நம் நாட்டில் உள்ள நீதித்துறை எப்படி செயல்படுகின்றது? இங்குள்ள நீதிமன்றங்களால் யார் பெரும்பாலும் பயனடைகின்றார்கள்? நீதிமன்றங்களின் பொன்னான நேரம் பெருமளவில் யாரால் கபளீகரம் செய்யப்படுகிறது? என்பது பற்றிய உண்மையை கடந்த 12.08.2013 அன்று உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் நீதிமன்றத்திலேயே பகிரங்கமாக போட்டு உடைத்துள்ளார்.

“இஸ்ரத் ஜஹான்” போலி மோதல் சாவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஐ.பி.எஸ். அதிகாரி பி.பி. பாண்டேவின் முன் ஜாமீன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி. பி.எஸ். சவான் தனது அதிருப்தியை வலுவாகவே பதிவு செய்துள்ளார். நீதிபதி சவான் இவ்வழக்கில், ஐ.பி.எஸ். அதிகாரிக்காக தோன்றிய மூத்த வழக்கறிஞரிடம், “இந்த நீதிமன்றத்தின் பெரும்பான்மை நேரமானது, திறமையுள்ள பல மூத்த வழக்கறிஞர்களால், அரசியல் மற்றும் பணபலமிக்க மிகப் பெரிய குற்றவாளிகளுக்காகவே வீணடிக்கப்படுகிறது” என்று கடுமையாகக் கருத்து வெளியிட்டுள்ளார். மேலும், அவர் இந்நாட்டு மக்களில் பெரும்பான்மையோரின் வழக்குகளுக்காக நீதிமன்றத்தின் 5 சதவிகித நேரம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்றும், இதனால் பெரும்பாலான சட்ட முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் 20 முதல் 30 வருடங்களாக அப்படியே நிலுவையில் உள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்த (உச்சநீதிமன்றம்) நீதிமன்றம் வசதி படைத்த பெரிய குற்றவாளிகளின் புகலிடமாகவே மாறி வருகிறது என்றும் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

பண பலம் மற்றும் அரசியல் பலத்தால் எப்படியாவது தங்களுக்கு சாதாகமான தீர்ப்புக்களை பெற்றுவிடலாம் என்று மிகச் சிறந்த மூத்த வழக்கறிஞர்களை நியமித்துக் கொண்டு இந்நீதிமன்றத்திற்கு கடும் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீண்டும் மீண்டும் 6 முதல் 7 முறை கூட வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார். “இந்நீதிமன்றத்தின் மொத்த நேரத்தையும் அத்தகைய குற்றவாளிகளுக்காகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காகவும் மூத்த வழக்கறிஞர்களாக உள்ள உங்களைப் போன்றோர் எடுத்துக் கொள்கிறீர்கள்” என்று அந்த வழக்கறிஞரிடம் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “இந்தப் போக்கு எந்த வகையில் நியாயமானது?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தை இப்படிப்பட்ட வழக்கறிஞர்களும், பணம் மற்றும் அரசியல் பலமிக்க பெரும் குற்றவாளிகளும் சேர்ந்து விசாரணை நீதிமன்றமாகவே (Trial Court) மாற்றிவிட்டனர் என்றும் தனது அங்கலாப்பைக் கொட்டித் தீர்த்துள்ளார்.

நமது நாட்டின் உச்சநீதிமன்றம் கொஞ்சம் கொஞ்சமாக தனது சுய அடையாளத்தை, மாண்பை, மதிப்பை, அமைக்கப்பட்டதன் நோக்கத்தை இழந்துவிட்டது என்றே கூறலாம். 1950-ல் உச்சநீதிமன்றத்தை அமைத்தபோது, அதன் நோக்கம் மிகத்தெளிவாக அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தலையாயப் பணி குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவது குறித்த வழக்குகளுக்கு முக்கியத்துவம் அளித்து விசாரிப்பது. மேலும், சிக்கலான வழக்குகள், அரசியலமைப்புச் சட்ட விளக்கம் குறித்து குழப்பம் ஏற்படும் வழக்குகள், மாநிலங்களுக்கிடையே எழும் சிக்கலான பிரச்சனைகள் குறித்த வழக்குகள், மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே எழும் அதிகாரப் பகிர்வு குறித்த வழக்குகள் போன்றவற்றில் முழு கவனம் செலுத்தி தேவையான அளவு நீதிபதிகள் அடங்கிய அமர்வுகளை ஏற்படுத்தி அவற்றிற்கு தீர்வு காண்பது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், பிரிவு 136 ன் படி, மிகவும் அரிதாக மட்டுமே, ஏனைய உயர்நீதிமன்றங்களால் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புக்களின் மீது தொடுக்கப்படும் மேல்முறையீட்டு மனுக்களை தனது அதிகாரத்துக்குட்பட்டு ஏற்று நடத்த வழி வகுத்துள்ளது.

ஆனால், இதற்கு நேர்மாறாக, உச்சநீதிமன்றத்தின் பெரும்பான்மை நேரம் மேல்முறையீட்டு வழக்குகளை நடத்துவதிலேயே வீணடிக்கப்படுகிறது. 2013 ஜீன் மாதம் வரை 35439 மேல்முறையீட்டு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அதே நேரத்தில், உச்சநீதிமன்றத்தால், விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் மொத்த வழக்குகளில் 1 சதவிகிதம் கூட அடிப்படை உரிமைகள் பாதிப்பு குறித்த வழக்குகள் இல்லை. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகள் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகின்றன. 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பாக தொடரப்பட்ட 5 வழக்குகளும், 5 நீதிபதிகள் முன்பாக தொடரப்பட்ட 36 வழக்குகளும் பல ஆண்டுகளாக அப்படியே நிலுவையில் உள்ளன. 2007 ஆம் ஆண்டுதான் கடைசியாக 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் பிறகு 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த 6 ஆண்டுகளாக நடைபெறவேயில்லை. 2011 முதல் 2013 வரை வெறும் 15 வழக்குகள் மட்டுமே 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுகளால் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆக, இன்றையச் சூழலில், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்குகள்தான் ஏராளமாக நிலுவையில் உள்ளன. உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை ஆய்வு செய்து தீர்ப்பு வழங்குகின்ற வேலையைத்தான் உச்சநீதிமன்றம் செய்து வருகிறது. இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வுகளே 13 முதல் 14 அமர்வுகள் உள்ளன. இரு இரு நீதிபதிகளாக அமர்ந்து நாட்டின் அதி முக்கியமான அரசியலமைப்பு தொடர்பான வழக்குகளில் கூட தீர்ப்புக்களை பொழிந்து தள்ளுகிறார்கள். அப்படி வழங்கப்படும் தீர்ப்புக்கள் மீது மேல்முறையீடு கிடையாது. அதை சரிசெய்ய ஒரே வழிமுறை சட்டதிருத்தம் கொண்டு வருவதுதான். இப்படித்தான் பல சட்டங்களும், திருத்தங்களும் அவசியமின்றி அதிகரிக்கின்றன. இப்படி உச்சநீதிமன்றத்தின் நோக்கம் நிறைவடையாமல், அதன் முழு வளங்களும், நேரமும் நீதிபதி பி.எஸ். சவான் சுட்டிக்காட்டுவது போல அரசியல், பணபலமிக்க பெருங்குற்றவாளிகளுக்காக, அவர்களுக்காக வாதாடும் திறம்படைத்த மூத்த வழக்கறிஞர்களால் களவாடப்படுகிறது. அதனால் உச்சநீதிமன்றத்தின் மாண்பும், மரியாதையும், அதன் தனித்தன்மையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு அது ஒரு சாதாரண விசாரணை நீதிமன்றத்தைப் போல செயல்பட ஆரம்பித்துவிட்டது.

உண்மையில், உச்சநீதிமன்றம் இந்நாட்டின் பெரும்பான்மை மக்களைப் பொறுத்தவரையில் இருப்பதும், இல்லாததும் ஒன்றுதான் என்றாகிவிட்டது. நாட்டின் 95 சதவிகித மக்களுக்கு உச்சநீதிமன்றம் எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது.

இதற்குக் காரணம், நாட்டு மக்கள் அனைவருக்குமான இந்த உச்சநீதிமன்றம் நாட்டின் தலைநகரில் அமைக்கப்பட்டுள்ளது. தலைநகரே மிகவும் விலையுயர்ந்த இடத்தில், உச்சபட்ச பாதுகாப்புக்கு நடுவே எளிய மக்கள் அவ்வளவு எளிதாக சென்றடையமுடியாத இடத்தில் உள்ளது. பரந்து விரிந்துள்ள இந்நாட்டில் இப்படியான ஒரு ஏற்பாடே பெரும்பான்மை மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி இல்லையா?

இன்றைய உடனடி தேவை என்னவென்றால், உச்சநீதிமன்றத்தை அரசியல் சாசன சட்டத்தின் படி சீரமைப்பதும், இயங்கவைப்பதும், நியாயமான, தகுதியுள்ள, பாரபட்சமற்ற, ஏழைகள் மீது கரிசனையுள்ள நீதிபதிகளை நியமனம் செய்வதும்தான். மேலும், உச்சநீதிமன்றக் கிளைகளை நாட்டின் நான்கு திசைகளிலும் அமைத்து அதன் பயன்கள் அனைவருக்கும் இன்னும் எளிதாகக் கிடைக்கச் செய்வதும்தான். அதுவே இன்றையச் சூழலில் நீதியான செயல்பாடாகும். அப்படி நீதிபரிபாலன முறை எளிமையாக்கப்பட்டு அனைவரும் பயனடையக்கூடியதாக மாற்றப்படாவிட்டால், உச்சநீதிமன்றம் நீதிபதி பி.எஸ். சவான் சுட்டிக்காட்டுவது போல பெருங் குற்றவாளிகள் மட்டுமே பயன்படுத்திக்கொள்ளும் ஒரு மோசடி அமைப்பாகத்தான் தொடர்ந்து நீடிக்கும்.

Pin It