ஒரு காலத்தில் ஒரு பெண் உபநயனம் செய்து கொள்வதற்கு தகுதியுடையவளாயிருந்தாள் என்பது, அதர்வ வேதத்திலிருந்து தெளிவாகிறது. அதில், ஒரு பெண், தனது பிரம்மச்சரியத்தை முடித்த பின்னர் திருமணத்திற்கு தகுதியுடையவராகிறார் என்று கூறப்பட்டுள்ளது. பெண்கள் வேத மந்திரங்களை திருப்பிக் கூற முடியும் என்பதும், வேதங்களைப் படிப்பதற்கும் பெண்கள் கற்றுக் கொடுக்கப்பட்டார்கள் என்பதும் ஷ்ரவுத்த சூத்திரங்களிலிருந்து தெளிவாகிறது. பெண்கள் குருகுலத்தில் (கல்லூரியில்) பயின்றார்கள், வேதங்களின் பல்வேறு ஹாகாக்களை (பிரிவு களை) கற்றார்கள், மற்றும் மீமாம்சாவில் நிபுணர்களாயினர் என்ற உண்மைக்கு பாணினியின் அஷ்டாத்யாய் சான்று கூறுகிறது. பெண்கள் ஆசிரியர்களாக இருந்தார்கள், மாணவிகளுக்கு வேதங்களை கற்றுக் கொடுத்தார்கள் என்று பதஞ்சலியின் மகாபாஷ்யம் காட்டுகிறது.

மதம், தத்துவம், உண்மை பற்றி ஆயும் கோட்பாட்டுத்துறை முதலிய மிகவும் மறைபொருளான விஷயங்கள் பற்றியும்கூட, ஆண்களுடன் பெண்கள் பொது விவாதங்களில் ஈடுபடுவது பற்றிய பல நிகழ்வுகள் உள்ளன. ஜனகருக்கும் சுலபாவுக்கும் இடையிலும், யக்ஞவல்கியருக்கும் கார்கிக்கும் இடையிலும், யக்ஞவல்கியருக்கும் மைத்ரேயிக்கும் இடையிலும், சங்கராச்சாரிக்கும் வித்யாதாரிக்கும் இடையிலுமான பகிரங்க விவாதங்கள் மநுவுக்கு முந்திய காலத்தில் – இந்தியப் பெண்கள் கற்பதிலும் கல்வியிலும் மிக உயர்ந்த சிகரத்திற்கு எட்ட முடியும் என்பதைக் காட்டுகிறது.

ambedkar_240ஒரு காலத்தில் பெண்கள் உயர்வாக மதிக்கப்பட்டு வந்தார்கள் என்பதை மறுக்க முடியாது. பண்டைக் கால இந்தியாவில் மன்னரின் முடிசூட்டுவிழாவில் மிகவும் முக்கியப் பங்காற்றிய அரசிகளில் அரசியாவார். இந்த சமயத்தில் மன்னர் மற்றவர்களுக்கு செய்தது போலவே அரசிக்கும் ஒரு பரிசு அளிக்கிறார். மன்னராக நியமிக்கப்பட்டவர் அரசிக்கு பெரும் மரியாதை செலுத்தியதோடு, கீழ் சாதிகளைச் சேர்ந்த தனது பிற மனைவிகளுக்கும் வணக்கம் தெரிவித்தார். இதே முறையில், முடிசூட்டு விழா முடிந்த பின்னர், மன்னர், கில்டுகளின் (பொது அமைப்புகளின்) பெண் தலைவிகளுக்கும் வணக்கம் தெரிவிக்கிறார்.

இது உலகின் எந்தப் பகுதியிலும் பெண்களுக்கான ஒரு மிகவும் உயர்வான நிலையாகும். அவர்களின் வீழ்ச்சிக்கு யார் காரணம்? இந்துக்களுக்கு சட்டம் வழங்கியவரான மநுதான் இதற்குக் காரணம். இதற்கு வேறு எந்தப் பதிலும் இருக்க முடியாது. அய்யப்பாட்டுக்கு எத்தகைய இடமும் அளிக்காத வகையில், பெண்கள் தொடர்பாக மநு இயற்றிய, மற்றும் மநுஸ்மிருதியில் காணப்படுகிற சில விதிகளை (சட்டங்களை) நான் மேற்கோள் காட்டுகிறேன்.

“இந்த உலகில் ஆண்களை மயக்கி தவறான வழியில் செல்லத் தூண்டுவது பெண்களின் இயல்பாகும். அந்தக் காரணத்திற்காகவே, விவேகமுள்ளவர்கள் பெண்களுடன் சகவாசம் செய்யும்போது ஒருபோதும் எச்சரிக்கையின்றி இருக்க மாட்டார்கள்.'' II 213

“ஏனெனில், இந்த உலகில் பெண்கள் ஒரு முட்டாளை மட்டுமின்றி, ஒரு கல்விமானையும் பாதை தவறி செல்லச் செய்வதற்கும் மற்றும் தமது விருப்பத்திற்கும் கோபத்திற்கும் அடிமையாக்குவதற்கும் வல்லமை உள்ளவர்கள்.'' II 214

“ஒருவர் தனது தாயாருடனோ, சகோதரி யுடனோ அல்லது மகளுடனோ ஒரு தனிமையான இடத்தில் உட்கார்ந்திருக்கக் கூடாது; ஏனெனில், உணர்வுகள் சக்தி வாய்ந்தவை. அது ஒரு கல்விமானைக்கூட அடிமைப்படுத்திவிடும்.'' II 215

“பெண்கள் அழகை எதிர்பார்ப்பதில்லை. அது போன்றே வயதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அவன் ஓர் ஆணாக இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். அவர்கள், அழகுடைய ஓர் ஆணுக்கு மட்டுமின்றி, அழகற்றவருக்கும் தங்களை விட்டுக் கொடுக்கிறார்கள்.'' IX 14

“ஆண்களின் பாலான தங்களுடைய வெறி ஆர்வத்தின் வாயிலாக, தங்களுடைய மாறத்தக்க மனோநிலையின் வாயிலாக, இயல்பான ஈவிரக்கமற்ற இயல்பின் வாயிலாக அவர்கள் – இந்த உலகில் எவ்வளவு கவனமான பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தாலும் தங்கள் கணவன்மார்களிடம் விசுவாசமற்றவர்களாகி விடுகிறார்கள்.'' IX 15

“உலகத்தைப் படைத்தவர் பெண்களை எவ்வாறு படைத்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டுள்ள நிலைமையில், ஒவ்வொரு ஆணும், அவர்களைக் காவல் காப்பதற்கு மிகவும் உறுதியாகத் தன்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.'' IX 16

“(அவர்களை உருவாக்கும்போது) கடவுள் பெண்களுக்கு அவர்களின் பதவி, நகைகள் ஆகியவற்றின் மீது அவர்களுக்குப் பிரேமையையும் மற்றும் தூய்மையற்ற விருப்பங்கள், ஆங்காரம், நேர்மையற்ற தன்மை, தீங்கான கெட்ட நடத்தை ஆகியவற்றை உடையவர்களாகவும் படைத்தார்.'' IX 17

மநு, பெண்களைப் பற்றி எவ்வளவு மோசமான எண்ணத்தைக் கொண்டிருந்தார் என்பதை இவை காட்டுகின்றன.

– தொடரும்

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 17(2), பக்கம் : 122

Pin It