உலக உற்பத்தி "சந்தேகந் தெளிய" சம்பாஷணை.

கதை சொல்லுகிறவன்: ஒரே ஒரு கடவுள் இருந்தார்.

கதை கேட்கிறவன்: ஊம், அவர் எங்கே இருந்தார்?

கதை சொல்லுகிறவன்: ஆரம்பத்திலேயே அதிகப் பிரசங்கத்தனமாய்க் கேட்கிறாயே, நான் சொல்லுவதை "ஊம்" என்று கேட்டால் தான் இந்தக் கதை சொல்ல முடியும்.

கதை கேட்கிறவன்: சரி, சரி, சொல்லு. ஒரு கடவுள், அப்புறம்?

கதை சொல்லுகிறவன்: ஒரு நாள் உட்கார்ந்துக் கொண்டு என்ன செய்வது என்று யோசித்தார்.

கதை கேட்கிறவன்: சரி, எப்போ?

கதை சொல்லுகிறவன்: பாரு, மறுபடியும் இரட்டை அதிகப் பிரசங்கத்தனமாய்க் கேட்கிறாயே.

கதை கேட்கிறவன்: சரி, சரி தப்பு; சொல்லப்பா, சொல்லு.

கதை சொல்லுகிறவன்: உலகத்தை சிருஷ்டிக்கலாம் என்று முடிவு கொண்டார்.

கதை கேட்கிறவன்: (அதற்கு முன் உலகம் இல்லை போல் இருக்கிறது. உலகம் இல்லாமலே ஒரு நாள் உட்கார்ந்து கொண்டு யோசித்து இருக்கிறார்ப்போல் இருக்கிறது! அந்தரத்தில் உட்கார்ந்திருப்பார், பாவம்! என்று நினைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் பொறுத்து) சரி, அப்புறம்? (என்று சொன்னான்)

கதை சொல்லுகிறவன்: என்ன இந்த மாதிரி நான் சொல்வதைக் கவனமாய்க் கேட்காமல் எங்கெங்கேயோ யோசனையாய் இருக்கிறாயே?

கதை கேட்கிறவன்: இல்லை, நீ சொல்கிறபோதே சில சந்தேகங்கள் தோன்றின. அதைக் கேட்டால் கோபித்துக் கொள்ளுகிறாய், அதிகப்பிரசங்கி என்று சொல்லிவிடுகிறாய். ஆதலால் மனதிலேயே நினைத்துச் சமாதானம் செய்து கொண்டேன்.

கதை சொல்லுகிறவன்: அப்படியெல்லாம் சந்தேகம்கூடத் தோன்றக்கூடாது. கதை பாட்டிக் கதையல்ல; கடவுள் கதையாக்கும். இதை வெகு பக்தி சிரத்தையுடன் கேட்க வேண்டும், தெரியுமா?

கதை கேட்கிறவன்: சரி, அப்படியே ஆகட்டும்; சொல்லு பார்ப்போம்.

கதை சொல்லுகிறவன்: எதிலே விட்டேன்? அது கூட ஞாபகமில்லை, உன் தொந்தரவினால்.

கதை கேட்கிறவன்: சரி கோபித்துக் கொள்ளாதே. நீ விட்டது எதிலே என்றா கேட்கிறாய்? இரு, யோசனை பண்ணிச் சொல்லுகின்றேன். ஒரே ஒரு கடவுள்; அவர் உட்கார்ந்துக் கொண்டு என்ன செய்வது என்று யோசித்தார். உலகத்தை சிருஷ்டிக்கலாம் என்று எண்ணினார் என்பதில் விட்டாய். அதில் தொட்டுக் கொள். என்னை அதிகப்பிரசங்கி என்கிறாய். எனக்காவது ஞாபகமிருக்கிறது. மகா பக்தனாகிய உனக்கு மறந்து போகிறது. பாவம்! அப்புறம் சொல்லு.

கதை சொல்லுகிறவன்: பாவம் என்ன இழவு, உன்னுடைய தொல்லையில் எதுதான் ஞாபகமிருக்கிறது! அப்புறம் என்ன பண்ணினார் என்பது கூட மறந்து போய்விட்டது. யோசனைப் பண்ணிச் சொல்கிறேன் பொறு. (சற்றுப் பொறுத்து) முதலில் வெளிச்சம் உண்டாகக் கடவது என்று சொன்னார்.

கதை கேட்கிறவன்: இருட்டில் உட்கார்ந்து கொண்டா இவ்வளவும் நினைத்தார்? பாவம், கடவுளுக்கு எவ்வளவு பிரயாசை நம்மால்? அவர் கருணாநிதி என்பதற்கு இதைவிட என்ன ருசுவு வேண்டும்?

கதை சொல்லுகிறவன்: அதையெல்லாம் நீ தெரிந்து கொள்வதற்குத்தானே இந்தக் கதை சொல்லுகிறேன். இந்த மாதிரி கவனமாய்க் கேள்.

கதை கேட்கிறவன்: சரி, சரி, சொல்லு. உடனே வெளிச்சம் உண்டாய் விட்டதாக்கும். கடவுளுக்கு ஏதோ போட்டி இருக்கும் போல் இருக்கிறது!

கதை சொல்லுகிறவன்: என்ன போட்டி?

கதை கேட்கிறவன்: இல்லையப்பா, வெளிச்சத்ததைத்தான் கடவுள் சிருஷ்டித்தார். அதற்கு முன் இருந்த இருட்டை எவனோ அயோக்கியப்பயல் கடவுளுக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டுமென்று போட்டிக்காகச் சிருஷ்டித்து விட்டு ஓடிப்போய் விட்டான் போலிருக்கிறது! கண்டால் நான் அவனை என்ன செய்வேன் தெரியுமா?

கதை சொல்லுகிறவன்: தொலைந்து போகுது, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாதே; சொல்லுவதைக் கேளு.

கதை கேட்கிறவன்: சரி, சொல்லு.

கதை சொல்லுகிறவன்: அப்புறம் மேடு, பள்ளம் சமன் ஆக வேண்டும் கருதினார்; அது போலவே ஆயிற்று.

கதை கேட்கிறவன்: கடவுளுக்கு முன்னால் இருந்த மேடு பள்ளங்களையெல்லாம் சமன் ஆக வேண்டும் என்று சொன்னராக்கும். அதெல்லாம் சமனாய் விட்டதாக்கும். கடவுள் - நல்ல கடவுள். எவ்வளவு ஞானமும், கருணையும் உடைய கடவுள். மேடு பள்ளம் இருந்தால் நம் கதி என்ன ஆவது? இன்று போல் சமுத்திரமும், மலையும், குழியும் குன்றுமாகவல்லவா ஆகி இருக்கும்! ஆதலால் கடவுள் நல்ல வேலை செய்தார். ஆனால் அப்புறம், எவனோ புறப்பட்டு மறுபடியும் பழையபடி இருட்டும், மேடு பள்ளமும், குழியும் குன்றும் ஏற்படும்படிச் செய்துவிட்டான் போலிருக்கிறது! இருக்கட்டும், அதைப்பற்றி கவலை இல்லை. கடவுள் செய்த நன்மைகளை நினைத்து மகிழ்ந்து அவருக்கு நன்றி செலுத்துவோம். அப்புறம் என்ன செய்தார்?

கதை சொல்லுகிறவன்: அப்புறம், அதாவது வெளிச்சம் உண்டாகி மேடு பள்ளம் நிரவப்பட்ட பிறகு மறுபடியும் யோசித்தார்.

கதை கேட்கிறவன்: சரி, யோசித்தார்.

கதை சொல்லுகிறவன்: அதற்குள் ஒருநாள் முடிந்து போய்விட்டது. அடுத்த நாள் அதாவது இரண்டாவது நாள், காற்று உண்டாகக்கடவது என்று சொன்னார்; உடனே காற்று உண்டாய் விட்டது.

கதை கேட்கிறவன்: பிறகு என்ன செய்தார்?

கதை சொல்லுகிறவன்: அதற்கும் ஒருநாள் ஆகிவிட்டது. பிறகு மூன்றாம் நாள் பூமி உண்டாகக் கடவது என்று நினைத்தார்; பூமி உண்டாயிற்று. அன்றே சமுத்திரம், செடிகள் உண்டாக்க கடவது என்று நினைத்தார். உடனே சமுத்திரம், செடிகள் உண்டாயின.

கதை கேட்கிறவன்: பிறகு?

கதை சொல்லுகிறவன்: இதற்குள் மூன்று நாள் முடிந்துவிட்டது. நான்காம் நாள் உட்கார்ந்து கொண்டு யோசித்தார், யோசித்தார். ரொம்ப கஷ்டப்பட்டு என்ன செய்வது என்று யோசித்தார்.

கதை கேட்கிறவன்: அய்யோ பாவம்! கடவுள் நமக்காக எவ்வளவு பாடுபட்டார்! மனிதர்களுக்கு நன்றி விசுவாசம் இருக்கிறதா? போனால் போகட்டும், அப்புறம் என்ன செய்தார்? சொல்லு சீக்கிரம்.

கதை சொல்லுகிறவன்: அப்புறம் நான்காம் நாள் ஒரு முடிவுக்கு வந்தார். என்ன முடிவுக்குத் தெரியுமா? சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவைகள் உண்டாக வேண்டும் என்று கருதி ஒரேயடியாய் இவ்வளவும் உண்டாகக் கடவது என்று சொன்னார்; உடனே உண்டாகி விட்டன.

கதை கேட்கிறவன்: சரி, சரி, இப்போது புரிந்தது அந்தக் கடவுளின் பெருமை. நான் முன்பு சந்தேகப்பட்டதும், குறுக்குக் கேள்வி போட்டதும் அதிகப் பிரசங்கித்தனம் என்பது வெளியாற்று.

கதை சொல்லுகிறவன்: பார்த்தாயா, நான் அப்பொழுதே சொல்லவில்லையா, கடைசிவரை பொறுமையாய்க் கேட்டால், எல்லாச் சந்தேகமும் விளங்கிவிடும் என்று! எப்படி விளங்கிற்று? சொல்லு பார்ப்போம்.

கதை கேட்கிறவன்: அந்தக் கடவுளின் பெருமை எனக்கு எப்படி விளங்கிற்றென்றால், பூமி உண்டாவதற்கு முன்பே மேடு பள்ளத்தையெல்லாம் சமன் செய்தது ஒன்று. மற்றும் சூரியன், பூமி ஆகியவை உண்டாவதற்கு முன்பே நாள்கள் கணக்கு எண்ணவும், முதல் நாள், இரண்டாம் நாள், மூன்றாம் நாள் கண்டு பிடிக்கவும் முடிந்தது பார்; இது எவ்வளவு அற்புதமான செய்கை. அப்புறம் மேலே சொல்லு. மிகவும் ருசிகரமாகவும், மகிமை பொருந்தியதாகவும் இருக்கிறது இந்தக் கடவுள் கதை.

கதை சொல்லுகிறவன்: அதற்குள் என்ன தெரிந்து கொண்டாய்? இன்னும் கேள். எவ்வளவு அதிசமாயும், ருசியாயும் இருக்கும் பார்! அப்புறம் அய்ந்தாவது நாள் ஆயிற்று. மீன்களும், பட்சிகளும் உண்டாகக் கடவது என்றார்; உடனே ஆகிவிட்டன.

கதை கேட்கிறவன்: இத்தனைக் கோடி கோடி கோடி மீன்களும், ஒரே நாளில் ஆய்விட்டன என்றால் கடவுள் சக்தியும், பெருமையும் எப்படிப்பட்டவை பார்! அப்புறம்?

கதை சொல்லுகிறவன்: அப்புறம் தான் விசேஷமான வேலை செய்கிறார். அதாவது ஆறாவது நாள் உட்கார்ந்து யோசித்து யோசித்து பார்த்து ஒரு முடிவுக்கு வந்து மிருகங்களும், மனிதர்களும் உண்டாகக் கடவது என்றார். உடனே மிருகங்களும், மனிதர்களும் உண்டாகி விட்டார்கள்.

கதை கேட்கிறவன்: அப்பாடா! கடவுள் வெகு பிரயாசைப்பட்டிருக்கிறாரே ஒரு வாரம் போல்! 6-நாள் விடாமல் கஷ்டப்பட்டு வெளிச்சம், சமம், காற்று, பூமி, சமுத்திரம், செடிகள், சூரியன், நட்சத்திரம், சந்திரன், மீன்கள், பட்சிகள், மிருகங்கள், மனிதர்கள் ஆகிய எவ்வளவு பண்டங்களையும், ஜீவன்களையும் சிருஷ்டித்திருக்கிறார்! என்ன கஷ்டம்! இதற்கு ஆக அவருக்கு களைப்பு இளைப்பு ஏற்படவில்லையா?

கதை சொல்லுகிறவன்: ஓடாதே, சொல்லுகிறேன் கேள். நமக்கு இருக்கிற புத்தி கடவுளுக்கு இருக்காதா? ஏழாவது நாள் ஓய்வு எடுத்துக் கொண்டார். அதனால் தான் இப்போது கூட ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் ஆகக் கருதப்படுகிறது.

கதை கேட்கிறவன்: சரி புரிஞ்சுது. கடவுள் தயவினால் வேலை செய்யாதவன் கூட இப்பொழுது ஞாயிற்றுக்கிழமை ஓய்வெடுத்துக் கொள்கிறான். கடவுள் எவ்வளவு கருணை உடையவர்! சரி, அப்புறம்?

கதை சொல்லுகிறவன்: மனிதரை கடவுள் சிருஷ்டித்தாரென்றால் எப்படி சிருஷ்டித்தார் தெரியுமா?

கதை கேட்கிறவன்: அதை கேட்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். நீ அதை அதிகப்பிரசங்கக் கேள்வி என்று சொல்லி விடுவாயே என்று விட்டுவிட்டேன். ஆனாலும் நல்ல வேலையாய் நீயே சொல்லப் புறப்பட்டு விட்டாய். அதுவும் அந்தக் கடவுள் செயலாகத்தான் இருக்க வேண்டும். சொல்லு, சொல்லு,

கதை சொல்லுகிறவன்: முதல் முதலில் ஒரே ஒரு மனிதனைச் சிருஷ்டித்தார். பிறகு அவனுடைய விலாவிலிருந்து ஒரு எலும்பை எடுத்து அந்த எலும்பிலிருந்து ஒரு பெண்ணைச் சிருஷ்டித்து இரண்டு பேரையும், ஷோக்காய் ஒரு நந்தவனத்தில் உலாவச் சொன்னார். அந்த பழச் செடிகளில் ஒரு பழச்செடியின் பழத்தைச் சாப்பிடக் கூடாது என்று கடவுள் அந்த ஆண், பெண் இருவருக்கும் சொல்லி வைத்தார். கடைசியாக அந்த ஜோடி, கடவுள் வார்த்தையைத் தட்டி விட்டுப் பிசாசு வார்த்தையைக் கேட்டு அந்தப் பழத்தைச் சாப்பிட்டுவிட்டது.

கதை கேட்கிறவன்: நில்லு, நில்லு இங்கே எனக்கு கோபம் வருகின்றது. அந்த கோபம் ஆறினால் தான் மேற்கொண்டு கதை கேட்க முடியும்.

கதை சொல்லுகிறவன்: என்ன கோபம்?

கதை கேட்கிறவன்: அதெப்படி அங்கே சாத்தான் வந்தான்? அவனை யார் சிருஷ்டித்தது? மேற்படி 6- நாள் வேலையிலும் கடவுள் சாத்தானைச் சிருஷ்டிக்கவே இல்லையே. அந்தப் பயலை வேறு எந்தப் பயலோ சிருஷ்டித்தல்லவா கடவுளுடன் போட்டி போட அந்த நந்தவனத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும்! அந்தப் பயலைக் கண்டு பிடித்து அவனுக்குத் தகுந்த புத்தி கற்பிக்க வேண்டாமா? ஒரு சமயம் கடவுளும் தனது பெருந்தன்மையில் அந்த சாத்தானையும், அவனைச் சிருஷ்டித்த மற்றொரு சாத்தானையும் விட்டிருப்பார். நமக்குப் புத்தியும் ரோசமும் வேண்டாமா? அந்தச் சாத்தானையும், அவனைச் சிருஷ்டித்தவனையும் கண்டுபிடித்துத் தகுந்தபடி புத்தி கற்பிக்காவிட்டால் நமக்கும், மற்ற மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்? இது தான் என்னுடைய ஆத்திரம். இதற்கு ஒரு வழி சொல்லு. எவ்வளவு நல்ல கடவுள்! இவரோடு போட்டி போட்டார்கள் அயோக்கியப்பசங்கள்! எனக்கு கோபம் வந்து வந்து போகிறது.

கதை சொல்லுகிறவன்: ஆத்திரப்படாதே. நான் சொல்லுவதைப் பூராவும் கேள். பிறகு அதைப்பற்றி யோசிக்கலாம்.

கதை கேட்கிறவன்: சரி, சொல்லித் தொலை. நமக்கென்ன மானமா, வெட்கமா, அறிவா, என்ன இருக்கிறது! எவன் வந்து என்ன செய்தாலும் பொறுத்துக் கொண்டு சாமி மாடு மாதிரி தலையை ஆட்ட வேண்டியது தானே! அப்புறம்?

கதை சொல்லுகிறவன்: அந்த பழத்தை சாப்பிட்ட இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.

கதை கேட்கிறவன்: ஆளுக்கு ஒரு குழந்தையா?

கதை சொல்லுகிறவன்: இரண்டு பேருக்கும் சேர்ந்து இரண்டு குழந்தைகள் பிறந்தன.

கதை கேட்கிறவன்: சரி, அப்புறம் என்ன ஆச்சுது?

கதை சொல்லுகிறவன்: என்ன ஆவது? பிசாசுப் பேச்சைக் கேட்டதால் பிறந்த பிள்ளை யோக்கியமாய் இருக்குமா? அவைகள் ஒன்றோடொன்று சண்டை இட்டுக்கொண்டு இளையது மூத்ததைக் கொன்று விட்டது.

கதை கேட்கிறவன்: காலம் கலிகாலமல்லவா? மூத்தது மோழை! இளையது காளை. கொல்லாமல் இருக்குமா? அப்புறம்?

கதை சொல்லுகிறவன்: இளையவனை கடவுள் "உன் அண்ணன் எங்கே?" என்று கேட்டார். இளையவன் "எனக்குத் தெரியாது" என்று சொன்னான். உடனே கடவுள் கோபித்துக் கொண்டு அந்த ஆதி ஆண், பெண் ஆகியவர்களிடத்தில் மறுபடியும் ஒரு குழந்தை உருவாகும்படிச் செய்தார்.

கதை கேட்கிறவன்: எப்படியோ செய்தார், அப்புறம்?

கதை சொல்லுகிறவன்: இதற்குள்ளாகக் கொசகொசவென்று குழந்தைகள் பெருகிவிட்டன. இவைகள் எல்லாம் அயோக்கியர்களாக இருந்தன. இவைகளில் ஒன்று தவிர மற்றவைகள் எல்லாம் இறந்து போயின.

கதை கேட்கிறவன்: அய்யோ! அப்புறம் கடவுள் என்ன செய்தார்?

கதை சொல்லுகிறவன்: என்ன செய்தார்! மிஞ்சின குழந்தையை, ஒரு கப்பல் தயார் செய்யச் செய்து அதில் கடவுள் முன் உற்பத்தி செய்த பொருட்களையெல்லாம் ஏற்றிக் கொண்டு தண்ணீரில் மிதக்கச் சொன்னார். அந்தப்படியே மிதந்தான். இந்தச் சந்தர்ப்பத்தில் பெரிய மழை பெய்து எங்கும் பிரளயமாக ஆகி உலகமே அழிந்து விட்டது. இந்தக் கப்பல் மாத்திரம் மிஞ்சிற்று. மீதியான கப்பலினாலும், அதிலிருந்தவர்களாலும் இப்பொழுது காணப்படுகிற உலகமும், அதிலுள்ள சகலமும் உண்டாயின.

கதை கேட்கிறவன்: அந்தக் கப்பலில் சந்திரன், சூரியன், நட்சத்திரம் முதலிய எல்லாம் ஏற்றப்பட்டு எல்லாம் மூழ்கிப் போச்சாக்கும்!

கதை சொல்லுகிறவன்: ஆம், எல்லாம் அடியோடு மூழ்கிவிட்டது.

கதை கேட்கிறவன்: போதுமப்பா, இன்னும் இதற்கு மேல் சொன்னால் என்னால் கேட்க முடியாது. நல்ல தங்கமான கதை இது.

கதை சொல்லுகிறவன் : சரி அப்படியானால் இப்போது நிறுத்திவிட்டு மற்றொரு நாளைக்கு இன்னொரு கடவுளுடைய கதையை நான் சொல்லுகின்றேன். நீ கேளு.

- ("சித்திரபுத்திரன்" எனும் புனை பெயரில் 14.02.1970- "உண்மை" இதழில் தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்டது)

(அனுப்பி உதவியவர்: மகிழ்நன்)

Pin It