தேர்தலுக்கு இன்னும் ஐந்தாறு மாதங்கள் உள்ளன என்றாலும் இப்போதே களத்தில் இறங்கிவிட்டன சில பார்ப்பன ஏடுகள். எப்படியேனும் ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏற்றிவிட வேண்டும் என்னும் தங்களின் ‘இனப்பாசத்தை’ காட்டியபடி, நடுநிலை என்னும் திரைக்குள் தங்கள் முகத்தை மறைத்துக் கொள்ளக்கூட விரும்பாமல், வெட்கத்தை விட்டு அவை வெளியே வந்து விட்டன.

 தினமணி, தினமலர், துக்ளக், ஆனந்தவிகடன், ஜுனியர் விகடன் ஆகிய நாள், வார ஏடுகள் வெளிப்படையாகவே முகம் காட்டுகின்றன. மேற்கூறப்பட்டுள்ள அத்தனை ஏடுகளின் ஆசிரியர்களும் பச்சைப் பார்ப்பனர்கள் என்பதை நாம் அறிவோம்.

மின்வெட்டு, விலைவாசி உயர்வு, ஈழப்பிரச்சினை என எல்லாவற்றையும் இவ்வேடுகள் ஆயுதங்களாக உயர்த்திப் பிடிக்கின்றன. உண்மையில், இவற்றில் எவை குறித்தும் அவர்களுக்கு அக்கறையில்லை. ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்பதுபோல், எதனைக் காட்டிக் கலைஞரை வீழ்த்தலாம் என்பது மட்டுமே அவர்களின் தவிப்பு.

ஓரிரு குறைகளைச் சுட்டிக்காட்டலாம் என்றாலும், கடந்த நான்கரை ஆண்டுகளில் தி.மு.க. அரசு மக்களுக்குச் செய்திருக்கும் நன்மைகளே மிகுதி என்பதை, மனசாட்சி உள்ள எவரும் ஏற்றுக் கொள்வர். அவசர உதவிக்கு 108, கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், குடிசை வீடுகளே இல்லாத தமிழகம் போன்ற எத்தனையோ திட்டங்கள், ஏழை மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய திட்டங்கள்.

மக்கள் நன்றி உணர்ச்சியுடன்தான் இருக்கிறார்கள். இந்த அரசு நீடிக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.

அதனைப் புரிந்துகொண்ட இந்த ஏடுகள், இரண்டு மாற்று வழிகளில் தங்கள் முயற்சியைத் தொடங்கியுள்ளன. ஒன்று, தி.மு.க. கூட்டணிக்குள் குழப்பம் விளைவிப்பது. இன்னொன்று, இல்லாத அசுர பலம் ஜெயலலிதாவிற்கு வந்து விட்டதாக, ஊதிப் பெருக்கி உலகுக்குச் சொல்வது.

thiruma_karunanidhi

அண்மையில் ஜுனியர் விகடன், திருமாவளவன், கார்த்திக் சிதம்பரம் ஆகியோரின் நேர்காணல்களை அடுத்தடுத்து வெளியிட்டுள்ளது. ராஜபக்சேயின் இந்திய வருகை பற்றிக் கேள்விகளைத் தொடங்கி, திருமாவளவனிடம் கூட்டணி பற்றிய கேள்விகளுக்கு வந்துள்ளனர். ஈழ மக்களின் மீதும், ஈழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் மாறாத காதல் கொண்டவரான திருமா, ராஜபக்சேவுக்கு அளிக்கப்பெற்ற இந்திய வரவேற்பைக் கண்டித்துள்ளார். இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, இப்படிப்பட்ட காங்கிரசுடன் தி.மு.க கூட்டணி தேவையா என்று அடுத்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இது ஒரு பொறி... தந்திரம். இதில் திருமாவளவன் சிக்கியிருக்கக் கூடாது. கூட்டணி பற்றியயல்லாம் தேர்தல் வரும்போது முடிவெடுக்கப்படும் என்னும் வழக்கமான விடையைச் சொல்லியிருக்கலாம். ஆனால் ஒடுக்கப்பட்ட, உழைக்கும் வர்க்கத்திலிருந்து வந்திருக்கும் அவர், தந்திரங்களைப் பற்றிக் கவலைப்படாமல், தன் நெஞ்சில் பட்டதைச் சொல்லி இருக்கிறார்.

உடனே, வியர்க்க விறுவிறுக்க விகடன், கார்த்திக் சிதம்பரத்திடம் ஓடுகிறது. திருமாவளவன் கூற்றுக்கு விடை கேட்கிறது. இடைத்தேர்தல் வைக்கலாம், தனியே நின்று சிறுத்தைகள் வெற்றிபெற முடியுமா என்று கேட்கிறார் கார்த்தி. ஏதோ ஒவ்வொரு தேர்தலிலும், தனித்து நின்று காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதைப் போல!

ஆயிற்று... ஆனந்த விகடனின் நோக்கம் நிறைவேறிவிட்டது. நாரதர்களையும், பூணூலையும் ஒரு நாளும் நம்மால் பிரிக்க முடியாது.

ஈழம் பற்றிய காங்கிரசின் நிலைப்பாடு குறித்துத் திருமாவளவனிடம் கேள்வி கேட்கும் விகடன்கள், குஜராத் மோடிக்கு 42 வகை விருந்து வைத்த ஜெயலலிதாவிடம் எப்படிக் கூட்டு வைத்துக் கொள்கின்றீர்கள் என்று த.மு.மு.க.விடம் என்றைக்காவது கேட்டதுண்டா? போர் நடக்கும் போது மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று ஆணவம் பேசிய ஜெயலலிதாவிடம் கூட்டணி வைத்துக்கொள்ள கூச்சமாக இல்லையா என்று எப்போதாவது வைகோவிடம் கேட்டிருக்கின்றனரா?

ஈழத்தை எதிர்க்கும் ஜெயலலிதாவுடன், வைகோ கூட்டணி வைத்துக்கொள்ளலாம். அதே நிலைப்பாட்டைக் கொண்ட காங்கிரசுடன் தி.மு.க.வும், சிறுத்தைகளும் கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது - இதுதான் இவர்கள் கூறும் நியாயம்.

ஈழத்தை எப்போதும் ஆதரிப்பதாகக் கூறும் மருத்துவர் ராமதாசு, காங்கிரஸ் தலைமையில் கூட்டணியும், ஆட்சியும் அமைய வேண்டும் என்று அடிக்கடிப் பேசி வருகிறாரே, அது துக்ளக்கிற்கும், தினமணிக்கும் முரணாகவே தெரியவில்லையே, ஏன்?

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஒன்று சேர்ந்தால் கூடக் குற்றமில்லை, காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்று கூறுகின்றவர்கள் யாரேனும் உண்டா? காங்கிரசைக் கொண்டு வந்து அ.தி.மு.க. கூட்டணியில் சேர்த்துவிட வேண்டும் என்பதற்காகத்தானே, இத்தனை அல்லாடுகின்றன, இந்த ஏடுகள்.

அப்படிச் சேர்த்துவிட்டால், அத்தோடு ஈழம் பற்றிப் பேசுவதையே இவர்கள் நிறுத்திவிடுவார்கள். அதற்குப்பிறகு, ஆஹா... எவ்வளவு பெரிய கூட்டணி... 234 இடங்களிலும வெற்றி என்று கொண்டாடுவார்கள். அதற்குச் சில தமிழ்த் தேசியத் தலைவர்களும் தாளம் போடுவார்கள்.

ஈழத்தைப் பற்றியோ, அந்த மக்களைப் பற்றியோ கடுகளவும் அக்கறை இல்லாத இந்த ஏடுகளின் ஒரே நோக்கம், தி.மு.க. அரசை வீழ்த்த வேண்டும் என்பதுதான். அதிலும் குறிப்பாகக் கலைஞரை வீழ்த்திவிட வேண்டும் என்பதுதான்.

ஏனெனில், இப்போதும் அவரைத் தங்களின் பரம்பரைப் பகைவராகவே பார்ப்பனர்கள் எண்ணுகின்றனர். பெரியாரின் விரல் பிடித்து நடந்த அந்தப் பெருந்தகை, ஆட்சியதிகாரத்தில் இருப்பதை, அக்கிரஹாரங்களால் செரித்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் இந்தச் சில்லறை வேலைகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

சரி விடுங்கள், அவர்கள் சிண்டு முடிவதைப் பற்றி நாம் கண்டு கொள்ள வேண்டியதில்லை. அது அவர்களின் பரம்பரைக் குணம்!