கடந்த மார்ச் மாதம் 8 ம் நாள் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் சீன தலைநகர் பீஜிங் நோக்கி பறந்த MH 370 என்ற மலேசிய விமானம், தெற்கு சீனக் கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது தொலைந்துபோனது. தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இந்த நூற்றாண்டில், சுமார் 26 நாடுகளின் தேடுதல் படலம் தொடர்ந்தாலும் இன்றளவும் அந்த விமானம் குறித்து, உறுதியான எந்த செய்தியும் நமக்கு கிடைத்த பாடில்லை.

person31அதே மார்ச் மாதம், முதலாம் நாள் கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் அமைந்துள்ள பூண்டி சிவன்கோயிலில், சிவராத்திரி சிறப்பு தரிசனம் செய்துவிட்டு, திரும்பி வந்துகொண்டிருந்த, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், “மதுபானக் கடை” உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் கலை இயக்குனராகப் பணியாற்றியுள்ள நண்பர் வினோமிர்தாத், அந்த வனத்திற்குள் தொலைந்து போனார். காட்டுக்குள் வழி தவறிப் போய்விட்ட, தன்னை மீட்குமாறு அவரது அலைபேசி வாயிலாக மற்றொரு நண்பருக்கு அவர் தெரிவித்த செய்தியே, இந்த கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் அவரிடமிருந்து வந்த கடைசி செய்தியாகும்.

அதனைத் தொடர்ந்து வனத்துறையினர், வேட்டைத் தடுப்புக் காவலர்கள், காவல்துறையினர் மற்றும் அங்குள்ள பழங்குடியின மக்களின் உதவியோடு அவரது நண்பர்களும், குடும்பத்தினரும் அந்த வனப்பகுதியில் சுமார் ஒரு வார காலமாக தேடியும் அவர் கிடைக்கவில்லை. யானைகள், சிறுத்தைப்புலிகள், செந்நாய்கள் மற்றும் பல்வேறு வனவிலங்குகள் வாழும் பகுதியான வெள்ளியங்கிரி மலையில் தொலைந்து போன அவர் என்ன ஆனார் என்பது, சுமார் இருபது நாட்களான பிறகும் தற்போது வரையிலும் மர்மமாகவே உள்ளது.

காட்டிற்குள் வழி தவறிப்போதல் மற்றும் தொலைந்து போதல் என்பது, சிறிது கவனச் சிதைவு ஏற்பட்டாலும் சாதாரணமாக நிகழக்கூடியது என்பது காட்டில் வசிப்பவர்களுக்கும், அடிக்கடி காட்டிற்குள் செல்பவர்களுக்கும் எளிதில் புலனாகும். நமக்கு நன்கு பழக்கப்பட்ட சிறிய காட்டிலும்கூட சில நேரங்களில் நாம் வழி தப்பிவிடுவோம். அப்படி காட்டிற்குள் அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்களில் பெரும்பாலோனோர் கண்டிப்பாக ஒருமுறையாவது தொலைந்து போன அனுபவம் பெற்றிருப்பார்கள். நம் அன்றாட வாழ்வில், குறிப்பாக நகர வாழ்க்கையில் சென்னை போன்ற பெரிய நகரங்களில் தெருக்களின் பாதைகளில் பல நேரங்களில் குழப்பம் ஏற்பட்ட அனுபவமாவது குறைந்தபட்சம் நமக்கு இருக்கும்.

இந்நிலையில் வினோமிர்தாத் தொலைந்து போனது குறித்து, நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, சில ஆண்டுகள் கழித்து வினோமிர்தாத் மீண்டும் வருவார் என்று தனக்கு ஆழ்மனதில் தோன்றுகிறது என்று கூறினார். அவரது நம்பிக்கைக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாகவும், அவர் திரும்ப கிடைக்க வேண்டுமென்ற ஒரு அவாவிலும், உலக வரலாற்றிலும், நீதித்துறை வரலாற்றிலும் பதிவு செய்யப்பட்ட இதுபோல தொலைந்து, பிறகு திரும்ப கிடைத்தவர்கள் குறித்து தேட ஆரம்பித்ததன் விளைவாக உருவானதே இந்த கட்டுரை.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த இயேசு கிறிஸ்து குறித்தும் அவரது போதனைகள் மற்றும் சீடர்கள் குறித்தும் பேசும் கிறித்தவர்களின் புனித நூலான வேதாகமத்தில், இயேசு கிறிஸ்து அவரது பனிரெண்டாவது வயதில் தொலைந்து போய்விட்டார் என்றும், சிறுவனான அவரை அவரது குடும்பத்தினர்கள் பல இடங்களில் தேடிய போதும், அவர் கிடைக்கவில்லை, மூன்று நாட்களுக்குப் பிறகுதான் அவர் கிடைத்தார் என்றும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அவரது பனிரெண்டாவது வயது முதல், முப்பதாவது வயது வரையிலும் அவர் எங்குபோனார் என்ன ஆனார் என்பதை குறித்த பதிவுகள் எதுவும் இல்லை. அவர் அந்த பதினெட்டு ஆண்டுகளும் தொலைந்து போனதாகவே கருதப்படுகிறது.

தற்போதைய வங்காளதேச தலைநகர் டாக்காவிலிருந்து 20 மைல் தொலைவில் அமைந்துள்ள பாவல் ராஜ்ஜியமானது, சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் இருந்த ஒரு பெரிய ஜமீன் ஆகும். அதன் இளைய வாரிசான மேஜோகுமார் 1909ம் ஆண்டு மே மாதம் 8ம் நாள் சுற்றுலா சென்றிருந்தபோது டார்ஜிலிங்கில் வைத்து இறந்துபோனதாக அறிவிக்கப்பட்டது. அவரை இறுதிச்சடங்கிற்காக எடுத்துச்செல்லும் வழியில் இடி மின்னலுடன் மழை பெய்தது. மழையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அவரது உடலைத் தூக்கிச் சென்றவர்கள் அதனை ஓரிடத்தில் இறக்கி வைத்துவிட்டு பாதுகாப்பான இடத்திற்குச் சென்றனர். பின்னர், சிலர் அவரது உடல் எரிக்கப்பட்டது என்று கூறினாலும், வேறு சிலர், அவரது உடல் வைத்துவிட்டப் போன இடத்தில் இல்லை என்றும் அது தொலைந்துவிட்டது என்றும், எனவே, எரிக்கப்பட்டது அவரது உடல் இல்லை என்றும் கூறினார்கள். பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1921ம் ஆண்டு, டாக்காவிற்கு ஒரு சந்நியாசி வந்தார். அவர்தான் இறந்ததாக சொல்லப்பட்ட அரண்மனை வாரிசான மேஜோகுமார் என்று நம்பப்பட்டது. பிறகு ஒன்பது ஆண்டுகள் கழித்து, டாக்கா மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், தன்னை பாவல் ஜமீனின் இரண்டாவது குமாரராக அங்கீகரிக்க வேண்டும் என்று அந்த சந்நியாசி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கிலும், கல்கத்தா உயர்நீதிமன்றத்திலும், இறுதியில் பிரிவி கவுன்சிலிலும் நடந்த அதன் மேல் முறையீட்டு வழக்குகளிலும், சந்நியாசியாக மாறிய மேஜோகுமார் வெற்றிபெற்று, தான் இறக்கவில்லை என்றும் தான் தொலைந்துபோனவன் என்பதையும் நிரூபித்தார்.

கடந்த 1991ம் ஆண்டில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகில் உள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்பவர் தொலைந்து போனார். பின்னர் அப்பகுதியில் கிடைத்த அடையாளம் தெரியாத பிணத்தைக் கைப்பற்றிய காவல்துறை அது தொலைந்துபோன பாண்டியம்மாள் என்றும், அவரை அவரது கணவர் வேலுச்சாமி என்பவர் கொலைசெய்து விட்டதாகவும் வழக்கு பதிவு செய்தது. இந்த கொலை தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. அந்த வழக்கில் விசாரணை முடிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு பகரப்படவிருந்த நிலையில், கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட பாண்டியம்மாள் திரும்ப வந்தார். அதுநாள் வரையிலும் அவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, கேரளாவிற்குச் சென்று கூலி வேலை பார்த்து வந்ததாகக் கூறினார்.

1997ம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள உப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுஜாதா என்பவர் தொலைந்து போனார். பின்னர் அவரது உடலை எரித்த சாம்பலை கண்டுபிடித்ததாகக் கூறி, இது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த கார்மேகம் என்பவர் உள்ளிட்ட பலர் மீது கொலை வழக்கு பதிவு செய்தது காவல்துறை. வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் 9 ஆண்டுகள் கழித்து, தொலைந்து போனதாகச் சொல்லப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சுஜாதா திருமணம் முடிந்து அவரது குடும்பத்தினருடன் தனது பெற்றோரின் ஊருக்குத் திரும்பினார்.

கடந்த 2003ம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டம் பேரூர் பகுதியைச் சேர்ந்த மணிமேகலை என்பவர் தொலைந்து போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அப்பகுதியில் அடையாளம் தெரியாமல் கிடந்த ஒரு பிணத்தை எடுத்த காவல்துறையினர் அது மணிமேகலைதான் என்றும், அந்த கொலைக்குக் காரணமானவர்கள் என்று கூறி அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் உள்ளிட்ட பலரை கைது செய்தனர். வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டில் தொலைந்து போனதாகச் சொல்லப்பட்ட மணிமேகலை தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் தனது பெற்றோரின் வீட்டிற்குத் திரும்பினார்.

நம் சமூகத்தில் இரயில் நிலையங்களிலும், வனப்பகுதிகளிலும், கோயில்களிலும், திருவிழா கூட்டங்களிலும், பிரயாணங்களின் போதும் இதுபோல தொலைந்து போதல் நிகழ்வுகளானது, பன்னெடுங்காலமாக நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அதனைப் பிரதிபலிக்கும் விதமாக, நாளை நமதே, அடுத்த வாரிசு, தாய் வீடு, சவால், உழைப்பாளி, தளபதி, அபூர்வ சகோதரர்கள், வெயில் உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில், கதாநாயகர்கள் சிறு வயதில் தொலைந்துபோய், சில ஆண்டுகள் கழித்து அவர்கள் திரும்ப கிடைப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம். அதேபோல, தமிழ் திரைப்படக் கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல்களில் ஒன்று, “காவி நிறத்தில் ஒரு காதல்”. அந்த நாவலின் கதாநாயகன் இளங்கோ, தனது பதினெட்டாவது வயதில் தொலைந்துபோவார். பின்னர் ஒரு அடர்ந்த வனத்தின் மலை அடிவாரத்தில் சந்நியாசியாக பதினெட்டு ஆண்டுகள் வாழ்ந்து, மீண்டும் தனது ஊருக்குத் திரும்பி இயல்பு வாழ்க்கையை அவர் தொடர முயல்வதை அடிப்படை கருவாகக்கொண்டு அந்த நாவல் படைக்கப்பட்டிருக்கும்.

இப்படியாக உலகின் பல பகுதிகளில், வெவ்வேறு காலகட்டங்களில் தொலைந்து போய் மீண்டும் கிடைத்த இயேசு கிறிஸ்து, பாவல் சந்நியாசி, பாண்டியம்மாள், சுஜாதா மற்றும் மணிமேகலை போன்ற சான்றுகள், தற்போது தொலைந்து போயுள்ள மலேசிய விமானப் பயணிகள் மற்றும் வனத்திற்குள் தொலைந்து போன வினோமிர்தாத் போன்றோர் விரைவில் உயிருடன் திரும்பக் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையைத் தருகிறது. இருப்பினும் நம்பிக்கை தானே எல்லாம் என்று நாம் எதுவும் செய்யாமல் இருந்து விட முடியாது.

குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர் உள்ளடங்கிய, காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பினை, நாம் அவ்வப்போது தொலைகாட்சி, நாளிதழ்கள், சுவரொட்டிகள் வாயிலாகக் கேள்விப்படுகிறோம். அந்த இழப்பினை அனுபவித்த குடும்பத்தினரின் துயரங்களைச் சொல்லி மாளாது.

சமூகத்தில் அதிகாரமிக்க நபர்களோ அல்லது அவர்களைச் சார்ந்தவர்களோ தொலைந்துபோகும் நேர்வுகளில் அரசு எந்திரத்தின் அனைத்து துறைகளும் அதற்காக தீவிரப்படுத்தப்படும். ஆனால் எளிய மக்கள் தொலைந்து போகும் சூழல்களில் பெரும்பாலும் அதில் ஒரு பகுதி அளவு கூட கவனம் செலுத்தப்படுவதில்லை என்பது நாம் அறிந்ததே.

பொதுவாக இதுபோல ஒருவர் தொலைந்து போகும்போது, அது தொடர்பாக காவல்துறையிடம் புகார் கொடுக்கப்படுகிறது. அங்கு காணாமல் போனது தொடர்பாக வழக்கு பதிவுசெய்யப்பட்டு அந்த நபரைத் தேடும்பணி துவங்கப்படும். ஆனால் சமூகத்தில் சாதாரண நிலையில் உள்ள மக்களின் வழக்குகள் பெரும்பாலும் மேலே கண்ட வழக்குகள் போல மேம்போக்காக நடத்தப்பட்டு, முடிவுக்குக் கொண்டுவரப் படுகின்றது. அப்படிப்பட்ட சூழலில் உரிய நிவாரணம் வேண்டி உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. அதில் பிறப்பிக்கப்படும் உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் முன்னிலும் தீவிரமாக தொலைந்து போன நபரைத் தேடத் துவங்கின்றனர். சில சமயங்களில் விரைவாக கண்டுபிடித்தாலும், பல சூழல்களில் அவ்விதமாக எளிதில் கண்டுபிடிக்க முடிவதில்லை. இதுபோன்ற ஒரு வழக்கில் பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தொலைந்துபோனவரை கண்டுபிடித்தாதாக தனது ‘கடமைகள் காயங்கள்’ என்ற நூலில் ஓய்வுபெற்ற காவல்துறை தலைவர் லட்சுமி நாராயணன் பதிவு செய்துள்ளார்.

ஒருவர் தொலைந்துபோனால் அது குறித்து வழக்குப் பதிவு செய்யப்படும். ஆனால் அதற்கென தனியே ஒரு சட்டமோ அல்லது சட்டப்பிரிவோகூட நம்மிடம் இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது. வழக்குப்பதிவு செய்த காவல்நிலைய அதிகாரிகளே, பொதுவாக தேடுதல் பணிகளில் ஈடுபடுவார்கள். தொலைந்து போனவர்களைக் கண்டறிதல் தொடர்பான பணிகளுக்கென விசாரணைக் குழுவினரோ, நிபுணத்துவம் பெற்ற தனிப் பிரிவோ எதுவும் இங்கு இல்லை. எனவே, விரைவில் இதற்கென தனி சட்டமோ அல்லது சட்டப்பிரிவோ உருவாக்கப்படுவதுடன் தனி விசாரணைக் குழுவும் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

- இ.இ.இராபர்ட் சந்திரகுமார்

Pin It