இயற்கையின் படைப்புகளை விரும்பாதவர்கள் இவ்வுலகில் எங்கும் இல்லை. அத்தகைய இயற்கையின் படைப்புகளில் மலைகளும் மலைசார்ந்த இடங்களும் நம் மனதை கொள்ளை கொள்ளச் செய்பவைகள். மலைகள் சார்ந்த இடங்களில், மெல்ல தவழ்ந்து வந்து நம்மை தொட்டுவிட்டு செல்லும் 'சில்லென்ற' குளிர்ந்த காற்றும், அங்கு நிலவும் அமைதியையும் சொல்வதைவிட உணர்வதே சரியானதாகும். மலைப்பயணம் செய்தவர்களுக்கு தெரிந்திருக்கும் அந்த இனிமையும், குளுமையும். இன்றும் தங்களது இயந்திர வாழ்க்கையைவிட்டு மலைப்பகுதிகளுக்கு விடுமுறை நாட்களில் சென்று மனதையும் உடலையும் இலகுவாக்கி உற்சாகமடைபவர்கள் பலர். அங்கு அவர்கள் கண்ட ரம்மியமான காட்சிகள் என்றுமே மனதைவிட்டு நீங்காத காலச்சுவடுகளாக பதிவாகிவிடும்.

kazhugumalai_620

இன்றைய இயற்கையே இவ்வாறு இருக்கிறதென்றால், பலநூறு ஆண்டுகளுக்கு முந்தைய இயற்கை மிக பிரமிக்கதக்கதாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இன்றைய நாகரீக வாழ்ககை வேகத்தில் 'இயற்கை' என்பது திரைப்படத்தின் தலைப்பாகவே நமக்குத் தெரிகிறது. இயற்கையைப் பாதுகாப்பது என்பது எல்லாம் நம்மிடத்தில் வெறும் கருத்துகளாகவும், பாதுகாப்பு விளம்பரங்களாகவுமே நின்றுவிடுகிறது. ஏன் இந்த இயற்கை வளங்களை எல்லாம் பாதுகாக்க வேண்டும் என்ற கேள்வியோடு நாம் மேலும் தொடருவோம்.

பொதுவாக மனித வரலாற்று உண்மைகள் பல இயற்கையை சார்ந்தே வாழ்ந்திருக்கின்றன. கற்கால மனிதன் பேச்சு மொழியே இல்லாத காலத்தில், தான் வாழ்ந்த காலகட்ட சூழ்நிலைகளை எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்ள ஓவியங்கள், குறியீடுகள், சிற்பங்கள், கல்வெட்டுகள் போன்றவற்றை மலைகளில் செதுக்கிவைத்தான். பின் நாட்களில் அவர்களின் சந்ததியினர் அவற்றைக் கொண்டு தங்களது அடுத்தகட்ட தலைமுறையை சற்று மேம்படுத்திக்கொண்டனர். இந்த சமூக மாற்றங்களுக்கு மலைகள் ஒரு மிகப்பெரிய வரலாற்றுப் பெட்டகமாக தன்னை நம் அனைவருக்கும் தந்து இன்றும் கம்பீரமாக இருந்துகொண்டிருக்கின்றன.

kazhugumalai_621

அத்தகைய வரலாற்றுப் பெட்டகத்தை நாம் தெரிந்துகொள்வதும், அதனை பாதுகாப்பதும் நாம் நம் எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் ஒரு கடமையாகும். தமிழக அரசின் தொல்லியியல் துறை இத்தகைய வரலாற்று சின்னங்களை கண்டுபிடித்து அவற்றை பாதுகாத்துவருகிறது. மேலும் மலைகளில் மக்கள் சென்று அவற்றை பார்வையிட தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து வருகின்றது. பழைய வரலாற்றை நாம் தெரிந்து கொள்ளாவிட்டால் இன்றைய வாழ்க்கையின் உயர்ந்த மதிப்புகளை நாம் உணர்ந்துகொள்வது சற்று கடினமே.

மொழி, பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த வரலாற்று சின்னங்கள், கல்வெட்டுகள் தமிழகம் முழுவதும் உள்ள மலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி போன்ற இடங்களில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பழமையான சமணர்கால குகைகள், குகை கோயில்கள், சிற்பங்கள் வரலாற்றை கூறும்வண்ணத்தில் அமைந்துள்ளன. மேலும் பிராமி மற்றும் வட்டெழுத்துகள் போன்ற ஆரம்பகால தமிழ் எழுத்துகளும் இங்குள்ள மலைகளில் காணப்படுகின்றன. இவற்றை எல்லாம் நாம் நேரில் சென்று பார்க்கும் பொழுது வியப்பூட்டக்கூடிய கலைப் படைப்புகளையும், சிற்பங்களையும் அவற்றுள் பொதிந்துள்ள வரலாற்றுக் கருத்துகளையும், உண்மைகளையும் நாம் அறியமுடிகிறது.

மதுரையிலிருந்து சுமார் 150 கி.மீ தோலைவில் அமைந்துள்ளது கழுகுமலை. கழுகுமலை கோவில்பட்டிக்கு அருகாமையிலுள்ள ஒரு சிறிய ஊராகும். பேருந்து மார்க்கமாக செல்வதற்கு வசதியாக, மதுரையிலிருந்து கோவில்பட்டிக்கு தோடர்ச்சியாக பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. இதற்கு இரண்டு மணிநேர பயணம் ஆகும். பின்னர் கோவில்பட்டியிலிருந்து அரைமணி நேர பேருந்து பயணத்தில் கழுகுமலையை அடைந்துவிடலாம். இரயில் மார்க்கமாக செல்ல மதுரையிலிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் விரைவு வண்டிகள் மூலம் இரண்டு மணி நேரத்தில் கோவில்பட்டியும், பின்னர் பேருந்து மூலம் கோவில்பட்டியிலிருந்து கழுகுமலை சென்றடையலாம்.

kazhugumalai_622

'சமய இறையாண்மைமிக்க இடமாகவும், கலைக் கருவூலமாகவும் திகழும் கோவில்பட்டி கழுகுமலை, உலக மரபுச் சின்னங்களின் பட்டியலில் இடம் பெறக்கூடிய வகையில் சிற்ப்பக்கலையை தன்னகத்தே கொண்டுள்ளது. தென் தமிழகத்தின் எல்லோரா என்றழைக்கப்படும் கழுகுமலையில், பல நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு மேம்பாட்டுப்பணிகளை நடுவண், மாநில அரசுகள் எடுக்கும்பட்சத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. உலகம் முழுவதும் ஏறக்குறைய 911 இடங்களை பண்பாடு மற்றும் இயற்கை மரபுச் சின்னங்களாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. அதே போன்று கழுகுமலையையும் அது போன்ற பண்பாட்டு மரபுச் சின்னமாக அறிவித்தால் தமிழகத்தின் வரலாற்றுக்கு மகுடம் சூட்டக்கூடிய வாய்ப்புள்ளது.

kazhugumalai_623

'எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில் மற்றும் மாமல்லபுரம் சிற்பக் கோவில் ஆகியனவற்றைக் காட்டிலும் கழுகுமலை வெட்டுவான் கோயில் தனிச்சிறப்பு மிக்கது. காரணம் கழுகுமலை கடினமான பாறை அடுக்குகளால் ஆனது. இவ்விடத்தில் சிற்பங்களைச் செதுக்கியிருக்கிறார்கள் என்றால் நம் முன்னோர்களின் உழைப்பும், தொழில்நுட்பமும் வியப்பிற்குரியதாகும்'. 'பாறைகளில் எண்ணற்ற புடைப்புச் சிற்பங்களைக் கொண்டுள்ளதுடன், சமண சமயத்தின் பழம் பெரும் பல்கலைக்கழகமாகவும் கழுகுமலை திகழ்கிறது. முக்குடையின் கீழ் அமர்ந்துள்ள சமண சமயத்தைத் தழுவி வாழ்ந்த சமணர்களின் சமணதீர்தங்கரர் 'மகாவீரரின்' சிற்பங்கள் 2000 ஆண்டுகளுக்குப் பின்பும் பார்ப்பவர்களை வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றன.


kazhugumalai_624


மலையின் உச்சியில் உள்ள வெட்டுவான் கோவிலானது கோட்டைச்சுவர்களால் சூழப்பட்டது போன்று முற்றிலும் மலையையே வெட்டி உருவாக்கியுள்ளனர். இதனை உருவாக்க அவர்கள் எடுத்துக்கொண்ட காலம் பற்றி தெரியவில்லை, ஆனால் இதனை இன்று உருவாக்குவதென்றால் பல வருடங்கள் ஆகும் என்பது உண்மை. சிற்பக்கலையின் சிகரம் என்று வர்ணிக்கூடிய வகையில் இக்கோவிலை உருவாக்கியுள்ளனர்.

kazhugumalai_625

மனிதர்களுக்கு வரலாற்றை அறிந்துகொள்ளவும், அதனை பாதுக்காக்கவும் விருப்பம் இல்லாத காரணத்தினால், நாம் இழந்த வரலாற்று சின்னங்கள் பல. இன்று நாம் காண்பதெல்லாம் அவற்றின் எச்சங்களே ஆகும். இப்போது இருக்கும் அந்த எஞ்சிய எச்சங்களையாவது நாம் கண்டுகொண்டு அதனை பாதுகாத்து எதிர்கால தலைமுறைக்கு தமிழக வரலாற்றினை கொண்டுசெல்வோம்.

- மே.இளஞ்செழியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It