இப்படி ஒரு படம் தமிழில் சாத்தியமா என்றால் கொஞ்சம் யோசிக்கத்தான் வேண்டும்.... தடாலென, கலாச்சாரம்... பாரம்பரியம் என்று கொடி தூக்கிக்கொண்டு முக நூல் ஏந்தி ஓடி வரும் தோழர்களை சற்று கண்டுக்காமல்தான் எழுத வேண்டி இருக்கிறது.... எனக்கு பிடித்த இந்த மெலினாவை.
புது சைக்கிள் கிடைக்கிறது.... இத்தாலி, இரண்டாம் உலகப் போரில் பங்கு கொள்கிறது. அதே நாளில்... அந்த அழகிய பெண்ணை அவன் காண்கிறான்... இப்படித்தான் ஆரம்பிக்கிறது இந்த மெலினா.
பார்க்க பார்க்க பரவசம். பாலு மகேந்திராவின் அழியாத கோலங்களை ஞாபகப்படுத்தினாலும்.. இத்தாலி கலாச்சாரத்துக்கு ஏன் நம்மூர் மறைமுக சிந்தனைக்கு உட்படிதான் இருக்கிறது கதையின் நகர்தல். இப்படி ஒரு அழகியை யார்தான் விரும்ப மாட்டார்கள். வயது...உறவு என்று எதையும் தாண்டி தன்னுடைய சொந்த மனம் ஒரு வாதம் போடும். அதற்குள் நாமே பறக்க விடும் கழுகை நாம் மட்டுமே அறிவோம். பருவம் வந்த பையன்கள்... கூட்டாக அமர்ந்து கொண்டு கூட்டு சுயத்தில் ஈடுபடுவதாக இருக்கட்டும்... விடிந்ததும் பேசத் தொடங்கும் பெண் பற்றிய பேச்சாக இருக்கட்டும்.. ஊருக்குள் வந்த அழகியை கட்டம் கட்ட தன்முனைப்பில் செய்யும் முயற்சியாகட்டும். நான் நீங்கள் அவர் இவர் என்று எல்லா ஆண்களும் நமக்கான மெலினாவைக் கடந்தே வந்திருப்போம்.
"நான்லாம் அப்படி இல்லை" என்பவர்கள் தயவு செய்து கட்டுரையை படித்து விட்டு போய் தூங்கவும்...
ஓர் அனுபவம். மனதுக்குள் திடும்மென முளைத்த ஆயுதத்தை என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறும் தனிமை... ஒவ்வொரு இரவும் உருளும். சாமரத்தின் நியாயம் அநியாயமாய் நியாயம் கேட்கும் சர்ப்பத்தை கடக்கவே முடியாமல் புரண்டு புரண்டு.. குப்புறவே விடியும் விடியலின் கசிவு.
அப்படித்தான்... அந்த 13 வயது சிறுவன்.... மெலினாவைக் கண்ட நொடியில்... கிடந்து உருகி.. உடைந்து.. காதலாகி... காமமாகி....காற்றாகி.... காட்டாறாகி.... கனவாகி.. அவளாகவே ஆகிறான். ஒவ்வொரு இரவும் அவனுக்கு அவளின் நியாயத்தின் சப்தம் அவனின் கட்டிலில் சத்தத்தை உயர்த்துகிறது. அது நிஜத்தின் நிழல். மறைக்கவே முடிவதில்லை. இருந்தும் அவன் தன் சுயத்தை தேடுபவனாக இரவில் அவனின் ஜன்னல் தீரா தனிமையை திறந்து கொண்டு நிற்கையில்....இரண்டாம் உலகப் போரின் அர்த்தமற்ற சத்தங்கள் அடைக்க சொல்லி கத்திப் போகும் வீதி நாடகம் அரங்கேறுகிறது. ஒவ்வொரு வீட்டு வாசலிலும்... போரின் நிழல் அசைந்து கொண்டே இருப்பதை படம் நெடுக காணுவதற்கான பதம் அது.
மெலினா, போருக்கு போன தன் கணவனை பிரிந்து தனித்திருக்கும் ஓர் அழகிய பெண். ஆனால் அவளின் உயரமும்.... நடையும்.... பறந்து விரிந்து அசையும் மார்பும்...ரசவாதம் சொட்டும் கண்களும்......அவளை வேறு விதமாக பேச வைக்கிறது. அது ஆணின் பலகீனம். சக பெண்களின் பலவீனம். அந்த சிறுவன் அவள் மீது கொண்ட காதலில்... காமத்தில்... அவளை எப்போதும் நிர்வாணமாகாவே பார்க்கிறான். அப்படித்தான் பார்க்க செய்யும் அந்த வயதை சற்று தள்ளி நின்று பார்க்கையில்.... கடந்து வந்த கடந்தவன் பார்வையை பதிவு செய்கிறார் இயக்குனர். அவரின் பதின் பருவத்து சிறுவர்கள் நிஜங்களை தூக்கி சுமப்பவர்கள். "சினிமா பேரடைசோ" பார்த்தவர்களுக்கு புரிந்திருக்கும். கலாச்சாரம் என்று போர்வை போர்த்தி நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ளும் காட்சிப் பிழைக்குள் சரியாகும் ஒவ்வொரு நொடியிலும்.. மெலினாவின் திறந்த புத்தகமென அவளின் தேகம்... புது பயிற்சி செய்கிறது.
ஊரே மெலினாவை... சாத்தான் என்றும் தங்கள் கணவன்களைப் பறித்து போக வந்த தேவதை என்றும் திட்டி அடித்து உதைத்து மொட்டை அடிக்கும் காட்சியில்...சட்டென கண் கலங்கி கதறடிக்கும் வியூகத்தில்..... வியாக்கியானம் அற்று தவழுகிறது மெலினாவின் சிருஷ்டி உடம்பு. ஒரு தேவதை அடி படுவதை காண சகியாத....காதலின் விளிம்பில்....ஒன்றும் புரியாமல்.. தலை கீழாய் தொங்கும் அவளை கனத்த மார்புகளின் அவஸ்தையில் பசி ஆறும்... இருண்மைத் தத்துவத்தை என்னவென்று கடப்பது என்று யோசிக்க கூட தோன்றவில்லை. கிடந்து தவிக்கிறது மார்பின் தொங்கு தோட்டத்தில் தற்கொலைகள்.
மெலினாவின் மார்புகள்... காதலின்பால்...காமத்தின்பால்... பரிதாபத்தின்பால்...ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி நடித்திருப்பதை கண்கள் விரிய பார்த்தேன், கட கடவென 13 வயது உள்ளுக்குள் உருளுவதை தடுத்துக் கொண்டே. காதலோடு கொஞ்சுகையில் அது....நிரம்பி தவிக்கும்... தேவ தத்துவமென பழுக்கிறது. அடித்து நொறுக்கப்படும் காட்சியில் அது வெப்பமென உருகி தவிக்கும் பசிக்குள் மறைமுக நுழையலை தேடி அங்கும் இங்கும் அலையும்... அனாதைக் குழந்தையென முலை பாய்கிறது.
கணவன் இறந்து போனான் என்ற செய்தி வருகிறது. காது கேளாத தன் ஆசிரிய தந்தையும் இறந்து போகிறான். பசிக்கிறது. வீடெங்கும் நிறைந்து வழியும் பசி.. அவளையும்.... தின்கிறது. வேறு வழியில்லாமல் உடல் விற்கத் தூண்டப்படுகிறாள். ஆரம்பித்து வைக்கும் ஆணின் தாண்டவம்.... நாகத்தத்துவத்தின் மிகச் சிறந்த வாந்தியின் நுட்பம். ஆண்களின் இறுமாப்பில் அதிகார துஸ்பிரயோகத்தில் பெண்களின் உடல்... கழிவறையாக்கப் படுவது மெலினாவின் சித்திரத்தில் உமிழும் காலம் என்றே நம்பப்படுகிறது. அவளே கூட நம்புவது போல நடிக்கிறாள். உண்மை ஆகிறது பொய். உணவாகிறது பசி. இத்தனை அழகாய் ஒருத்தி இருப்பதை அந்த ஊர் பெண்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.அவர்களின் கணவன்கள் தொங்க போட்டுக்கொண்டு திரியும் நாக்கை அறுக்க முடியா இயலாமையில் மெலினாவின் தலை முடி அறுபடுகிறது. காலம் காலமாக நடக்கும் அந்த சாட்சியின் திரையிடல் அங்கேயும் நடக்கிறது. அவளை போட்டு அடித்து நொறுக்கி நாயைப் போல விரட்டும் அந்த நாய்களின் படுக்கை அறை, மூத்திரங்களால் நிரம்பி வழிவதாக அந்த சிறுவன் கர்ப்பணித்துக் கொள்கிறான்.... அவனின் காமத்தில் முழுக்க காதல் இருப்பதை அவனே பிற்காலத்தில் புரியலாம் என்று நான் புரிந்து கொண்டேன்.
மானம் காட்டி பிச்சை எடுக்கும் அவளின் மார்புகள்... மறைக்கும் அவளின் கைகள் நடுங்குகின்றன. பாதி சதை பிய்ந்து தொங்கும் அவளின் கால் முட்டி கோபத்தின் கண்களைக் கொண்டு அழகிய சித்திரம் உடைத்துக் கதறுகிறது. கத்தி கதறி தன் இயலாமையின் பொருட்டு பொய்களின் முகமூடியை கடந்து உண்மையின் வெளிப்பாடால் நகர்ந்து கொண்டு ஓடி வேறு ஊருக்கு ரயில் ஏறுகிறாள். அதே சமயம்.... எதிர் வினை அற்று...போரில் இறந்து போனதாக நினைத்த கணவன் ஒரு கையோடு திரும்பி வருகிறான். அவள் எப்போதும் தன் கணவனையே நினைத்துக் கொண்டிருந்த காதலின் வலிமையாக அது நடக்கிறது.
ஒரு வழியாக இருவரும் சேர்ந்து விடுகிறார்கள். தன் கணவனின் ஒற்றைக் கையோடு கை கோர்த்துக் கொண்டு மீண்டும் அதே ஊரில் "நீங்க நினைச்ச மாதிரி நான் இல்லடா" என்பது போலவும் "நான் அவனுக்காக காத்திருக்கிந்த பொம்பளடா" என்பது போலவும்அந்த ஊரே பரபரக்க நடை போடுகிறாள்.
"அவ நல்லவன்னு எனக்கு மட்டும்தான் தெரியும். அவ உன்னையேதான் நினைச்சிட்டு இருந்தானு நான் மட்டும்தான் உன்கிட்ட சொல்ல முடியும்' னு லெட்டெர் எழுதி அவ புருஷன்கிட்ட போட்டு விட்டு ஓடி விடும் சிறுவனின் காதலில்... காமமே நிறைந்து வழிந்தாலும்.. அது காதலாகாவே கசிகிறது. ஒவ்வொரு காட்சியும்... கதை சொல்லும் நிரம்புதலைக் கொண்டிருப்பது.... நம்மை அசையாமல்..... உடன் பயணிக்க வைக்கும் யுக்தி.
படம் முழுக்க அவளை நம்பும்....அவளை கொஞ்சும்.. அவளை ஆறுதல் படுத்தும்... அவளை காதலிக்கும். அவளை கொண்டாடும்.. அவளை உண்மையாக கலவி செய்யும் கதா பாத்திரத்தில் அந்த சிறுவன் நிரம்பி வழிகிறான். உள்ளாடை முகர்தலில் தொடங்கி... கடைசியில் நிஜம் புரிந்து அவளை அவள் போக்கில் விட்டு விடுவது வரை.... அவனின் உலகத்தில்...... நாம் எட்டிப் பாக்கும் ஜன்னல்கள்... திறக்க திறக்க சீசாக்கள்.
மெலினாவின் அழகை இன்னும் காலம் கடந்து நாம் பேசுவது... நினைப்பது.... அவளின் தேகத்தில் நாம் கட்டுண்டு கிடப்பது..... அந்த கண்களும் இதழ்களும்.. மார்புகளும் இறங்கி வரும்..... யோனி சிறகுகளும்... நம்மை மீண்டும் மீண்டும்... ஆச்சரியப் பட வைப்பதும்....அப்படிப்பட்ட ஒருத்தியின் வாழ்வில் இல்லாத சந்தோசத்தை நம்மால் கொடுக்கவே முடியாது அவளாக யோசிக்கும் நிர்வாணம் இன்றி என்ற மிக நுண்ணிய கேள்வியால் நம்மை கட்டிப் வைப்பதில்......இயக்குனரின் பார்வை நிஜத்தின் கூடு திறந்து அச்சிறுவன் பார்வையில் நிர்வாணமாய் அமரும் மெலினாவின் இருத்தலைப் போன்று சம்மணமிடுகிறது.
இன்னதென அறியாத வலைக்குள் மாட்டிக் கொண்டு விழிக்கும் அறியாமை சுவரில் மீண்டும் மீண்டும் முளைக்கும் மெலினாவின் சித்திரங்கள்...
எந்த ஊராக....எந்த நாடாக இருந்தாலும்.. தனித்திருக்கும் பெண் என்பவள்... கலவிக்கு தான் காத்திருக்கிறாள் என்ற பொதுப் புத்தியை இயக்குனர் தோலுரித்துக் காட்டுவதில்... மெலினா உதாரணமே.
- கவிஜி