சங்கரன்கோவில்-கோவில்பட்டி சாலையில், இரு நகரங்களுக்கும் நடுவே அமைந்து உள்ளது கழுகுமலை பேரூர்.

கழுகுமலை உச்சியிலிருந்து வெட்டுவான் கோயில் தோற்றம்

சென்னிமலை அண்ணாமலைக் கவிராயர் பாடிய காவடிச் சிந்து பாடல்களில், கழுகுமலை நகர் வளத்தை ஏகமாகப் புகழ்ந்து உரைத்து இருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட முறை, இந்த ஊரைக் கடந்து சென்று இருக்கிறேன். பள்ளிப் பருவத்தில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக, எண்ணற்ற முறை கழுகுமலைக்கு வந்து இருக்கிறேன். அங்கே உள்ள மாட்டுத்தாவணித் திடலில், காலையில் போட்டிகளை ஆடி முடித்தபின்பு, மலைக்குச் சென்று, கொண்டு வந்த உணவை சாப்பிடுவோம்; பாறை நிழலில் படுத்து உறங்குவோம். பிற்பகலில் நண்பர்களோடு மலையில் ஏறுவோம். அப்படிப் பலமுறை கழுகுமலை உச்சிக்குச் சென்று வந்து இருக்கிறேன்.

மதுரை யானைமலையில் உள்ளது போலவே, ‘கழுகுமலை’யிலும், 7,8 ஆம் நூற்றாண்டுக் காலச் சமணர் சிற்பங்கள் உள்ளன. பள்ளிப் பருவத்தில், இந்தச் சிற்பங்களின் மதிப்பு எனக்குத் தெரியவில்லை. அந்த மலைக்கு, ஆடை அணியாத சமணத் துறவிகள் அடிக்கடி வந்து போவார்கள் என்று, அந்த ஊர் நண்பர்கள் சொன்னார்கள்.

வரலாற்றுப் பாடங்களைப் படிக்கும்போதுதான், இதன் அருமை பெருமைகளை உணர்ந்தேன்.

2009 செப்டெம்பர் மாதம், என் மகள் ஐஸ்வர்யாவுக்கு, கழுகுமலையைச் சுற்றிக் காண்பிப்பதற்காக அழைத்துச் சென்றேன். என்னுடைய தந்தையார், சங்கரன்கோவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் அ.பழநிசாமி, இராணுவத்தில் பணி ஆற்றி ஓய்வு பெற்ற நண்பன் இராமச்சந்திரன், மருமகன் அரவிந்த் ஆகியோரும் உடன் வந்தார்கள்.

மலையின் பின்பகுதியில் உள்ள படிக்கட்டுகளின் வழியாக மேலே ஏறினோம். விறுவிறுவென ஏறினால், பதினைந்து இருபது நிமிடங்களுக்கு உள்ளாக ஏறி விடலாம். இடையில் சற்று அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டு ஏறினால், அரை மணி நேரத்துக்கு உள்ளாகப் போய் விடலாம். உச்சி வரையிலும் சென்று, கண்ணுக்கு எட்டிய தொலைவு வரையிலுமான காட்சிகளைக் கண்டு ரசித்தோம்.

சமணர் பள்ளி

samanar_palli_kugai_620

மலையின் நடுவே ஓரிடத்தில், வரிசையாகப் பல சிலைகள் செதுக்கப்பட்டு உள்ளன. சமணர்கள், தங்கள் குரு, தாய், தந்தை ஆகியோரின் நினைவாக, இங்கே சமண தீர்த்தங்கரர்களின் சிலைகளைச் செதுக்கி உள்ளனர். இச்சிற்பங்களின் கீழே, அவற்றைச் செதுக்கியவர்களின் பெயர்கள் தமிழ் வட்டு எழுத்துகளில் பொறிக்கப்பட்டு உள்ளன. சிறுசிறு குகைகளும் உள்ளன. அங்கே அமைந்து இருந்த சமணர் பள்ளிகளில், சமண மதக் கருத்துகளைப் போதித்தனர்.

வெட்டுவான் கோவில்

கழுகுமலையின் மற்றொரு சிறப்பு, அந்த மலையின் பின்புறம் அமைந்து உள்ள ‘வெட்டுவான் கோயில்’ ஆகும். மலையின் ஒரு பகுதியில் பாறையை வெட்டி, அந்த ஒற்றைப் பாறையிலேயே ஒரு கோயிலைச் செதுக்கி இருக்கிறார்கள். அதுதான், ‘வெட்டுவான் கோயில்’ என்று அழைக்கப்படுகிறது.

இத்தகைய கோயில், தமிழகத்திலேயே இது ஒன்றுதான் என்பதுவே, கழுகுமலையின் மாபெரும் சிறப்பு ஆகும். இந்தியாவிலேயே கழுகுமலையைத் தவிர, மராட்டிய மாநிலம் எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவில் மட்டுமே, மலைக் குடைவரைக் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.

வெட்டுவான் கோயில் முகப்புத் தோற்றம்

வெட்டுவான் கோயில், ஒரே கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது (Monolithic). கழுகுமலையின் ஒரு பகுதியில், 7.50 மீட்டர் ஆழத்துக்குச் சதுரமாக வெட்டி எடுத்து, அதன் நடுப்பகுதியைக் கோவிலாகச் செதுக்கி உள்ளனர். ஆனால் அந்தக் கோவிலின் பணி முழுமையாக நிறைவு பெறவில்லை. இதில், கரு அறையும், அர்த்த மண்டபமும் உள்ளன. கோவில் கோபுரத்தில், உமா மகேசுவரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா வடிவங்கள் காணப்படுகின்றன.

விமானத்தின் மேற்குத்திசையில் நரசிம்மரும், வடக்கில் பிரம்மனும் காட்சி தருகின்றனர். விமானத்தின் நான்கு மூலைகளில் நந்தி சிலைகளும், இவற்றுக்குக் கீழே யாளி வரிகளும், கபோதகமும் உள்ளன.

கல்வெட்டுக் குறிப்புகள்

கழுகுமலையின் மேலே ஏறுவதற்கு முன்பு ஓரிடத்தில், தமிழக அரசு அமைத்து உள்ள கல்வெட்டில், கீழ்காணும் தகவல்கள் இடம் பெற்று உள்ளன:

தமிழக அரசு கல்வெட்டு

பராந்தக நெடுஞ்சடையன் என்ற மன்னனின் காலத்தில், கழுகுமலையில் சிற்பங்களைச் செதுக்கி இருக்கிறார்கள்.

கழுகுமலையில், மூன்று நினைவுச் சின்னங்கள் உள்ளன. 1. சமணர் பள்ளி 2. வெட்டுவான் கோயில் 3. முருகன் கோவில்.

மலையின் பழம்பெயர் ‘அரைமலை’. இன்றைய பெயர் ‘கழுகுமலை’.

ஊரின் பழம்பெயர்: பெருநெச்சுறம் அல்லது திருநெச்சுறம்.

நாட்டுப் பிரிவு: இராஜராஜப்பாண்டி நாட்டு, முடிகொண்ட சோழவளநாட்டு, நெச்சுற நாட்டு நெச்சுறம்.

ஊரில் குறிக்கப்பட்டு உள்ள அரசர்கள்:

1. பாண்டியன் மாறஞ்சடையன் (பராந்தக நெடுஞ்சடையன்)

2. பாண்டியன் மாறஞ்சடையன் (பராந்தக வீரநாராயணன்).

வரலாற்றுச் செய்தி: இவ்வூரில், மங்கல ஏனாதி என்னும் தானைத்தலைவர் இருந்தார். அவருடைய சேவகர்கள், பாண்டியன் மாறஞ்சடையன், ஆய் மன்னன் கருநந்தன் மீது படை எடுத்தபோது, பாண்டியனுக்காகச் சென்று, அருவி ஊர் கோட்டையை அழித்து, போரில் மாண்டனர். அவர்களுக்காக நிலம் அளித்ததை, குசக்குடி கல்வெட்டு தெரிவிக்கிறது. அக்கல்வெட்டு, மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ளது.

மேலும், ‘திருமலை வீரர்’, ‘பராந்தக வீரர்’ எனும் பெயர் பெற்ற படைகள், பாண்டியன் பராந்தக வீரநாராயணன் காலத்தில் இவ்வூரில் இருந்தது பற்றிய குறிப்புகளும் உள்ளன.

வெட்டுவான் கோயிலும், சமணர் பள்ளியும், தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறையின் பாதுகாப்பில் உள்ளன’ என்ற குறிப்புகள் காணப்படுகின்றன.

இப்போதும், வட இந்தியாவில் இருந்து சமணர்கள், கழுகுமலைக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

கழுகுமலை-சிறு குறிப்புகள்:

கோவில்பட்டி-சங்கரன்கோவில் சாலையில் கழுகுமலை வழியாகப் பயணிக்கும்போது, ஒரு வேடிக்கையைக் காணலாம். முன்பெல்லாம் பேருந்துகளில் நடத்துநர், ஓட்டுநர் இருவருமே பயணச்சீட்டுக் குறிப்பை எழுதுவர். பின்னால் இருந்து நடத்துவர் சத்தம்போட்டு, வழியில் உள்ள ஊர்களுக்குக் கொடுத்த பயணச்சீட்டு எண்ணிக்கையைச் சொல்லுவார். நடத்துநர் அதைக் கேட்டு எழுதிக் கொள்வார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருந்து வந்த ஒருவர் இந்த வழியாகப் பேருந்தில் பயணித்து இருக்கின்றார். அந்தப் பேருந்தின் நடத்துநர், “நாலு குருவி, ஐந்து வானரம், பத்து கழுகு, ஐந்து நாலாடு” என்று சொல்லி இருக்கின்றார். சென்னைவாசிக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன ஏது? என்று பக்கத்தில் இருந்தவரை விசாரித்து இருக்கிறார். அவர் விளக்கம் அளித்தார்.

அதாவது, இந்தச் சாலையில் உள்ள சில ஊர்களின் பெயர்கள்: குருவிகுளம், வானரமுட்டி, கழுகுமலை, நாலாட்டின்புத்தூர் என்பனவாகும். தினந்தோறும் இதை முழுமையாகச் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது என்பதால், அந்தப் பெயர்களைத்தான் அப்படிச் சுருக்கிக் கூறி உள்ளார் நடத்துநர். இந்தச் செய்தியை, அந்தச் சென்னைவாசி, ஒரு வார இதழுக்கு எழுதி அனுப்பி, அதில் வெளியாகி இருந்தது.

சமணர் சிற்பங்கள்

கழுகுமலையின் அடிவாரத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோயில் உள்ளது. இதன் மூலவர் இருக்கின்ற இடமும் ஒரு குடைவரைதான். இந்தக் கோவிலின் தெப்பக் குளத்தில், பால் போன்ற நிறத்தில் நல்ல குடிநீர் கிடைக்கிறது. அதுதான், இந்த ஊர் மக்களின் குடிநீராக, அண்மைக்காலம் வரையிலும் பயன்பட்டு வந்தது. எனவே, அந்தக் குளத்தைத் தூய்மையாகப் பராமரித்து வருகிறார்கள். இப்போது, தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வருகிற திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

கழுகுமலை வெட்டுவான் கோவில் குறித்து ஆய்வு செய்து, ஏ.ஆர்.கணபதி அவர்கள் வெட்டுவான் கோவில் என்ற பெயரிலேயே ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டு இருக்கின்றார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் எனது அலுவலகத்துக்கு நேரில் வந்து, அதன் படி ஒன்றை எனக்குத் தந்தார்கள். திரு கணபதி அவர்கள், கழுகுமலையில் இருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கம் கல்லூரியின் நிறுவனர்-முதல்வர், நினைவில் வாழும் ஏ.ஆர்.பொன்னையா அவர்களுடைய உடன்பிறந்த தம்பி ஆவார். வெட்டுவான் கோவில் குறித்த செய்திகளை அறிய விழைவோர், அந்த நூலைப் படிக்கலாம்.

வெட்டுவான் கோவில் குறித்து, அந்தப் பகுதி மக்களிடையே பல கதைகள் உலா வருகின்றன. அவற்றையெல்லாம் தேடிச் சேகரித்து எழுதினால், மேலும் பல செய்திகள் பதிவு ஆகலாம்; இந்தப் பணியை, தமிழ் ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், கழுகுமலை இளைஞர்கள் செய்ய வேண்டும்!

(2010 ஆம் ஆண்டு வெளியான, அந்தமானில் அருணகிரி என்ற நூலில் இடம் பெற்று உள்ள கட்டுரை-திருத்தங்களுடன்)

- அருணகிரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It