கோவை தொண்டாமுத்தூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக திட்ட செயலாக்கத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ள எஸ்.பி. வே, தன்னை அமைச்சராக்கிய தொகுதி மக்களுக்கான சேவையைத் துவக்கி விட்டார்.

கடந்த 22ம் தேதி மின்வாரிய அதிகாரிகளை அழைத்த அவர், “இரவு நேரங்களில் கண்டிப்பாக மின்வெட்டு இருக்கக் கூடாது. கடந்த ஆட்சியில் 2 முதல் 3 மணி நேரம்வரை மின்வெட்டு இருந்தது. தற்போது 2 மணி நேரம் மின்வெட்டு இருப்பதாக புகார்கள் வருகின்றன. இப்பகுதிகளில் மின்வெட்டு ஏற்படுவதால் ஆழியாறு, குறிச்சி, குனியமுத்தூர் கூட்டுக் குடிநீர் திட்ட மின் சப்ளை துண்டிக்கப்படுகிறது.

இதனால் குடிநீர் சப்ளையும் பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாக்கின்றனர். மின் வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற உங்கள் ஒத்துழைப்புத் தேவை...'' என்றெல்லாம் பேசியிருக்கிறார் வேலு மணி.

பதவியேற்ற வேகத்திலேயே தனது மக்கள் பணியைத் துவக்கி விட்ட வேலுமணி பாராட்டுக்குரியவர்தான். வேலுமணியைப் பின்பற்றி மற்ற தமிழக அமைச்சர்களும் தங்களது துறையின் கீழ் வரும் மக்கள் நலப் பணிகளை துரிதப்படுத்த முன் வர வேண்டும். இந்த எதிர்பார்ப்பில்தான் தமிழக மக்கள் தீர்ப்பளித்திருக்கிறார்கள்.

மரியம் பிச்சை மரணம் சிபிசிஐடி விசாரிக்கும் - ஜெ

கடந்த 25ந் தேதி பெரம்பலூர் அருகேயுள்ள பாடலூரில் தேசிய நெடுச்சாலையில் காரில் பயணம் செய்து கொண்டிருந்த தமிழக சுற்றுச் சூழல் அமைச்சரான மரியம் பிச்சை விபத்தில் மரணமடைந்துள்ளார்.

23ம் தேதி சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்ற விழாவை அவசர அவசரமாக முடிந்துக் கொண்டு முதல்வர் ஜெயலலிதா தனி ஹெலிகாப்டர் மூலம் திச்சிக்கு சென்று மறைந்த மரியம் பிச்சையின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

மரியம் பிச்சையின் குடும்பப் பெண்களுக்கு ஆறுதல் சொன்ன போது ஜெயலலிதா கண் கலங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா அமைச்சர் மரியம் பிச்சையின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றும், இதனை தீர விசாரிக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

பொதுமக்களின் இக்கோரிக்கையை ஏற்று இந்த விபத்து குறித்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு உத்தரவிடப்படும் எனத் தெரிவித்துள்ளார். அதிமுகவின் மீது தீவிரப்பற்று கொண்ட மரியம் பிச்சை அமைச்சராகப் பொறுப்பேற்று சட்டமன்றத்தில் கால் பதிக்காமலே மரண மடைந்து விட்டார் என வருத்ததுடன் பேசிக் கொள்கிறார்கள் அதிமுக தொண்டர்கள். 

கூட்டணி தர்மத்தை மீறலாமா புதுவை முதல்வர்!

முப்பது தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த என்.ஆர். காங்கிரஸ் 17 தொகுதிகளில் போட்டியிட்டது. அதிமுக 10 தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் 3 தொகுதிகளிலும் போட்டியிட்டு தேர்தலை சந்தித்தன.

இறுதியில் என்.ஆர்.காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், அஇஅதிமுக 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. புதுச்சேரியில் ஆட்சியமைக்க 16 இடங்கள்தான் தேவை. இந்நிலையில் 1 தொகுதி குறைவாக இருந்ததால் அஇஅதிமுக வெற்றி பெற்றுள்ள 5 தொகுதிகளையும் இணைத்துக் கொண்டு ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்பார் என்ற எதிர்பார்ப்பு புதுச்சேரி மக்களிடத்திலும், அதிமுக தரப்பிலும் இருந்தது.

ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக காரைக்கால் தொகுதியில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் சிவக்குமாரைக் கூப்பிட்டு தனக்கு ஆதரவு தருமாறு கேட்டு, அதிமுக தரப்புக்கு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் "என்.ஆர். காங்கிரஸ் புதுவையில் தனித்தே ஆட்சியமைக்கும்' என்று அறிவித்து விட்டார் ரங்கசாமி.

ரங்கசாமியின் இந்தச் செயல் அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அக்கட்சியின் தலைவி ஜெயலலிதா காட்டமான அறிக்கையை வெளியிட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

"அஇஅதிமுக ஆதரவில் வெற்றி பெற்று விட்டு ஆட்சியமைக்க துணை நிலை ஆளுநரிடம் உரிமை கோரச் செல்லும்போது ஒரு வார்த்தைகூட சொல்லாமல் சுயேட்சை வேட்பாளரின் ஆதரவுடன் ரங்கசாமி ஆட்சியமைத்திருப்பது கூட்டணி கட்சிக்குச் செய்யும் துரோகமாகும். கூட்டணி தர்மத்திற்கு விரோதமாகச் செயல்பட்டு மோசடி செய்து விட்டார் ரங்கசாமி. அவர் முதுகில் குத்துவதில் எல்லோரையும் மிஞ்சி விட்டார்...'' என்றெல்லாம் வேதனைப்பட்டு சாடியிருக்கிறார் ஜெயலலிதா.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி தனக்கு துரோகம் செய்து விட்டது எனக் குற்றம் சாட்டி அக்கட்சியிலிருந்து வெளியேறி புதுக் கட்சியைத் தொடங்கிய ரங்கசாமி அதேபோன்ற துரோகத்தை செய்யலாமா? எனக் கேட்கின்றனர் அதிமுக தொண்டர்கள். தங்கள் கட்சித் தலைவியின் அறிக்கை அவர்களுக்கு நியாயமாகப்படுகிறது. ரங்கசாமி ஏன் இப்படி நடந்து கொண்டார் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகவே பேசப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது புதுச்சேரிக்குச் சென்று என்.ஆர். காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என்று மக்களைக் கேட்டுக் கொண்டார் ஜெயலலிதா. அந்த வகையில் ரங்கசாமியின் வெற்றியில் ஜெயலலிதாவுக்கும் பங்கிருக்கிறது. ஆயினும் கூட்டணி மரபை மீறி, அக்கூட்டணிக் கட்சிக்கு ஒரு வார்த்தை கூட சொல்லாமல் ரங்கசாமி முதலமைச்சராக பதவியேற்றுக் கொண் டிருப்பது நெருடலாகவே உள்ளது.

"ரங்கசாமியின் வெற்றிக்கு நான் வாழ்த்து தெரிவித்தேன். ஆனால் எனது வெற்றிக்கு அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை...'' என குறைபட்டுக் கொள்கிறார் ஜெயலலிதா.

5 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அஇஅதிமுகவை இணைத்துக் கொண்டு ஆட்சியமைத்தால் அதிமுகவிற்கு மந்திரி சபையில் இடமளிக்க வேண்டி வரும். அதை தவிர்க்கவே சுயேட்சை வேட்பாளர் சிவக்குமாரின் ஆதரவைப் பெற்றுக் கொண்டு அதிமுகவை கழற்றி விட்டிருக்கிறார் ரங்கசாமி என்கின்றனர் புதுவை அரசியல் பிரமுகர்கள்.

அதே சமயம், புதுவை வணிக வரித்துறை கருத்தரங்கில் கலந்து கொண்ட ரங்கசாமியிடம், ஜெயலலிதாவின் கண்டன அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, "நிச்சயமாக நான் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசுவேன்...'' எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து "அதிமுகவை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வீர்களா?' என்ற நிருபர்களின் கேள்விக்கு 27ம் தேதிக்குப் பிறகு தெரியும் என்றும் பதிலளித்திருக்கிறார் ரங்க சாமி.

ஜெ.வைச் சந்தித்து என்ன விளக்கம் அளித்தாலும் ஆட்சியமைக்கும் சமயத்தில் அதிமுக தலைமையிடம் ஒரு வார்த்தைக் கூட சொல்லாமல் ரங்கசாமி நடந்து கொண்டது அரசியல் நாகரீகமற்றது என்கின்றன புதுவை தலைமைச் செயலக வட்டாரங்கள்.

- அபு

Pin It