சென்னையில் இப்பொழுது நடந்துவரும் தேர்தல் பிரசாரங்களின் யோக்கியதையைப் பார்த்தால் புதுச்சேரி தேர்தலுக்கு சமமாய் வந்துவிடும் போல் இருக்கிறது. கூட்டங்களில் ஒரு கட்சியார் மற்றொரு கட்சியார் மீது காலிகளை விட்டுக் கல்லெறியச் செய்வதும், நூற்றுக்கணக்கான போக்கிரிகளை விட்டுக் கூட்டத்தைக் கலைப்பதும் போன்ற காரியங்கள் நடைபெறுவதாய் இரண்டு கட்சிப் பத்திரிகைகளிலும் பார்த்து வருகிறோம். யார் கலகத்திற்குக் காரணம்? யார் தூண்டுதலின் மேல் இம்மாதிரியான காரியங்கள் நடக்கின்றன என்கின்ற விஷயத்தில் நாம் ஒரு முடிவுக்கு வராவிடினும் இம்மாதிரியான காரியங்கள் நடந்தன என்பதைப்பற்றிச் சந்தேகங் கொள்ள இடமில்லை. “குருட்டுக் கோமுட்டிக்கடையில் திருடாதவன் பாவி” என்பது போல், சரியான கல்வி அறிவும், நன்மை தீமைகளை அறிய ஆற்றலும் இல்லாத ஜனங்களிடமிருந்து ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டுமாயின் கையில் பலத்தவன்தான் காரியத்தை அடைவான். எவனுக்குப் பொய் சொல்லத் தைரியம் இருக்கின்றதோ, எவனுக்குப் பொருள் செலவு செய்யச் சக்தியிருக்கின்றதோ எவனுக்குப் பொய்ப் பிரசாரம் செய்ய சௌகரியமிருக்கிறதோ அவனுக்குத்தான் வெற்றி கொடுக்க நம்நாடு தயாராயிருக்கிறது.

எவ்வளவோ சீரும் சிறப்பும் பண்டைப் பெருமையும் உள்ள நாடு என்று சொல்லிக்கொள்ளும் நமது இந்தியா இக்கதியில், “பிடித்தவனுக்கெல்லாம் பெண்சாதியாயிருக்கின்ற”தெனச் சொன்னால் நாம் எதற்குத் தகுதியுடையவர்களாவோம்? விடுதலை, விடுதலை என்று சொல்லிக் கொண்டு வெள்ளையரோடு தகராறு செய்வதும் அவர்கள் ஏதோ நமக்குப் பெரிய உதவி செய்வதாய் வேஷம் போட்டுச் சில உபயோகமற்ற பதவிகளை நமக்கு அளிப்பதும் அதை எவர் அடைகிறது என்று நாம் சண்டை போட்டுக் கொள்வதும் திரும்பத் திரும்ப மாறி மாறி தேசத்தின் தலைவிதியாய்ப் போய் விட்டது.

சுயராஜ்யக் கட்சியின் பெயரால் பிராமணர்களும், ஜஸ்டிஸ் கட்சியின் பெயரால் பிராமணரல்லாதாரும் தேசநலத்திற்கே பாடுபடுவதாகச் சொல்லிக் கொண்டு இவ்வளவு இழிவான காரியங்களுக்கெல்லாம் இடம் கொடுப்பதைப் பார்த்தால் வடநாடுகளில் இந்து - முஸ்லீம் சண்டை நமக்கு ஒரு அதிசயமாகத் தோன்றவில்லை. இவ்வித விவகாரங்கள் நாட்டில் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், டாக்டர் கிச்சிலு அகில இந்திய முஸ்லீம் மகாநாட்டில் கூறியிருப்பது போல் ஒற்றுமையில்லாமல் சுயராஜ்யம் இல்லை என்பதையும், ஒற்றுமை வேண்டுமானால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைத் தவிர வேறு ஒரு வழியால் ஒற்றுமையடைய முடியாதென்பதையும் நாம் மனப்பூர்வமாக ஆதரித்துத்தான் தீர வேண்டியிருக்கிறது.

தென்னாட்டில் இந்துக்களுக்கும், மகமதியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் சில விஷயங்களில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பட்டுவிட்டுப் போன படியால் அதைப் பொறுத்தமட்டில் ஒருவருக்கொருவர் வேற்றுமைக்கும், துவேசத்திற்கும் இடமே இல்லாமற் போய்விட்டது. அதுபோலவே பிராமணர், பிராமணரல்லாதாருக்கும் ஒரு விதி ஏற்பட்டுப் போய்விடுமேயாகில் வேற்றுமை இல்லாது போவதோடு கூட இவ்வளவு இழிவான காரியங்களும், காலித்தனமான காரியங்களும், சூழ்ச்சி களும், போலிப் பிரசாரங்களும் செய்ய வேண்டிய அவசியமே இராது. நம் மக்களையும் இவ்வளவு மோசமாக ஏமாற்ற வேண்டிய அவசியமே இருக் காது. ஆனால் இந்தக் கொள்கை தற்கால அதிகாரத்தில் இருக்கும் பிராமணர் களுக்கும் அவர்கள் புன்சிரிப்பில் மூழ்கியிருக்கும் மற்றவர்களுக்கும் அவசியமானதாகத் தோன்றாது. எனினும் தோன்றுங் காலம் சீக்கிரம் வரும்.

(குடி அரசு - தலையங்கம் - 19.07.1925)

Pin It