குற்ற வழக்குகளில் அரசுக்கு எதிராக வழக்காட ஏழை கைதிகளுக்கு அரசே இலவச சட்ட உதவிக் கழகம் மூலம் அரசு செலவில் வழக்கறிஞரை கைதிக்கு அமர்த்திக் கொடுக்க வேண்டும். தண்டனை கொடுக்கப்பட்ட வழக்குகளிலும் இலவச சட்ட உதவியைப் பெற உரிமை உண்டு.

தண்டனை கொடுக்கப்பட்ட கைதிக்கு உடனடியாக தீர்ப்பு நகல் கொடுக்கப்பட வேண்டும்.

(i)    தீர்ப்பின் நகலை கைதியிடம் சிறை நிர்வாகம் வழங்க வேண்டும்.

(ii)    சிறையாளி ஏழை எனில் நீதிமன்றம் இலவச சட்ட உதவி மூலம் உரிய வழக்கறிஞரை வைத்துக் கொடுக்க வேண்டும்.

(iii)   அந்த வழக்கறிஞருக்கு அரசே முறையான தொகையை வழங்க வேண்டும்.

விசாரணை நீதிமன்றம் ஓர் படிக்காத ஏழைக் கைதிக்கு இலவச சட்ட உதவி பெற உரிமை உண்டு என்பதைத் தெரிவிக்காமல் வழக்கை நடத்தி தண்டனை கொடுத்தது செல்லாது அவர் விடுவிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி திரு. பகவதி அவர்கள் சுக்தாஸ் எதிர் அருணாச்சல யூனியன் (AIR 1986 Sc 991) வழக்கில் தீர்ப்பளித்துள்ளார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகள் 303 மற்றும் 304 உடன் அரசியல் அமைப்புச் சட்ட அடிப்படை உரிமைகள் பிரிவு 21ஐயும் இணைத்துப் பார்த்தால் ஓர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் அரசுக்கு எதிராக வழக்காட அரசு செலவில் எதிரி தான் தேர்ந்தெடுக்கும் வழக்குரைஞரை வைத்துக் கொள்ள உரிமை உண்டு.

ஆனால் வழக்குரைஞரை எதிரி தேர்ந்தெடுக்காதபோது குற்ற வழக்குகளில் வழக்காட மாநில – மாவட்ட அளவிலான இலவச சட்ட உதவி ஆணையம் செயல்படுகிறது. அதில் சட்ட ஆணையம் தேவையான வழக்குரைஞர்களை நியமித்து வழக்கு நடத்தும்.

Pin It