இன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். இன்று காலை இருமலுக்காக டாக்டரைப் போய்ப் பார்த்தேன். அவர் மருந்து கொடுத்தார். அதை சாப்பிட்டேன் சாயந்திரம் திடீரென்று கைகால் எல்லாம் நடுக்கமேற்பட்டது. மார்பு துடிப்பு 150 க்கு வந்துவிட்டது. சாதாரணமாக 72 - 75 தான் இருக்க வேண்டும். கைகால் விரல்கள் மடக்கினால் வலிக்க ஆரம்பித்தது. உடனே டாக்டரிடம் சென்று காண்பித்தேன். அவர் காலையில் கொடுத்த மருந்தின் ரீ- ஆக்ஷன் தான் அது வேறொன்னுமில்லை. உங்களுக்கு வயது அதிகமானதால் கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கும் வேறொன்றுமில்லை என்று சொல்லி ஒரு ஊசியைப்போட்டு என்னை இரண்டு நாள்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி சொன்னார். சாயந்திரம் பேச வேண்டுமே என்று சொன்னேன். நல்லா பேசுங்க என்று சொன்னார். அதன் பின் தான் கூட்டத்திற்கு வரமுடிந்தது.

நான் கூட்டத்திற்குக் கிளம்பிக் கொண்டிருக்கும் போது எனக்கு போன் வந்தது. போனில் பேசியவர்கள் நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அம்மையாரவர்களை மேயரவர்கள் சாதியைக் குறித்து கேவலமாகப் பேசியதாக குறிப்பிட்டார்கள். அதற்கு நான் அவர் அப்படிச் சொல்லி இருக்க மாட்டார் என்று நினைக்கின்றேன். அவர் படித்தவர் பெரிய பதவி வகிப்பவர் சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்தவர். அவர் அப்படிப்பட்ட வார்த்தையை உபயோகித்திருக்க மாட்டார். அப்படி அவர் சொல்லி இருந்தால் நானே கண்டிக்கின்றேன். மன்னிப்பு கேட்கச் செய்கின்றேன் என்று சொன்னேன். மேயரவர்களைக் கேட்டதற்கு நான் சொல்லவில்லை என்று சொன்னார்.

சாதி சம்பந்தமான காரியங்களில் நான் ரொம்ப முயற்சி எடுப்பவன். அதற்காகவே வாழ்வதாகக் கருதுபவன். பறையன் - சக்கிலி - வண்ணான் - பரியாரி என்பது அவமானமல்ல. தொழிலின் காரணமாக வந்தது. பார்ப்பான் தன்னை மேன்மைப்படுத்தி கொள்ளவும் நம்மை இழிசொல்லாக்கி விட்டான். ஆனால் நம் எல்லோரையும் சேர்த்து பார்ப்பான் தேவடியாள் மகன் என்று சொல்கின்றான். சொல்வது மட்டுமல்ல சாஸ்திரத்திலும் அப்படியே எழுதி இருக்கின்றான். சட்டத்திலே (இந்தியாவிலே) தாசிபுத்திரன் என்றே இருக்கிறது. அனுபவத்திலுமிருக்கிறது என்று சொன்னால் கோயிலுக்குப் போகிறவன் அத்தனை பேரும் தேவடியாள் மகன் தானே! இது அண்ணாதுரைக்கும் தான் ராஜா சர்ருக்கும் தான். வேறு பார்ப்பானல்லாத எல்லோருக்கும்தான்.

பறையன் என்று சொல்லக்கூடாது என்று தான் சொன்னார்களே தவிர தண்ணீருக்கு எப்படி ஜலம் என்று சொல்கின்றானோ அதுபோல பார்ப்பான் காந்தியாரைப் பிடித்து பறையன் என்கிறதை நிலை நிறுத்துவதற்காக அரிஜன் என்று சொல்லி இன்னும் அதையே சொல்லிக் கொண்டிருக்கின்றான்.

பறையன் என்று சொல்லக்கூடாது என்று ஆரம்பித்தவன் நான். காந்தியார் தீண்டாதவர்களுக்குத் கிணறு வெட்டுவதற்காகக் காந்தி திலக் நிதியிலிருந்து ரு. 55.000 அனுப்பினார். அப்போது நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவன். நான் அதை இதற்காக செலவிடாமல் அப்படியே வைத்துவிட்டேன். மற்ற மாகாணக்காரர்கள் எல்லாhம் செலவழித்து தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனியாகக கேணி கோயில் பள்ளிக்கூடம் கட்டினார்கள். நான் காந்தியாருக்கு எழுதினேன் நாம் அவர்களுக்கு இவை எல்லாம் தனியாகச் செய்து கொடுப்பதால் ஒருக்காலும் தீண்டாமை ஒழியாது. அதற்குப் பதில் பறையன் கோயில் பறையன் பள்ளிக்கூடம் என்று சொல்லி மக்கள் அதையும் ஒதுக்கிவைத்து விடுவார்கள். இதை நான் விரும்பவில்லை. நம் மக்கள் தண்ணீர் எடுக்க வேண்டும். நம் மக்கள் படிக்கிற பள்ளிகளில் அவர்களையும் படிக்க அனுமதிக்க வேண்டும். நம் மக்கள் போகிற கோயில்களுக்கு அவர்களும் போக உரிமை வழங்க வேண்டும் என்று எழுதினேன். அதற்கு அவர் அதுபோல செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்.

நான் பறையன் என்று கேவலமாகச் சொன்னதாகத் தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கின்றார்கள். நான் பல தடவை இந்தச் சொல்லைச் சொன்னாலும் அதை ஒழிப்பதற்காக சொன்னதுதான். எலக்சன் போது ராமசாமி நாயக்கர் பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாக சொன்னார் என்று விளம்பர நோட்டீஸ்களெல்லாம் போட்டு தாழ்த்தப்பட்ட மக்களே அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடாதீர் என்று வால் போஸ்டர்கள் ஒட்டி இருக்கின்றார்கள். அதைக் கண்டு சிலர் என்னிடம் வந்து நீ எப்படிச் சொல்லலாம் எனறு கேட்டார்கள். நான் சொன்னது உண்மைத்தான். நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்குமுன் ரவிக்கைப் போடக்கூடாது போட்டால் துணியே போடக்கூடாது அப்படி இருந்த சமுதாயம் கால மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கின்றது. இன்றைக்கு ரவிக்கையில்லாமல் பார்க்க முடியவில்லை என்று சொன்னேன். இதைக் கொண்டு அந்த இனமக்களை எனக்கு ஓட்டுப் போடாமல் செய்வதற்காகக் கிளப்பி விடப்பட்டதே ஆகும் என்பதை விளக்கியதும் அவர்கள் புரிந்து கொண்டனர்.

11-12-1968 அன்று சென்னை - அயன்புரத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை" 15-12-1968
"பெரியார் களஞ்சியம்" தொகுதி 18- "ஜாதி-தீண்டாமை" பாகம்- 12 பக்கம் 73 

- அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா

Pin It