Ambedkar

மூன்று பலம் நமக்குத் தெரியும். 1. மனித ஆற்றல் 2. நிதிபலம் 3. அறிவு வலிமை. இம்மூன்றில் உங்களிடம் எது இருக்கிறது? மனித ஆற்றலைப் பொருத்தவரை, நீங்கள் சிறுபான்மையினராக இருக்கிறீர்கள் என்பது தெளிவு. பம்பாய் மாகாணத்தில், தீண்டத்தகாதவர்கள் மொத்த மக்கள் தொகையில் எட்டில் ஒரு பாகமே இருக்கின்றனர். அதுவும் அவர்கள் ஒருங்கிணைக்கப்படாமல் உள்ளனர். அவர்களிடையே உள்ள சாதி, அவர்களை ஒருங்கிணைக்க முடியாமல் செய்து விடுகிறது. அவர்கள் ஒரே இடத்தில் வாழ முடியவில்லை. கிராமங்களில் அவர்கள் உதிரிகளாக வாழ்கிறார்கள்.

இது போன்ற சூழ்நிலைகளால், இக்கட்டான தருணங்களில் மிகக் குறைவாக உள்ள மக்கள் ஒரு போராடும் சக்தியாகத் திகழ முடியாது. நிதி பலமும் இதேபோல்தான் இருக்கிறது. மறுக்க முடியாத உண்மை என்னவெனில், உங்களிடம் குறைந்தபட்சமாவது மனித ஆற்றல் உள்ளது; ஆனால், நிதி சற்றும் இல்லை. உங்களிடையே வியாபாரம், தொழில், நிலம் எதுவுமே இல்லை. ஆதிக்க சாதியினர் வீசி எறியும் ரொட்டித் துண்டுகளே உங்களின் வாழ்வியலுக்கான ஆதாரமாகிறது.

உங்களுக்கு உண்ண உணவு இல்லை, உடுத்த உடை இல்லை. பிறகு என்ன நிதி ஆதாரம் உங்களுக்கு இருக்கிறது? நீதிமன்றங்களில் வாதாடி நீதியைப் பெறும் வாய்ப்பும் உங்களுக்கு இல்லை. ஆயிரக்கணக்கான தீண்டத்தகாதவர்கள், தங்கள் மீது இழைக்கப்படும் அவமானங்களை சகித்துக் கொள்பவர்களாகவும் சாதி இந்துக்களின் கொடுங்கோன்மையையும் ஒடுக்கு முறையையும் துளியளவும் எதிர்த்துப் பேச முடியாத நிலையிலும் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனெனில், நீதிமன்றம் செல்வதற்கு ஆகும் செலவுகளை அவர்களால் கொடுக்க முடியாது. அறிவாற்றலைப் பொருத்தவரை, நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. சாதி இந்துக்களின் இழிவையும் கொடுமைகளையும் எதிர்த்துக் குரல் கொடுக்க முடியாத அளவுக்கு, வன்கொடுமைகளால் ஏற்பட்ட சகிப்புத்தன்மை அவர்களிடையே கிளர்ந்தெழும் போர்க்குணத்தை மழுங்கடித்து விட்டது. தன்னம்பிக்கை, உற்சாகம், இலக்கு முற்றிலுமாக உங்களிடமிருந்து மறைந்து விட்டது. நீங்கள் எல்லாம் ஆதரவற்றோராக, வலிமையிழந்து காணப்படுகின்றீர்கள்.

நான் மேலே விவரித்துள்ளவை சரி என்றால், நீங்கள் என் முடிவை ஏற்க வேண்டியிருக்கும். நீங்கள் உங்கள் சொந்த பலத்தை மட்டுமே நம்பியிருந்தால், இந்துக்களின் கொடுங்கோன்மையை நீங்கள் முறியடிக்க முடியாது. நீங்கள் பலமற்று இருப்பதால்தான் ஒடுக்கப்படுகிறீர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இங்கு நீங்கள் மட்டுமே சிறுபான்மை சமூகத்தினர் அல்ல. முஸ்லிம்களும் சிறுபான்மை மக்களே. "மகர்', "மாங்' மக்களைப் போல, முஸ்லிம்களும் குறைந்த அளவிலேயே கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், முஸ்லிம்களின் வீட்டைத் தாக்க எவருக்கும் துணிவு வருவதில்லை. நீங்கள்தான் ஒவ்வொரு முறையும் கொடுங்கோன்மைக்கு ஆட்படுகிறீர்கள்.

ஏன் இந்த நிலை? ஒரு கிராமத்தில் இரண்டே இரண்டு முஸ்லிம் வீடுகள் இருந்தாலும், அவர்களைத் தாக்க எவரும் துணிவதில்லை. ஆனால், உங்களுக்கு பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருந்தாலும், மொத்த கிராமமே உங்கள் மீது வன்மையான தாக்குதலைத் தொடுக்கிறதே. என்னைப் பொருத்தவரை, இக்கேள்விக்கு ஒரேயொரு பதில்தான் இருக்கிறது.

இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களும், ஒரு கிராமத்தில் இருக்கும் இரண்டு முஸ்லிம் வீடுகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை இந்துக்கள் உணர்ந்திருக்கின்றனர். எனவே, அவர்கள் மீது தாக்குதல் தொடுக்க அவர்களுக்குத் துணிவில்லை. இந்த இரு முஸ்லிம் குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன் அச்சமற்ற வாழ்க்கையை மேற்கொள்கின்றனர். ஏனெனில், இந்துக்கள் அவர்களைத் தாக்கினால், பஞ்சாப் முதல் சென்னைவரை வாழும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் எப்பாடுபட்டாவது தங்களைப் பாதுகாக்க அணிதிரளுவார்கள் என்று உறுதியாக நம்புகின்றனர்.

ஆனால், உங்கள் மீது தாக்குதல் நடத்தினால் உங்களைப் பாதுகாக்க எவரும் முன்வர மாட்டார்கள் என்பதில் தெளிவாக உள்ளனர். தாசில்தாரும் போலிசும் சாதி இந்துக்களாகவே இருக்கின்றனர். இந்துக்களுக்கும் தீண்டத்தகாத மக்களுக்கும் இடையே பிரச்சினை என்றால், அவர்கள் தாங்கள் பணி செய்யும் வேலைக்கு நேர்மையாக இருப்பதைவிட, தங்கள் சாதிக்கே விசுவாசமாக இருப்பர். நீங்கள் ஆதரவற்று இருப்பதால்தான், இந்துக்கள் உங்களுக்கு அநீதி இழைக்கின்றனர்; உங்களைக் கொடூரமாகத் தாக்குகின்றனர். 

(1936 ஆம் ஆண்டு மே மாதம் 30, 31 ஆகிய இரு நாட்கள் இயோலாவில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் ஆற்றிய உரை.)

Pin It