சென்னையில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் வீட்டில் கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகக் கூட்டத்தின் நடவடிக்கைகள் இவ்வாரப் பத்திரிகைகளில் வெளியானதை நண்பர்கள் வாசித்திருக்கலாம். ஆனால் அதில் நடந்த விஷயங்களை ஒவ்வொரு பத்திரிகை ஒவ்வொரு விதமாய் தத்தம் சௌகரியப்படி பிரசுரித்திருக்கின்றன.

ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியாரின் தீர்மானமானது ஒரே அடியாய் தூக்கி அடிக்கப்பட்டு உயிர் வாங்கப்பட்டுப் போயிற்று, அதாவது ‘‘காங்கிரசால் சட்டசபைக்கு நியமிக்கப்பட்ட அபேக்ஷகர்கள் பட்டதாரியாகவாவது அரசாங்க நியமனம் பெற்றவர்களாகவாவது இருப்பரேல், பட்டத்தையும் நியமனத்தையும் விட்டுவிடும்படியும் கதருடையில் பற்றுக் கொள்ளும் படியும் தீர்மானிக்கிறது’’ என்பதே ஸ்ரீமான் முதலியார் தீர்மானத்தின் தத்துவம். அப்படியிருக்க திருத்தப் பிரேரேபணையாக ஸ்ரீமான் சத்திய மூர்த்தியால் இம்மாதிரி தீர்மானமே கொண்டுவர ஒழுங்கில்லையென்றும், ஆனால் ஸ்ரீமான் முதலியார் தங்களுக்கு ஓட்டுப் பிரசாரம் செய்யவும் முதலியார் பெயரை விற்று தாங்கள் ஓட்டுப் பெறவும் அவருடைய தயவு வேண்டியிருப்பதால் அவரை ஏமாற்று முகத்தான் ஏதாவது சமாதானம் சொல்ல வேண்டுமேயென்றும், இல்லாவிட்டால் முதலியார் தனக்கு ஏதாவது அவமானம் வந்துவிடுமே யென்று கருதி விலகிவிடுவாரோ என்னமோ என்றும் பயந்து, ஸ்ரீமான் முதலியார் கண்களைத் துடைப்பது போல் ஒரு பொக்கித் தீர்மானம் திருத்தப் பிரேரேபணையாகத் தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. அதாவது ‘‘காங்கிரசின் கொள்கைப்படி பட்டம் விட வேண்டிய அவசியமில்லாவிட்டாலும் யாராவது பட்டதாரிகள் அபேக்ஷகர்களாயிருந்தால் காங்கிரசின் கௌரதையைக் காக்க தங்கள் பட்டங்களை விடுவார்கள் எனவும் கதர் கட்டுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது’’ என்பதேயாம்.

ஸ்ரீமான் முதலியார் எந்த கருத்துடன் தனது தீர்மானத்தைப் பிரேரேபித்தாரோ அதற்கு நேர் விரோதமாகத் தீர்மானிக்கப்பட்டுப் போயிற்று. முதலாவது, முதலியாரின் கருத்து பட்டம், நியமனப் பதவி இரண்டையும் துறக்க வேண்டுமென்பது. நியமனப் பதவியைப் பற்றி பேசினால் ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்டரமணய்யங்காரை பாதிக்குமானதால் அதை அடியோடு விட்டு விடப்பட்டது. இதைப்பற்றி ஸ்ரீமான் முதலியாருக்கு இப்போது ஒரு ஆக்ஷபனையும் இல்லாமல் போனதின் இரகசியம்நமக்கு விளங்கவில்லை

இரண்டாவது, பட்டங்களை விட வேண்டியது என்ற தீர்மானம் கொண்டுவரும் போது நமது முதலியாரவர்கள், ‘‘பட்டம் பதவியுடையவர்கள் அவைகளை விட்டுவிடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். அவர்கள் விடாததால் இத்தீர்மானம் கொண்டு வந்தேன்’’ என்று சொன்னதோடு ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில்,

“இப்பொழுது நாம் வழ வழவென்று இருப்போமாயின் பின்னால் வருந்த நேரும். இப்பொழுதே எச்சரிக்கையாயிருத்தல் வேண்டும். கட்டுப்பாடுகளை தளர விட விட நமது கட்சியின் ஆக்கங்குன்றுவது திண்ணம். காங்கிரசில் ஒத்துழைப்பு நுழையாதவாறு காத்தல் வேண்டுமென்னுங் குறியோடு தங்களுடன் சேர்ந்து உழைக்கின்றேனேயன்றி வேறு எக் குறியோடும் உழைக்கிறேனில்லை”

என்று வீர உரை நிகழ்த்திய நமது ஸ்ரீமான் முதலியார் வழ வழத்ததும், எச்சரிக்கை யற்றதும், கட்டுப்பாடுகளைத் தளர விட்டதும் தமது கட்சியின் ஆக்கங்குன்றக் கூடியதும் காங்கிரசில் ஒத்துழைப்பு நுழையும் படியான தீர்மானத்தை ஒப்புக்கொண்டதும், பட்டத்தை இழித்துக் கூறியவர், பட்டதாரிகளையும் நியமனதாரிகளையும் உடைய அமைப்பிற்குத்தான் ஒரு பிரதான அதாவது, தேர்தல் வேலைக்கு ஏற்பாடு செய்யவும் அவற்றை மேற்பார்வை பார்க்கவும் நியமிக்கப்பட்ட கமிட்டி அங்கத்தினராகவும் இருக்க ஒருப்பட்டதின் இரகசியம் நமக்கு விளங்கவில்லை. இனி அவர் எக்குறியோடு அய்யங்காருடன் சேர்ந்துழைக்கிறார் என்பதும் நமக்கு விளங்கவில்லை.

ஒரு சமயம் ஸ்ரீமான் முதலியார் அவர்கள் தான் ஏற்றுக்கொண்ட திருத்தத்தில் தனது மேற்கண்ட கருத்து முழுவதும் பொலிந்து விளங்கக் காண்கின்றாரோ என்பதும் நமக்கு விளங்கவில்லை. எனினும் சீக்கிரத் திலாதல் தெரிந்துவிடுமென்றே நினைக்கின்றோம் .

இரண்டாவதாக, டாக்டர் வரதராஜுலு நாயுடுகாரின் இராஜினாமாவைப் புனராலோசனைக்குத் திருப்பி அனுப்பப்பட்டதென்றும் அறிகிறோம். ஸ்ரீமான் முதலியாரின் பிரேரேபணையின் பேரில் பிறந்த விநோதமான திருத்தத்தை அவர் ஒப்புக்கொண்டது போலவே டாக்டர் நாயுடுகாரின் இராஜினாமாவும் வாபீஸ் வாங்கிக் கொள்ளப்படுமென்றே நினைக்கிறோம்.

ஸ்ரீமான் சத்தியமூர்த்தியின் தீர்மானத்தையே ஸ்ரீமான் முதலியார் ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும்போது, ஸ்ரீமான் சத்திய மூர்த்தி கொஞ்ச நாளாய் டாக்டர் நாயுடுகாரின் பக்கத்திலேயே இருப்பதால் இராஜினாமாவை வாபீஸ் பெறும்படி நேருவது முடியாத காரியம் என்ப தாகத் தோன்றவில்லை. இதைப் பற்றியும் பல திறப்பட்ட வர்த்தமானங்கள் அடி பட்டுக் கொண்டிருக்கின்றன. முடிவைப் பொறுமையோடு எதிர்பார்ப் போம்.

மூன்றாவதாக, ஸ்ரீமான் ஈ.வெ. இராமசாமி நாயக்கரை தூக்கில் போட ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதாவது, “ஸ்ரீமான் நாயக்கர் காங்கிரசுக்கு விரோதமான பிரசாரம் செய்து வருவதால் அவரை காங்கிரஸ் காரியக் கமிட்டியிலிருந்து விலக்க வேண்டும்” என்று தீர்மானங் கொண்டு வரப்பட்டது. இது ஸ்ரீமான்கள் ஒரு பாவலரால் பிரேரேபிக்கப்பட்டு, ஒரு சாயுபினால் ஆமோதிக்கப்பட்டு, ஒரு முதலியாரால் ஆதரிக்கப்பட்டு, ஒரு பிள்ளையால் தாங்கப்பட்டது.

ஸ்ரீமான் நாயக்கர் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வந்திருப்பதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. இந்த விஷயத்திலாவது நமது அய்யங்கார்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுத்தார்களே; அதுவே நமக்கு மிகவும் சந்தோஷம். ஆனால் இத்தீர்மானத்தை ஆமோதித்தல் ஆதரித்தல் விஷயத்தில், ஒரு பார்ப்பனருக்கும் இதில் பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போனது பற்றியே வருத்தப்படுகிறோம். இதுவும் அவர்களாகவே வேண்டா மென்று சொல்லியிருப்பார்களே ஒழிய ஆசைப்பட்டிருந்தால் கிடைக்காமல் போயிருக்காது. ஆனாலும் தீர்மானத்தின் நிலை என்ன வாயிற்று என்று பார்த்தால், அது அடியோடு ஒழியும் நிலையில் இருந்ததால் மிகத் தந்திரமாய் ஒரு செட்டியாரை திருத்தம் கொண்டுவரச் செய்து, ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டு அக்கமிட்டியே விசாரித்து அறிக்கையனுப்பத் தீர்மானித்திருப்பதாய்த் தெரிகிறது. அக் கமிட்டியிலாதல் பார்ப்பனருக்குப் பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறதென்பதை அறிந்து சந்தோஷிக்கிறோம். ஆனால் பார்ப்பன மித்திரனான ‘சுதேசமித்திரனி’ல் அக்கமிட்டிக்கே நாயக்கரை தூக்கில் போடும் உரிமையும் அளித்திருப்பதாய்க் காணப்படுகிறது.

இதன் முடிவை ஸ்ரீமான் நாயக்கர் - முதலாவது சார்லஸ், வாரன் ஹேஸ்டிங்ஸ், லார்டு கிளைவ் இவர்களில் எவருக்காவது ஏற்பட்டது போல் நடக்குமோ அல்லது ருஷியா சக்கிரவர்த்தியான ஜார் சக்கிர வர்த்திக்கு நேர்ந்ததைப் போல் நடக்குமோ என்பதைத் துணிவுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாரேயல்லாமல் இந்தூர் அரசர் போல் கமிட்டிக்குப் பயந்து கொள்ளவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

ஏனெனில், இவ்வய்யங்கார்களுக்கு நல்ல பிள்ளையாகி அவர்கள் பின்னால் திரிந்து உயிர் வாழ்வதைக் காட்டிலும் அவர்களால் ‘‘சிலுவையில் அறையப்படுவதையே’’ மேல் எனக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 04.07.1926)

Pin It