தீண்டப்படாதவர்களின் மேம்பாட்டுக்காக ஒரு திட்டம் வகுக்கும் பொருட்டு 1922ல் நியமிக்கப்பட்ட காங்கிரஸ் துணைக் குழு குறித்து சுவாமி சிரத்தானந்தருக்கும் காங்கிரஸ் பொதுச் செயலாளரான பண்டித் மோதிலால் நேருவுக்கும் இடையே நடைபெற்ற கடிதப் போக்குவரத்து.

ambedkar 2 350(1) சுவாமிஜியின் கடிதம்

பெறுநர்,

பொதுச் செயலாளர்,

அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி,

(தங்கல்) டில்லி

தீண்டாமை குறித்து அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழுத் தீர்மான்ங்களைக் கொண்ட தங்களுடைய 331,332 எண்ணிட்ட கடிதங்கள் கிடைக்கப்பெற்றேன் என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். செய்ற்குழுத் தீர்மானத்தின் வாசகம், பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக எதிரொலிக்கவில்லை என்பதை மிக வருத்தத்துடன் குறிப்பிட விரும்புகிறேன்.

உண்மை நிலையை விளக்க விரும்புகிறேன். 1922 மே மாதம் 23-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் அப்போதைய பொதுச் செயலாளர் வித்தல்பாய் படேல் அவர்களுக்கு நான் எழுதிய கடிதம், நாட்டின் முக்கிய நாளேடுகளில் எல்லாம் வெளியிடப்பட்டிருந்தது; அதனைக் கீழே தருகிறேன்:

அன்பார்ந்த படேல் அவர்களுக்கு,

ஒருகாலத்தில் காந்தியடிகள் தீண்டாமை ஒழிப்பினைக் காங் கிரஸ் கட்சியின் முன்னணித் திட்டங்களில் ஒன்றாக வைத்திருந்தார் (”யங் இந்தியா”வின் 1921 மே 2ஆம் தேதி இதழை நோக்குக). ஆனால், தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுப்பணி இப்போது மூலை முடுக்குக்கு ஒதுக்கப்பட்டு விட்டதனை உணர்கிறேன். நமது செயலாக்கம் மிக்க தொண்டர்கள் பலரது கவனம் காதித்திட்டத்தில் ஈடு பட்டுள்ளது; அதற்கெனப் பெருந்தொகையும் ஒதுக்கப்பட்டுள்ளது. தேசியக்கல்வி மேம்பாட்டுக்கென ஒரு சீரிய துணைக்குழு நிய மிக்கப்பட்டு அதற்கான நிதிதிரட்டுதற்கெனப் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தீண்டாமை ஒழிப்பு பின்னிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. இதற்கென அகமதாபாத், அகமதுநகர், சென்னை ஆகிய மூன்று நகரங்களுக்கு மட்டும் சிறு தொகைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் வாழும் ஆறு கோடி தாழ்த்தப்பட்ட மக்களில் பெரும்பாலோரை அரசு எந்திரம் நமக்கெதிராகத் திருப்பமுனையும் போது காதித் திட்டம் கூட முழுமையாக வெற்றியடைய இயலாதென்றே கருதுகிறேன்.

வறுமையில் வாடும் தாழ்த்தப்பட்டவர்களான இவ்வுடன் பிறப்புகள் காதிக் குப்பதிலாக மலிவான அன்னியத்துணிகளையே வாங்க முற்படுவர் என்பதை எப்படி செயற்குழு உறுப்பினர்கள் எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டனர்? எனவே வரும் ஜுன் மாதம் 7ஆம் தேதி லக்னோ வில் கூடவிருக்கும் காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானத்தை முன்மொழியக் கருதுகிறேன்:

“தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுப்பணிகளுக்காக,  காங்கிரஸ் கட்சிப் பொதுக்குழு, மூன்று உறுப்பினர்கள்  கொண்ட துணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும். குழு  வின் பிரச்சாரப் பணிகளுக்காக ஐந்து லட்சம் ரூபாய்  நிதி ஒதுக்கீடு செய்வதுடன், எதிர்காலத்தில் மானியங்கள்  குறித்த எல்லா விண்ணப்பங்கள் பற்றியும் முடிவு செய்யும்  அனைத்துப் பொறுப்புகளும் துணைக்குழுவிடமே விடப்பட வேண்டும்.”

 எனது தீர்மானத்தின் வாசகத்தைச் செயற்குழு பின் வருமாறு மாற்றியமைத்தது:

“தாழ்த்தப்பட்டோர் எனப்படும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துதற்கான நடைமுறைச் செயல் திட்டங்களை வகுப்பதற்காக சிரத்தானந்தர், திருமதி சரோஜினி நாயுடு, திருவாளர்கள் ஜி.பி.தேஷ் பாண்டே, ஐ.கே. யாஜ்னிக் ஆகிய நால்வர் கொண்ட துணைக் குழுவை, அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு நிய மிக்கிறது. துணைக்குழு உருவாக்க்கும் திட்டம் அடுத்த செயற் குழுக்கூட்டத்தில் வைக்கப்பட வேண்டுமென்றும், திட்டச் செயல்பாட்டுக்காக இப்போதைக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதிதிரட்ட வேண்டுமென்றும் தீர்மானிக்கப்படுகிறது.”

செயற்குழுவின் திருத்தத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளு மாறு படேல் என்னிடம் கோரினார்; நான் மறுத்துவிட்டேன். பொதுக் குழு அடுத்த கூட்டத்திலேயே நிதி தேவையை இரண்டு லட்சம் ரூபா யிலிருந்து ஐந்து லட்சம் ரூபாயாகத் திருத்தி, இதில் ஒரு லட்சம் கட்சியின் நிதியிலிருந்து கொடுக்கப்பட வேண்டுமென்றும், எஞ்சிய தொகை நிதி திரட்டல் வாயிலாக அளிக்கப்பட வேண்டுமென்றும் முடிவு செய்தது.

இம்முடிவுக்கு மாறாகத் திரு. இராஜகோபாலாச்சாரியார் செயற்குழுவின் சார்பாக மாற்று ஏற்பாடு ஒன்றைத் தெரிவித்தார். கட்சி நிதியிலிருந்து உடனடியாக ரூபாய் இரண்டு லட்சம் தருவ தற்குப் பதிலாக, திட்டத்திற்குச் செயற்குழு இசைவு தரும்பொது, அத்தருணத்தில் இத்திட்டத்திற்காக எவ்வளவு தொகை ஒதுக்க இய லுமோ அவ்வளவு தரலாம் என்பதே அவரது மாற்றுக் கருத்து.அ வர் கூறிய சொற்க்ள் அப்படியே நினைவுக்கு வரவில்லையென்றாலும், அவரது கூற்றின் சாரம் இதுதான் என்பது உறுதி.

இச்சமயத்தில் அவையின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் எதிர்ப்பும் ஆரவாரமும் கட்சியின் நிதியிருப்பு எவ்வளவு என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்தது. உடனே கட்சித்தலைவர் என்னைத் தனியாக அழைத்துக் கட்சி யின் நிதியிருப்பு அப்போது குறைவாக இருப்பதால், அத்தகவல் கூட்டத்தில் வெளியிடுதல் இயக்கத்தையே பாதிக்கும் என்றும், கூட் டத்தில் காவல்துறை உளவாளிகள் உட்பட வெளியார் பலர் இருப் பதால் எனது திருத்தத்தை வற்புறுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். நானும் அதற்கிசைந்து, எனது தீர்மானத்தை வழி மொழிந்தோர் உள்ளிட்ட ஆதரவாளர் பலரின் எதிர்ப்பையும் மீறி, எனது திருத்தத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டேன். ஆனால் மறுநாள் நாளேடுகளில் இராஜகோபாலாச்சாரியாரின் திருத்தமின்றி வெளியிடப்பட்டிருந்த தீர்மான வாசகம் எனக்குப் பெரிதும் வியப் பூட்டியது.

பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது துணைக்குழுவிற்கு அமைப்பாளர் நியமிக்கப்பட வேண்டுமெனச் சில உறுப்பினர்கள் கூறப் பலர் எனது பெயரையே முன்மொழிந் தனர். அப்போது பொதுச்செயலாளர் திரு. விட்டல்பாய் படேல் எழுந்து, “துணைக்குழு உறுப்பினர் பட்டியலில் சுவாமிஜியின் பெயரே முதலில் இருப்பதால், அவரே துணைக்குழுவின் அமைப்பாளர் என்பது தெளிவு; இதற்கெனத் தனித் தீர்மானம் தேவையில்லை” என்றார்.

உடனே, நாட்டின் பல்வேறு மாகாணங்களியிலிருந்தும் வந் திருந்த உறுப்பினர்கள் பலர் என்னிடம் வந்து தங்கள் மாகாணங் களில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளைப் பற்றித்தகவல்கள் தந்து, அங்கு வந்து நேரடியாகப் பார்வையிட வேண்டுமென்று என்னை வேண்டினர். அலகாபாத்திலிருந்து வெளியாகும் “தி இண்டி பெண்டன்ட்” என்ற இதழுக்கு ரூ. 25000 நிதியுதவி செய்யச் செயற் குழு முடிவு செய்திருப்பதையும், டெல்லியிலிருந்தும் வரும் “காங் கிரஸ்” எனும் உருது இதழுக்கு ரூ. 10,000/- நிதியுதவி கோரித் திரு வாளர்கள் ஹக்கீம் அஜ்மல்கான், டாக்டர் அன்சாரி ஆகியோர் விடுத்த விண்ணப்பமும் செயற்குழுவின் பரிசீலனையில் இருப்பதை யும் அறிந்து, கட்சியின் நிதிநிலை அப்படியொன்றும் தாழ்வான நிலையில் இருக்காதென்று கருதியதாலும், நேரடிப் பார்வையிடுதல் வாயிலாகத் தகவல் திரட்டுவதலே திட்டத்தை நன்கு உருவாகக்த் தேவையான அடிப்படைகளைத் தரும் என்பதாலும், தீண்டாமை ஒழிப்புத் துணைக்குழுவின் தொடக்கச் செயல்பாடுகளுக்கு முன்பண மாக ரூ. 10,000 நிதியொதுக்கித் தருமாறு கட்சித் தலைவருக்குக் கடிதம் எழுதினேன்.

இவ்வளவு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, செயற்குழுவின் தீர் மானமாகத் தங்கள் 331 எண்ணிட்ட கடித்தில் குறிப்பிட்டிருந்த வாசக மாவது:

“தாழ்த்தப்பட்ட மக்கள் நலப்பணிகளுக்கான திட்டம் வகுப்பதற்காக முன்பணம் கோரி சிரத்தானந்தர் 1992 ஜுன் 8ஆம் தேதி எழுதிய கடிதத்தின் பேரில், துணைக்குழுவின் அமைப்பாளராகக் கங்காதர ராவ் பி. தேஷ்பாண்டே அவர் களைச் செயற்குழு நியமிப்பதுடன், குழுவை விரைவில் கூட்டுமாறு அவரைக் கேட்டுக் கொள்கிறது; சுவாமிஜியின் கடிதம் துணைக்குழுவின் கூட்டத்தில் வைக்கப்படலாம்.”

விளக்கப்படவியலாத கூறு ஒன்றும் இதில் அடங்கியிருப்பது சுட்டப்பட வேண்டும். எனது முதல் கடிதம் கிடைக்கப்பெற்றதாய் பதில் கிடைத்தபின் 1922 ஜுன் 3ஆம் தேதி உடனடியாக மீண்டும் ஹரித்துவாரிலிருந்து எழுதினேன்:

 “அன்பார்ந்த படேல் அவர்களுக்கு,

நான், நாளை மறுநாள் ஹரித்துவாரிலிருந்து புறப்பட்டு, ஜுன் 6ஆம் தேதி லக்னோ வந்தடைவேன். தாழ்த்தப்பட்ட வகுப் பினர் குறித்த எனது ஆழ்ந்த அக்கறையை நீங்கள் அறிவீர்கள். இந்த நிர்மாணத் திட்டத்தில் பஞ்சாப்பில் கூடக் குறிப்பிடத்தக்க கவனம் ஏதும் செலுத்தப்படவில்லை என்பதை அறிந்து வருந்துகிறேன். உத்திரப்பிரதேசத்தில் இது மிகக்கடுமையான பணியாக இருக்கு மென்பதில் ஐயமில்லை. இதில் வேறொரு கடுமையான இடர்ப் பாட்டையும் எதிர்கொள்கிறோம்.

பர்தோலி திட்டத்தின் நான்காவது இனத்தின் கீழ் தரப்பட் டுள்ள குறிப்பில், தீண்டாமைக் கொடுமை மிகுதியாய் நிலவும் பகுதிகளில், அவ்வெளிய மக்களுக்கெனத் தனிக்கிணறுகளும், தனிப் பள்ளிகளும் காங்கிரஸ் கட்சியின் செலவில் நிறுவி நடத்தப்பட வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வலிமை குன்றிய பகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களே தாழ்த்தப் பட்ட மக்களுக்கு எதிரான உணர்வு கொண்டவர்களாய் விளங்கும் பகுதிகளிலும் இத்திட்டம் செயலற்றுநிற்கும்; பொதுக்கிணறுகளில் நீர் எடுக்கத் தாழ்த்தப்பட்ட மக்களையும் அனுமதிக்குமாறு அவர் கள் ஊர்ப்பொது மக்களிடையே கோருவார்கள் என நம்புதற் கில்லை.

பீஜ்னூர் மாவட்ட்த்திலுள்ள பொதுக்கிணறுகளில் தாழ்த்தப் பட்ட மக்களும் தண்ணீர் எடுப்பதற்கு எவ்வித்த் தடையுமில்லை யென அறிகிறேன். ஆனால், பர்தோலித் தீர்மானத்தின் விளைவாகப் புதிய பகுதிகள் பலவற்றில் தாழ்த்தப்பட்டோருக்கெதிரான காழ்ப் புணர்வுகள் தூண்டப்பட்டு வருகின்றன. அண்மைச் சுற்றுப்பயணத் தில் நான் அம்பாலா படைக்குடியிருப்பு, லுதியானா, பாட்டியாலா, லாகூர், அமிர்தசரஸ், ஜாண்டியாலா ஆகிய இடங்களைப் பார்வை யிட்ட போது அங்கு தாழ்த்தப்பட்டோர் துயர்துடைப்புப் பணிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன்.

டில்லியிலும் அதைச் சூழ்ந்த பகுதிகளிலும் எனது தலைமையில் செயல்படும் ‘தலித்தோதார் சபை’ மட்டுமே இத்தகைய பணிகளில் ஈடுபட்டு வருகிறது; காங்கிரஸ் கட்சியினர் எதையும் செய்வதில்லை என்பதும் சுட்டப்பட வேண்டும். பர்தோலித் திட்டத்தின் 4ஆம் பகுதியைத் தக்கவகையில் சீர்திருத்தியமைத்தாலன்றிக் காங்கிரஸ் கட்சியின் திட்டங்களிலேயே தலையாயதான இப்பணி மிகவும் பாதிக்கப் படுமென்று கருதுகிறேன்.

எனவே, காங்கிரஸ் கட்சித் தலைவரின் பார்வைக்கு வைப்ப தற்கு, அவர் அனுமதித்தால் கட்சியின் அடுத்த பொதுக் குழுக் கூட்டத் தில் முன்மொழிவதற்குமான தீர்மான வாசகம் ஒன்றினைக் கீழே தந்தள்ளேன். பரிதோலி தீர்மானத்தின் நான்காவது குறிப்பின் கீழ் காணப்படும் குறிப்புக்கு பதிலாகக் கீழ்வரும் குறிப்பினைப் புகுத்து வதாகத் தீர்மானம் இயற்றலாம்:

தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகளில் (அ) பொது இடங்களில் ஏனைய பொதுமக்கள் அமரும் கம்பளங்களில் தாழ்த்தப்படடோரும் அமர அனுமதித்தல் (ஆ) பொதுக்கிணறுகளிலிருந்து தாழ்ததப்பட்டோரும் நீர் எடுக்க உரிமை தரல், (இ) தாழ்த்தப்பட்டோரின் பிள்ளைகளைத் தேசியப் பள்ளிகள், கல்லூரிகளில் சேர்ந்து படிக்க அனுமதிப்பதுடன், அங்கு மேல்சாதிப்பிள்ளைகளோடு வேறுபாடின் றிப் பழக அனுமதித்தல் ஆகியவற்றை உடனடியாக ஏற்றுச் செயல் படுத்தல் வேண்டும். இத்தகையதோர் தீர்மானத்தின் தேவையை நன்குணர்ந்து, அதனைப் பொதுக்குழு உறுப்பினர்களும் உணர வேண்டுமென விழைகிறேன். பல இடங்களில் தீண்டாமைக் கொடுமைகளுக்கெதிராகத் தாழ்த்தப்பட்ட மக்கள் வெளிப்படை யாக போர்க்கொடி எழுப்பிவரும் இச்சூழலில், இக்கோரிக்கைகளை நாம் ஏற்க மறுத்தால், ஆட்சியாளரின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் எளிதில் பலியாகி விடுவர்.”

1922 ஜுன் 7ஆம் தேதிய லக்னோ மாநாட்டின் எனது மூலத் தீர்மானங்கள் பொதுக் குழுவின் ஏற்று நிறைவேற்றப்பட்டபின், எனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தவாறு பர்தோலித் திட்டத்தின் நான்காம் பகுதியின் அடிக்குறிப்புக்கான திருத்தத்தினை அவை முன் வைக்குமாறு படேலை வேண்டினேன். எனது கடித்தைத் துணைக் குழுவுக்கு செயற்குழு அனுப்புவுள்ளது என்றும், பொதுக் குழுவில் அதை வைக்குமாறு வற்புறுத்த வேண்டாமென்றும் அவர் கூறியதை நான் ஏற்றுக் கொண்டேன். எனது முன்மொழிவு தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுத் துணைக்குழுவிற்கு அனுப்பப்படுவதாகக் கூறும் தீர்மானம் எதுவும் எனக்கு இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

டில்லியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிளிலும் தீண்டாமைக் கொடுமைகள் மிகக்கடுமையாக நிலவுவதால், இதில் உடனடியான கவனம் செலுத்தப்பட வேண்டுமென்பது எனது கருத்து. ஆனால் தீண்டாமையை வேரோடு களைவதற்கான காங்கிரஸ் கட்சியின் செயல்திட்டங்களைப் பற்றி ஆராய்ந்து முடிவு செய்வதைவிட முக்கியமான வேறுபல அரசியல் சிக்கல்களில் செயற்குழுவின் கவனம் மூழ்கியிருப்பதால் துணைக்குழு தனது பணியைத் தொடங்கவே இயலாத சூழலில் உள்ளது. இத்தகைய சூழலில் துணைக்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து எந்த பயனுள்ள பணியையும் ஆற்ற வியலாதவனாயிருப்பதால், அப்பொறுப்பிலிருந்து விலகிக் கொள் கிறேன் என்பதைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

டில்லி , ஜனவரி 30                                                                                   

தங்கள் உண்மையுள்ள,                                                                         

சிரத்தானந்த சன்னியாசி

(2) செயலாளரின் பதில்

அன்பார்ந்த சுவாமிஜி அவர்களுக்கு,

1922 ஜுன் 30ஆம் தேதிய தங்கள் கடிதம் கிடைத்தது. இம் மாதம் (ஜுலை) 18இல் கூடிய செயற்குழு ஒரு தீர்மானத்தின் வாயிலாக, தங்களுக்கு உண்மை விளக்கம் அளித்து தங்களது பொறுப்பு விலகலை மறுபரிசீலனை செய்து விலக்கிக் கொள்ள வேண்டுமாறு என்னைப் பணித்துள்ளது.

 நான் சிறையிலிருந்து விடுதலையாவதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சிகள் பற்றிப் பிறர் வாயிலாகத்தான் அறிய முடியும் என்பதை அறிவீர்கள். ஆனால், 1922 ஜுன் 10ஆம் தேதி நடைபெற்ற செயற் குழுக் கூட்டத்தில் தேஷ்பாண்டேயைக் குழுவின் அமைப்பாளராக நியமிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது நான் இருந்தேன். துணைக்குழுவின் உறுப்பினர் எவரும் அதன் அமைப்பாளராகச் செயல்பட்டு வருவதாக எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. துணைக் குழுவுக்கு அமைப்பாளர் நியமிக்கப்பட்டாலன்றிச் செலவுத் தொகை யேதும் அனுமதிக்கவியலாது என்பதற்காகச் சம்பிரதாயத் தீர்மான மாகவே தேஷ்பாண்டேயின் நியமனம் நிகழ்ந்து, தொடக்கச் செலவுத் தொகையாக அமைப்பாளரிடம் ரூ. 500 வழங்கவும் முடிவு செய்யப் பட்டது. எனவே, ரூ. 10,000/-க்கு பதிலாக ரூ. 500 எனத் தீர்மானிக்கப் பட்டது தற்செயல் நிகழ்வேயன்றிச் செயற்குழுவுக்கு விருப்பமின்மையாலன்று என்பதைத் தாங்கள் உணரவேண்டுகிறேன்.

எனவே, தீர்மானம் குறிப்பிட்ட வடிவில் நிறைவேற்றப்பட்டதற்கு நான் விளக்கியுள்ள காரணங்களே சரியானவையென்றும், தீண் டாமை நீக்கப்பணிகளுக்காக ரூ. 10,000/- கூட ஒதுக்கச் செயற்குழு விற்கு மனமில்லை என்று தாங்கள் கருதக்கூடாதென்றும் கேட்டுக் கொள்கிறேன். தாங்கள் துணைக்குழு பொறுப்பேற்றுக் கொண்டுள்ள பணிகள் எத்துனை முக்கியமானவை என்பதையுணரும் செயற்குழு, தங்களது மேலான அறிவுரைகளை ஒருபோதும் புறக்கணிக்காது என்றும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தங்கள் கடிதம் முந்தைய செயற்குழுவில் வைக்கப்பட்ட போது ரூ. 500/- முன் பணமாக ஒதுக் கீடு செய்யாமல் விடுபட்டுப்போயிற்றென்பதைச் சுட்டிக்காட்டித் தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென்பதையும் தங்க ளுக்கு தெரிவிக்கச் செயற்குழு என்னைப் பணித்துள்ளது.

தீண்டாமை ஒழிப்புப் பணியில் தங்களுக்குள்ள நீண்ட அனுபவமும், ஆழ்ந்த அறிவும் துணைக் குழுவின் பணிகளுக்குக் கிடைக்காமல் போகு மெனில், இப்பணிகளுக்கு எத்துணை பேரிழப்பு என்பதைக் கருத்தில் கொண்டும், பொதுநலனை முன்நிறுத்தியும், துணைக்குழுவின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதான தங்கள் முடிவினை மறு ஆய்வு செய்து, பொறுப்பு விலகலைத் தாங்கள் திரும்பப் பெற்றுக் கொள்வதான நற்செய்தியை எனது அலகாபாத் முகவரிக்கு தந்தி வாயிலாகத் தெரிவிக்க வேண்டுகிறேன். தங்கள் துணைக்குழு கூடி முடிவு செய்யும் தீர்மானங்கள் அனைத்துக்கும் செயற்குழு உரிய மதிப்பளித்துப் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள் ளும் என்பதறிவீர்கள்.

தனியாக கிணறுகள், பள்ளிகள் பற்றிய செயற்குழுவின் தீர் மானம் பற்றியும் குறிப்பிட்டுள்ளீர்கள். இது குறித்து முதலில் துணைக் குழு கூடி ஆலோசித்து முடிவு செய்யும் பரிந்துரைகளைச் செயற் குழுவிற்கு அனுப்ப, அவற்றினைச் செயற்குழு பரிசீலித்து ஏற்றுக் கொள்வதே தக்க வழியாகுமெனக் கருதுகிறேன்.

அலகாபாத்திலிருந்து வரும் “தி இண்டிபெண்டெண்ட்”, டெல்லியிலிருந்து வரும் “காங்கிரஸ்” ஆகிய இதழ்களுக்கான மானியங்கள் குறித்த தங்கள் தவறான கருத்தை அகற்றுவதும் எனது பொறுப்பாகும். “தி இண்டிபெண்டெண்ட்” இதழைப் பொறுத்தமட்டில் உத்திரப்பிரதேச மாநிலக் குழுவிற்கு ஏற்கனவே அனுமதிக் கப்பட்ட நிதியிலிருந்து ரூ. 25,000/- கடனாகக் கொடுக் கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு மேல் வேறெதும்  நிகழவில்லை என்பதையும், “காங்கிரஸ்” இதழ் சார்பான விண்ணப் பம் முற்றிலும் மறுக்கப்பட்டு விட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பம்பாய், ஜுலை 23, 1922

தங்கள் உண்மையுள்ள,

மோதிலால் நேரு

பொதுச்செயலாளர்

(3) சுவாமிஜியின் மறுபதில்

அன்பார்ந்த பண்டித மோதிலால் அவர்களுக்கு,

தாங்கள் பம்பாயிலிருந்து எழுதிய 1922 ஜுலை 23ஆம் தேதிய கடிதம் கிடைத்தது; எனது பொறுப்பு விலகலைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டியிருந்தீர்கள். எனது முந்தைய கடிதத்தில் நான் சுட்டிக்காட்டியிருந்த உண்மைகள் சில முற்றிலுமாகப் புறக் கணித்து ஒதுக்கப்பட்டிருப்பதால் எனது பொறுப்பு விலகலைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வியலாதிருக்கிறேன்.

1. துணைக்குழுவின் பணிகளுக்காகக் குறைந்தது 1 லட்சம் ரூபாயாவது கட்சியின் இருப்பு நிதியிலிருந்து வழங்கப்பட வேண்டு மென நான் முதலில் முன்மொழிந்தேன் என்பதும், இதற்குமாறாக, திரு. இராசகோபாலாச்சாரியார் துணைக்குழு, தனது திட்டங்களை உருவாக்கிச் செயற்குழுவின் முன்வைக்கும் சமயத்தில், தீண்டாமை யொழிப்புக்காக அப்போது எவ்வளவு தொகை அளிக்க இயலூமோ அதையளிப்புக்காக உறுதிமொழிதந்தால் போதுமெனத் திருத்தம் கொண்டு வந்தார் என்பதும், கட்சித்தலைவர் என்னைத் தனியே அழைத்துக்கட்சியின் அப்போதைய நிதிநிலைமை குறித்து விளக்கி யதன் பேரில் அவரது திருத்தத்தை ஒப்புக்கொண்டேன் என்பதும் உண்மையா அல்லவா என்பதைத் திரு. இராசகோபாலாச்சாரியா ரிடம் விசாரித்து அறிந்துகொள்ள வேண்டுகிறேன். இவை உண்மை யெனில் தீர்மானத்தோடு திருத்தம் ஏன் இடம் பெறவில்லை என் பதற்கான விளக்கம் தேவை.

2. கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் துணைக் குழு வின் அமைப்பாளராக எனது பெயரையே முன்மொழிந்தார்கள் என்பதும் அப்போது விட்டால்பாய் ஜே. படேல், “பட்டியலில் சுவாமி ஜியின் பெயரே முதலில் இடம்பெற்றுள்ளதால், அவரே துணைக் குழுவின் அமைப்பாளர் என்பது தெளிவு; அதற்கெனத் தனித் தீர் மானம் தேவையில்லை” எனக் கூறினார் என்பதும் மெய்யா எனப் படேல் அவர்களிடம் விசாரித்தீர்களா? நான் டாக்டர் அன்சாரியிடம் இதைப்பற்றி விசாரித்தபோது, அவர் நானே அமைப்பாளராக நிய மிக்கப்பட்டிருப்பதாக 1922 ஜுன் 17 இல் எனக்குக் கடிதம் எழுதி யிருந்தார். திரு. அன்சாரி உங்களுடனேயே இருக்கிறார். இதன் உண்மையை அவரிடமே விசாரித்தறிந்து கொள்ளுங்கள். நடந்த நிகழ்ச்சிகளைப் படேல் அவர்கள் மறந்திருக்கமாட்டார் என்றே நம்புகிறேன்.

3. தாழ்த்தப்பட்டோர் மத்தியில் இங்கு எனது உடனடி யான அவசரப் பணிகளை எக்காரணத்திற்காகவும் நான் ஒத்திப் போடுதற்கியலாது. எனவே, எனது பொறுப்புவிலகலை அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ள ஆவன செய்யவேண்டு கிறேன். இதனால், விடுதலையுணர்வுடன் தீண்டாமை ஒழிப்புக்கு எனது திட்டத்திற்கேற்பப் பணியாற்ற இயலும்.

கடந்த ஆண்டு ஜுலை மாதத்திலும் எனது நிலை இதுவே. அமிர்தசரஸ், மியான் வாலி சிறைகளில் நான் பெற்ற அனுபவமும், திரட்டிய தகவல் களும், பண்டை ஆரியர் வாழ்நெறியின் பிரம்மச்சரிய நெறியைக் கடைபிடித்தலின் வாயிலாகவும் தீண்டாமை என்னும் பாவத்தை நாட்டிலிருந்து அகற்றுவதன் வாயிலாகவும் தவிரப் பிறிதெந்த வழிகளாலும் காங்கிரஸ் கட்சியோ அதன் வழிவரும் ஏனைய நாட்டுப்பற்று இயக்கங்களோ நாட்டுக்கு சுயராஜ்யம் பெற்றுத்தரல் இயலாது என்ற எனத் நம்பிக்கைக்கு உறுதி சேர்க்கின்றன.

தேசியத் தன்னிறைவும், உயிர்த் துடிப்புள்ள வாழ்வும் சுயராஜ்யமின்றி அடையவியலாதவை என்பதால், துறவியாகிய நான் எனது எஞ்சிய வாழ்க்கையைப் பிரம்மச்சாரியத்தையும் மெய்யான நாட்டு ஒருமைப் பாட்டையும் பரப்புவதில் கழிக்க எண்ணுகிறேன்.

டில்லி, ஜுலை 23, 1922

உங்கள்

சிரத்தானந்த சன்னியாசி.

("தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன?" - தொகுதி 16, பின்னிணைப்பு 1)

Pin It