கால் உடைந்த நண்பனைத் தோளில் தூக்கிக்கொண்டு, முன்னே செல்லும் டாடா சுமோவை துரத்தியபடி ஓடுகிறான் பரணி. வண்டியின் பின்கதவை எட்டித்திறந்து அதனுள் அவனை வீசிவிட்டு, பக்கவாட்டில் தொற்றிக் கொள்கிறான். பின்னே துரத்தி வந்தவர்களில் ஒருவன் கையில் கிடைத்த அலுமினிய பைப்பை எடுத்து சுழற்றி வீசுகிறான். பரணியின் தலையில் முழு வேகத்தில் படார் என்று அடித்து உடைகிறது. சுணங்கி விழும் அவனை வண்டியின் உள்ளிருந்து தாங்கி இழுக்கிறான் கர்ணன். முன்னர் நடந்து முடிந்த சண்டையில் அவனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்திருக்கிறது இரத்தம் கசிகிறது. பின் இருக்கையில் விழுந்துகிடக்கும் கால் ஒடிந்த விஜய் டேய் கர்ணா .. வலிக்குதுடா ! என்று கதறுகிறான். இத்தனைக்கும் மத்தியில், காதலித்த ஜோடிகளை ஒன்றிணைக்கும் வேகத்தில் அந்த வண்டி சிவன் மலையை நோக்கி பறக்கிறது. 

சமுத்திரக்கனி இயக்கத்தில், சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடோடிகள் திரைப்படத்தின் காட்சிகள் இவை. இடைவேளைக்கு முந்தைய பத்து நிமிடங்கள் நம்மை இருக்கையின் நுனிக்கு அழைத்து வந்துவிடும். கிராபிக்ஸ் விளையாட்டுகளோ, அனிமேசன் ஜாலங்களோ இல்லாமல் இதனைச் சாதித்திருக்கும் படக்குழுவிடம் தமிழ் சினிமா கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன.

கர்ணா, விஜய், பரணி மூவரும் நண்பர்கள். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கர்ணாவின் அப்பா ஒரு மிடிள் கிளாஸ். மகனைப் புரிந்தவராக இருந்தாலும், அவன் பொருளாதார வாழ்க்கையைப் பற்றி அதிகம் கவலைப்படுபவர். விஜயின் தந்தை முன்னாள் படை வீரர். மகனுக்கு நண்பனாக இருக்கிறார். வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமென ஊக்கம் தரும் வகையில் நடந்து கொள்பவர். மகனுக்கு காதலிக்க டிப்ஸ் கொடுக்கும் அளவு ஜாலியான மனிதர். அடுத்து பரணி, அவனின் அப்பா சிறிய அளவில் பவர்லூம் தறி ஓட்டுகிறார். அவரின் முதல் தாரத்தின் மகன் பரணி, மகன் மீது பாசம் இருந்தாலும் இரண்டாவது மனைவி முன்பாக மகனை காது வலிக்கத் திட்டுவார்.

மூன்று நண்பர்களுக்கும் வாழ்க்கையைப் பற்றி வெவ்வேறு கனவுகள். கர்ணா பி.ஏ வரலாறு படித்திருக்கிறான். கோல்டு மெடலிஸ்ட். தன் முறைப்பெண்ணை காதலிக்கிறான். மாமாவின் நிர்பந்தத்தின் பேரில் அரசாங்க வேலைக்கு முயற்சி செய்துவருகிறான். விஜய் சொந்தமாக தொழில் (கம்ப்யூட்டர் மையம்) தொடங்க நினைக்கிறான். பரணிக்கு வெளிநாட்டு வேலை செய்ய விருப்பம். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து காத்திருக்கிறான். படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் பார்த்துப் பார்த்து நெய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக நாயகன் கர்ணாவின் பாத்திரம். படத்தின் துவக்கத்தில் பி.ஏ வரலாறு படித்ததற்காக கர்ணாவை அவனது அப்பா திட்டுகிறார். அதற்கு கர்ணா தரும் விளக்கம், கல்வி குறித்த புதிய வெளிச்சத்தை பார்வையாளர்கள் மத்தியில் படரவிடுகிறது.
டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி முடித்து வெளியே வரும் கர்ணாவிடம் அவனது காதலி ஏன் மாமா... காசு கீசு கொடுத்து கவர்ன்மெண்ட் வேலை வாங்க முடியாதா? என்று அப்பாவித்தனமாகவும் அதே சமயம் அப்படியாவது தங்கள் காதல் கைகூடாதா (!) என்ற ஏக்கத்துடனும் கேட்கிறாள். அதை கேட்டவுடன் என்ன மாதிரியே பல லட்சம் பேர் வேலைக்காக காத்திருக்கிறான். அவன்ல யாராவது ஒரு ஏழை, என்ன மாதிரியே காத்திருந்து. அவனுக்கும் உன்ன மாதிரியே ஒரு அத்தை பொண்ணு இருந்தா? என்று கேட்கும் போது அவனது சமூக அக்கறை உயர்ந்து நிற்கிறது. அதேபோல எந்நேரமும் கருத்து கந்தசாமியாக இல்லாமல் வாழ்க்கையோடு ஒட்டியவையாக இருக்கின்றன அவனின் வார்த்தைகள். பெரும்பாலும் வரைமுறையற்ற வாழ்க்கை வாழும் இளைஞர்களையே நாயகர்களாக காட்டி வரும் தமிழ் சினிமாவிலிருந்து இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம்.

சாதாரணமாக கதை நகர்ந்து கொண்டிருக்கும்போது, கர்ணனின் பள்ளி நண்பன் சரவணன் அவனைத் தேடி வருகிறான். அவன் கன்னியாகுமரியைச் சேர்ந்த முன்னாள் மந்திரியின் மகன். கர்ணன் வீட்டில் சில நாட்கள் தங்குகிறான். நாட்கள் சுமூகமாக நகர, ஒரு நாள் திடீரென தற்கொலைக்கு முயலுகிறான். அங்கு ஆரம்பிக்கிறது கதையில் தடதட.. தற்கொலைக்கு காரணம் காதல் தோல்வி என்றவுடன் கர்ணா அவர்களை சேர்த்து வைக்கக் கிளம்புகிறான், நண்பனின் நண்பன் தங்கள் நண்பன் என்ற ஒரே காரணத்திற்காக மற்ற இருவரும் சேர்ந்து கொள்கிறார்கள்.சோதனைகளை சேர்ந்து நின்று சமாளிக்கிறார்கள். இந்தப் போராட்டத்தின் இடையே விஜய்க்கு காலில் விபத்து ஏற்படுகிறது. அவனை அவசரமாக எடுத்துச் சென்று ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். ஆனால், பணம் திரட்டி வந்து கட்டும்வரை மயக்க ஊசியைத் தவிர வேறு எதையும் தராமல் வைத்திருக்கிறார்கள் அங்கு இருக்கும் மருத்துவர்கள். இதனால் அவன் கால்களையே எடுக்க வேண்டி வருகிறது. கதையுடன் இணைந்து வரும் சில காட்சிகளில் மருத்துவம் தனியார் மயமாவதன் அபாயம் அப்பட்டமாகிறது.

ஒரு காலை இழக்கிறான் விஜய், காது கேட்கும் திறனை இழக்கிறான் சக்தி. தன் காதலை இழக்கிறான் கர்ணா. நட்பை நேசிக்கும் இவர்களின் தியாகத்தை விலையாகக் கொடுத்து அந்த காதலர்கள் இணைகிறார்கள். ஆனால் அற்ப காரணங்களுக்காக சில நாட்களில் அவர்கள் காதலைத் தூக்கி வீசுகிறார்கள். (உழைத்து வாழவே விரும்பாத சரவணனும், பணக்காரப் பகட்டை விட்டெறிய முடியாத அவன் காதலியும் எவ்வளவு நாளைக்குத் தான் தம்பதிகளாக தாக்குப்பிடிக்க முடியும்?) முக்கியப் பாத்திரங்கள் தவிர, பிளக்ஸ் விளம்பரப் புகழ் சின்னமணி, கர்ணாவின் பாட்டி, நாமக்கல்லில் வசிக்கும் பால்ய நண்பன் கஞ்சா கருப்பு, காதலர்களுக்கு அடைக்கலம் தரும் கர்ணாவின் மாமா, காவல்துறை உயர் அதிகாரி, நண்பர்கள் துயரங்களிலிருந்து மீண்டுவர உதவும் சமையல்காரர் .. என ஒவ்வொருவரும் தனி முத்திரை படைக்கிறார்கள்.

கர்ணா, விஜய், பரணி ஆகிய மூவரின் நட்பில் உண்மையும் நம்பிக்கையும் கலந்திருக்கிறது. அவர்கள் காதலும் மிக இயல்பானதாக இருக்கிறது. உதாரணமாக படத்தின் பிற்பகுதியில் விஜய்யும் தனது தங்கையும் காதலிப்பதை பெற்றோர் அறிந்துவிட அவர்களிடத்தில் கர்ணா பேசும் வசனம் இதனைத் தெளிவாக்கும், அவனுக்கு (விஜய்) என்ன தகுதி வேணும்? அவன் என்ன விட நல்லவன் .. அந்த ஒரு தகுதி போதாதா? யாருக்கோ இவள திருமணம் செஞ்சு குடுத்திட்டு .. அப்புறம் அவன் சரியில்லையேனு கண்ணு கலங்குறத விட .. இவனுக்கு குடுக்கலாம் .. காலம்பூரா கண் கலங்காம காப்பாத்துவான். இப்ப உங்கள எது தடுக்குது? சாதியா...? எப்ப அவனும் நானும் மாப்ள, மச்சான்னு பழக ஆரம்பிச்சமோ .. அப்பவே இதயெல்லாம் தூக்கி வீசியாச்சு ... இதுதான் அந்த வசனம். இன்றைக்கு பலரும் தூக்கித் திரியும் ஆதிக்க சாதித் திமிரை இந்த ஒற்றை பதில் அடித்து நொறுக்குகிறது.

ஆனால் சரவணனின் காதலும், நட்பும் இவர்களுடையதில் இருந்து வேறுபடுகிறது. அவன் ஒரு முன்னாள் மத்திரியின் மகன். அவனது காதலியோ நாமக்கல்லில் இருக்கும் ஒரு முக்கியப் பிரமுகரின் மகள். பணக்கார குடும்பப் பின்னணி கொண்ட இவர்கள் இருவரும் கல்லூரிக் காலத்தில் சந்தித்து காதல் வயப்படுகிறார்கள். ஆனால் அது உடல் கவர்ச்சியோடு முடிந்து விடுகிறது. அவர்களால் காதலுக்காக வாழ்க்கையின் சில சுகங்களைக் கூட இழக்க முடிவதில்லை. அவன் தனது நண்பர்களையும் உதவி செய்வதற்கான கருவியாகப் பார்க்கிறானே தவிற வேறு எந்த ஒட்டுதலும் அவனுக்கு இல்லை. அதனால் நண்பர்களின் வேதனையை உணரவும் முடிவதில்லை. சரவணனின் காதலை தங்களுடையதாக எண்ணி, ரிஸ்க் எடுக்கும் நண்பர்கள் மூவருக்கும்.

அவர்களின் இந்த நடவடிக்கை கோபத்தைக் கொடுக்கிறது. தாங்கள் ஏமாந்துபோனதாக உணர்கிறார்கள். வசதி படைத்தவர்களின் சொத்தாக இருந்துவந்த இவ்வகைக் கவர்ச்சிக் காதல்களுக்கு இன்று ஒரு சில ஏழை, நடுத்தர இளைஞர்களின் மனமும் இரையாகியுள்ளது. இந்த வகைக் காதல் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. ஊடகங்களும், சுற்றுப்புறமும் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. நுகர்வுக் கலாச்சாரம் பெருகி வளர்வதால் கிரீட்டிங் அட்டைகளும், பரிசுப் பொருட்களும் சிலவகை ஐஸ் கிரீம்களும் சாக்லேட்டுகளும் காதலர்களின் தேசிய அடையாளமாகிப் போயிருக்கின்றன. இவ்வாறு எதிர்பார்ப்புகள் அதிகரித்ததால் உண்மையான காதல் கலங்கப்பட்டிருக்கிறது. இந்த சமயத்தில் நாடோடிகள் காதலை காப்பாற்றக் கேட்கிறது. நம்மிடத்தில் நமது மொழியில் பேசுகிறது. ஏக்கங்கள் தீரும் மட்டும் வாழ்வதா வாழ்க்கையாகும்?

ஆசைக்கு வாழும் வாழ்க்கை ஆற்றிலே கோலமாகும் ! பொய்வேடம் வாழ்வதில்லை மண்ணோடு வீழும் வீழும் சம்போ சிவ சம்போ .. சிவசிவ சம்போ.. இசை தெறிக்க... வெள்ளித்திரை மூடுகிறது. கர்ணாவின் முறைபெண்ணாக நடிக்கும் நடிகையின் ஓவர் ஏக்சன் காட்சிகள், சேசிங் சீனுக்கு முன்னதாக வரும் மசாலா குத்துப் பாடல் மற்றும் கிளைமேக்ஸ்ன் சில வசனங்கள் தவிர இந்தப் படத்தில் சொல்லும் படியான குறைகள் ஒன்றும் இல்லை. சாதாரண வாழ்க்கையை சுவை குன்றாமல் திரை மொழிக்கு மாற்றியிருக்கும் நேர்த்தி, இயல்பான கதை சொல்லும் பாணி. பின்னணி இசை, வசனங்கள், சவுண்ட் மிக்சிங், பாடல் இசை, பாடல் வரிகள்... என பாராட்டத் தக்கவை ஏராளம். நண்பர்கள், காதல் இந்த இரண்டைச் சுற்றியே கதை நகர்ந்தாலும் வாழ்வின் எதார்த்தம்தான் நாயகன்.

நாடோடிகள். கலைப் படமோ... வியாபாரப் படமோ அல்ல. ஆனால் சிறந்த கலையம்சத்துடன் வந்து வியாபாரத்தில் வென்று காட்டிய மாற்று சினிமா!

Pin It