கோயமுத்தூர் ஜில்லா தலைவர்கள் மகாநாடு ஒன்று கோயமுத்தூரில் கூட்டப்பட்டது வாசகர்களுக்குத் தெரியும். அக்கூட்டத்திற்கு ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமணய்யங்காருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படவில்லை. அழைப்புக் கடிதம் அனுப்பப்படாததற்கு ஸ்ரீமான் அய்யங்கார் பொறுப்பாளியா, அல்லது அய்யங்காரின் கூட்டு அபேக்ஷகர்களில் எவராவது பொறுப்பாளியா, அல்லது கூட்டப்பட்டவர்கள் பொறுப்பாளியா என்பது அவ்வளவு சுலபமாய் வெளியில் சொல்லக்கூடிய விஷயமல்ல.
 
இதனால் நமது அய்யங்காருக்கு ஒரு புது யோகம் பிறந்து விட்டது. அதாவது தன்னை அக்கூட்டத்திற்கு அழைக்காத காரணத்தைக் கொண்டு ஒவ்வொரு பார்ப்பனர்கள் வீட்டுக்கும் போய், பார்ப்பனரல்லாதார் எல்லாம் தன்னைத் தள்ளிவிட்டதாகவும், இந்தக் காரணத்திற்காகவே பார்ப்பனர்கள் எல்லாம் கட்டுப்பாடாக பார்ப்பனர்களுக்கே தனி ஓட்டு (சிங்கிள் ஓட்டு) போட வேண்டுமென்றும், ஒரு பார்ப்பனனாவது பார்ப்பனரல்லாதாருக்கு ஓட்டுச் செய்யக்கூடாது என்றும் சொல்லி ஒவ்வொரு பார்ப்பன ஓட்டரிடத்திலும் பிரமாணமும் வாக்குத்தத்தமும் வாங்கி கட்டுப்பாடு செய்து வருகிறா ரென்றும், பார்ப்பனர்களும் கூட்டம் கூட்டமாகப் போய் அய்யங்காருக்குப் பிரமாணம் செய்து கொடுத்துவிட்டு வருகிறார்களென்றும் இதன் காரணத்தாலேயேதான் கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட சில பார்ப்பனர்களும் அக்கூட்டத்திற்கு வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அவ்வாறு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டும் கூட்டத்திற்கு வராது நின்றவர்கள் ஸ்ரீமான்கள் சி.எஸ்.சாம்பமூர்த்தி அய்யர், கே.இராகவேந்திரராவ், இராமசாமி அய்யங்கார் ஆகிய மூவருமேயாவார்கள். இவர்கள் வக்கீல் உலகத்தில் செல்வாக்குள் ளவர்கள்; பொது ஜனங்களாலும் மதிக்கப்பட்டவர்கள்; பொது ஜனங்களில் பலரும் இவர்கள் செல்வாக்குக்குக் கட்டுப்பட்டவர்கள். இப்பேர்ப்பட்டவர்களே கட்டுப்பாடாயிருந்து அய்யங்கார் யோகத்திற்குக் காரணமானவர் களாயிருப்பார்களானால், மற்றப் பார்ப்பனர்களின் கட்டுப்பாடும் நமது அய்யங்காரின் யோகத்திற்கு எவ்வளவு காரணமாயிருக்காது?
 
ஆனால் நமது அய்யங்காரின் இவ்வித கட்டுப்பாட்டையும் யோகத்தையும் நாம் மனமார உள்ளூற வரவேற்கிறோம். ஏனெனில் இவர்களைப் பார்த்தாவது மற்ற வகுப்பாருக்கு புத்தி வராதா, அல்லது மற்ற வகுப்பாருக்கு புத்தி கற்பிக்கவாவது இந்த பார்ப்பனக் கட்டுப்பாடு ஒரு துணைக்கருவியாயிருக்காதா என்கிற ஆசையினால்தான். ஆதலால் இப்போது நமது ஜில்லாவுக்கு நிற்கும் அபேக்ஷகர்களில் நமது அய்யங்கார் பார்ப்பனரொழிந்த மீதி அபேக்ஷகர்கள் மூவரும் பார்ப்பனரல்லாதாராயிருப்பதுடன் மூவரும் வேளாளர்களாகவே இருக்கிறார்கள். அதாவது ஸ்ரீமான் வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர் கொங்குவேளாளர், ஸ்ரீமான் இரத்தினசபாபதி முதலியார் தொழுவ வேளாளர், ஸ்ரீமான் டி.எ. இராமலிங்க செட்டியாரும் சோழ தேசத்து வேளாளர். அதுபோலவே நமது ஜில்லா ஓட்டர்களில் 100-க்கு 75 பேருக்கு மேலாகவே வேளாளர்களாவார்கள். மீதி 25 பேரிலும் 20 பேர் பார்ப்பனரல்லாதார் ஆவார்கள். ஆதலால் நமது பார்ப்பனரல்லாதாரில் வேளாளர்களும் மற்றவர்களும் நமது பார்ப்பனர்களைப் போலவே பார்ப்பனரல்லா தாரான வேளாளர்களுக்குத்தான் ஓட்டு செய்வதே அல்லாமல் பார்ப்பனர்களுக்கு ஓட்டு செய்வதில்லை என்று கட்டுப்பாடுடன் உறுதி செய்து தீர்மானித்துக்கொண்டால் பார்ப்பனரல்லாத சமூகங்கள் தானாகவே முற்போக்கடையும்.
 
பார்ப்பனரல்லாத குடியானவர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் சொட்டும் படியாக இரவு பகலாய்ப் பாடுபட்டு சம்பாதிக்கும் பணத்தை பார்ப்பனர்களிடம் கொட்டிக் கொடுத்து விட்டு ‘சாமி’ ‘சாமி’ என்று அவர்கள் வீட்டு பந்தக்காலைக் கட்டிக்கொண்டு திரியவேண்டிய அவசியமில்லை.
 
நமது நாட்டில் வேளாளர்கள் பஞ்சம் பஞ்சம் என்று அடித்துக்கொள்ளுவதெல்லாம் முழுதும் மழை பெய்யாததாலோ வெள்ளாமை விளையாததாலோ என்று சொல்ல முடியாது. வேளாள சமூகத்திற்கு ஏற்பட்ட பஞ்சமெல்லாம் வக்கீல்கள் அடிக்கும் கொள்ளையினால் ஏற்பட்டதே அல்லாமல் வேறல்ல. இப்பேர்ப்பட்ட வக்கீல்கள் ஏற்படுத்தவும் வழக்குகளை உற்பத்தி செய்யவும் நமது பார்ப்பனருக்கு அனுகூலமாயிருப்பது இந்த சட்டசபைகளேயாகும்.ஆகையால் இவற்றை ஒழித்து வேளாள சமூகம் முன்னுக்கு வரவேண்டுமானால், கூடுமானவரை பார்ப்பனர்களை சட்டசபைக்கு அனுப்பாமல் உண்மையாய் வேளாளர் நன்மைக்கு உழைக்கும் வேளாளரே போகும் படி பார்த்துக் கொண்டால் போதுமானது.

சட்டசபை மூலம் சுயராஜ்யம் வரும் என்று எண்ணுவதெல்லாம் “கேள்வரகில் (ராகியில்) நெய் ஒழுகுகிறது” என்று சொல்லுவது போன்றேயாகும். ஆதலால் பார்ப்பன சமூகத்தார் எப்படி தங்களுடைய ஓட்டுகளை ஒரு பார்ப்பனருக்குக் கொடுப்பதேயல்லாமல் பார்ப்பனரல்லாதாருக்குக் கொடுப்பதில்லை என்று ஸ்ரீ சி.வி.வெங்கிட்டரமணய்யங்காருக்குக் கட்டுப்பாடாக பிரமாணம் செய்து கொடுக்கிறார்களோ, அதுபோலவே நமது ஜில்லா பார்ப்பனரல்லாதாரும், முக்கியமாய் வேளாள சமூகத்தாரும் கண்டிப்பாய் தங்கள் சமூகத்தாராகிய பார்ப்பனரல்லாத அபேக்ஷகர்களுக்கே ஓட்டுப் போடுவது என்று உறுதி செய்து கொள்வார்களானால் அதுவே தேசத்திற்கும் தங்கள் சமூகத்திற்கும் உழைத்ததாகும். அப்படிக்கில்லாமல் தங்கள் சமூகத்தாரை அலக்ஷியம் செய்துவிட்டு பார்ப்பனர் தயவுக்கும் அவர்கள் பசப்பு வார்த்தைக்கும் தந்திரத்துக்கும் ஏமாற்றலுக்கும் கட்டுப்பட்டும், பார்ப்பனர்களிடம் பணம் வாங்கிக் கொண்டோ அவர்கள் தயவுக்கு கட்டுப்பட்டோ ஓட்டு சம்பாதிக்கும் தரகர்களுக்குக் கட்டுப்பட்டும் ஏமாந்து பார்ப்பனர் களுக்கு ஓட்டுச் செய்வார்களேயானால் அதைப்போல தேசத்துரோகமும் சமூகத் துரோகமும் வேறில்லை என்றே சொல்லுவோம்.

(குடி அரசு - கட்டுரை - 18.07.1926)

(சித்திரபுத்திரன் என்ற பெயரில் பெரியார் எழுதியது)

Pin It