பாலூட்டிகளாக இருந்தும் மனிதர்களுக்கு ஏன் உடலில் அடர்த்தியாக மயிர் இல்லை? அறிவியலாளர்களை குடையும் கேள்விகளில் இதுவும் ஒன்று.
பாலூட்டிகளின் முக்கிய அம்சங்கள் இரண்டு. ஒன்று குட்டி போட்டு பால் கொடுப்பது. மற்றொன்று உடல் முழுவதும் மயிர் வளர்ந்திருப்பது. இவைதான் மற்ற உயிரினங்களில் இருந்து பாலூட்டிகளை வேறுபடுத்தி காட்டுகின்றன.
குரங்குகளுக்கு உடல் முழுக்க அடர்த்தியான மயிர் உண்டு. நமது நெருங்கிய உறவினர்களான வாலில்லா குரங்குகளுக்கும் இப்படியே. நமது உடலின் வெளிப்பகுதி எங்கும் மயிர் வளரும் தன்மை உண்டு. இருந்தும் காட்டுயிர்கள் போல நமக்கு அடர்த்தியாக மயிர் முளைப்பதில்லை. இதற்குக் காரணம் என்ன? அடர்த்தியாக மயிர் வளரும் தன்மையை கற்காலச் சமூகம் விரும்பவில்லை என்று தெரிகிறது.
தற்போது தவறான மனோபாவம் காரணமாக பெண் குழந்தைகள் கள்ளிப்பால் கொடுத்தும், வேறு பல வகைகளிலும் கொல்லப்படுகின்றன. அந்தக் காலத்தில் மயிர் அதிகம் வளர்ந்த குழந்தைகள் இப்படிக் கொல்லப்பட்டனவாம்.
உடலில் அதிக மயிர் வளர்ந்த குழந்தைகளை கற்கால பெண்கள் கொன்றுவிட்டதுதான், மனித உடலில் மயிர் குறைந்ததற்குக் காரணம் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. மயிர் குறைவாக உள்ள குழந்தைகளே அப்பொழுது விரும்பப்பட்டுள்ளன. இப்படி அந்தக் குழந்தைகளை கொன்றுவிட ஆரம்பிக்க, மயிர் அதிகம் வளராத குழந்தைகளின் சந்ததிகள் பெருகி எல்லா குழந்தைகளுக்கும் மயிர் குறைவாக வளர ஆரம்பித்திருக்க வேண்டும்.
இது தொடர்பாக ஜூடித் ரிச் ஹாரிஸ் எழுதிய ஆய்வுக் கட்டுரைக்கு மருத்துவ கொள்கைக்கான டேவிட் ஹாரோபின் பரிசு வழங்கப்பட்டது. இந்த கட்டுரை மெடிகல் ஹைபோதிசிஸ் இதழில் வெளியானது.
மனிதன் பல்வேறு வகைகளில் பரிணாம வளர்ச்சி பெற்றதற்கு இயற்கை மட்டும் காரணமல்ல. மனிதர்களே சில வகைகளில் காரணமாக அமைந்துள்ளனர். பெற்றோர் தேர்வு இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நவீன காலத்துக்கு முந்தைய சமூகங்களில் குழந்தைகள் பிறப்பை கட்டுப்படுத்தும் முறையாக, பச்சைக் குழந்தைகளை கொல்லும் பழக்கம் இருந்திருக்கிறது. செவிலித் தாயின் கைகளில் குழந்தை ஒப்படைக்கப்பட்டால், அதை வாழ வைக்க வேண்டாம் என்று அர்த்தம்.
ஒரு குழந்தையை வளர்ப்பதா அல்லது கைவிட்டுவிடுவதா என்பதை தாய்மார்கள் தீர்மானித்துள்ளனர். இதன் மூலம் மனித பரிணாம வளர்ச்சியிலும் அவர்கள் பங்காற்றியுள்ளனர் என்று இந்த ஆராய்ச்சியின் மூலம் ஜூடித் கூறுகிறார். இதற்கு எடுத்துக்காட்டாக ஆப்பிரிக்க வேட்டை பழங்குடிகளான குங் இன பெண்களை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
நமது உடல் அளவை ஒத்த பபூன் குரங்குகள், சிம்பன்சி, கொரில்லா, கழுதைப்புலிகள், சிவிங்கிப் புலி, சிறுத்தை, மான்கள் போன்றவை வெப்பமான ஆப்பிரிக்காவில் (அங்குதான் மனித இனம் தோன்றியது) வாழப் பழகிக் கொண்டன. ஆனால், அதே பகுதியில் வாழ்ந்த மனிதன் மட்டும் மயிர்களை இழந்துள்ளான். உடல்தகுதி அதிகரிப்பின் ஒரு பகுதியாக இது நடந்துள்ளது.
பரிணாம வளர்ச்சியில் ஹோமோசேபியன்ஸ், அவர்களுக்குப் பின்னால் தோன்றிய மனிதனுக்கு மட்டும்தான் மயிர் குறைவாக இருக்கிறது. அதற்கு முந்தைய ஹோமோஎரக்டஸ் மற்றும் வடக்கில் அவரது வழித்தோன்றலாக இருந்த நியாண்டர்தால் ஆகியோர் வாலில்லாக் குரங்குகளைப் போலவே மயிர்களுடன் இருந்தனர்.
பெரும்பனிக் காலத்தில் மாமோத் எனும் மாமத யானை மயிர் நிறைந்து இருந்தது. அந்தக் காலத்தில் மனிதன் மயிர்களை இழப்பதற்கு உடல்தகுதி மட்டும் காரணமாக இருந்திருக்க முடியாது. ஏதோ ஒரு சக்தி இதன் பின்னால் இருந்திருக்கிறது என்ற அடிப்படையில்தான் இந்த ஆய்வு தொடங்கியது.
''அந்த சக்தி பண்பாடுதான். பெற்றோர் தேர்வுதான் மனிதர்களில் மயிர் வளர்வது குறைந்ததை விரைவுபடுத்தியிருக்க வேண்டும். அதிக மயிருடன் பிறந்த குழந்தைகள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். அது கொல்லப்பட்டிருக்கலாம், அல்லது கைவிடப்பட்டிருக்கலாம்'' என்கிறார் ஜூடித்.
(அனுப்பி உதவியவர்: ஆதி)
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
மனிதர்களுக்கு ஏன் அதிக முடியில்லை?
- விவரங்கள்
- ஆதி
- பிரிவு: அறிவியல் துணுக்குகள்