தீண்டப்படாதவர்களின் இயக்கம் ஏன் வெற்றியடையவில்லை? அவர்களுக்குத் தோழமையானவர்கள் யாரும் இல்லையா? தோழமையானவர்கள் இருந்தால், அவர்கள் ஏன் தீண்டப்படாதவர்களுக்கு உதவியும் ஒத்துழைப்பும் அளிக்கவில்லை? இது மிகவும் பொருத்தமான வினா. இதைச் சரியான முறையில் புரிந்துகொள்வது அவசியம். இந்தக் கேள்விக்கு விடையளிப்பதற்கு இந்து சமூக அமைப்பைப் பற்றியும், அதில் அடங்கிய வகுப்புகள் பற்றியும் மிகத் தெளிவாக அறிந்து கொள்வது அவசியம். இந்து சமூகத்தின் அமைப்பு மிகவும் சிக்கலானது; தனது வாழ்க்கை அதனுடன் பின்னிப் பிணைந்து இல்லாத ஒருவர், அதைப் புரிந்து கொள்வது கடினம். ஒரு விளக்கப்படம் போலக் காட்டுவது உதவியாயிருக்கும். இந்து சமூக அமைப்பைப் புரிந்துகொள்ள உதவும் என்று நான் கருதுகின்ற விளக்கப்படம் கீழே தரப்படுகிறது:

இந்துக்கள்
சாதி இந்துக்கள் (சவர்ண இந்துக்கள்) சாதியில்லாத இந்துக்கள் (அவர்ண இந்துக்கள்)
வகுப்பு I வகுப்பு II வகுப்பு III வகுப்பு IV
உயர்ந்த சாதி – இருபிறப்பாளர்கள் த்ரைவர்ணிகர்கள் – மூன்று வர்ணங்களிலிருந்து, அதாவது, பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் ஆகிய சாதிகளிலிருந்து உருவான சாதிகள் தாழ்ந்த சாதிகள் -சூத்திரர்கள் என்ற நான்காவது வர்ணத்திலிருந்து உருவான சாதிகள்

1. பூர்வ பழங்குடிகள்

2. குற்ற பரம்பரைப் பழங்குடிகள்

தீண்டப்படாதவர்கள்

ambedkar 220இந்த விளக்கப்படத்திலிருந்து, இந்துக்களிடையே எண்ணற்ற சாதிகள் உள்ளபோதிலும், இவை எல்லாவற்றையும் நான்கு வகுப்புகளாகத் தொகுத்துப் பிரிக்கலாம் என்று தெரிகிறது. இந்த நான்கினுள் வகுப்பு – I ஆளும் வகுப்பாகும். வகுப்பு III, வகுப்பு IV ஆகியவை ஆளப்படும் மக்களாவர்.

இப்போது, இந்த வகுப்புகளில் எது தீண்டப்படாதவர்களுக்கு இயற்கையான தோழமை வகுப்பாக இருக்கமுடியும் என்று பார்க்கலாம்.

வகுப்பு – I – இல் உள்ளவர்கள் இந்து சமூகத்தின் சிறப்பு உரிமைகள் பெற்றவர்கள். இதனால் பயனடைகிறார்கள்; இதைக் காப்பாற்றுவதே இந்த வகுப்பில் உள்ளவர்களின் நோக்கம். நலன்கள் ஒன்றாக இருப்பதனாலும் கருத்து அடிப்படையில் ஒற்றுமை இருப்பதனாலும் இந்த வகுப்பில் உள்ள இரண்டு நண்பர்களும் தோழமையாளர்களும் தங்களிடையே கருத்து வேறுபாடு கொள்ளமுடியாது.

குற்ற பரம்பரைப் பழங்குடிகள், பூர்வ பழங்குடிகள் ஆகியோரின் விஷயம் என்ன? இந்து சமூக அமைப்பைத் தூக்கியெறிவதற்கு மிக வலுவான காரணம் இவர்களுக்குத்தான் உள்ளது.

சூத்திரர்களின் விஷயம் என்ன?

இந்து சமூக அமைப்பின் சட்டங்கள், தீண்டப்படாதவர்களான வகுப்பு-IV மக்களுக்கு எப்படி வெறுப்பாக உள்ளனவோ, அதேபோல சூத்திரர்கள் என்ற வகுப்பு-II மக்களுக்கும் வெறுப்பாக உள்ளன. இந்து சமூகத்தின் சிற்பியும் சட்டம் இயற்றியவருமான மனு, சூத்திரர்களுக்கு இந்து சமூகத்தில் கொடுத்திருக்கும் அந்தஸ்தைப் பார்ப்பது சுவாரஸ்யமாயிருக்கும். இதை எளிதாகப் புரிந்து கொள்வதற்கு உதவியாக சூத்திரர்களின் அந்தஸ்து பற்றிய விதிகள் கீழே தனித்தனித் தலைப்புகளில் தரப்படுகின்றன:

பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் ஆகிய சாதிகளின் இல்லாழ்வோருக்கு மனு கூறுவது:

IV.61 “சூத்திரர்கள் ஆள்வோராக இருக்கும் நாட்டில் அவன் வசிக்கவேண்டாம்.”

ஒரு சூத்திரன் மரியாதைக்குரிய மனிதனாகக் கருதப்படக்கூடாது. மனு விதிக்கிறார்:

XI.24 “பிராமணன், வேள்வி (செய்வதற்கு), அதாவது சமயம் தொடர்பான நோக்கங்களுக்கு ஒரு போதும் சூத்திரனிடம் பொருள் யாசிக்கக்கூடாது.”

சூத்திரர்களுடன் திருமண உறவுகள் தடைசெய்யப்பட்டன. மற்ற மூன்று சாதிகளின் பெண்களை மணப்பது தடைசெய்யப்பட்டது. சூத்திரன், மேல் சாதிப் பெண்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது. அவளுடன் உடலுறவு கொள்வது மரண தண்டனைக்குரிய குற்றம் என்று மனு கருதினார்.

VIII.374 ஒரு சூத்திரன், மேல் சாதியைச் சேர்ந்த பாதுகாப்பு உள்ள பெண்ணுடன் அல்லது பாதுகாப்பு இல்லாத பெண்ணுடன் உடலுறவு கொண்டால் அவன் பின்வருமாறு தண்டிக்கப்படுவான்: அவள் பாதுகாப்பு இல்லாத பெண்ணாக இருந்தால், அவன் தவறு செய்த உறுப்பை இழப்பான்; அவள் பாதுகாப்பு உள்ள பெண்ணாக இருந்தால், அவனைக் கொன்று அவனுடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்யவேண்டும்.

VIII.20 வம்ச வழியினால் மட்டுமே பிராமணனாக உள்ள ஒருவன், அதாவது, வேதத்தைக் கல்லாதவனாகவும், வேதத்தில் விதிக்கப்பட்ட வேறு எந்தச் செயல்களையும் செய்யதாவனாகவும் உள்ள ஒருவன், அரசன் விரும்பினால் அவனுக்குச் சட்டத்தின் பொருளை எடுத்துரைக்கலாம், அதாவது நீதிபதியாகச் செயல்படலாம்; ஆனால், சூத்திரன் (எவ்வளவு கற்றவனாக இருந்தாலும்) ஒருபோதும் அதைச் செய்ய்க்கூடாது.

VIII.21. சூத்திரன் சட்டத் தீர்ப்பு செய்வதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மன்னனின் நாடு, புதை சேற்றில் அழுந்தும் பசுவைப்போலத் தாழ்ந்துபோகும்.

VIII. 272. சூத்திரன் அகங்காரத்துடன் பிராமணனுக்கு சமய போதனை செய்ய நினைத்தால், மன்னன் அவனுடைய வாயிலும் காதுகளிலும் கொதிக்கும் எண்ணெயை ஊற்றச் செய்ய வேண்டும்.

கல்வியையும் அறிவையும் பெறுவதுபற்றி மனு பின்வருமாறு விதிக்கிறார்:

III.156 சூத்திர மாணாக்கர்களுக்குக் கற்பிப்பவனும், சூத்திரனை ஆசிரியனாகக் கொண்டவனும் சிராத்தத்திற்கு அழைக்கப்படும் தகுதியை இழப்பார்கள்.

IV. 99. அவன் ஒரு போதும் சூத்திரர்களின் முன் வேதத்தைப் படிக்கக்கூடாது.

மனுவுக்குப்பின் வந்தவர்கள், வேதத்தைக் கற்கும் சூத்திரனுக்கு விதிக்கப்படும் தண்டனையை மேலும் கொடுமையாக்கினார்கள். உதாரணமாக, காத்யாயனர் இவ்வாறு கூறுகிறார்: சூத்திரன் வேதத்தைக் கேட்டால் அல்லது வேதத்தின் ஒரு சொல்லைக்கூட உச்சரித்தால், மன்னன் அவனுடைய நாக்கை இரண்டாகப் பிளக்க வேண்டும்; அவனுடைய காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும்.

சூத்திரன் சொத்து வைத்திருப்பது பற்றி மனு பின்வருமாறு விதிக்கிறார்:

X.129. சூத்திரன் செல்வம் சேர்க்கும் திறன் பெற்றவனாக இருந்தாலும் அவன் மிகையாகச் செல்வம் சேர்க்கக் கூடாது. ஏனென்றால், அடியவனான ஒருவன் செல்வம் சேர்த்தால் அவனுக்குக் கர்வம் வந்துவிடுகிறது; அவன் அவமதிப்பாகவோ அலட்சியமாகவோ நடந்து கொள்வதால் பிராமணர்களுக்கு வேதனை உண்டாக்குகிறான்.

VIII.417. பிராமணன் உயிர்வாழப் பொருளின்றி வாடினால் அவன் தனது சூத்திரனின் பொருள்களைத் தயங்காமல் கைப்பற்றலாம்.

சூத்திரன் ஒரே தொழிலைத்தான் செய்ய முடியும். இது மனுவின் மாற்றமுடியாத விதிகளில் ஒன்று. மனு கூறிகிறார்:

I.91 ஒரே ஒரு தொழிலைத்தான் இறைவன் சூத்திரனுக்கு விதித்தார். மற்ற மூன்று சாதிகளுக்கும் (பிராமண சத்திரிய, வைசிய சாதிகளுக்கு) தாழ்ந்து பணி செய்வதே அது.

X.121. ஒரு சூத்திரன் (பிராமணனுக்குப் பணி செய்து உயிர்வாழ முடியவில்லை என்றால்) அவன் செல்வந்தனான வைசியனுக்குப் பணி செய்து வாழ்க்கை நடத்தலாம்.

X.122. ஆனால், (சூத்திரன்) சுவர்க்கத்திற்காகவோ (இம்மை, மறுமை ஆகிய இரண்டிற்குமாகவோ) பிராமணர்களுக்குப் பணி செய்வானாக; ஏனென்றால், பிராமணனின் பணியாளன் என்று கூறப்படுபவன் அதன் மூலம் எல்லாவற்றையும் அடைகிறான்.

X.123. பிராமணர்களுக்குப் பணி செய்வது மட்டுமே சூத்திரனுக்கு மிகச் சிறந்த தொழில் என்று அறிவிக்கப்பட்டுள்ளது; ஏனென்றால், இதைத் தவிர அவன் வேறு எதைச் செய்தாலும் அவனுக்குப் பயன் இல்லை.

சூத்திரன் பணி செய்வது சுயேச்சையான ஒப்பந்த ஏற்பாடாக இருக்கும்படி மனு விட்டுவிடவில்லை. ஒரு சூத்திரன் பணி செய்ய மறுத்தால், அவனைக் கட்டாயமாகப் பணி செய்யவைக்க விதி செய்யப்பட்டுள்ளது. அது பின்வருமாறு:

VIII.413. பிராமணன் சூத்திரனை – அவன் வாங்கப்பட்டவனாக இருந்தாலும் வாங்கப்படாதவனாக இருந்தாலும் – அடியவனாகப் பணி செய்யுமாறு கட்டாயப்படுத்தலாம்; ஏனென்றால், பிராமணனின் அடிமையாக இருப்பதற்கே அவன் படைக்கப்பட்டிருக்கிறான்.

X.124. அவர்கள் தங்களுடைய சொந்தக் குடும்பச் சொத்திலிருந்து ஒரு பராமரிப்பை, அவனது திறமை, உழைப்பு, அவனால் ஆதரிக்கப்பட வேண்டியவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றுக்குத் தகுந்தபடி, ஒதுக்கிக் கொடுக்கவேண்டும்.

X.125. அவர்களுடைய உணவின் மிச்சமும், வீட்டின் பழைய சாமான்களும் அவனுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

சூத்திரன் மற்ற வகுப்பினரிடம் பேச்சிலும் நடத்தையிலும் தாழ்ந்து அடங்கி இருக்க வேண்டும் என்று மனு விதிக்கிறார்.

VIII. 270. இருபிறப்பாளரிடம் கடுமையான வசைமொழி பேசி அவனை அவமதிக்கும் சூத்திரன் நாக்கு துண்டிக்கப்படும்; ஏனென்றால், அவன் தாழ்ந்த பிறப்பை உடையவன்.

VIII.271. அவன் இருபிறப்பாளர்களின் பெயர்களையும் சாதிகளையும் அவமதிப்பாகக் கூறினால், பத்து விரல் நீளமுள்ள பழுக்கக் காய்ச்சிய ஆணி அவனது வாயில் செலுத்தப்படும்.

மனு இதோடு திருப்பதியடைந்துவிடவில்லை. சூத்திரனின் தாழ்ந்த அந்தஸ்து அவனது பெயரிலும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். மனு கூறுகிறார்:

II.31. பிராமணனுடைய பெயரின் முதல் பகுதி ஏதேனும் மங்களமான ஒன்றைக் குறிப்பதாக இருக்கட்டும்; சத்திரியனுடையது சக்தியைக் குறிப்பதாகவும், வைசியனுடையது செல்வத்தைக் குறிப்பதாகவும் இருக்க வேண்டும்; ஆனால் சூத்திரனுடையது இழிப்புக்குரிய எதையேனும் குறிப்பதாக இருக்கவேண்டும்.

II.32. பிராமணனுடைய பெயரின் இரண்டாம் பகுதி மகிழ்ச்சியைக் குறிக்கும் சொல்லாகவும், சத்திரியனுடையது பாதுகாத்தலைக் குறிக்கும் சொல்லாகவும், சூத்திரனுடையது சேவையைக் குறிக்கும் சொல்லாகவும் இருக்க வேண்டும்.

இந்த மூன்று வகுப்புகளும் இயற்கையாகவே தோழமை உடையவை என்பது தெளிவாகத் தெரிகிறது. இவர்கள், இந்து சமூக முறைமையை அழித்துவிட ஒன்று சேர்வதற்கு அனைத்துக் காரணங்களும் உள்ளன. ஆனால், இவர்கள் ஒன்று சேரவில்லை. இவர்களை ஒன்றுபடுத்துவதற்கு முயற்சி நடக்கவில்லை என்பது இதற்குக் காரணம் அல்ல. 1919-1935-இல் பிரபலமாக இருந்த பிராமணரல்லாதார் கட்சி, இத்தகைய ஒரு முயற்சி தான். இந்து சமூக முறைமையின் சிற்பிகளாகவும், இந்த அமைப்பின் மூலம் மிக அதிக நன்மை பெறுவதனால் இதை மிக வலுவாக ஆதரிப்பவர்களுமான பிராமணர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதற்க்காக இந்த மூன்று வகுப்புகளையும் ஒரே அரசியல் கட்சியாக இணைக்கும் முயற்சிதான் அந்தக் கட்சி.

இந்த மூன்று வகுப்புகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு நடந்த முயற்சி இது ஒன்றுமட்டும் அல்ல. மற்றொரு முயற்சி தொழிலாளர் தலைவர்களால், குறிப்பாகக், கம்யூனிஸ்டுகளால் நடத்தப்பட்டது. உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் எந்தச் சமுதாயத்தினராயிருந்தாலும், அவர்கள் அனைவரின் நலன்களும் பொதுவானவை என்று அவர்கள் பிரசாரம் செய்தார்கள். அவர்களிடையே வர்க்க உணர்வும் வர்க்க ஒற்றுமையும் உருவாக வேண்டும்; அவர்கள் ஒன்றுபட்டுவிட்டால், தங்களுடைய எண்ணிக்கையின் பலத்தை வைத்துப் பொருளாதார முறைமையை உடைத்துவிட முடியும்; பொருளாதார முறைமை நொறுங்கிப் போனால், இந்துக்களின் சமூக முறைமை சிதறிப் போய்விடும், என்று அவர்கள் போதித்தார்கள்.

ஆனால், பலன் என்ன ஏற்பட்டது? அந்த ஒற்றுமை உருவாகவில்லை என்பதுதான் பலன். சூத்திரர்களும் குற்ற பரம்பரைப் பழங்குடிகளும் பூர்வ பழங்குடிகளும் பிராமணர்களிடம் காட்டும் பகைமையைவிட அதிகமாகத் தீண்டப்படாதவர்களிடம் பகைமை காட்டுகிறார்கள். உண்மையில் இந்து சமூக முறைமையின்மீது தீண்டப்படாதவர்கள் தொடுக்கும் தாக்குதலை முறியடிக்கும் போலீஸ் படையாகச் செயல்படுபவர்கள் சூத்திரர்களே. இது ஒரு விசித்திரமான நிலைமை; ஆனால் உண்மை. நிறுவப்பட்ட முறைமையின் விதிகளையும் கட்டுப்பாடுகளையும் தீண்டப்படாதவர்கள் மீறினால், அவர்கள்மீது எத்தகைய கொடுமைகள் இழைக்கப்படுகின்றன என்பது முந்திய இயல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொடுமைகளையெல்லாம் செய்தவர்கள் சூத்திரர்களே.

இந்த ஒற்றுமைக் குறைவுக்குக் காரணம் காண்பது கடினமல்ல. படிப்படியான சமத்துவமின்மை – பிராமணர்கள் எல்லோருக்கும் மேலாகவும், சூத்திரர்கள் அவர்களுக்குக் கீழாகவும் தீண்டப்படாதவர்களுக்கு மேலாகவும் இருக்கும் அமைப்புமுறை இதற்குக் காரணமாகும். இந்து சமூக அமைப்பு, சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தால் நீண்ட காலத்திற்கு முன்பே அது தூக்கியெறியப்பட்டிருக்கும். ஆனால், அது படிப்படியான சமத்துவமின்மையைக் கொண்டிருப்பதால், சூத்திரர்கள் பிராமணர்களைக் கீழே தள்ள விரும்பினாலும், தீண்டப்படாதவர்கள் தங்களுடைய நிலைக்கு உயர்ந்து வந்துவிடுவதை விரும்பவில்லை.

அவர்கள் தீண்டப்படாதவர்களுடன் சேர்ந்து சமூக முறைமையின் மேல் படிகளையெல்லாம் ஒரே மாதிரியாகக் கீழிறக்குவதைவிடத், தங்கள் மீது பிராமணர்கள் சுமத்துகின்ற அவமதிப்புகளைத் தாங்கிக் கொள்வதையே விரும்புகிறார்கள். இதன் விளைவாகத், தீண்டப்படாதவர்களின் போராட்டத்தில் அவர்களுடன் சேர்ந்துகொள்ள யாரும் இல்லை என்று ஆகிவிடுகிறது. அவர்கள் முற்றிலுமாகத் தனிமைப்பட்டு நிற்கிறார்கள். தனிமைப்பட்டிருப்பது மட்டுமின்றி, அவர்களுக்கு இயற்கையாகத் தோழமையாளர்களாக இருக்கவேண்டிய வகுப்புகளே அவர்களை எதிர்த்து நிற்கிறார்கள். இவ்வாறு தனிமைப்பட்டிருக்கும் நிலை தீண்டாமையை ஒழிப்பதற்கு மற்றொரு இடையூறாக உள்ளது.

 (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் தொகுதி 4)

Pin It