ஓ மெக ஷீயா! ஓ மெக ஷீயா!

நாக்க முக்க நாக்க ஓ ஷகலக்க

ஓ ரண்டக்கா!

- இப்படியான ஆழ்ந்த பொருள் பொதிந்த, வைர வரிகளைப் பல்லவியாகக் கொண்ட ஒரு சினிமாப் பாடலை நீங்கள் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா?

என்ன, வைர வரிகளா? உமக்கென்ன மூளை முழுசா ஊத்திக்கிச்சா?” - என்று நீங்கள் கேட்பது புரியாமல் இல்லை. நமது தமிழ் சினிமாக்களின் பாடல்களில் மட்டுமா... கதை, காட்சிகள் என்று எதில்தான் லாஜிக்சமாச்சாரங்கள் சரியாக இருந்திருக்கின்றன? ‘லாஜிக்இடிக்கிறதே என்று படம் பார்ப்பவரின் அறிவு சொல்லி விடக்கூடாதே என்றுதானே தியேட்டருக்குப் போகும்போதே மூளையை மறக்காமல் வீட்டிலேயே கழட்டி வைத்துவிட்டுக் கிளம்புவது நமது பரம்பரைப் பழக்கமாக இருக்கிறது!! அன்று தொடங்கி, இன்றுவரையில் தமிழ்ப்படம் என்றாலே லாஜிக்பற்றியெல்லாம் பெரிதாக நாம் அலட்டிக்கொள்ளாமல் இருக்கப் பழகியிருக்கிறோம் என்றால் நம் சினிமா ரசனை வளர்ந்துவந்திருக்கிற வரலாறு என்ன அத்தனை லேசுப்பட்டதா?

ஒற்றை ஆளாகத் தன்னந்தனியாக இருந்துகொண்டு பத்துப் பதினைந்து பேரை அடித்து வீழ்த்துபவன்தானே நமது கதாநாயகன்? அழகாகவும் கவர்ச்சியாகவும் வந்து, அவனைக் காதலிப்பது ஒன்றையே கடமையாகக் கொண்டவள்தானே நமது கதாநாயகி? கடமையோ கடமை என சதா அவன் அலைந்துகொண்டிருக்க, காதலோ காதல் என சதா இவள் அலைந்துகொண்டிருக்க அன்றைய கருப்பு-வெள்ளை எம்ஜிஆர் படங்கள் தொடங்கி இன்றைய விதவிதமான கலர்க் கதாநாயகர்கள் வரையில் நமது தமிழ்ப் படங்களில் என்ன பெரிய மாற்றம் வந்துவிட்டது? இந்தக் கேள்வி யாருக்கு வேண்டுமானாலும் தோன்றலாம்.

ஆனால், குறுகுறுப்பும் துடிப்பு மிக்க இன்றைய தலைமுறை இளம் சினிமாக்காரர்களுக்கே இப்படித் தோன்றினால் என்னவாகும்? இப்படியொரு கலக்கல் காமெடிப்படம் ஒன்று உருவாகும். ஆமாம், நமது தமிழ் சினிமாவைக் கிண்டலடித்து இப்படியும் ஒரு படம் எடுக்கமுடியுமா என்று பெரிய பெரிய சினிமா பிஸ்தாக்கள்கூட மூக்கின்மேல் விரலைவைத்துப் புருவம் உயர்த்தும் அளவுக்கு ஒரு படம் வந்திருக்கிறது, தமிழ்ப்படம்என்றே அதற்குப் பெயரும் சூட்டப்பட்டு. துணிவான முயற்சிதான். கன கச்சிதமாக, எல்லோரும் சிரித்து ரசிக்கும் தரத்தில் ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு சினிமா. முதலில் இந்தத் தமிழ்ப்படம்குழுவினரை மனதாரப் பாராட்டிவிட்டு அதுபற்றிப் பேசுவோம்.

நீண்ட காலமாக தமிழ் சினிமா கொடுத்து வந்த மசாலா பில்டப்களை படீர் படீரென்று போட்டு உடைக்கிற கதையமைப்பு. ரொம்ப ரொம்பப் புதுவிதமான கதை சொல்லும் முறை. அதே நேரம் நாம் பார்த்துப் பார்த்துப் புளித்துப் போன சமாச்சாரங்களையெல்லாம் தயவு தாட்சண்யம் இல்லாமல் சந்தி சிரிக்க வைக்கிற லாவகம். அப்பப்பா, அருமை.

கருத்தம்மாவிலிருந்து தளபதி, சின்னத்தம்பி, அபூர்வ சகோதரர்கள், என் ராசாவின் மனசிலே, மொழி என்று எந்தப் படத்தையும் வம்புக்கிழுக்கத் தயங்கவே இல்லை. ஆனால் வழக்கம் போல இல்லாமல் உல்டாவாக. கிராமத்தில் ஆண் குழந்தை யார் வீட்டில் பிறந்தாலும் அதைக் கள்ளிப்பால் தந்து கொன்று விடவேண்டும் என்பது பஞ்சாயத்துத் தீர்ப்பு. அதை மீறுபவர்கள் ஊரை விட்டுத் தள்ளி வைக்கப்படுவார்கள். அவர்களோடு தொடர்பு வைத்தால் ஒரு குறிப்பிட்ட மேனரிசத்தைக் காட்டி, அந்த நடிகரின் படத்தை நூறு முறை பார்ப்பது தான் தண்டனையாம். இப்படித் துவங்குகிறது படம். அதே கருத்தம்மாபெரியார்தாசன் (இதில் அவர் பெயர் மொக்கை) தனக்குப் பிறக்கும் ஆண் குழந்தையைக் கொன்றுவிட பரவை முனியம்மாவுக்குக் கட்டளையிட, பிறந்த குழந்தையின் வேண்டுகோள்(?)படி குழந்தையைத் தூக்கிக்கொண்டு சென்னைக்கு ஓடிவிடுகிறார். குழந்தை சிறுவனாக இருக்கும்போது மார்க்கட்டில் நடக்கும் அநியாயத்தைத் தட்டிக் கோட்க விரும்புகிறான். பாட்டி முனியாம்மாவோ அவனுக்கு பத்து வயதுதான் ஆகிறது என்று சொல்ல, சிறுவன் நான் எப்படிப் பெரியவனா ஆகிறது? என்று கேட்கிறான். பாட்டி சொல்கிறாள், “நீ போய் அந்த சைக்கிள் பெடலைச் சுற்று!

சிறுவன் சைக்கிள் பெடலைச் சுற்றச்சுற்ற அப்படியே பெரிய ஆளாகிவிடுகிறான். நாம் எப்போதும் பார்க்கிற சினிமாக்களில் இப்படித்தானே காட்டியிருக்கிறார்கள்!! அதையே இந்தப்படத்தில் பார்க்கிறபோது சிரிப்பும் வியப்பும் நம்மையும் மீறி நம்மிடமிருந்து பீறிட்டுக்கொண்டு வருகிறது. அவன் பெரிய ஆளாகிற வரையில் அங்கே அந்த அராஜகம் நடந்து கொண்டிருக்கிறது. நமது நாயகன் சைக்கிளிலிருந்து இறங்கி நியாயத்திற்காக தனியாளாகச் சண்டையிடுகிறான். அப்புறம் அவன்தானே ஜெயிக்கணும்? அவனே ஜெயிக்கிறான். தங்களை ரட்சித்துக் காக்க வந்த நாயகன் இவன்தான் என்று வழக்கம்போல ஏழை மக்கள் அவனைத் தோள்களில் தூக்கிக் கொண்டு குதிக்கிறார்கள். அவன் கட் அவுட்டுக்குப் பாலபிஷேகம் நடக்கிறது. கொள்கைப் பாடல் பாடுகிறான். 2011 ல் சட்டசபையில் வந்து சந்திக்குமாறு தனது எதிரிகளைச் சவால் விட்டு அழைக்கிறான் அந்தப் பாடலில்.

தொடர்ந்து பணக்காரக் காதலியைப் பெண் கேட்டுச் செல்கிறபோது அவளது அப்பா அவனை ஏழை என்று ஏளனம் செய்வது பொறுக்காமல் ஒரு கோடீஸ்வரனாக ஆகிக்காட்டுகிறேன் என்று சபதம் போடுகிறான். ஒரே பாடலில் பேப்பர் போட்டு, பழைய தகரம் வாங்கி-விற்று, இஸ்திரிக்கடை வைத்து, பழங்கள் விற்று, தெருவில் திருஷ்டிக்கு உடைக்கப்படும் பூசணிக்காயினுள்ளேயிருந்து ஒரு ஒற்றை ரூபாய் நாணயத்தைக்கூட விடாமல் சேகரித்து, அந்தப் பாடல் முடியுமுன்னரே நகரில் ஐ.டி.பார்க், மின்சார வாரியம், விமான நிலையம், ரயில்வே நிலையம், பிணக் காப்பகம் எல்லாம் தொடங்குகிற அளவுக்கு உயர்ந்து, அந்தப் பாடலின் கடைசி பிஜிஎம்மில் வந்து தனது காதலியின் பணக்கார அப்பாவிடம் மீண்டும் பெண் கேட்கிறான்.

பிறகு நிச்சயதார்த்தத்தில் அப்பா பேர் தெரியாதவன் என்ற பழிக்கு ஆளாகி, மீண்டும் சபதம் போட்டு, கிராமத்திற்குப் போய், குடும்பப் பாடலான ஆங்கில பாப் பாடலைப் பாடி, அப்பா, அம்மா, தங்கையைக் கண்டுபிடிக்கிறான். இடையிடையே அவன் கதாநாயகன் என்பதை நிரூபிப்பதற்காக சமூக விரோதிகளை பல ஸ்டைல்களில் கொலை செய்கிறான். இத்தனைக்கும் அவன் ஒரு கல்லூரி மாணவன்தனாம். கூடவே அவனது இளம் தோழர்களாக வெண்ணிற ஆடை மூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா.

நாயகன் சிவாவாக மிர்சி ஷிவா இதுவரையில் தோன்றியிருக்கிற அத்தனை தமிழ் ஹீரோக்களையும் தூக்கி அப்படியே சாப்பிட்டுவிட்டார். அவருக்கு நல்ல பொருத்தமாக நாயகி திஷா பாண்டே. பாட்டியாக பரவை முனியம்மா. இந்தக் கூட்டணியை வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவை உண்டு இல்லை என்று செய்துவிட்ட பாராட்டுக்குரிய இயக்குநர் சி.எஸ்.அமுதன் உண்மையிலேயே ஒரு புதுமையைத்தான் செய்திருக்கிறார். நகைச்சுவைப் படம் என்றால் அதற்காகக் கோமாளிக் கூத்தடிப்பு இல்லை. சீரியசான கதாப்பாத்திரங்கள். சீரியசான கதையமைப்பு. ஆனால் நம்மை அறிவார்ந்த நகைச்சுவையில் திளைக்க வைக்கும் உத்தி.

தமிழ் சினிமாவில் இதுவரையில் வந்திருக்கிற அபத்தங்களையெல்லாம் ரசித்துப் பழகிய நம்மையே இந்தப் படத்தையும் ரசித்துக் கைதட்டவைத்துவிட்டார்கள். இதுகூட மாற்று சினிமாதானோ என்னவோ, ஒரு வகையில். தமிழ் சினிமாவின் மனசாட்சி போல இருக்கிறது இந்தத் தமிழ்ப்படம்’.

அந்த குண்டுப்பொம்பளை பிறந்தநாள் விழாவும், அதனையொட்டிய அந்தக் குத்துப்பாட்டும், அதனையொட்டிய அந்த வேண்டாத ரேப்காட்சியும் ரசிகர்கள் மீது நம்பிக்கை வைக்காத அபத்த அபசுரங்கள். தமிழக முதலமைச்சரின் குடும்பத்தினர் (மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி) தயாரித்தது இந்தப்படம். இதன் உள்ளடக்கம் இன்னமும் எம்ஜிஆர், டி. ராஜேந்தர் போன்றோருடனான அவர்களின் அனுபவங்களை அவர்கள் மறக்கவில்லையோ என்று நம்மை எண்ணும்படி செய்கிறது. இவற்றையெல்லாம் தள்ளுபடி செய்துவிட்டுப் பார்த்தால் வயிறு வலிக்கச் சிரிக்கவைத்து, மனசை நிறைக்கிற வித்தியாசமான படம் இந்தத் தமிழ்ப்படம்’.

- சோழ.நாகராஜன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It