இலங்கை - போரை நிறுத்தினால் தான் கடன் தொகையை வழங்க முடியும் என்று உலக வங்கி கூறிவிட்டது. உலக வங்கி தராவிட்டால் என்ன; இதோ நான் தருகிறேன் என்று, இந்தியா ரூ.5800 கோடி கடன் வழங்க முன் வந்துள்ளது. இந்த நிதி - மேலும் - தமிழர்களை கொன்று குவிப்பதற்கே - இலங்கை அரசுக்கு பயன்படப் போகிறது. இலங்கைக்கு வழங்கி வரும் இராணுவ உதவியையோ, நிதி உதவியையோ, நிறுத்துவதாக இதுவரை இந்தியா வாய் திறக்கவே இல்லை. மாறாக, இந்தியாவின் உதவியுடன் தான், சிங்களம், இன அழிப்பையே நடத்திக் கொண்டிருக்கிறது. இந்திய - இலங்கை இராணுவ உயர் மட்டத்தில் இதற்கான திட்டமிடல்கள் நடப்பதாக விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் ஒரு பேட்டியிலேயே வெளிப்படையாகக் கூறிவிட்டார்.
இந்த நிலையில் - தமிழ்நாட்டில், காங்கிரசின் துரோகம் தமிழர்களிடையே அம்பலமாகிவிட்டதால் - தி.மு.க., செய்வதறியாது திகைத்துப்போய் முன்னுக்குப் பின் முரண்பட்ட கருத்துகளை கூறி வருகிறது. போர் நிறுத்தம் செய்ய இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். பிறகு அவரே குரலை மாற்றி, மற்றொரு நாட்டின் இறையாண்மையில், எப்படி தலையிட முடியும் என்று சமாதானம் கூறினார். இப்பொழுது இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியுள்ள இந்தியாவின் கோரிக்கையை ஏற்காவிட்டால், இலங்கையுடனான தூதரக உறவை துண்டித்துவிடுமாறு பிரதமர் - சோனியா - பிரணாப்புக்கு தந்தி அனுப்பியுள்ளாராம்.
உண்மையில் ‘போர் நிறுத்தம்’ செய்யுமாறு - இந்தியா, இலங்கையை வற்புறுத்தியதா? கொல்கத்தாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அளித்த பேட்டியில், “Colombo should extend the pause” என்று தான் கூறியுள்ளார். இதனுடைய உண்மையான அர்த்தம் போர் நிறுத்தம் (Ceasefire) அல்ல. அடுத்த கட்ட தாக்குதலைத் தொடருவதற்கு சிறிது ‘கால இடைவெளி’ தரப்பட வேண்டும் என்பதுதான். ஆனால், தமிழக முதல்வரோ ஏதோ ‘போர் நிறுத்தத்தையே’ பிரணாப் வலியுறுத்துவதாக பாசாங்கு காட்டுகிறார். அது மட்டுமல்ல - ‘இந்தியா எந்த சமரச முயற்சியிலும் ஈடுபடாது’ என்றும் பிரணாப் கூறி விட்டார். (Mr. Mukherjee ruled out any mediation by India - The Hindu, Apr.18, 2009)
இதன் உண்மையான பொருள் - இந்தியா சண்டைக்குத்தான் பின்புலமாக இருக்குமே தவிர, சமரசத்துக்குஅல்ல என்பதுதான். இந்த உண்மைகளையெல்லாம் மறைத்துவிட்டு, தமிழக வாக்காளர்களை ஏமாற்றிவிடலாம் என்று தி.மு.க. கருதினால் அவர்கள் ஏமாற்றத்தைத்தான் சந்திப்பார்கள்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
கலைஞர் - பிரணாப் நடத்தும் நாடகம்
- விவரங்கள்
- பெரியார் முழக்கம் செய்தியாளர்
- பிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2009