நல்ல இணையத்தளங்களின் அருமை, இணைய வசதி இல்லாமல் அவதிப்படும்போது தான் தெரியும்!  வெளியூருக்குப் போய் இருக்கும்போதோ, இணைய வசதி இல்லாத இடங்களில் இருக்கும் போதோ தான், இணையத்தின் அருமை நமக்குப் புரியும்.  சில சமயங்களில் அலைபேசிகளில் குறைந்த அளவு பணம் கட்டி இணைய வசதி வாங்கியிருப்போம்.  நம்முடைய பயன்பாடு அதிகமாக, அதிகமாக, இணையத்தின் வேகம் குறைந்து நம்மைத் தொல்லைப் படுத்தும். 

website copy

நல்ல அதிவேக இணைய வசதி அன்லிடிட்டெடாக கணக்கின்றி இருக்கும் போது நல்ல இணையத்தளங்களை நகல் எடுத்து வைத்துக் கொண்டால் இணையம் இல்லாத நேரங்களிலோ குறைந்த வேகத்தில் இருக்கும்போதோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அல்லவா?  அப்படிச் செய்வதற்கு உதவும் ஒரு மென்பொருள் தான் 'எச்டிடிராக் வெப்சைட் காப்பியர்' ஆகும்.  இந்த மென்பொருள், கட்டற்ற, இலவச மென்பொருள் என்பது கூடுதல் சிறப்பு.  இதை https://www.httrack.com/  தளத்திற்குச் சென்று  பதிவிறக்கிக் கொள்ளலாம். 

விண்டோஸ் 2000, எக்ஸ்பி, விஸ்டா,  7, 8, லினக்ஸ் டெபியன், உபுண்டு, ஜென்டூ, ஃபெடோரா, ஆண்டிராய்டு 2.2 பதிப்புக்கு மேல் உள்ள பதிப்புகள் ஆகிய இயங்குதளங்களில் எச்டிடிராக்கை நிறுவிக்கொள்ளலாம்.  வீட்டில் இணைய வசதி இல்லாத மாணவர்கள் கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் தேவையான இணையத்தளங்களை இந்த மென்பொருள் மூலம் நகல் எடுத்து படிப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  ஆண்டிராய்டிலும் இம்மென்பொருளை நிறுவிப் பயன்படுத்தலாம் என்பதால், முக்கியமான இணையத்தளங்களை அலைபேசிகளிலேயே நகல் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.  இந்திய ஆட்சிப் பணி போன்ற போட்டித் தேர்வுக்கு இணையத்தளங்களை நாடுவோர், கதை கட்டுரைகள் ஆகியவற்றை இணையத்தளங்களில் படிப்போர் ஆகியோர்க்கு மிகவும் பயனுள்ள ஒரு மென்பொருளாக எச்டிடிராக் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

- முத்துக்குட்டி

(கட்டுரை தமிழ் கம்ப்யூட்டர் ஜனவரி 1-16 2016 இதழில் வெளியானது)

Pin It