"நிலவு தூங்கும் நேரம்...நினைவு தூங்கிடாது....." மோகன் மட்டுமா பாடுகிறார்.... நானும் தான். மவுத் ஆர்கன் வாசித்த இளவரசி இதழைத்தான் இன்னமும் இளமை மாறாமல் வாசிக்கிறது காற்றும், இசையும்.
"நான் உனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்..." இளவரசியை ஒளிந்து ஒளிந்தே பார்க்கும் மனநிலை தான் எனக்கு.
அடிக்கிற அழகு இல்லை. ஆனால் அழகு செய்யும் மாயத்தை இளவரசியிடம் கண்டிருக்கிறேன். பெயரே ஒரு நெருக்கத்தை உண்டு பண்ணும். தடித்த இதழும்.. கொஞ்சம் வளைந்த நாசியும்... எப்போதும்... கண்களில் காதலைக் கொண்டே அலையும் முகத்தில்.. ரகசியத்தின் கண்களை அவர் திறந்து கொண்டே இருப்பதாக நம்பும் மனது தான் எனக்கு... இப்போதும்.
"நீ எஸ் கே கூட ஸ்கூட்டர்ல திரும்பி வந்தயே, அது தப்பே இல்ல.. ஆனா 11 மணிக்கு வந்தயே......அதுதான் தப்பு" என்று 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தில் திலீப் பேசுகையில்... தலை வாரியபடி முறைத்துக் கொண்டு அமர்ந்திருக்கும் இளவரசிக்கு அப்போதும் இளவரசி முகம்தான்.
"அண்ணி நீங்க மரக்காணம் நான் மெட்ராஸ்.... அண்ணி நீங்க எஸ் எஸ் எல் சி....நான் பி ஏ" என்று லட்சுமியிடம் பேசும் போது, ராட்சசியை ரசிக்கும் மனதை இளவரசி தந்து விடுவது மறுத்தாலும் உண்மை.
'வேஷம்' படத்தில் அர்ஜுனோடு சேர்ந்து கொலையை மறைக்கும்... காட்சிகளில்... இளவரசியின் படபடப்பு.... அத்தனை சுவாரஷ்யம். கொலைகாரி ஆனாலும் முத்தமிட்டே கொல்வது போன்ற பாவனை தான் இளவரசிக்கு வாய்த்திருக்கிறது. 'வேஷம்' படத்தை நிறைய முறை பார்த்திருக்கிறேன். ஒரு முறை கூட இளவரசியைக் காணும் ஆசை குறைந்ததேதில்லை. பார்த்ததும் பச்சக் என்று ஒட்டிக் கொள்ளும் முகம் அல்ல... இளவரசிக்கு. பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த பிறகு ஜன்னல் திறந்து வைத்து லைட்டை ஆப் பண்ணி ஆன் பண்ணி ஆன் பண்ணி ஆப் பண்ணி ஒரு வித வருடும் மெல்லிசைக்குள் மூழ்கி எழும் முகம். நீருக்குள் இருந்து எழுந்து நீர் வழிய பார்க்கும் கற்பனைக்கு இளவரசியின் முகம் தான் எனக்கு.
ஒரு படத்தில் அர்ஜுனோடு இரு பக்க மூக்குத்தி குத்திக் கொண்டு வரும் இளவரசியை என் வீதியில் தெருக் குழாயில் நீர் எடுத்துச் செல்லும் பெண் போல தான் நான் உணர்கிறேன். நீந்தும் கண்களில்.. நீக்கமற நழுவும் மீன்களின் வகைகள் தினம் ஒன்றாக இருக்கும் என்பது என் பிதற்றல். சிரிக்கையிலும் ஒரு வகை அழுகை கலந்திருக்கும் முக பாவனையோடு இளவரசி இருப்பதுதான் இளவரசிக்கான சிறு குறிப்புகள். எதிர் வீட்டு வாசலில் அமர்ந்து பூ கோர்த்துக் கொண்டிருக்கும் கனவாக வந்திருக்கிறது இளவரசி பற்றிய நினைவோடைகள். சுமை தாங்கும் அழகி என்று நான் சொல்லிக் கொள்கிறேன். இன்னமும் காரணம் இல்லாமல் பிடிக்கும் முகத்தில் சொல்லி வைத்தாற் போல இளவரசிக்கும் பெரிய இதழ்கள்.
நல்லவேளை வயதான இளவரசியை நான் இதுவரை காணவேயில்லை. முதுமை வராத பெண் இவர் என்று நம்பித் திரியட்டும் என் சிண்ட்ரெல்லா பற்றிய மூட நம்பிக்கைகள்.
இளவரசியைக் காதலிக்காமல் கடந்து போகவே முடியாது.......விசுவின் வசனமும்... கவிஜியின் விசனமும்...!
(சிண்ட்ரெல்லாக்கள் தொடரும்...)
- கவிஜி