நிதித்துறையின் வரலாறு முழுவதையும் மார்ட்டின் மிகத் தெளிவாகப் பின்வருமாறு விளக்குகிறார்.
“கம்பெனி பிரதேசங்களைக் கைப்பற்றுவதைத் தொடர்ந்து வளம்பெருகும் என்று கிளைவ் கருதிய எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறவில்லை வங்காளம் மற்றும் பீகார் திவானிகள் கம்பெனிக்கு வழங்கப்பட்டபோதும், அதைத் தொடர்ந்து வந்த சந்தர்ப்பங்களிலும் வருவாயில் ஏற்பட்ட அதிகரிப்பு அநேகமாக, செலவினங்களின் அதிகரிப்பை ஈடுசெய்வதாக இல்லை; ஐரோப்பியர்கள் நடத்தி வந்த அரசாங்கத்தின் செலவினங்கள், ஒவ்வொரு மாகாணத்திலும் நிரந்தர இராணுவத்தின் வளர்ச்சி, இதர நியாயமான மற்றும் நியாயமற்ற செலவினங்களுக்கான ஆதாரங்கள் ஆகியவை எதிர்பார்க்கப்பட்ட உபரி வருவாயனைத்தையும் கபளீகரம் செய்தன. நாட்டின் செல்வாதாரங்களை மேம்படுத்தும் பணிக்கும் அல்லது துணை மாநில மன்னர்கள் கட்டிய சாலைகள், கால்வாய்கள் மற்றும் இதர பொதுப்பணிகளைப் பராமரிப்பதற்கும் எந்தவிதமான நிதி வசதியும் இருக்கவில்லை.”
கம்பெனியின் நிதி விவகாரங்கள் மிக மோசமான முறையில் நிர்வகிக்கப்பட்டன. “பிரிட்டிஷ் படைவீரர்களை அதிகாரிகளாகக் கொண்ட இராணுவம் நம்மிடம் இருக்கிறது. ஐரோப்பிய நடைமுறைப்படி அது வழி நடத்திச் செல்லப்படுகிறது. நமது நீதித்துறையை ஆங்கிலேயச் சட்டம் முழுமையாக வியாபித்திருக்கிறது. வருவாய்க்கான நமது மதிப்பீடுகள் ஆடம் ஸ்மித்தும் அவரது சீடர்களும் (?) வரைந்த சித்தாந்தங்களை ஆதாரமாகக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. நமது நிதி மட்டுமே இந்தியாவைச் சார்ந்தது. நமது இராணுவத்தினர் ஜோமினியின் யுக்திகளையே படிக்கின்றனர். பிளாக்ஸ்டோன், பென்த்தாம், மில்ஸ், ரிகார்டோ ஆகியவர்களின் நூல்கள் தாம் சிவிலியன்களுக்குப் பாடநூலாக இருக்கிறது. ஆனால் நமது நிதித்துறையினர் பின்பற்றும் வழிமுறைகள் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அக்பரின் மந்திரியாக இருந்த அபுல்ஃஜாவின் வழிமுறைகளேயாகும்.”
ஆண்டு |
மொத்த வருவாய் (பவுண்டு) |
மொத்தச் செலவினங்கள் (பவுண்டு) |
1792-93 |
5,512,761 |
3,873,859 |
1793-94 |
8,276,770 |
6,593,129 |
1794-95 |
8,026,193 |
1,567,808 |
1795-96 |
7,866,094 |
6,888,997 |
1796-97 |
8,018,171 |
7,508,038 |
1797-98 |
8,059,880 |
8,015,327 |
1798-99 |
8,652,033 |
9,139,363 |
1799-1800 |
9,736,672 |
9,955,390 |
1800-01 |
10,485,059 |
11,468,185 |
1801-02 |
12,163,589 |
12,410,045 |
1802-03 |
13,464,537 |
12,326,850 |
1803-04 |
13,271,385 |
14,395,405 |
1804-05 |
14,949,395 |
16,115,183 |
1805-06 |
15,403,409 |
17,421,418 |
1806-07 |
14,535,739 |
17,508,864 |
1807-08 |
15,669,905 |
15,850,290 |
1808-09 |
15,525,055 |
15,392,889 |
1909-10 |
15,655,985 |
15,534,711 |
1810-11 |
16,679,197 |
13,909,981 |
1811-12 |
16,605,615 |
13,220,966 |
1812-13 |
16,336,290 |
13,515,828 |
1813-14 |
17,228,711 |
13,617,725 |
1814-15 |
17,297,280 |
15,955,006 |
1815-16 |
17,237,819 |
17,059,968 |
1816-17 |
18,077,578 |
17,304,162 |
1817-18 |
18,375,820 |
18,046,194 |
1818-19 |
19,459,017 |
20,396,587 |
1819-20 |
19,230,462 |
19,689,107 |
1820-21 |
21,352,241 |
20,057,252 |
1821-22 |
21,803,108 |
19,856,489 |
1822-23 |
21,171,701 |
20,083,741 |
1823-24 |
21,280,384 |
20,853,997 |
1824-25 |
20,750,183 |
22,504,156 |
1825-26 |
21,128,388 |
24,168,013 |
1826-27 |
22,383,497 |
23,312,295 |
1827-28 |
22,863,263 |
24,053,837 |
1828-29 |
22,740,691 |
21,718,560 |
1829-30 |
21,695,208 |
20,568,358 |
1830-31 |
22,019,310 |
20,233,890 |
1831-32 |
18,317,237 |
17,048,173 |
1832-33 |
18,477,924 |
17,514,720 |
1833-34 |
18,268,,368 |
16,924,332 |
1834-35 |
28,856,647 |
16,684,496 |
1835-36 |
20,148,125 |
15,994,804 |
1836-37 |
20,999,130 |
17,363,368 |
1837-38 |
20,858,220 |
17,553,525 |
1838-39 |
21,158,099 |
21,306,232 |
1839-40 |
20,124,038 |
22,228,011 |
1840-41 |
20,851,073 |
22,546,430 |
1841-42 |
21,837,823 |
23,534,446 |
1842-43 |
22,616,487 |
23,888,526 |
1843-44 |
23,,586,573 |
24,925,371 |
1844-45 |
23,666,246 |
24,293,647 |
1845-46 |
24,270,608 |
25,662,738 |
1846-47 |
26,084,681 |
26,916,188 |
1847-48 |
24,908,302 |
26,747,474 |
1848-49 |
25,396,386 |
26,766,848 |
1849-50 |
27,522,344 |
26,960,988 |
1850-51 |
27,625,360 |
27,000,624 |
1851-52 |
27,832,237 |
27,098,462 |
1852-53 |
28,609,109 |
27,976,735 |
1853-54 |
28,277,530 |
30,240,435 |
1854-55 |
29,133,050 |
30,753,456 |
1855-56 |
30,817,528 |
31,637,530 |
1856-57 |
31,691,015 |
31,608,875 |
1857-58 |
31,706,776 |
41,240,571 |
1792க்கும் 1857க்கும் இடையிலான காலகட்டத்தைக் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்க்கும்போது திரு.ரமேஷ் சந்திர தத் கூறுகிறார்: “14 ஆண்டுகள் பற்றாக்குறை இருந்தது என்றால், 32 ஆண்டுகள் உபரிவருவாய் இருந்தது என்பதைக் காணமுடியும். பற்றாக்குறை ஒட்டுமொத்தமாகக் கிட்டத்தட்ட 17 மில்லியனாக இருந்தது என்றால் உபரியாகக் கிடைத்த வருவாய் கிட்டத்தட்ட 46 மில்லியனாக இருந்தது. ஆகவே 46 ஆண்டுகளில் இந்திய நிர்வாகத்தின் நிதித்துறை நிகரமுடிவுகள் 32மில்லியன், உபரி வருவாயைக்காட்டின. ஆனால், இப்பணம் இந்தியாவில் சேமித்து வைக்கப்படவில்லை அல்லது நீர்ப்பாசனம் மற்றும் இதர மேம்பாட்டுப் பணிகளுக்காகச் செலவிடப்படவில்லை. கம்பெனியின் பங்குதாரர்களுக்கு லாப ஈட்டுத்தொகை செலுத்துவதற்காகத் தொடர்ந்து அப்பணம் இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டது. வரிப் பங்கீட்டுத் தொகையைச் செலுத்துவதற்கு இந்தியாவிலிருந்து செல்லும் பணம் போதவில்லையாதலால் இந்தியாவின் பொதுக்கடன் என்ற பெயரில் அதிகரித்த கடன் தொகை பெறப்பட்டது.” (1.ஆர்.சி தத்.”பரிட்டிஷ் ஆட்சியின் தொடக்கத்தில் இந்தியா.” பக்கம். 408)
இந்தியாவிலும் இங்கிலாந்திலும் இரு வெவ்வேறு வழிகளில் கடன்கள் பெறப்பட்டன.
இந்தியாவில் அரசாங்கத்திற்குப் பணம் தேவைப்பட்ட போதெல்லாம் அது விளம்பரம் செய்தது. விளம்பரத்தில் குறிப்பிட்ட விகிதங்களில், அதில் உள்ள நிபந்தனைகளின் பேரில் கடனாகப் பணம் பெறுவதற்குக் கருவூலம் தயாராக இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டது. இக்கடன்கள் பகிரங்கமானவையாக இருக்கும் வரை, தங்களுக்கு விருப்பமான தொகைகளைச் செலுத்த மக்கள் அனுமதிக்கப்பட்டனர். அதற்குப் பதிலாக கடன் பத்திரங்கள் என்ற பத்திரங்களைப் பெற்றனர். இவ்வாறு செலுத்தப்படும் தொகைக்கு வரையறை கிடையாது. கடனாகப் பெறப்பட்ட பணம் முழுவதும் இந்தியாவிலேயே பெறப்பட்டது.
இங்கிலாந்தில் ஒரு மாறுபட்ட முறை செயல்பட்டது. பார்லிமெண்ட் வகுத்தளித்த ஒரே வழிமுறையின் மூலம் கிழக்கிந்தியக் கம்பெனி இதர பெரும் நிறுவனங்களுக்கு இணையாகக் கடன்பத்திரங்களின் (பாண்டு) மூலம் கடன் பெற முடிந்தது. இங்கிலாந்தில் உள்நாட்டுக்கடன் முழுவதும் இத்தகைய பாண்டுகளின் மூலம் தான் பெறப்பட்டது.
கம்பெனியின் ஆட்சியில் இந்தியாவின் பொதுக்கடன் முழுவதும் போரினால் ஏற்பட்டதாகும்.
இந்த இரு கடன்களின் வளர்ச்சியைத் தனித்தனியாகப் பார்ப்போம்.
இந்தியக் கடன்
1792இல் இந்தியக் கடன் 70 இலட்சம் பவுண்டுகளுக்கும் சற்றே அதிகமாக இருந்தது. ஏழு ஆண்டுகளுக்குள் அது ஒருகோடி பவுண்டுகளாக உயர்ந்தது. 1800ஆம் ஆண்டில் அது 14,625,384 பவுண்டாக இருந்தது. அதற்கு வட்டித்தொகை மட்டுமே 1,342,854 பவுண்டு என்று கணக்கிடப்பட்டது. இப்போது மராட்டாக்களுடன் வெல்வெஸ்ஸி மேற்கொண்ட போர்கள் வந்தன. 1807-08 இல் இந்தியக் கடன் ஒரேயடியாக உயர்ந்து 30,098,857 பவுண்டாகியது. அதற்கு மொத்த வருடாந்திர வட்டி 2,339,087 பவுண்டு எனக் கணக்கிடப்பட்டது. அமைதி ஏற்பட்டபின்பு மீட்புப்பணிகள் மூலம் கடன்களைக் குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கொள்கையின் பயனாக 1810-11 ஆம் ஆண்டில் இந்தியக்கடன் 22,545,843 பவுண்டுகளாகக் குறைந்தது. வட்டி 1,503,434 பவுண்டாகக் குறைந்தது. ஆனால் போர்கள் அன்றாட நிகழ்ச்சியாகவும் அமைதி விதிவிலக்கானதாகவும் இருந்தது 1819-20 இல் நேபாளப் போர் மற்றும் முதலாவது மராத்தா யுத்தத்தின் மூலமாகவும் இந்தியக் கடன் 31,338,855 பவுண்டாக உயர்ந்தது. 1823-24 வாக்கில் இடைக்கால அமைதி நிலவியதன்மூலம் கடன் குறைக்கப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டான 1824-25 இல் நடைபெற்ற முதலாவது பர்மியப் போர், கடனை 38,316,486 பவுண்டாக உயர்த்தியது. 1835-36 இல் கடன் தொகை 31,821,118 பவுண்டாகக் குறைந்தது. ஆனால், இந்தியாவுக்குத் தொடர் இராணுவ நடவடிக்கைகள் காத்திருந்தன. ஆப்கன் போர், சிந்து யுத்தம் கடனை அதிகரித்தன. 1852-53 இல் அது 52,313,094 பவுண்டாகவும், வட்டி 2,479,133 பவுண்டாகவும் உயர்ந்தது. ஆயினும் 1853-54 இல் இந்தியக் கடன் 49,762,876 பவுண்டாகக் குறைக்கப்பட்டது. 1853-54இல் பொதுப்பணிகள் கொள்கை துவங்கப்பட்டது. அதன் விளைவாக 1855-56 இந்தியக் கடன் 55,546,650 பவுண்டாக அதிகரித்தது. 1857-58 ஆம் ஆண்டு இந்தியக் கலகம் அல்லது சுதந்திரப் போரைக் கண்டது. இந்தியக் கடனும் 60,704,084 பவுண்டாக உயர்ந்தது.
உள்நாட்டுப் பத்திரக்கடன் (இங்கிலாந்தில்)
1800 ஆம் ஆண்டில் உள்நாட்டுப் பத்திரக்கடன் 1,487,112 பவுண்டாகவும், அதன் மீதான வட்டி 5 சதவிகிதமாகவும் இருந்தது. ஆனால், வெல்லெஸ்லியின் போர்களும் கூட உள்நாட்டுக் கடனைப் பாதித்து 1807-08இல் 4,205,275 பவுண்டாக அதிகரித்தது. 1811-12 இல் உள்நாட்டுப் பத்திரக் கடன் அதிகபட்சத் தொகையான 6,565,900 பவுண்டை அடைந்தது. அதற்கான வட்டி 5 சதவிகிதமாக இருந்தது. 1816-17 இல் வட்டிவிகிதம் 4 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. பின்னர் அது ஒருபோதும் உயர்த்தப்படவில்லை. 1814-15 இல் உள்நாட்டுப் பத்திரக் கடன் 4,376,976 பவுண்டாகக் குறைக்கப்பட்டது. அவ்வப்போது குறைக்கப்பட்டு அது 1840-41இல், 1,734,300 பவுண்டாகக் குறைக்கப்பட்டு ஆப்கன் போரின் காரணமாகவும் கலகத்தின் விளைவாகவும் உள்நாட்டுப் பத்திரக்கடன் 3,894,400 பவுண்டாக உயர்ந்தது, அதைத் தவிர கலகத்தின் விலை 40,000,000 பவுண்டாயிற்று.
இந்தியக் கடனுடன் ஒப்பிடும்பொழுது இந்திய உள்நாட்டுப் பத்திரங்களின் அளவு மிகச் சிறியதாக இருந்ததைப் பார்க்கும் போது அது ஆச்சரியப்படக்கூடிய விஷயமாக இருக்கக்கூடும். கிழக்கிந்தியக் கம்பெனி இங்கிலாந்தில் கடன் வாங்கும் அளவு நாடாளுமன்றக் கட்டுப்பாடுகளினால் கண்டிப்பாக வரையறுக்கப்பட்டது என்பதை நாம் அறியும்போது அந்த ஆச்சரியம் மறைந்து போகிறது. தனக்குப் பாதகமில்லாமல் கம்பெனியினுடைய ஆட்சியின் சாதகங்களைப் பெறுவதில் நாடாளுமன்றம் எப்போதும் ஆவலாக இருந்தது. இந்திய சாம்ராஜ்யத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதில் அது ஆர்வமாக இருந்தது. ஆனால் இறுதி இலக்கு எய்தப்படும் வரை, இந்தியாவை, அது பிரச்சினைக்குரியதாகவே கருதியதுடன், வெற்றி பெறுவது போல் தோன்றிய போதிலும் கூட அனுகூலமான பலன்கள் நிச்சயமில்லை என்று கருதியதால் இந்தியா சம்பந்தப்பட்ட திட்டத்திற்காகத் தனது நாட்டின் நலன்களை ஆபத்திற்குள்ளாக்க அது விரும்பவில்லை. ஆகவே ஓரளவுக்கு மேல் கடன்களைப் பெறுவதிலிருந்து கம்பெனியின் மீது கண்டிப்பாக தடையை நாடாளுமன்றம் விதித்திருந்தது. இல்லையெனில், ஒரு வேளை இந்தியாவின் மீதான பிடிப்பைக் கம்பெனி இழக்க நேரிட்டால், அது ஆங்கிலேய மூலதனத்திற்குக் கேடு விளைவித்து இங்கிலாந்தின் அழிவுக்கு வழிவகுக்கும்.
(முதுகலைப் பட்டப் பேற்றிற்காக அளிக்கப்பட்ட ஆய்வேடு - மே 15, 1915)
தொடரும்...
(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 11)