மலிவு விலைத் தெருவான தி.நகர் ரங்கநாதன் தெருவில் வானுயர்ந்து, பட்டொளி வீசி, பளபளக்கும் வணிக நிறுவனங்களில், வந்து நிற்கும் வாடிக்கையாளர்களிடம், “என்ன வேணும் சார்” என வாய் நிறையப் புன்னகையோடு கேட்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையின் பின்புலத்தையும், அவர்கள் andadi_street_008கொடுக்கும் சொற்பச் சம்பளத்தைப் பெறுவதற்குள் அவர்கள் படும் பாட்டையும், கொக்கரிக்கும் வறுமையையும், அவர்களினூடாக இழையோடும் காதலையும், அண்ணாச்சிகளின் அகோரப் பற்களையும் துளியும் மறைக்காமல் துணிச்சலோடு படம் பிடித்து காட்டிய ஜி.வசந்தபாலனுக்கு நன்றியும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்ளலாம்.

விரிசல் விழுந்த பூமிக்குச் சொந்தமான தென்மாவட்டங்களிலிருந்து இளைஞர்களையும் பெண்களையும் கொத்துக் கொத்தாய் கொண்டுவந்து அடைத்து வைத்துச் சித்திரவதைப்படுத்தும் தெரு தான் ரங்கநாதன்தெரு என்பதை அப்பட்டமாய்ச் சித்தரித்திருக்கிறது இப்படம். வேலைக்கு ஆளெடுக்கும் போதே அப்பன் இல்லாதவனாய், அக்கா தங்கை உள்ளவனா பார்த்து வேலைக்கு எடு, அப்பதான் பொத்திக்கிட்டு வேலை செய்வான் என வணிக நிறுவனங்கள் தொழிலாளர்களின் வறுமையில் முதலீடு செய்வதை அருமையாய் இப்படம் விளக்குகிறது.

அவர்கள் உறங்குமிடத்தின் அவலத்தையும், வருமானம் வரும் கட்டடத்தை பளபளப்பாக வைத்திருக்கும் அண்ணாச்சிகள், உணவிற்காக வைத்துள்ள இடத்தைப் பார்க்கும்போது சித்திரவதைச் சிறைச்சாலைகளை நினைவூட்டுகிறது. உணவிற்காக மூன்றாவது தெரு சென்றுத் திரும்பி வருவதற்காக அவர்கள் கொடுக்கப்படும் அரைமணி நேரமும், ஒருநிமிடம் தாமதமாக வந்தால் சம்பளத்தில் ஒரு ரூபாய் பிடிக்கப்படுவதும், சக தொழிலாளியின் சாவிற்கு சென்றதற்குக் கூட சம்பளம் பிடிக்கப்படும் நிகழ்வுகளும் முதலாளித்துவத்தின் முகமூடியை இப்படம் கிழிக்கிறது.

தென்மாவட்டத்தில் லெவல் கிராசிங் கேட்டில் ரெயில்மோதி தந்தையை இழந்த, பன்னிரெண்டாம் வகுப்பில் பள்ளிக்கூடத்தில் முதல் மாணவனாக தேர்ச்சிபெற்ற மாணவன் படத்தின் கதாநாயகன் லிங்கு. தந்தையை இழந்த பின்பு குடும்பத்தைக் காப்பாற்ற ரங்கநாதன் செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் கடையில் வேலைக்குச் சேருகிறான். கதாநாயாகி கனியும் குடும்ப வறுமைக் காரணமாக இங்கு வந்து சேருகிறாள். கனியின் பதிமூன்று வயது தங்கை ஒரு மாமியின் வீட்டில் வீட்டு வேலைக்காக அமர்த்தப்படுவது, குழந்தைத் தொழிலாளர் வீட்டு வேலையில் ஈடுபடுத்தப்படுவதற்கான ஆழமான பதிவு.

அந்தக் கடையில் எதற்கும் உரிமையில்லாதவர்களாக கருங்காலி என்று தொழிலாளிகள் அழைக்கும் சூப்பர்வைசரால் அடித்தும் உதைத்தும் மனிதாபிமானமற்ற முறையில் தொழிலாளர்கள் வேலை வாங்கப்படுகின்றனர். செய்யும் சிறு தவறுகளுக்கு ஆண்கள் அடி உதையோடும் பெண்களென்றால் அடி உதையோடு பாலியல் தொந்தரவுகளுடனும் வேலையை தக்க வைத்துக்கொள்ள நேர்வதை வெளிக்கொணர்ந்திருக்கிறது. செய்த சிறு தவறுக்காக என்ன சொல்லி தப்பிச்ச என்று லிங்கு கேட்கும்போது, கனி கூறும் பதில் மனதில் நெருப்பையும் கண்ணில் கண்ணீரையும் வரவழைக்கிறது.

ஆயிரம் பேர் வந்தாலும் எதிர்த்து நிற்கும் காதலும் வறுமை வந்தால் நொறுங்கித்தான் போய்விடுகிறது. லிங்குவின் நண்பன் சௌந்தரபாண்டியனின் காதல் சூப்பர்வைசருக்குத் தெரியவர குடும்ப வறுமைக் காரணமாக தன்னுயிர்க் காதலை இயலாமையாய் மறுத்து, மறைக்கிறான். இதன் விளைவாய் காதலி மாடியிலிருந்துக் குதித்து தற்கொலை செய்கிறாள். இதே ரங்கநாதன் தெருவில் சிலவருடங்களுக்கு முன் ஒரு தொழிலாளி மாடியிலிருந்து விழுந்து இறந்த உண்மைச் சம்பவம் நினைவிற்கு வருகிறது.

அதே ரங்கநாதன் தெருவில் வேலைத் தேடித்தேடி விரக்தியான இளைஞனை திருடனாக, கொலைகாரனாக, கொள்ளைக்கூட்டத் தலைவனாக மாற்றாமல் சிறுநீர்க் கழிக்குமிடத்தை சுத்தம் செய்து அதைக் கட்டண சிறுநீர்க் கழிப்பறையாக மாற்றி உழைப்புதான் உன்னதம் என்பதை இளைஞர்கள் மனதில் அற்புதமாக விதைக்கிறார். பாலியல் தொழிலுக்காட்பட்ட ஒரு பெண் குள்ளமான மனிதனை திருமணம் செய்து குள்ளமான குழந்தை பெற்றுக்கொண்டதற்கு மனதிருப்தியுடன் கூறும் காரணம், கற்பு என்ற பெயரில் சமூகம் பார்க்கும் பார்வையைச் சாடுகிறது. அத்தெருவில் இப்படி பலரின் வாழ்நிலையை நமக்கு எடுத்துக் காட்டியிருக்கிறது இப்படம்.

ஆண்களின் பழைய காதலை ஏற்றுக்கொள்ளும் ஆணாதிக்கச் சமூகம் பெண்களின் பழைய காதலை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், இப்படத்தில் பெண்களுக்கும் பழையக்காதல் இருப்பதில் தவறில்லை என்ற முற்போக்கு சிந்தனை ஊன்றப்பட்டிருக்கிறது. 9ம் வகுப்பு கடவுள் வாழ்த்தை காதல் கவிதையாக மாற்றி காதலிக்கு கொடுக்கும் பிளாக் பாண்டி, வறுமை வாட்டியெடுத்தாலும் இளமைக் குறும்புகள் என்றும் விடாது என்பதை படத்தில் கலகலப்பாக காட்டியபோதிலும் கதையின் நோக்கம் மனதில் நின்றுவிடுவதால் கனத்த இதயத்துடனே சிரிக்க வேண்டியிருக்கிறது.

இறுதியாக நாயகனும் நாயகியும் கடையை விட்டு வெளியேறுகிறார்கள். அவர்களிருவரும் தங்குவதற்கு இடமின்றி கே.கே.நகர் நடைமேடையில் கூலி வேலை செய்யும் தொழிலாளர்களோடு படுத்திருக்கும்போது ஏற்படும் விபத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதையின் இறுதிப்பகுதி.      இசையின் ஓசையில் பாடல்வரிகள் காணாமல் போகும் மற்ற பாடல்களுக்கு இடையில், அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..., உன்பேரைச் சொல்லும்போதே... ஆகிய, கதைக்காகவே தெரிவு செய்த பாடல்களும் இதமான இசைகளும் கேட்க இனிமையாய் இருக்கின்றன.

மொத்தத்தில், ரங்கநாதன் தெருவுக்குச் சென்று இயந்திரத்தனமாய் பொருட்கள் வாங்குவதும் திரும்புவதுமாய் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அத்தொழிலாளர்களின் வாழ்க்கையின் மறுபுறத்தைக் காட்டி அவர்களின் வாழ்நிலையைப் பற்றி சிந்திக்க வைத்தப் படமாக விளங்குகிறது அங்காடித் தெரு. அங்காடித்தெரு திரைப்படம் வெளியான பிறகு அரசு அதிகாரிகள் தி.நகர் ரங்கநாதன் தெருவில் தொழிலாளர்கள் நிலையை அறிந்துகொள்ள விசாரணை நடத்தியிருக்கின்றனர் என்ற செய்தி இப்படத்தின் இயக்குநர் வசந்தபாலனின் முயற்சிக்கு மாபெரும் வெற்றியாகக் கருதலாம்.

-இரா.சரவணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It