1987 ஆம் ஆண்டு ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி இப்போது காங்கிரசோடு சேர்ந்து நியாயப்படுத்த முன் வந்திருக்கிறார். கலைஞர் கருணாநிதிக்கு சோனியா எழுதிய கடிதத்தில் இந்த ஒப்பந்தம் பற்றி குறிப்பிட்டுள்ளதை கலைஞர் கருணாநிதி எடுத்துக்காட்டி, இந்த ஒப்பந்தத்தையும், மருத்துவர் ராமதாசு கபட நாடகம் என்கிறாரா என்று ‘முரசொலி’யில் (13.4.2009) கேள்வி எழுப்பியுள்ளார். மக்களின் நினைவு மறதிதான் - இவர்களின் அரசியல் மூலதனமாகிவிட்டது.
இந்த ஒப்பந்தம் பற்றி 27.11.1987 அன்று கலைஞர் கருணாநிதி தலைமையில், சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகக் குழு கூடி ஒப்பந்தத்தில் ஒவ்வொரு பிரிவையும் அலசி ஆராய்ந்து, நீண்ட தீர்மானத்தையே நிறைவேற்றியிருப்பதை தி.மு.க. தலைவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். “ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தினால் நடைமுறையில் ஈழத் தமிழ் மக்கள் பெரிதும் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பதை தி.மு.கழகத்தின் தலைமை நிர்வாகக் குழு ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டக் கடமைப்பட்டுள்ளது” என்ற பீடிகையுடன் அந்தத் தீர்மானம் தொடங்குகிறது. இந்த ஒப்பந்தத்தால் தமிழர்களுக்கு எந்த உரிமையும் கிடைக்கப் போவதில்லை என்பதை விரிவாக ஆராய்கிறது அத் தீர்மானம். ஒப்பந்தத்துக்கு எதிரான இலங்கை அரசின் செயல்பாடுகளையும் தீர்மானம் பட்டியலிட்டுள்ளது. இவ்வளவையும் குறிப்பிட்டு, இறுதிப் பகுதியில் தி.மு.க.வின் தீர்மானம் இவ்வாறு கூறுகிறது:
“இத்தனையும் இந்திய அரசுக்கு தெரிந்தும்கூட தெரியாததுபோல் நடிப்பதும், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் காரியமாக ஈழத் தமிழர்களையும் அவர்களின் உரிமைகளுக்கும் நல்வாழ்வுக்கும் பாடுபடும் விடுதலைப்புலிகளை வேரோடு அழிக்க முனைவதும் எந்த வகையில் நியாயம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சிங்களப் படையினரின் பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்தும், தமிழினப் படுகொலையிலிருந்தும் அப்பாவித் தமிழ் மக்களைப் பாதுகாக்கவே ஈழப் போராளிகள் ஆயுதமேந்தினார்கள். அவர்கள் மேற்கொண்டது தற்காப்பு நடவடிக்கைகளே. சிங்களப் படைகளிடமிருந்து ஈழத் தமிழ் மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்திய அரசு ஏற்றுக் கொள்வதாக கூறி, ஈழப் போராளிகள் தங்களிடமுள்ள ஆயுதங்களை ஒப்படைக்கும்படி இந்திய அரசு நெருக்கடி கொடுக்கவே, இந்திய அரசின் வாக்குறுதியை நம்பியும், இந்தியப் படைகளுடன் ஒரு மோதல் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் ஈழப் போராளிகள் தங்களிடமிருந்து ஆயுதங்களில் பெரும் பகுதியை ஒப்படைத்தார்கள். ஆனால், திருகோணமலை போன்ற இடங்களில் இலங்கை ஊர்க்காவல் படையினரும், ஆயுதம் தாங்கிய சிங்கள மக்களும் தமிழ் மக்களைத் தாக்கினார்கள். சிங்கள அரசின் பயங்கரவாதத்தினால் தங்கள் சொந்த வீடுகளை விட்டு, கிராமங்களை விட்டு வெளியேறிய தமிழர்கள், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையொட்டி மீண்டும் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பி, வீடுகளுக்குப் போக முயன்றபோது ஆயுதம் தாங்கிய சிங்கள மக்களும், சிங்கள ஊர்க் காவல் படையினரும் மீண்டும் மீண்டும் தாக்கினார்கள். அவர்களைத் தங்கள் சொந்த வீடுகளுக்குப் போக விடாமல் தடுத்தார்கள். இதுபற்றி ஈழத் தமிழர்கள் இந்திய அதிகாரிகளிடம் முறையிட்டார்கள். ஆனால் எந்த உதவியும் கிடைக்கவில்லை. இதனால் நிர்கதிக்கு ஆளான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உதவிகளை நாடினார்கள்.
இந்தச் சூழ்நிலையில்தான் விடுதலைப் புலிகள் திரும்பவும் ஆயுதம் ஏந்தி தமிழ் மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இது தவிர்க்க முடியாத தற்காப்பு நடவடிக்கை என்பதை எவரும் புரிந்து கொள்ளலாம். இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவோ, சிங்களக் குண்டர்களை அடக்குவதற்குப் பதில் தமிழ்ப் போராளிகளிடமிருந்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்யும்படி இந்தியப் படைகளை ஏவிவிட்டார். சிங்களக் காடையர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறிக்க முற்படாத இந்திய அமைதிப்படையினர், ஈழப் போராளிகளிடமிருந்து மட்டும் ஆயுதங்களைப் பறிக்க முற்பட்டதானாலேயே இந்தியப் படைகளுக்கும் ஈழப் போராளிகளுக்கும் மோதல் ஏற்பட்டது. எனவே, போராளிகள் வலுவில் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்று சொல்வது உண்மைக்கு மாறுபட்டதாகும். மேலும், ஒப்பந்தத்தின்படி ஈழப் போராளிகளின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்யும் உரிமையோ, கடமையோ இந்தியப் படைகளுக்கு இல்லை. உலகின் பல்வேறு நாடுகளில் அமைதிப் படைகள் பணியாற்றியிருக்கின்றன. ஐ.நா. சபையின் சார்பில் சென்ற பல்வேறு அமைதிப் படைகளில் இந்தியப் படையினரும் சென்றிருக்கின்றனர். அவைகள் மோதுகின்ற இரு தரப்பினருக்கிடையே அமைதியை நிலைநாட்டப் பாடுபட்டிருக்கின்றன.
ஆனால், இரு தரப்பினருக்கும் மத்தியில் நடுநிலை யோடு நடந்து கொண்டு அமைதியைப் பராமரிப் பதில் மாத்திரமே அவர்கள் கவனம் செலுத்தியிருக்கிறார்களே தவிர ஒரு தரப்பாரிடமிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்து மறுதரப்பாரிடம் ஒப்படைக்கும் செயலில் ஈடுபடவில்லை. இந்தச் சர்வதேச நியதியை இந்திய அமைதிப் படையினர் ஈழத்திலும் கடைப்பிடித்திருந்தால், தற்போது நடந்து கொண்டிருக்கும் தேவையற்ற மோதலும், அதன் காரணமாகத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அளப்பரிய இழப்புக்களும் தொல்லைகளும் இந்திய ராணுவத்தினர் பலரின் உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டிருக்கும். நாற்பது ஆண்டுகாலமாக ஈழத்தில் தமிழர்கள் அனுபவித்து வரம் இன்னல்களைத் துடைக்கவும், அவர்களுக்கு அமைதியான வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கவும், “அமைதி ஒப்பந்தம்” நடைமுறைப்படுத்தப்படுவதற்கு உதவுவதற்காகவுமே இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவதாகத் தெரிவித்த ராஜீவ் காந்தியின் அரசு ஒப்பந்தத்திற்கு மாறாகவும் அதை மீறுகிற வகையிலும் நடந்து கொண்ட சிங்கள இனவெறி அரசைத் தட்டிக் கேட்பதற்கு பதில் அந்த அரசுடன் சேர்ந்து கொண்டு ஜெயவர்த்தனாவின் கட்டளைகளையேற்று இந்திய ராணுவத்தைக் கொண்டே ஈழத் தமிழ் இனத்தை அறவே அழித்திடும் இந்தக் கொடுமையைத் தமிழ் இன உணர்வு படைத்தோர் மட்டுமல்ல; மனிதாபிமானமுடைய எவருமே ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த நிலையிலும்கூட, “48 மணி நேர போர் நிறுத்தம்” என அறிவித்துவிட்டு, அறிவித்த போதே விடுதலைப் புலிகள் மீது அவதூறுச் செய்திகளை இந்திய பாராளுமன்றத்திலேயே மத்திய அமைச்சர்கள் கூறியதோடு, தொடர்ந்து வானொலி, தொலைக்காட்சி வாயிலாகவும் அதே பொய்ப் பிரச்சாரத்தைச் செய்து கொண்டு, விடுதலைப்புலி இயக்கத்தினர் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தும், பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஆயுதங்களை ஒப்படைக்க தயாராக இருந்தும் அவர்கள் எடுத்துரைத்த கருத்துக்களை காதிலே போட்டுக் கொள்ளாமல் மீண்டும் விடுதலைப் புலிகளை வேட்டையாடுவது என்ற பெயரால் ஈழத் தமிழ் மக்களை அழிக்கவும் தமிழச்சிகளின் கற்பை சூறையாடவும், நகரங்கள், கிராமங்களை அடியோடு நாசம் செய்யவும் இந்திய ராணுவம் டாங்கிகள் மூலமும், ஹெலிகாப்டர்கள் மூலமும், விமானங்கள் மூலமும் தனது தாக்குதலை தொடங்கியிருப்பதை திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.” - என்று தி.மு.க.வின் தீர்மானம் கூறுகிறது. இப்போது - தி.மு.க. சார்பில் முன் வைக்கப்படும் ‘அதிகாரப் பகிர்வு’ “புலிகளும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்”, “புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும்”; “மத்திய அரசு 30 ஆண்டுகளாக ஈழப் பிரச்சினையில் அக்கறை செலுத்தி வருகிறது”; “புலிகள்தான் இந்த நிலைக்கு காரணம்” என்று முன் வைக்கும் அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் தி.மு.க.வின் தீர்மானத்திலே தெளிவான விளக்கம் அடங்கியுள்ளது.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை அன்று கடுமையாக எதிர்த்த கலைஞர் - இன்று ஆதரிக்கிறார்
- விவரங்கள்
- பெரியார் முழக்கம் செய்தியாளர்
- பிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2009