சமூகத்திலுள்ள மக்கள் எத்தனையோ விஷயங்களை ஆராய வேண்டியுள்ளது. எனவே ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. எனவேதான் அனைத்து விளம்பரதாரர்களும் ஒரு நல்ல பெயரைத் தேர்ந்தெடுப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். பெயர் கவர்ச்சிகரமாக இல்லையென்றால் அந்தப் பொருள் மக்களிடம் விற்பனையாகாது.

'தீண்டத்தகாதவர்' என்ற பெயரானது ஒரு கெட்ட பெயராகும். அது அருவருப்பூட்டுகிறது; பயமுறுத்துகிறது; முடைநாற்றம் வீசுகிறது. தீண்டத்தகாதவர் என்ற பெயரிலிருந்தே தீண்டத்தகாதவர் குறித்து இந்துக்களின் சமூக அணுகுமுறை தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. 'தீண்டத்தகாதவர்' எவ்வளவு தகுதி பெற்றிருந்த போதிலும்கூட, மக்கள் தீண்டத்தகாதவர் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தகுதிகள் குறித்து ஆராய விரும்புவதில்லை. தீண்டத்தகாதோர் அனைவரும் இதை உணர்ந்துள்ளனர். 'தீண்டத்தகாதவர்கள்' என்பதைத் தவிர வேறு சில பெயர்களிலும் அவர்களை அழைக்க முயற்சி நடக்கிறது.

தங்களைத் தீண்டத்தகாதவர்கள் என்று அழைத்துக் கொண்டால் அது உடனே இந்துக்களின் ஆத்திரம் மற்றும் வெறுப்பிற்குத் தங்களை ஆட்படுத்திவிடும் என்பதைத் தீண்டத்தகாதவர்கள் அறிந்தே உள்ளனர். எனவேதான், அவர்கள் தங்களுக்கு வேறு பெயர்களை சூட்டிக்கொள்கின்றனர். இதன் மூலம் தங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாதென்று அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் இது, பெரும்பாலும் இந்த நோக்கத்தில் முற்றிலும் தோல்வியடைந்து விடுகிறது...

ஏனென்றால், இந்துக்களுக்கு இந்துவாக இருப்பது என்பதே இறுதியான சமூக வகைப்பிரிவு அல்ல. இறுதியான வகைப்பிரிவு என்பது ஜாதி; உட்ஜாதி இருக்குமானால் உட்ஜாதி. இந்துக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்பொழுது, 'நீங்கள் யாரென்று நான் தெரிந்து கொள்ளலாமா?' என்ற கேள்வி கண்டிப்பாகக் கேட்கப்படும். 'நான் ஓர் இந்து' என்பது மட்டும் இந்தக் கேள்விக்கு திருப்திகரமான பதிலாக இருக்காது. இறுதியான விடையாகவும் அது கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அந்தக் கேள்வியானது மேலும் தொடரவே செய்யும்.

"இந்து' என்ற விடையைத் தொடர்ந்து அடுத்த கேள்வி வருவது நிச்சயம் : "என்ன ஜாதி?'' அதற்கான பதிலைத் தொடர்ந்து வேறொரு கேள்வி எழும் : "என்ன உட் ஜாதி?'' கேள்வி கேட்கப்பட்டவருடைய இறுதியான சமூக வகைப் பிரிவை – அது ஜாதியாக இருக்கலாம் அல்லது உட் ஜாதியாக இருக்கலாம் – தெரிந்த பின்னர்தான் கேள்வி கேட்பவர் நிறுத்துவார்.

புதிய பெயரைத் தனக்குச் சூடிக்கொள்ளும் தீண்டத்தகாதவர் தன்னை இனங்கண்டு கொள்ளக்கூடாது என்பதற்காக அவ்வாறு செய்கிறார். ஆனால், இடைவிடாமல் துளைத்துத் துளைத்து கேள்வி கேட்கப்படும்பொழுது புதிய பெயர் தனக்கு உதவவில்லை என்பதைப் புரிந்து கொள்கிறார். அவ்வாறு கேட்கப்படும்பொழுது வேறு வழியின்றி தான் ஒரு தீண்டத்தகாதவர் என்பதை அறிவிக்கும்படி நேரிடுகிறது. தானாகவே தனது உண்மையான பெயரைச் சொன்னால் கேட்பவருக்கு ஏற்படும் கோபத்தைவிட தனது பெயரை மறைப்பதால் அதிக கோபத்திற்கு அவர் ஆளாகிறார்.

இந்த விவாதத்திலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன : ஒன்று, தீண்டத்தகாதவர்களின் தாழ்ந்த நிலை என்பது நாற்றமெடுக்கும் ஒரு பெயருடன் இணைந்தே தீரும். இந்தப் பெயர் மாற்றப்பட்டாலொழிய அவர்களுடைய சமூக நிலையில் உயர்வதற்கான சாத்தியப்பாடே இல்லை. இரண்டாவது விஷயம் என்னவென்றால் இந்துமத அரவணைப்புக்குள் இருந்து கொண்டு பெயரை மாற்றிக் கொள்வது எந்தப் பயனையும் தராது. அத்தகைய பெயருக்குள் ஊடுருவிப் பார்க்க ஓர் இந்து தவறமாட்டான் என்பதுடன் தீண்டத்தகாதவர் என்று கூறும்படிச் செய்துவிடுவான்.

பெயரில் பல விஷயங்கள் அடங்கியுள்ளன. அது பலவற்றைச் செய்யும். ஏனென்றால், பெயர் என்பது தீண்டத்தகாதவர்களின் சமூக நிலையில் ஒரு புரட்சியையே உண்டாக்க முடியும். ஆனால், அந்தப் பெயரானது இந்து மதக் கோட்பாடுகளுக்கு வெளியே உள்ளதும், அதனால் களங்கப்படுத்தி, தாழ்வடையச் செய்ய முடியாததுமான ஒரு சமூகக் குழுவின் பெயராக இருக்க வேண்டும். அந்தப் பெயர் தீண்டத்தகாதவர்கள் மதமாற்றத்தை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவர்களுடைய சொத்தாக முடியும். இந்துமதக் கோட்பாடுகளுக்குள் இருந்து கொண்டு பெயர் மாற்றம் செய்வதென்பது ஒரு கள்ளத்தனமான மாற்றமாகும் என்பதுடன் அதனால் எவ்விதப் பயனும் இல்லை.

மதமாற்றம் குறித்த இந்த விவாதமானது ஓரளவு பொருளற்றதாகத் தோன்றக்கூடும். எந்த மதத்தை தீண்டத்தகாதவர்கள் ஏற்க விரும்புகிறார்கள் என்று தெரியும்வரை அது பொருளற்றதாகவே இருக்கும். மதமாற்றத்தினால் என்ன குறிப்பிட்ட நன்மை கிடைக்கும் என்பது தேர்ந்தெடுக்கப்படும் மதத்தையும், அந்த மதத்தினுடைய ஆதரவாளர்களின் சமூகத் தன்மையையும் பொருத்துள்ளது. இந்த அத்தியாயத்தின் ஆய்வுப் பொருளானது தீண்டாமை என்ற பிரச்சனையை மதமாற்றம் தீர்க்க முடியுமா என்பதுதான். – முற்றும்

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 5, பக்கம் : 419)

Pin It