விக்கி: சில முக்கியமான கடிதங்களை உறையில் இட்டு ஒட்டி, அதன் மேல் சிவப்பு மெழுகு உருக்கி ஒட்டுகிறார்களே, அது ஏன்?
மலர்: சில சமயம், அதன் மீது உலோக முத்திரையும் இட்டு அழுத்துகிறார்கள்.
வீரன்: உள்ளிருக்கும் கடிதம் முக்கியமானது; மந்தனம் அதாவது இரகசியமானது. யாருக்கு அனுப்பப்படுகிறதோ, அவர் மட்டுமே அதைப் பிரிக்க வேண்டும் என்பதற்காக, அவ்வாறு ஒட்டி முத்திரை இடப்படுகிறது. அதற்குச் ‘சீல்’ இடுதல் என்று பெயர். அது சிவப்பு மெழுகு அல்ல. மெழுகு போல இருக்கும் அதன் பெயர்...
விக்கி: அதை எரியும் தணலில் காட்டி நன்கு உருக்கினால், பசை போல உருகி வருகிறதே, அது ஒருவகை பிசினா?
வீரன்: எழுபது டிகிரி வெப்பத்தில் மிருதுவாகும் அது, எண்பது டிகிரியில் உருகும். தூய ஆரம்ப நிலையில், பழுப்பு மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆல்கஹால் மற்றும் காரக் கரைசல்களில் கரையும்; ஆனால் நீரில் கரையாது. பெட்ரோல் போன்ற எந்த எண்ணெய்களிலும் கரையாது.
அது இசைத்தட்டுகள் (Gramophone records) செய்யும் தொழிலில் ஒரு காலத்தில் மிக அதிகமாகப் பயன்பட்டது. தற்போது மின்சாரக் கருவிகளில் அதிக அளவில் பயன்படுகிறது. மரம், இரப்பர், தோல் மற்றும் உலோகத் தகடுகளில் பூசப்படும் மெருகு எண்ணெய் (Varnish) செய்யவும் பெரிதும் பயன்படும். ஆனால், உலகில் உற்பத்தியாகும் மொத்த உற்பத்திப் பொருளில் பத்து சதவீதம் தொப்பிகளுக்கு விறைப்புக் கொடுக்கவே பயன்படுத்தப்படுகிறது என்பது விசித்திரமான தகவல்.
இரப்பர் பொருள்கள், வார்ப்புச் சாமான்கள், வர்ணக் குச்சிகள், சில விளையாட்டுப் பொருள்கள், சாணைக்கல் எனப் பலவற்றைச் செய்யப் பயன்பட்டது. ஆயினும், அஞ்சல் உறைகளுக்கு இடும் முத்திரை மெழுகு தயாரிக்க உதவும் பொருள் 'சீலிங் வாக்ஸ்' (Sealing wax) என்றால், அனைவரும் அறிவர். அது... 'அரக்கு' எனும் பொருள். ஒருசில பெரியவர்கள் கொம்பரக்கும், மணியரக்கும் ஒரு காலத்தில் நம் ஊரில் நாட்டு மருந்தாகப் பயன்பட்டதை அறிந்திருப்பர்.
மலர்: அது ஒருவகை கெட்டியான மெழுகு என்றே நினைத்திருந்தேன். அது மெழுகு அல்லவெனில்… பசையா?
விக்கி: அது ஏதேனும் தாவரத்தின் வடிதிரவமா? அல்லது விலங்கிலிருந்து கிடைக்கும் பொருளா?
வீரன்: அரக்குப் பூச்சியிலிருந்து கிடைக்கும் பொருள் அது. மூட்டைப்பூச்சி இனத்தில் 'காக்சிடி' என்ற குடும்பத்தைச் சேர்ந்த அரக்குப் பூச்சிகள், சில குறிப்பிட்ட மரங்களில் மட்டுமே வாழக்கூடியவை. அதாவது பூவன் விசிறி மரம் (பழ மரம்), இலந்தை, அரசமரம், பலாச மரங்களிலும் (கல்யாண முருங்கை), ஒருவித துவரைச் செடியிலும் மட்டுமே குடியேறி வாழக்கூடியவை. இந்தியாவில் ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், மகாராஷ்டிர மாநிலங்களில் காணப்படுகிறது. உலகிலேயே அரக்கு உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
அரக்குப்பூச்சியின் குஞ்சுகள் மிகச் சிறியவை. அவை நிதானமாக ஊர்ந்து செல்பவை; அவற்றால் வெகுதூரம் செல்ல முடிவதில்லை. அரக்குப்பூச்சியின் முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவர ஐந்து நாட்கள் இருக்கும்போது, அரக்குக் கூட்டைத் தாங்கி நிற்கும் கிளைகளை நிதானமாக வெட்டி எடுத்து, அவற்றை நன்கு தயார் செய்யப்பட்ட மரங்களின் மேல் கட்டுவர். பிறகு அரக்குப்பூச்சிக் குஞ்சுகள் வெளிவந்து, அருகில் உள்ள இளம் கிளைகளில் குடியேறும்.
விக்கி: அரக்குப் பூச்சி என்ற ஒரு பூச்சியைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லையே! அதைப்பற்றிச் சற்று விளக்கலாம் அல்லவா?
வீரன்: இறகுகள் கொண்டவை ஆண் அரக்குப் பூச்சிகள்; இறக்கைகள் இல்லாதவை பெண் பூச்சிகள். இரண்டும் கூடுகட்டக் கூடியவை. முதிர்ந்த பெண் அரக்குப்பூச்சியின் கூட்டின் மேல் மெழுகுக் கம்பிகள் படர்ந்து காணப்படும். பூச்சிகளில் முக்கால் பாகம் பெண் பூச்சிகள்தாம். இளம் கிளைகளின் மேல் பட்டைத் தோலில் பெண் அரக்குப் பூச்சிகள் குழாய் போன்ற தம் வாயால் குத்திக் கிளையுடன் ஒட்டிக்கொண்டு, மரச்சாற்றை உறிஞ்சி வாழும். அவை தம் உடலில் இருந்து பிசின் போன்ற ஒரு பொருளைத் தமது பாதுகாப்பிற்காக வெளிவிட்டு, தம்மைச் சுற்றிலும் கூடு போல ஒரு பாதுகாப்பு அமைப்பை உருவாக்கிக் கொள்கின்றன.
மலர்: அதாவது பட்டுப்பூச்சிக் கூடு போலவா?
வீரன்: ஆம், ஆனால் அரக்குப்பூச்சி இனத்தில் ஒரு தனித்தன்மை உள்ளது. ஆண் அரக்குப்பூச்சிகள் தம் இணையான பெண் பூச்சிகளைச் சினைப்படுத்திவிட்டுச் சில நாட்களில் இறந்துவிடும். பிறகு பெண் பூச்சிகளின் உடலில் இருந்து இன்னும் அதிக அளவில் அந்தப் பிசின் திரவம் கசியும். அந்தத் திரவத்தைப் படலம் படலமாக அடுக்கிக் கொள்ளும். இவ்வாறு உண்டாகும் அரக்குப் படலங்கள் நாளடைவில் இணைந்து ஒரே கூடாக மாறும்.
அந்தக் கூட்டில் தனித்து வாழும் பெண் பூச்சி தக்க பருவத்தில் முட்டையிடும். அப்போது அரக்குக் கூடு பாதி மஞ்சள், பாதி சிவப்பாகத் தோன்றும். அப்போதுதான் அந்தப் பூச்சிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு எச்சரிக்கையாக அக்கிளைகளை வெட்டி எடுத்து, அருகிலுள்ள மரங்களில் கட்டிவிடுவார்கள்.
விக்கி: அருமை! எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொண்டவர்கள் நாம் அல்லவா?
வீரன்: ஆம். அரக்குப்பூச்சி இனத்தில் மற்றொரு தனித்தன்மை என்னவென்றால், முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியேறிய பின்பு அந்தத் தாய் அரக்குப் பூச்சிகளும் இறந்துவிடுகின்றன என்பதுதான்.
மலர்: அரக்குப் பூச்சிகள் பிறப்பதற்கு முன்பே தந்தையை இழப்பதோடு, பிறந்த உடனே தாயையும் இழக்கின்றனவா? பாவம், கேட்கவே வேதனையாக இருக்கிறது.
வீரன்: வேதனைதான், ஆனால் இது இயற்கை விதி. அரக்குப் பூச்சிகள் வெளியேறிய பின், அந்தக் கிளையை வெட்டி, கையால் அல்லது கத்தியால் அவை கைவிட்ட அந்த அரக்குக் கூட்டைப் பக்குவமாகச் சீவி எடுப்பர். அது 'கொம்பரக்கு' ஆகும். அது ஒரு நாட்டு மருந்துச் சரக்கு. அதைப்பொடித்துச் சலித்து, தண்ணீரில் கழுவினால், அரக்குச் சாயம் பிரியும். ஒரு காலத்தில், அந்த அரக்குச் சாயமே முக்கியமான, தரமான சாயப் பொருளாக இருந்துள்ளது.
அந்தச் சாயத்தை அகற்றிச் சுத்தமாக்கிய பிறகு கிடைப்பது 'மணியரக்கு' (Shellac). மணியரக்கும் ஒரு மருந்துப் பொருள். அதைத் துருவினால் கிடைப்பது 'அவலரக்குத் துருவல்'. இதை மேலும் தூய்மையாக்கி, சூடாக்கி முறுக்குவர். அப்போது அரக்கு மெதுவாகப் பிசின் போல இளகி வரும். அதை மெழுகுடனும் கலந்து, படலமாக்கி, குளிர்வித்து, தகடுகளாக அடிப்பர். அது 'தகடரக்கு'. இதுவே ஏற்றுமதி செய்யப்படும் வணிகப் பொருள்.
அப்படிப் படலமாகச் செய்யாமல், சிறு பொத்தான்கள் போலத் தயாரிப்பது 'தட்டையரக்கு'. இதுவும் ஏற்றுமதி ஆகிறது. மணியரக்கில் இருந்து 'மொலம்மா' எனும் அரக்குத் தூள் பெறப்படுகிறது. அடியில் தங்கும் வீழ்படிவு அரக்குப் பொருளை ஆல்கஹாலில் கரைத்து, 'கல்லரக்கு' செய்கின்றனர்.
ஒவ்வொரு வகை மரத்தில் உருவாகும் கூட்டுக்கும் தனிப்பட்ட பண்புகள் உள்ளன. அரக்கு வகைகளில், 'ஷ்லைசெரா ஒலியோசா' (Schleichera oleosa - பூவன் மரம்) மரத்தின் கிளைகளில் இருந்து பெறப்படும் அரக்கு உயர்ந்த ரகம் என்பர்.
விக்கி: அரக்கின் ஆங்கிலப் பெயர் என்ன?
வீரன்: அரக்குப் பூச்சியின் அறிவியல் பெயர், 'லாசிபெர் லாக்கா' (Laccifer lacca). அதன் உடல்கசிவுதான் அரக்கு. அவை மரங்களில் லட்சக்கணக்கில் குடியேறுவதால், சமஸ்கிருதத்தில் 'லக்சா' (லட்சம்) என்று பொருள்படும் சொல்லிலிருந்து ஆங்கிலத்தில் 'லாக்' (Lac) என்ற பெயர் பெற்றது. அரக்கையும் ஆங்கிலத்தில் 'லாக்' என்கிறார்கள்.
அரக்குப் பிசின் ஒரு இயற்கைப் பிசினாகும். மிகவும் உறுதியானது; அதே சமயம் மிருதுவானது. சற்றுப் பிசுபிசுப்புத் தன்மை கொண்டது. மிக எளிதில் காகிதத்தில் நன்கு ஒட்டும். அதன் மீது அழுத்தப்படும் உலோக முத்திரையைத் தெளிவாக வெளிக்காட்டும். அந்த அரக்கு முத்திரையை எளிதில் உடைத்துப் பிரிக்க முடியாது. தண்ணீர் பட்டாலும் கரையாது. பிரித்த பிறகு மீண்டும் பழையபடி ஒட்ட முடியாது. அதில் எந்த நச்சு வேதிப்பொருளும் இல்லாததால் நமது உடல் நலனுக்கும் தீங்கு இல்லை, சூழலுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.
அரக்கு என்ற இயற்கைப் பிசினைப் பல பயனுள்ள வழிகளில் பணமாக்கலாம்; பொருளாதாரத்தை மேம்படுத்தலாம். அரக்குப் பூச்சிகளை அழிக்காமல், சூழலைச் சிதைக்காமல் இதைச் செய்ய முடியும்.
மலர்: இதையும் சற்று விரிவாகக் கூற முடியுமா?
வீரன்: அரக்கு பல பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது. வளையல்கள், பொம்மைகள் மற்றும் அணிகலன்கள் தயாரிக்கின்றனர். மரச் சாமான்களுக்குப் பளபளப்பு ஏற்றும் பாலிஷ் (Wood polish) தயாரிக்கவும் அந்த அரக்கு பயன்படுகிறது. அழகுசாதனப் பொருள் துறையில் உதட்டுச் சாயம் (Lipstick) மற்றும் நகப்பூச்சு (Nail polish) செய்யவும் பயன்படுகிறது. பிசின் தேவைப்படும் ஒரு சில மருந்துகளில் அரக்குப்பிசின்தான் விரும்பப்படுகிறது.
ஒரு சில உணவுப் பொருட்களுக்குச் சாயம் பூசவும், துணிகளுக்குச் சாயம் பூசவும் பயன்படுகிறது. இது பல பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. கிராமப்புறம் மற்றும் மலைவாழ் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேனுக்கு அடுத்தபடியாக பெரிதும் உதவுவது அரக்கு என்பதால், இதனை அவர்களின் "கிராம நண்பன்" என்று செல்லமாகக் கூறலாம். பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் அரக்குத் தயாரிப்பு இருப்பதால், நன்கு விற்பனையாகி நிலையான வருமானம் தருவதால் இதனைப் "சிவப்பு வெள்ளி" (Red Silver) என்றும் கூறலாம்.
சில அரக்குத் தண்டுகள் கட்டில் இருந்து கீழே விழுந்தால் உடைந்துவிடும்; அவற்றை வீணாக்கக் கூடாது. முழுமையாகப் பயன்படுத்தினால் அரக்குப் பூச்சிக்கும், அரக்கு தயாரிக்கும் பாட்டாளிக்கும் நாம் தரும் மரியாதையாக அது இருக்கும்.
- புழல் தி.பாலகுமார்