2007 அக்டோபர் 15 முதல் 19ம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் மற்ற உரிமையியல் நீதிமன்றங்களுக்கும் தசரா பண்டிகைக்கால விடுமுறை. தசரா பண்டிகைக்கும் நீதித்துறையினருக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? விடுமுறைகள் அறிவிப்பதில் இந்திய நீதிமன்றங்கள் கல்வி நிலையங்களுடன் போட்டியிடுகின்றன என்று துணிந்து கூறலாம்.

தாமதித்து வழங்கப்படும் நீதி, மறுக்கப்படும் நீதிக்கு சமம் என்ற வசனம் திரைப்படங்களிலும், மேடை நாடகங்களிலும் பலமுறை உச்சரிக்கப்பட்டாலும் உரியவர்களின் காதுகளில் அந்த வசனம் சரிவர விழுவதில்லை. இந்தியாவின் உச்ச நீதிமன்றம் உட்பட நாட்டின் அனைத்து நீதிமன்றங்களிலும் பல நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்பதும், அந்த நீதிமன்றங்களில் கோடிக்கணக்கான வழக்குகள் விசாரணைக்காகக் காத்திருப்பதும் அனைவரும் அறிந்த செய்தியே.

இந்த நிலையில் நாட்டின் முக்கிய நீதிமன்றங்களின் செயல்பாடு மிகுந்த அச்சத்தை அளிப்பதாகவே உள்ளது. உதாரணமாக, 2007ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை 49 நாட்கள்; தசரா பண்டிகை விடுமுறை 8 நாட்கள்; தீபாவளி பண்டிகை விடுமுறை 8 நாட்கள்; கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை 16 நாட்கள்; இதோடு வார விடுமுறைகளயும் சேர்த்தால் சுமார் 137 நாட்கள் விடுமுறை. அதாவது சுமார் நான்கரை மாதங்கள் இந்தியாவின் உச்சநீதி மன்றம் இழுத்து மூடப்படுகிறது.

தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை 37 நாட்கள். தீபாவளி பண்டிகை விடுமுறை 9 நாட்கள். கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை 11 நாட்கள். இதோடு வார விடுமுறைகளயும் சேர்த்தால் சுமார் 145 நாட்கள் (5மாதங்கள்) விடுமுறை. அதாவது சென்னை உயர்நீதிமன்றம், இந்த ஆண்டின் 12 மாதங்களில் சுமார் ஏழு மாதங்களும் 10 நாட்களும் மட்டுமே பணியாற்றுகிறது. பல்வேறு காரணங்களுக்காக வழக்கறிஞர்கள் மேற்கொள்ளும் நீதிமன்ற புறக்கணிப்புகள் தனிக்கணக்கு.

வாரம் முழுவதும் பணியாற்றும் பணியாளர்களுக்கு வார இறுதி நாளன்று ஓய்வு தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் மதம் சார்ந்த பண்டிகைகளுக்காக வாரக்கணக்கிலும், கோடை விடுமுறை என்ற பெயரில் மாதக்கணக்கிலும் நீதிமன்றங்களுக்கு விடுமுறை விடும் அரசை மக்கள் நல அரசாகவும் கருத முடியாது. மக்களின் அடிப்படை மனித உரிமைகளை பறிக்கும் அனைத்து அமைப்புகளும் எந்த விடுமுறையுமின்றி, எந்நேரமும் பணியாற்றி வருகையில், மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய நீதித்துறை, நீண்ட விடுமுறைகளை அனுமதிப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலே!

மதசார்பற்ற அரசின் நீதித்துறை, மதம் சார்ந்த மக்களின் வழிபாட்டு உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். ஆனால் அதற்கு மற்றவர்களின் உரிமைகளை விலையாகக் கொடுக்கும் நிலை இருக்கக்கூடாது. எனவே பண்டிகைக் கால நீண்ட விடுமுறைகள் குறித்த மறுபரிசீலனை அவசியம்.

கோடை விடுமுறை என்பதே, இந்தியா சுதந்திரம் பெற்றதை அங்கீகரிக்காத போக்காகப் படுகிறது. ஏனெனில் கோடை விடுமுறை ஆங்கிலேயர் காலத்தில் ஆரம்பித்த நடைமுறை. இந்தியா அடிமை தேசமாக இருந்தபோது, இந்தியர்களுக்கான நீதி என்பது அடிமை-இந்தியர்கள் மீது காட்டப்படும் கருணையாக இருந்தது. குளிர் தேசமான இங்கிலாந்தில் பிறந்து, வளர்ந்த ஆங்கிலேய நீதிபதிகளுக்கு இந்தியாவின் கோடை வெப்பம் ஒத்துவராததால் அவர்கள் சொந்த நாடான இங்கிலாந்து செல்வதற்காக நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. மின்விசிறிகூட இல்லாத அந்த காலத்தில் ஆங்கிலேயர்கள் கோடையில் விடுமுறை அனுபவித்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், இந்தியாவிலேயே பிறந்து, இந்நாட்டின் வெப்பத்திலேயே வளர்ந்து, குளிர்ப்பதனம் (Air Condition) செய்யப்பட்ட நீதிமன்றங்களில் அமர்ந்து நீதிபரிபாலனம் செய்யும் தற்கால நீதியரசர்(!)களுக்கு கோடை விடுமுறை என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. குளிர்ப்பதன வசதி செய்யப்படாத பல விசாரணை மற்றும் கீழ்நிலை நீதிமன்றங்கள் கோடை காலத்திலும் பணியாற்றுகின்றன என்பது குறிப்பிட வேண்டிய முக்கிய செய்தி.

நம் நாட்டில் கற்றுத்தேர்ந்த வழக்கறிஞர்களுக்கோ, நீதியியல் அறிஞர்களுக்கோ பஞ்சமில்லை. ஆனால் அவர்கள் செயல்படுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. சமூகத்தின் உயர்நிலையில் உள்ள ஆதிக்க சக்திகளே நீதித்துறையையும் ஆக்கிரமித்துள்ளதால், சாமானிய மக்களின் பிரச்சினைகள், நாட்டின் உச்சத்தில் உள்ள தலைவர்களை சென்றடைவதில்லை.

மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்குதான் நீதிமன்றங்கள் இயங்குகின்றன என்பது உண்மையானால் அவை காலை, மாலை என இரு அமர்வுகளாக (ஷிப்ட் முறையில்) கூடுதல் நீதிபதிகள் மற்றும் பணியாளர்களுடன் இயங்கவேண்டும். வழக்குகளை தீர்ப்பதற்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்பட வேண்டும். வழக்குகளை உரிய காலத்தில் தீர்க்காத நிலையில் அதனால் வழக்கு தொடுக்கும் பொதுமக்கள் அடையும் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மக்கள் எந்த நாளிலும், எந்த நேரத்திலும் நீதிமன்றத்தை அணுகி, நீதிபெற முடியும் என்ற நிலை வந்தால்தான் நாட்டில் 'சட்டத்தின் ஆட்சி' நடப்பதாக பொருள் கொள்ள முடியும்.

கோடை விடுமுறை உள்ளிட்ட அசாதாரண விடுப்புகளை கோரும் நீதித்துறை அதிகாரிகளுக்கு சம்பளம் இல்லாத விடுப்பு அளிக்கலாம். மூத்த வழக்கறிஞர்கள் பலரும் இது போன்ற நீண்ட விடுமுறைகள் தேவை என்றே கருத்து தெரிவிக்கக்கூடும். மூளை உழைப்பாளிகளான தங்களுக்கு இது போன்ற கட்டாய விடுமுறைகள் மட்டுமே ஓய்வு அளிப்பதாக அவர்கள் கூறக்கூடும்.
.
ஆனால் அடுத்த தலைமுறை வழக்கறிஞர்கள் உருவாவதை விரும்பாத, பேராசை படைத்த மூத்த வழக்கறிஞர்கள் மட்டுமே இத்தகைய வாதத்தை முன்வைப்பார்கள் என்பதை அனைவரும் அறிவர். உண்மையாகவே மக்களுக்குப் பாடுபடும் எந்த ஒரு வழக்கறிஞரும் எந்த நேரத்திலும் மக்களுக்கு உதவி செய்ய தயாராகவே இருப்பர் என்பதை கூறத் தேவையில்லை.

பின்குறிப்பு: இந்தப் பதிவிற்கு மறுமொழி எழுதுவதால் நீதிமன்ற அவதூறு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே உங்கள் கருத்துகளை தைரியமாக பதிவு செய்யலாம்.

- சுந்தரராஜன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

(நன்றி: மக்கள் சட்டம்)

Pin It