சினிமாத் துறைக்குள் நுழைகையில் ஏற்கனவே முரளி என்று ஒரு நடிகர் இருக்கிறார். அதனால் பெயர் மாற்றம் நிகழ்கிறது. கார்த்திக் என்ற பெயரில் "அலைகள் ஓய்வதில்லை" படத்தில் திரு. பாரதிராஜா அவர்களால் அறிமுகப்படுத்தப்படுகிறார். படம் முடிகையில் அப்பா "முத்துராமன்" அவர்களின் அகால மரணம்.
இரண்டாவது படம் தோல்வி... அடுத்தடுத்து ஏதேதோ ஓட்டம். தொடர் முயற்சி.
ஒரு கட்டத்தில் "நவரச நாயகன்" என்ற பட்டத்தோடு கார்த்திக் தன்னை நிரூபிக்க ஆரம்பிக்கிறார். தனக்கென்று ஒரு ஸ்டைல்... தனக்கென்று ஒரு சார்மிங்... தனக்கென்று ஒரு பாவனை... நடை..... ஓட்டம்.. சிரிப்பு.... அழுகை.. கண் சிமிட்டல்.. சோகம்.. கோபம் என்று நவரசங்கள் அவர் உடல் மொழியில் நாட்டியமாடத் துவங்குகிறது.
"கோகுலத்தில் சீதை" படத்தில் அந்த கதாபாத்திரமே சிக்கலான கதாபாத்திரம். கொஞ்சம் நழுவினாலும் தலை குப்புற விழுந்து விடும் பாத்திரப் படைப்பு. ஆனாலும் அனாயசமாக நடித்து தன்னை நிலை நிறுத்தியிருப்பார். அதுவும் இறுதிக் காட்சியில், பேருந்தில் காசு இல்லாமல் நடத்துனரிடம் டிக்கட்டுக்கு கார்டை நீட்டும் போதெல்லாம்...... அது அப்படி ஒரு கிளாசிக் தன்மையோடு இருக்கும்.
"நீ என் குழந்தையை கொன்னுருக்கக் கூடாது ஆண்டவப்பெருமாள்....." என்று உதட்டில் பட்டும் படாமல் வரும் வார்த்தைகளோடு "அமரன்" பழி எடுக்கும்போது நமக்குள்ளும் ஒரு அமரன் வந்து அமர்ந்து கொண்டு ஐசாலக்கடி பாட்டு பாடுகிறான். மாமா இறந்த பிறகு புத்தி ஸ்வாதீனமில்லாத மாமா பெண்ணை வைத்துக் கொண்டு "பொன்னுமணி" அழுது தீர்த்ததெல்லாம் சாகாவரம் பெற்ற திரை வெடிப்பு. நடிப்பு ராட்சசன் என்றே சொல்லலாம்.... "கிழக்கு வாசல்" படத்தில் அம்மா சாவுக்கு நியாயம் கேட்கச் சென்று, என்னதான் தப்பு செய்திருந்தாலும் செய்தவர் ஊர்ப் பெரியவர் எனும்போது சட்டையைப் பிடிக்க வேண்டும்..... ஆனாலும் அதில் ஒரு தடுமாற்றமும் வேண்டும் எனபதை அத்தனை அழகாக சட்டையைப் பட்டும் படாமல் பிடித்து கேள்வி கேட்டு அழுது கொண்டே ஆத்திரத்தைக் காட்டும் அந்தக் காட்சிக்கு கலங்காத கண்களில் ஒருபோதும் கண்ணீர் இல்லை.
"பல்லாக்கு குதிரையில் பவனி வரும் மீனாட்சி" என்று கனகாவை மீட்டெடுக்க நம்பியாரோடு சேர்ந்து கட்டும் கூத்தில் மீனாட்சியை மீட்டெடுக்க வந்த சுந்தர பாண்டியனாகவே ஜொலிப்பார். ஒரு கட்டத்தில் சீரியசான தன் தோற்றத்தில் இருந்து சற்று விலகி நடித்த படம் "உள்ளத்தை அள்ளித்தா". அதில் தனக்கு காமெடியும் வரும் என்று கவுண்டமணியோடு சேர்ந்து அடித்த கூத்தில் தமிழகம் கண்களில் நீர் வர சிரித்தது.
இளையராஜாவின் பாடல்களில் அதுவும் இளையராஜா பாடிய பாடல்கள் சரியாக பொருந்தக் கூடியவர் இவர். "தெய்வ வாக்கு" படத்தில் வரும், "வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்..." பாடலாகட்டும்..."தர்மபத்தினி" படத்தில் வரும் "நான் தேடும் செவ்வந்திப் பூவிது" பாடலாகட்டும்.... "பகவதிபுரம் ரயில்வே கேட்" படத்தில் வரும்... "செவ்வரளி தோட்டத்துல உன்ன நினைச்சேன்...." பாடலாகட்டும்....இன்னும் இன்னும் நிறைய பாடல்கள் அப்படி கனக்கச்சிதமாகப் பொருந்தும். அதில் ஒரு கனத்த சோகம் அப்பிக் கிடப்பதை ஆரவாரமின்றி அசை போடுவது தனித்த மனக்கிளர்ச்சி.... .
"என் ஜீவன் பாடுது" படத்தில் முதல் காட்சியிலேயே இறந்து, படம் முழுக்க ஒரு ஆவியாக வலம் வருவார். அபத்தம்....சாத்தியம் எல்லாவற்றையும் தாண்டி அந்தப் படத்தில் ஒரு ஜீவன் இருப்பதை உள் வாங்க முடியும். காதலுக்கு உருகும் கண்களில் எப்போது வேண்டுமானாலும் வந்து ஒட்டிக் கொள்ளும் பட்டாம்பூச்சியை சிமிட்டிக் கொண்டே இருப்பதெல்லாம் தனித்துப் பெற்ற வரம். எத்தனையோ ஜோடிகளோடு அவர் நடித்திருந்தாலும் 'கனகா'வோடு நடிக்கையில் கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகும்.
"ஒரு சின்ன மணிக்குயிலு சிந்து படிக்கிறது நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே" பாட்டில் நடந்திருக்கும் மேஜிக்கைப் பார்த்தால் உணர முடியும்.
மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்காது என்பார்களே... அது தான், " தானா சேர்ந்த கூட்டம்" படத்தில் அவரின் நடிப்பு. கார்த்திக் போன்ற நவரச நாயகர்களுக்கு வயதாவதைத்தான் பொறுத்துக் கொள்ளவே முடிவதில்லை.
பள்ளி விட்டு வீடு வருகையில், தூரத்திலேயே கேட்டு விடும் "பச்சை மலைப் பூவு நீ உச்சி மலைத்தேனு" பாட்டு முடிவதற்குள் ஓடி வரும் ஒரு வித தேடலின்பால் கார்த்திக் என்றொரு நடிகன்... அந்த சின்ன வயதிலேயே மனதுக்குள் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார். இன்னமும் அவர் அதே சிம்மாசனத்தில் தான்... இருக்கிறார். எல்லா வகையான படங்களையும் செய்த கார்த்திக் 80களின் சினிமா நாயகர்களின் தனித்த நட்சத்திரம் என்றால் அது சாலப் பொருந்தும். எல்லாவற்றையும் தாண்டி இந்த நடிகனுக்குள் எப்போதும் தீராத ஒரு மென்சோகம் இருப்பதாய் நம்பும் நம்பிக்கையில் ஒரு வித தன்னிலை, ரசிகனுக்கு கிடைப்பதாய் நம்புகிறேன். "வசந்த பூங்காற்றே" பாடல் வரும் "சோலைக்குயில்" படத்தில் நாயகியாக வரும் அந்தக் குயிலை படம் முடிவதற்குள் நிஜ வாழ்விலும் கரம் பற்றிய கார்த்திக் நிஜ வாழ்விலும் காதலால் ஆனவர் தான். தனிமை விரும்பியான அவர் நிறைய பயணங்கள் காடுகளுக்குள் செய்வார் என்பது கூடுதல். வாழ்வென்ற நாடக மேடையில் காதலிக்கப்படுவதற்கே பிறந்த கதாபாத்திரம் அவர்.
கேள்விப்பட்ட வரை... எந்த ஹோம் ஒர்க்கும் செய்யாமல் ஸ்பாட்டில் வந்து வெளுத்து வாங்கும் இவரின் நடிப்புக்கு பெருந்தீனி இன்னும் இந்த சினிமா உலகம் போட்டிருக்க வேண்டும் என்ற ஆதங்கம் எப்போதும் போல இப்போதும் உண்டு. எப்போதும் ரசிக்கும் ஒரு முகத்தில்...... ஒரு குறும்பு உடல்மொழியில்........ நவரச நாயகன், "அசோக் விஷ்வநாத்" என்று கண்களில் தீ பறக்கச் சொல்லும் "அக்னி நட்சத்திரம்" படமெல்லாம் பார்க்கப் பார்க்க பரவசம்.
"பூங்காவனம்" பாட்டு முடிகையில் நிரோஷாவிடம் சொல்லும் ஐ லவ் யூ-வெல்லாம்......காலத்துக்கும் காதோரம் கிசுகிசுக்கும் மெல்லிசை.
- கவிஜி