6.1.2013 மும்பை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, தமிழகத்தில் இருந்து பல தோழர்கள் வந்து இருந்தார்கள். இன்று ‘மும்பை தர்ஷன்’ என்ற பேருந்துப் பயணத்தில், மும்பை நகரைச் சுற்றிப் பார்க்க பயணச்சீட்டு பதிவு செய்தேன். நண்பர்கள், அடைக்கலம், ராஜமாணிக்கம், சேரன் ஆகியோருடன், மும்பையில் பணிபுரிகின்ற தோழர்கள், தமிழ்மணி பாலா, ஆனந்தராஜ் ஆகியோரும் உடன் வந்தனர். காலை 8.30 மணி அளவில் பேருந்து புறப்பட்டது. முதலில் நேராக, இந்திய நுழைவாயில் பகுதிக்குத்தான் அழைத்துச் சென்றனர். படகுச் சவாரி. ஒருவருக்கு 135 ரூபாய் கட்டணம். இந்தக் கரையில் இருந்து சுமார் இரண்டு மணி நேரம் கடலி படகுகளில் பயணித்துச் சென்றால், எலிஃபெண்டா குகைகளைப் பார்க்கலாம். அங்கே பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு செதுக்கப்பட்ட சிற்பங்கள் உள்ளன. ஆனால், அங்கே போய்ச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்ப, முழுமையாக ஒரு பகல் ஆகும் என்பதால், நாங்கள் அங்கே செல்லவில்லை.

mumbai_arunagiri_640

படகுப் பயணத்தில், கரையில் இருந்து புறப்பட்டு, குறிப்பிட்டதொலைவுக்குச் சென்றார்கள். பயண வழிகாட்டி, கடலில் இருந்த தெரிந்த மும்பை நகரின் தோற்றத்தைப் பற்றிய விளக்கங்களை அளித்துக் கொண்டே வந்தார். எப்படி சென்னை மெரினா கடலில் ஒரு படகில் ஏறிச் சற்று உள்ளே சென்றால் வடக்கே எண்ணூரில் இருந்து, தெற்கே பாலவாக்கம் வரையிலும் பார்க்க முடியுமோ, அப்படி மும்பை நகரின் வடக்கு தெற்காக அமைந்து உள்ள கட்டடங்களைப் பார்க்க முடிகின்றது. வட பகுதியில், இந்தியக் கடற்படையின் அதிநவீன போர்க்கப்பல்கள் அணிவகுத்து நிற்கின்றன. அந்தப் பகுதியைப் படம் பிடிக்கக் கூடாது என்றார் வழிகாட்டி. படம் எடுத்தால், கடற்படையினர் கேமராவைப் பிடுங்கிக் கொள்வார்கள் என்றார்.

இப்போதெல்லாம், விண்வெளியில் உலவுகின்ற செயற்கைக் கோள்களில் இருந்து அதி நவீன கேமராக்களைக் கொண்டு படம் பிடித்து உளவு பார்க்கின்றார்களே? சாதாரண பயணிகள் வைத்து இருக்கின்ற கேமராவைப் பிடுங்கி என்ன பயன்? எதற்கு இந்த வீண் மிரட்டல்?

கடலில் இருந்து பார்க்கின்ற கோணத்தில், மும்பை நகரின் பிரமாண்டத்தை உள்வாங்கிக் கொள்ள முடிகின்றது. ஒரு மணி நேரப் படகுப் பயணம் முடிந்து திரும்புகையில், படகில் இருந்தே எடுத்த படத்தில், இந்திய நுழைவாயில், தாஜ் நட்சத்திர விடுதியின் எழிலார்ந்த இரண்டு கட்டடங்கள் எல்லாவற்றையும் உள்ளடக்க முடிகின்றது. அந்தப் படம் நன்றாக உள்ளது. கரையில் இருந்து எடுக்கின்ற படத்தில், இம்மூன்றையும் ஒருசேர இணைத்து எடுக்க முடியாது.

அடுத்து நாங்கள் சென்ற இடம், அருகிலேயே உள்ள, சத்ரபதி சிவாஜி அருங்காட்சியகம். முன்பு இது, பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் மியூசியம் (ஞசinஉந டிக றுயடநள ஆரளநரஅ) என்று அழைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தை ஒரு மணி நேரத்தில் சுற்றிப் பார்க்க முடியாது. குறைந்தது இரண்டு நாள்கள் தேவை. அத்தனைக் கலைப்பொருட்கள் இருக்கின்றன. எகிப்திய பிரமிடுகள், மம்மிக்களைப் பற்றி ஒரு தனிப்பிரிவே இருக்கின்றது. ஆற அமர ரசித்து, விளக்கங்களைப் படித்துப் பார்க்க வேண்டும். பிறிதொரு முறை வரும்போது, இதற்காக முழுமையாக ஒரு நாள் ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். அங்கே, எகிப்திய மன்னர்களைப்போல வேடம் அணிந்து, படகில் செல்வது போலப் படம் எடுத்துக் கொண்டோம்.

இன்று முழுவதும், பேருந்திலேயே மும்பையைச் சுற்றி வந்தோம். மும்பை என்று சொல்லுவதை விட, மும்பையின் கடலோரப் பகுதிகளை மட்டுமே சுற்றி வந்தோம் எனலாம். மும்பையின் புகழ் பெற்ற மரைன் டிரைவ், ஆங்கில சி எழுத்து வடிவில், நரிமண் பாய்ண்ட் மற்றும் பாபுல்நாத் ஆகிய பகுதிகளை இணைக்கும் சாலை, மீன் காட்சியகம் ஆகிய பகுதிகளைப் பார்த்தோம்.

இது அமிதாப் பச்சன் வீடு, ஆமிர்கான் வீடு, சல்மான்கான் வீடு, ஷாருக்கான் வீடு என்று சுட்டிக் காட்டியவாறே வந்தார் வழிகாட்டி. பேருந்தில் எங்களோடு வந்த வட இந்தியர்கள் அனைவரும், நடிகர், நடிகைகளின் வீடுகளைப் பார்க்கவே ஆவலாக இருந்தார்கள்.

மகாலெட்சுமி ஆலயத்துக்கு அருகில்கூடப் போக முடியவில்லை. ஒரு கிலோ மீட்டர் நீள வரிசை. வெளியில் நின்றே வேடிக்கை பார்த்துவிட்டுத் திரும்பினோம். பாந்த்ராவில் இருந்து ஒர்லி கடல்முகப் பகுதியை இணைப்பதற்காக, கடலில் கட்டப்பட்டு உள்ள ராஜீவ் காந்தி பாலம் வழியே அழைத்துச் சென்றார்கள். இந்தியாவிலேயே நீளமான கடற்பாலம் இதுதான். 5.6 கிலோமீட்டர் நீளம். (இராமேஸ்வரம்ப-பாம்பன் பாலம் 2.3 கிலோமீட்டர்கள்). மும்பை பாலத்தின் மையமான பகுதியின் உயரம், 413 அடிகள். 2000 ஆண்டில் தொடங்கி, 2010 இல் கட்டி முடித்தார்கள். அதன் வழியாகப் பயணித்தது ஒரு புதிய அனுபவம். மும்பை செல்லுகின்ற அனைவரும், இந்த வழியில் பயணித்துப் பார்க்க வேண்டும். கடைசியாக, ஜூகு கடற்கரையில் கொண்டு போய் இறக்கி விட்டார்கள்.  சிறிய கடற்கரை; பெருங்கூட்டம். அதைப் பயன்படுத்திக் கொண்ட ஒரு தமிழர், இரண்டு வடை 70 ரூபாய்; காபி 40 ரூபாய் என்று கடை போட்டு விற்றுக் கொண்டு இருக்கின்றார். அங்கே வருகின்றவர்கள் எல்லோரும் பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு வீசி எறிய வருகிறார்கள் என்று கருதிக்கொண்டாரோ என்னவோ? ஆங்காங்கே பாய்களை விரித்துப் பலர் படுத்து இருந்தார்கள். கையோடு கொண்டு வருகிறார்களா? என்று பார்த்தால், ஒருவர் வாடகைக்குக் கொடுத்துக் கொண்டு இருந்தார். ஒரு மணி நேரம் சுற்றியலைந்து பேருந்துக்கு வந்தோம். 6 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு, மீண்டும் செம்பூர் வந்து சேர்ந்தோம்.

நண்பர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு, இரவு 11.45 மணி, சென்னை மெயிலைப் பிடிப்பதற்காக, சத்ரபதி சிவாஜி தொடர்வண்டி நிலையத்துக்கு வந்து சேர்ந்தேன். உடன், தமிழ்மணி பாலா வந்தார். அந்த நேரம் அங்கே உள்ள தமது அலுவலகத்தில் இருந்த கேப்டன் தமிழ்ச்செல்வனும், மும்பை மாரியும் அன்புடன் வழி அனுப்பி வைத்தனர். சோலாபூர், குல்பர்கா, ராய்ச்சூர், ஆதோனி, குண்டக்கல், ரேணுகுண்டா வழியாக, 8 ஆம் தேதி விடிகாலை 4.00 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தேன்.

மும்பையில் தமிழர்கள்

மும்பையில் இருந்தபோது வந்து சந்தித்த நண்பர்கள் அனைவரிடமும், அவர்களது மும்பை வாழ்க்கை குறித்துக் கேட்டு அறிந்தேன். செய்தியாளர் கதிரவன், மும்பை குறித்து தாம் சேகரித்த விவரங்களைத் தந்தார். இணைப்பாக இங்கே தருகின்றேன்.

மும்பை, கொலாபா, லிட்டில் கொலாபா, மாஹிம், மசகாவ்ன், பரேல், ஒர்லி என ஏழு குட்டித் தீவுகளை உள்ளடக்கிய ஓர் அழகிய நகரம் மும்பை. கோலி (மீனவர்) இனத்தவரின் தாய் மண்ணான மும்பை, அவ்வின மக்களின் கடவுளான மும்பாதேவியைக் குறிக்கும் வகையில் ‘மும்பை’ என அழைக்கப்படுகின்றத. ஆங்கிலேயர்கள் இதை ‘பாம்பே’ என அழைத்தனர். அவர்களுடைய ஆட்சியில், மும்பை மாகாணம், தற்போதைய, குஜராத், மத்தியப் பிரதேச, கர்நாடக மாநிலங்களின் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது.

1660 ஆம் ஆண்டு, தோராப்ஜி நானாபாயில், பார்சி இன மக்களின் மும்பைக் குடியேற்றம் தொடங்கியது. 1800 ஆம் ஆண்டுவாக்கில், மும்பையின் பாதி இடங்களுக்குச் சொந்தக்காரர்கள் ஆயினர். மும்பையின் தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமாக அமைந்தனர். 1913 ஆம் ஆண்டு முதல், தமிழர்கள் பிழைப்புத் தேடி வரத் தொடங்கினர். இங்கேயே குடியேறினர். தொடக்கத்தில் அவர்கள், தாராவி பகுதியில்தான் பெரும்பாலும் வசித்து வந்தனர். ‘குட்டித் தமிழ்நாடு’ என்ற அழைக்கப்படும் இப்பகுதியில்தான், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சாதிச் சங்கங்கள், நடிகர்களின் இரசிகர் மன்றங்களின் மும்பைக் கிளை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. எனவே, தாய்த் தமிழகத்துக்கும், மும்பைத் தமிழர்களுக்கும் இடையில், இணக்கமான தொடர்புகள் இருந்து வருகின்றன.

பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., மு. கருணாநிதி, வைகோ, முதலிய பல அரசியல் தலைவர்கள் மும்பைக்கு வருகை தந்து உள்ளனர். இன்று தமிழர்கள், தாராவி மட்டும் அன்றி, மும்பையின் புறநகர் பகுதிகளிலும், அதனை ஒட்டிய ராய்கட், தானே மாவட்டங்களிலும், நவி மும்பை என அழைக்கப்படும், புதிதாக, உலகத்தரத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற புதிய மும்பையிலும், கணிசமான அளவில் வாழ்ந்து வருகின்றனர்.

மும்பையில், தாராவி, மாதுங்கா, சயான் கோலிவாடா, மாகிம்,ஜெரிமேரி, செம்பூர், சீத்தா கேம்ப், சிவாஜி நகர், ஒர்லி, மலாட், பொய்சர், காந்திவிலி, பாந்த்ரா, பாண்டூப், முல்லண்ட், வலே பார்லே, ரெய் ரோடு, மஜித் பந்தர், ஆரே காலனி, ஆகிய பகுதிகளிலும், தானா மாவட்டத்தில் அம்பர்நாத், உல்லாஸ் நகர், திப்பண்ணா நகர், தானே மற்றும் நவி மும்பை பகுதியில் வாஷி, நெரூர், பன்வெல், உரான் ஆகிய பகுதிகளிலும், பெருமளவில் வசிக்கின்றனர். ஆங்காங்கே பல தமிழ் அமைப்புகளை உருவாக்கிச் செயற்பட்டு வருகின்றனர்.

மும்பைத் தமிழ்ச் சங்கம், செம்பூர் தமிழ்ச் சங்கம், தென்னிந்திய ஆதி திராவிட மகாசன சங்கம், தென்னிந்திய நாடார் மகாசன சங்கம், பம்பாய் திருவள்ளுவர் மன்றம், ஜெரிமேரி தமிழ்ச் சங்கம், மராட்டிய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம், நவி மும்பை தமிழ்ச் சங்கம், மராத்திய மாநிலத் தமிழ்க் கவிஞர் மன்றம், தமிழர் நட்புக் கழகம், தமிழர் நட்புறவுப் பேரவை எனப்பல அமைப்புகள், தமிழர் மற்றும் தமிழ் வளர்ச்சிக்காகச் செயற்பட்டு வருகின்றன.

மும்பைத் தமிழ்ச் சங்கத்தால் கட்டப்பட்டு உள்ள சண்முகானந்தா அரங்கம், ஆசியாவின் மிகப்பெரிய கூட்ட அரங்கங்களுள் ஒன்றாகப் பெயர் பெற்று, சிறப்புச் சேர்த்துக் கொண்டு இருக்கின்றது.

முன்பு தமிழர்களுக்கு அரணாக இருந்த வரதராச முதலியார், ஹாஜி மஸ்தான் ஆகியோரின் பெரும் முயற்சியால், ‘பம்பாய்த் தமிழர் பேரவை’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, தமிழர்களின் நலனுக்காக மிகச் சிறப்பாகச் செயற்பட்டது. 1984 ஆம் ஆண்டு, ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கக் கோரி, மும்பை ஆசாத் மைதானத்தில் இருந்து, பவுண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் வரை மாபெரும் பேரணியை நடத்தியது. இலட்சக்கணக்கான தமிழர்கள் பேரணியில் பங்கு ஏற்று, அந்தப் பேரணியை, மும்பை வரலாற்றில் இடம்பெறச் செய்தனர். ஈழத்தமிழர்களின் நலனுக்காக, பம்பாய் ஈழ நட்புறவுக் கழகம், தோழர் வே. பன்னீர்ச்செல்வம், சு. குமணராசன் ஆகியோரின் உழைப்பால், மிகச் சிறப்பாகச் செயற்பட்டது. அன்றைக்கு இருந்த தமிழ் இன உணர்வு இன்று மங்கி விட்டது. மீண்டும் சரியான தலைமை அமைந்தால், மும்பைத்தமிழனை, இன உணர்வு பெறச் செய்ய முடியும்.

தமிழக அரசியல் கட்சிகளைத் தவிர, மராட்டியத்தில் இயங்குகின்ற, மாநில, தேசிய அரசியல் கட்சிகளிலும், தமிழர்கள் உறுப்பினர்களாகவும், பொறுப்பாளர்களாகவும் இயங்கி வருகின்றனர். மும்பை மாநகரில், ஆறு நாடாளுமன்றத் தொகுதிகள், 36 சட்டமன்றத் தொகுதிகள், 247 மாநகராட்சித் தொகுதிகள் உள்ளன. ஆனால், இதில் மாநகராட்சி உறுப்பினர் பதவியைத் தவிர, பதவிகளைத் தமிழர்கள் இதுவரை வகித்தது இல்லை. மாநகராட்சியிலும்கூட, ஆறு பேர் மட்டுமே பதவி வகித்து உள்ளனர்.

கல்வி

சுமார் ஐம்பது ஆண்டுகளாகத் தமிழர்கள், கலை, இலக்கியம், கல்வி என அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி வருகின்றனர். மும்பை மாநகராட்சி ஒன்றாம் வகுப்பு முதல், ஏழாம் வகுப்பு வரை இலவசமாகத் தமிழ் வழிக் கல்வி மூலம், ஆங்கிலம், இந்தி, மராட்டி என அனைத்து மொழிப் பாடங்களையும் கற்பித்து வருகின்றது. இதில், ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்கள் படித்து வெளியே வருகின்றார்கள். 42 மும்பை மாநகராட்சித் தமிழ்ப் பள்ளிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். ஏழாம் வகுப்புக்கு மேலே, தமிழில் கல்வியைத் தொடர, இரண்டே இரண்டு உயர்நிலைப்பள்ளிகளை மட்டுமே தமிழருக்காக நடத்துகின்றது. அதிலும், ஒரு பாட மொழியாக மட்டுமே தமிழ் உள்ளது.

mumbai_sivaji_640

மாதுங்கா சென்ட்ரல், மலாட் பகுதிகளில் இயங்கும் இந்த இரண்டு பள்ளிகளிலும், போதிய வசதிகள் இல்லை. தமிழகத் தேர்வு ஆணையத்தின் கீழ், தமிழ் வழிக் கல்வி அளிக்கும் தனியார் பள்ளிகள், பாண்டூப்பில் முதலில் தொடங்கப்பட்டு, பிறகு சீத்தா கேம்ப், தாராவி பகுதிகளிலும் விரிவு அடைந்து உள்ளது. மும்பை மாநகராட்சிப் பள்ளிகளில், தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும்கூட, பாட நூல்களை, தமிழ்நாடு அரசுதான் வழங்க வேண்டி இருக்கின்றது. இதில் மராட்டிய அரசு அக்கறை காட்டுவது இல்லை. எனவே, குழந்தைகளுக்குப் பாடநூல் கிடைப்பதில் சிரமங்கள் உள்ளன. 2012 ஆம் ஆண்டு, புத்தகங்களே வழங்கப்படவில்லை. எனவே, தமிழ்நாடு அரசும், மும்பை மாநகராட்சியும் இணைந்து, தமிழ்க் குழந்தைகளின் கல்விக்கு, போதிய வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

தமிழ்ப் பள்ளிகள்:

காமராஜ் உயர்நிலைப்பள்ளி, பிரைட் உயர்நிலைப்பள்ளி, நேஷனல் உயர்நிலைப்பள்ளி, ஸ்டார் உயர்நிலைப்பள்ளி, கம்பன் மற்றும் வீரமா முனிவர் உயர்நிலைப் பள்ளி ஆகிய தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. மேலும் பல தமிழ்ப் பள்ளிகளைத் தொடங்கி நடத்தவும், இப்போதுஉள்ள பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, அரசுகளும், தமிழ் அமைப்புகளும் செய்து தரவேண்டும்.

பண்பாடு

மும்பைத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இடையே பண்பாடு, கலாச்சாரம், பேச்சு, பழக்கவழக்கங்களில், அதிக வேறுபாடுகள் இல்லை. தமிழகத்தில் ஒளிபரப்பாகின்ற பெரும்பாலான தொலைக்காட்சி ஒளிபரப்புகளும், மும்பையில் காணக் கிடைக்கின்றன. பொங்கல் மற்றும் கோவில் திருவிழாக்களும், விநாயகர் சதுர்த்தியும் வழக்கமான முறையில், தமிழகத்தைப் போலவே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தீபாவளிக்குப் பட்டாசு, பொங்கலுக்குக் கரும்பு என மண்வாசனையுடனே கொண்டாடப்படுகின்றது.

பொருளாதாரம்:

1950 மற்றும் 1980 களில் பிழைப்புத் தேடி மும்பைக்கு வந்த தமிழர்கள், பெரும்பாலும் அரசுப் பணிகளில் சேர்ந்தனர். அந்தக் காலகட்டத்தில் வேலைக்கு ஆட்கள் தேவைப்பட்டதால், பல நிறுவனங்களும், அரசுத் துறைகளும் வலிந்து தமிழர்களை அழைத்து வேலை கொடுத்தன. அப்படி வேலையில் சேர்ந்த குடும்பங்கள், ஓரளவுக்கு வசதியாகவே உள்ளன. ஆனால், இவர்களின் பிள்ளைகள் தகுதியான பணி வாய்ப்புகள் இன்றித் தவிக்கின்றார்கள்.

தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததால், வருமானம் இன்றி, வாழ முடியாமல் தவித்த தமிழர்கள், மும்பைக்கு வந்து, ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். அவர்கள், வீட்டு வேலை, கட்டுமானப் பணி, சாiப் பணி என, பல கடினமான வேலைகளில் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் தங்குவதற்கு வீடுகள் இன்றி, பெரும்பாலும், சாலை ஒரங்களில் குடிசைகள் அமைத்துக் கொண்டு, அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். ஒருசாரார், மும்பை மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட, 10 க்கு 15 அடி என்ற அளவிலான குடிசைகளில் வசித்து வருகின்றனர். 150 சதுர அடி கொண்ட இந்த வீடுகள், மேல் மாடிகள் கொண்டவை. இந்த வீடுகள் 80 ஆயிரம் முதல் 5 இலட்சம் வரை விலை மதிப்பு கொண்டவை.

2005 ஆம் ஆண்டு பெய்த பெருமழையில், தமிழர்கள் அதிகம் வசிக்கின்ற, விலே பார்லே, மலாட், கோலிவாடா போன்ற பகுதிகளில், தண்ணீர் புகுந்ததால் பெருத்த பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இவர்களுக்கு, மராட்டிய மாநில அரசு, ஓரளவு பண உதவி செய்தது. தமிழக அரசு, சுமார் ஐந்து இலட்ச ரூபாய் மற்றும் சேலை, வேட்டி எனப் பொருள் உதவிகளும் செய்தது.

தானா மாவட்டம் அம்பர்நாத் பகுதியில் அமைந்து உள்ள குண்டோலி போன்ற பகுதியில், வேலூர், திருவண்ணாமலை மாவட்ட நெசவாளர்கள், நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள், நெசவுத்தொழிலை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். இப்போது நெசவுத் தொழில் மந்தமாகி விட்டதால், அடிப்படைத் தேவைகளுக்கே வருவாய் இன்றி வாடிக்கொண்டு இருக்கின்றனர்.

1913 ஆம் ஆண்டு முதலே இங்கு வாழ்ந்து வந்தாலும், தமிழர்களுக்கு, மராட்டிய அரசு சாதிச் சான்றிதழ் வழங்குவது இல்லை. மாநில அரசுப் பணி, மாநகராட்சிப் பணிகளில், தமிழர்களை பொதுப்பிரிவில் மட்டுமே இணைத்து உள்ளது. இதனால், மும்பைத் தமிழர்களுக்கு மாநில அரசின் எவ்விதச் சலுகைகளும் கிடைப்பது இல்லை. தேர்தலிலும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தமிழர்களும், பொதுத் தொகுதியில் மட்டுமே போட்டியிட முடியும். தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு வருகின்ற தமிழகத் தலைவர்களிடம், சாதிச் சான்றிதழ் தொடர்பாக மனு கொடுப்பதை,மும்பைத் தமிழர்கள் ஒரு வழக்கமாகவே கொண்டு உள்ளனர். தமிழக அரசு முயன்றால்தான், இந்த சாதிச் சான்றிதழ் சிக்கல் தீரும். புலம் பெயர்ந்து வந்த தமிழர்களுக்கும், தாயகத்தில் வாழும் தமிழர்களுக்கும் இடையே பிணைப்பை அதிகப்படுத்த வேண்டும்.

மும்பையில், பல வட இந்திய மாநிலங்களின் சார்பில், அரசு அதிகார இல்லங்கள் அமைந்து உள்ளன. எனவே, தமிழக அரசுக்காக, டெல்லியில் தமிழ்நாடு இல்லம் இருப்பதுபோல, மும்பை மாநகரிலும், தமிழ்நாடு இல்லம் அமைக்கப்பட வேண்டும். அதன் உயர் அதிகாரி, தமிழக முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கவேண்டும். புலம் பெயர்ந்த மும்பைத் தமிழர்களின் சிக்கல்களையும், குறைகளையும், தேவைகளையும், உடனுக்குடன் முதல்வரின் நேரடி கவனத்துக்குக் கொண்டு சென்று, களைந்திட வேண்டும். மேலும், இந்த இல்லத்தில், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் மையங்கள், தமிழ் கலாச்சார மையங்களும் அமையவேண்டும். தங்கும் அறைகளும், கலையரங்கமும் அமைய வேண்டும். அப்படி ஒரு மையம் அமைந்தால், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும், தமிழ் இன உணர்வு பெறுவார்கள். உறவுகள் மேம்படும்; ஒற்றுமை வலுப்பெறும்.

தற்போது மும்பையின் மக்கள் தொகை, சமார் ஒன்றரைக் கோடி என்கிறார்கள். இதில், தமிழர்களின் எண்ணிக்கை, சுமார் 15 இலட்சத்திற்கும் கூடுதல் ஆகி விட்டது. நான்கு தலைமுறைகளாக இங்கே வசித்து வருகின்ற தமிழர்களும், மும்பையின் வளர்ச்சிக்குப் பெரும் பங்கு ஆற்றி வருகின்றனர்.

- அருணகிரி

Pin It