரம் என்கிற ஊரில் ஸ்ரீமான் ராவ்பகதூர் M.C. ராஜா M.L.A. அவர்கள் அக்கிராசனத்தின் மீது கூட்டப்பட்ட ஆதிதிராவிட மகாநாட்டில் தலைவர் செய்த உபந்யாசத்தின் முக்கிய நோக்கத்தை வேறு இடத்தில் பிரசுரித்திருக்கிறோம். அதில் மனுதர்ம சாஸ்திரத்தை கொளுத்தி சாம்பலாக்க வேண்டும் என்பதாகப் பேசியிருப்பதுடன் அதை பறிமுதல் செய்ய வேண்டும் என்று தீர்மானமும் செய்திருப்பதானது அச்சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள சுயமரியாதையை விளக்குகிறது. தவிர வீதியில் நடக்க உரிமை வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்கும் தீர்மானமும் அது போன்ற மற்றும் மனித உரிமை கேட்கும் தீர்மானமும் இந்த நாட்டில் மக்கள் சுய மரியாதையடைவதற்கு தகுந்த யோக்கியதை இல்லையென்று காட்டுவதற்கு உதவியாயிருக்கின்றது. எனவே சுயமரியாதை பெற்ற பிறகுதான் சுயராஜ்யம் என்பதைப் பற்றி யோசிக்க இடமுண்டு என்பதற்கு இந்த ஆதிதிராவிட மகாநாடே போதுமான அத்தாக்ஷியாகும் என்பது நமது அபிப்பிராயம்.

(குடி அரசு - செய்தி விளக்கம் - 30.10.1927)

Pin It