இன்றைய தேர்தல் வடிவம் ஆங்கிலேயரிடமிருந்து பெறப்பட்டது ஆகும். வரலாற்றில் கிரேக்க நகர அரசான ஏதென்சில் நடைபெற்ற தேர்தல்களைப் பற்றி நாம் அறிகிறோம்.
ஏதென்சு நகர அரசவையில் வாக்களிக்கும் உரிமை பெற்றோர் நேரடியாகக் கலந்து கொண்டு முடிவுகளை எடுத்தனர். ஆனால் அவ்வுரிமை குறுக்கப்பட்டிருந்தது. படைப் பயிற்சி பெற்ற வயதுவந்த ஆடவர் மட்டுமே அவையில் கலந்து கொள்ள முடியும். அடிமைகளுக்கும் பெண்களுக்கும் அவ்வுரிமை இல்லை.
அவையில் கலந்து கொண்டோர் கைகளை உயர்த்தித் தங்கள் ஆதரவு எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். கைகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஒரு கட்டத்தில் கைகளை எண்ணுவது சிரமமானபோது, வண்ணக் கற்களைப் பயன்படுத்தினர். ஆதரவிற்கு வெள்ளைக் கற்களும், எதிர்ப்பிற்குக் கறுப்புக் கற்களும் எடுத்துக் கொள்ளப்பட்டன. இக்கற்கள் ஒரு களிமண் சாடியில் இடப்பட்டு, பின்னர் அச்சாடி உடைத்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
நம் நாட்டில் பிற்காலச் சோழர் காலத்திய குடவோலை முறையே நாம் அறிந்த தேர்தல் முறை. குமுகாயத்தில் உயர்ந்த மட்டத்தில் இருந்தோர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள இம்முறை பயன்பட்டது.
மேற்கண்ட முறைகள் அன்றைய காலத்தின் உயர்மட்டத் தேர்தல் வடிவங்கள் எனக் கொள்ளலாம். பழங்குடி மக்களிடம் கூட தங்கள் கண, குலத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் முறைகள் இருந்துள்ளன என ஆய்வுகள் கூறுகின்றன.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தியத் தேர்தலும் வயதுவந்தோர் அனைவரும் பங்கேற்கும் தேர்தலாக இருக்கவில்லை. 1685இல் அமைக்கப்பட்ட சென்னை மாகாணத்திற்கு 1861இல் தான் சட்ட அவை ஒன்று தோற்றுவிக்கப்படுகிறது. இதற்கு உறுப்பினர்கள் ஆங்கிலேய ஆளுநரால் அமர்த்தப்பட்டார்களே ஒழிய மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
1920இல் மாண்டேகு-செம்சுஃபோர்டு சீர்திருத்தத்திற்கிணங்க இரட்டையாட்சி முறை நடைமுறைக்கு வந்த பொழுதுதான் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் முறை நடப்பிற்கு வந்தது. ஆனால் இத்தேர்தலில் சமீன்தார்களுக்கும், மாவட்டக் கழக உறுப்பினர்களுக்கும், குமுகாயத்தில் செல்வாக்கு மிக்கவர்களுக்கும் மட்டுமே வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. 1920இல் நடைபெற்ற முதல் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்றதும், 1921இல் முதல் வகுப்புவாரி அரசாணை நிறைவேறியதும் வரலாறு.
1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின்படி மாகாணங்களில் மேலவை, கீழவை என இருஅவைகள் அமைக்கப் பட்டன. மேலவைக்கு வாக்களிக்கும் உரிமை கற்றோருக்கும் உடைமை பெற்றோருக்கும் (பட்டதாரிகளுக்கும், பட்டாதாரர்களுக்கும்) மட்டுமே வழங்கப்பட்டது. அவர்களுக்கும் கூட உரிய தகுதிகள் வரையறுக்கப்பட்டன. நிலவுடைமையாளர்கள் குறைந்தது உரூ.300ஃ- வரி செலுத்துபவராக இருக்க வேண்டும். அன்று ஒட்டுமொத்தச் சென்னை மாகாணத்தின் மேலவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந் தெடுக்கும் தகுதி பெற்றவர்களாக மொத்தம் 23,000 பேர் மட்டுமே இருந்தனர்.
கீழவைக்கு வாக்களிக்கும் தகுதி சற்றுத் தளர்த்தப்பட்டு வாக்காளரின் எண்ணிக்கை விரிவாக்கப்பட்டிருந்தது. இங்கும் வாக்களிக்கும் தகுதிக்கு அரசுக்குச் செலுத்தும் வரிதான் வரையறையாகக் கொள்ளப்பட்டது. நகராட்சி வரி, உள்ளாட்சி மன்ற வரி, வாகன வரி, வீட்டு வரி போன்றவை தகுதிக்கான அலகு களாகக் கொள்ளப்பட்டன. நாட்டுப்புறத்தார் கள் குறைந்தது உரூ.50ஃ- குடி வாடகை பெற்றுத்தரவல்ல சொத்துகளையும், நகர்ப் புறத்தார்கள் குறைந்தது உரூ.100ஃ- வாடகை பெற்றுத் தரக்கூடிய சொத்துகளையும் பெற்றிருக்க வேண்டும். படைஞர்களின் குடும்பத்தார்க்கு வாக்குரிமை இருந்தது. எழுத்தறிவு பெற்றோர் அனைவருக்கும் வாக்குரிமை உண்டு.
ஆங்கிலேயர் அகன்ற பின் 1952இல் நடந்த முதல் பொதுத் தேர்தலில்தான் 21 அகவை அடைந்தோர் அனைவரும் எவ்வகை வேறுபாடுமின்றி வாக்குரிமை பெற்றனர். ‘இளைஞர்’ இராசீவ் ஆட்சிக் காலத்தில் 18 அகவை இளைஞர் அனைவருக்கும் வாக்குரிமை வந்து சேர்ந்தது.
தேர்தலோடு கூடவே ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்தாம் ஊழலும் வன்முறையும். சிலர் நினைப்பது போல் அவை என்னவோ கருணாநிதியாலும், செயலலிதாவாலும் தோற்றுவிக்கப்பட்டவை அல்ல. தேர்தல் வெற்றி பதவியையும் அதிகாரத்தையும் பெற்றுத் தருகிறது. எனவே தேர்தலில் வெற்றி பெற எல்லா வகையான வழிமுறை களையும் கையாளலாம். இதுவே அன்றிலிருந்து இன்று வரை தேர்தல் அரசியல் பாலபாடமாக இருக்கிறது. தேர்தலில் பங்கேற்கும் அனைத்துக் கட்சிகளும் விதி விலக்கின்றி எல்லா வகை வழிமுறை களையும் பின்பற்றுகின்றன. இதில் புனிதமான கட்சிகள் என்றோ, புரட்சிக் கட்சிகள் என்றோ எவையும் இல்லை.
1920ஆம் ஆண்டு மாண்டேகு-செம்சுஃபோர்டு சீர்திருத்தம் கொண்டு வந்த தேர்தல் “அதிகார ஆசையும் பணத்தாசையும் உள்ளவர்கள் போட்டியிடக் கூடிய நிலையை உருவாக்கி விட்டது” என்று குடியரசு ஏட்டில் பெரியார் எழுதினார். போட்டியிடும் கட்சிகளைப் பற்றி அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்: “மந்திரியாய் இருக்கும் கட்சி, மந்திரியாய் வர ஆசைப்படும் கட்சி, எது ஜெயிக்குமோ அதில் சேரும் கட்சி” (பெரியார்: சுயமரியாதை சமதர்மம் பக்:85) ஒவ்வொரு கட்சியாரும் தங்கள் கட்சிக்கு ஆட்களைச் சேர்க்கக் கண்ணை மூடிக்கொண்டு கேட்டதெல்லாம் தருவதாக வாக்குறுதி தருகின்றனர் என வருந்தும் பெரியார் தேர்தலில் வெற்றி பெற்றவர்களைப் பற்றி இவ்வாறு கடுந்திறனாய்வு செய்வார்:
“தமிழ்நாட்டைப் பொறுத்த வரை 30,35 பொது இடங்களில் வெற்றி பெற்றிருப்பவர்களோ ஜமீன்தார்கள், லேவாதேவிக்காரர்கள், பார்ப்பனர்கள், வக்கீல்கள், 500, 1000, 10000 ஏக்கர் நிலங்கள் வைத்துக் கொண்டிருக்கும் பெரிய மிராசுதாரர்கள் ஆகிய வியாபாரிகள். இவர்களைத் தவிர வேறு யாருமில்லை. இந்தக் கூட்டத்தார் ஏழை மக்களின் பிரதிநிதிகள் என்றால் இவர்களை விட வெள்ளைக் காரர்களே அரசாட்சியில் இருப்பது என்ன கெடுதி என்பது நமக்கு விளங்கவில்லை.”
தேர்தலில் தில்லு முல்லுகளைத் தொடங்கி வைத்த பெருமை காங்கிரசையே, குறிப்பாக அன்று அக்கட்சியில் கோ லோச்சிய பார்ப்பனரையே சேரும். அரசுப் பதவிகளில் இட ஒதுக்கீட்டிற்கு வழி வகுத்ததோடு நில்லாமல் நீதிக்கட்சி தன் ஆட்சிக் காலத்தில் இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், தேவதாசி ஒழிப்புச் சட்டம் போன்ற அதிரடிச் சட்டங்களை நிறைவேற்றி யதைக் கண்டு மிரண்டுபோன சத்தியமூர்த்தி, “அக்கட்சியை எப்படியாயினும் தோற்கடித்தே தீர வேண்டும் என்ற வெறியுடன் பலவகைப் பச்சோந்தி களையும் தம்மோடு சேர்த்து அணைத்துக் கொண்டு குறுக்கு வழிகளில் நடைபோடத் தயங்கவில்லை” என்று குறிப்பிடுவார் குணா (இந்தியத் தேசியமும், திராவிடத் தேசியமும், பக்.331-332).
கட்சித் தாவல்களைத் தொடங்கி வைத்த கட்சியாகவும் காங்கிரசு இருந்திருக்கிறது. நீதிக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் நெல்லை மாவட்டத்தில் முதற்பெரும் பண்ணையார் குடும்பத்தினரும் ஆகிய எம்.டி.டி. குமாரசாமி முதலியார் 1935இல் நடைபெற்ற மாவட்ட ஆட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரசுக் கட்சிக்குத் தாவினார். அதேபோல் 1934இல் நீதிக் கட்சியிலிருந்து காங்கிரசுக்குச் சென்ற பி. இரத்தினவேலுத் தேவர் தெற்குத் திருச்சி மாவட்ட ஆட்சி மன்றத் தலைவரானார். பின்னர் 1937இல் சென்னைச் சட்டமன்ற காங்கிரசு உறுப்பினரானார். காங்கிரசுக் கட்சியின் வலிமை பெருகப் பெருக நீதிக் கட்சியிலிருந்த பெரும் முதலைகள் ஓசையின்றி காங்கிரசுக்குப் பயணமாயினர். பெரியார் ஆதரித்த பி. சுப்பராயனும் 1936இல் காங்கிரசில் இணைந்தார். இராசாசி தலைமையில் அமைச்சரவை அமைந்த பொழுது அவர் கல்வி - சட்டத்துறை அமைச்சரானார். இந்தி கட்டாயப்பாடமாக் ;கப்பட்டது இவரின் கீழ்தான்.
1934இல் தில்லி சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரசு, நீதிக் கட்சி யின் அன்றைய தலைவர் எஸ்.ஏ. முத்தையா செட்டியாருடன் செய்து கொண்ட கமுக்க உடன்பாடு காங்கிரசின் நேர்மையின்மைக்கு இன்னொரு எடுத்துக்காட்டாகும். சென்னை மாநகராட்சித் தலைவராக முத்தையா செட்டியார் தேர்ந்தெடுக்கப்பட காங்கிரசு உதவும். அவரோ தம்முடைய நாட்டுக் கோட்டைச் சாதி வாக்குகளைக் காங் கிரசுக்குக் கிடைக்குமாறு பார்த்துக் கொள்வார். இதுவே அந்தக் கமுக்க உடன்பாடு. நீதிக் கட்சி அத்தேர்தலில் 7 சட்டமன்றத் தொகுதி களையும் இழந்தது.
அரசியலில் அன்பு வழியையும் அற வழியையும் வலியுறுத்தினார் காந்தி. ஆனால் அவரது கட்சியானகாங்கிரசு அவ்வழிகளைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை. ஏன், காந்தி யாரே கூட கட்சியின் உள் சிக்கல்களில் அறமற்ற வழிகளில் செயல்பட்டுள்ளார். தமது விருப்பத்திற்கு மாறாக காங்கிரசுக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஸ் சந்திரபோசைத் தலைமைப் பதவியிலிருந்து இறக்க பட்டேல், நேரு, ஆசாத், கிருபாளானி ஆகியோரைத் தூண்டி விட்டு காந்தி சூழ்ச்சி செய்துள்ளார். நேதாசி மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது நாட்டு நலனுக்கு ஊறு விளைவிக்கும் என அவரின் உடன்பிறப்பான சரத் சந்திரபோசுக்குப் பட்டேல் காந்தியின் கட்டளைப்படி தந்தியனுப்பினார். ஒரு தடவைக்கு மேல் யாரும் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது என ஓர் அறிக்கையும் காந்தியின் அறிவுரைப்படி வெளியிடப்பட்டது. இருமுறை தலைவர் பதவி வகித்த நேருவும் நேதாசிக்கு எதிராக ஓர் அறிக்கை வெளியிட்டது அதன் உச்சம். இதுதான் காங்கிரசு கடைப்பிடித்த சனநாயக நெறி. ஆனால் இச்சூழ்ச்சிகளையெல்லாம் முறியடித்து அத் தேர்தலில் (1939) நேதாசி வெற்றி பெற்றார் என்பது வேறு செய்தி. விரிவான விளக்கத்திற்குப் பார்க்க: எஸ்.வி. ராஜதுரையின் பெரியார்: ஆகஸ்ட் 15-பக் 86-127. சுபாஸ் போசும் காந்தியும்)
தமிழ்நாட்டுக் காங்கிரசில் தங்கள் ஆதிக்கம் குலைந்து விடாமலிருக்கப் பார்ப்பனர்கள் அனைத்து சாம பேத தான தண்டங்களையும் பயன்படுத்தியுள்ளனர். 1927இல் கோவையில் நடந்த நீதிக் கட்சி மாநாட்டுத் தீர்மானத்தின்படி காங்கிரசில் பார்ப்பனரல்லாதோர் எண்ணிக்கை யைப் பெருக்குவது என்ற திட்டத்தோடு அக்கட்சியில் இணைந்த ஏ. இராமசாமி முதலியாரை அ.இ. காங்கிரசுக்; கமிட்டிக்குத் தேர்ந்தெடுக்க தமிழ்நாடு காங்கிரசார் மறுத்துவிட்டார்கள். உறுப்பினர் படிவங்களைக் கூட மறைத்து வைத்து விட்டார்கள் (எஸ்.வி. இராசதுரையின் பெரியார்: சுயமரியாதை சமதர்மம். பக்.40) இது குறித்து ‘நகர தூதன்’ தன் 2.9.1933 தலையங்கத்தில் பின் கண்டவாறு எழுதியது: “ஜஸ்டிஸ் கட்சியாருள் இஷ்டப்படுவோர் (காங்கிரசில்) சேரலாமென கோயமுத்தூரில் 1927இல் அனுமதி அளிக்கப்பட்டது. உடனே காங்கிரசைப் பிதுரார்ஜித சொத்தாக உபயோகித்து வந்த கூட்டத்திற்குச் சங்கடம் வந்துவிட்டது. ஜஸ்டிஸ் கட்சியார் காங்கிரசுக் குள் நுழையாதபடி கதவு மூடிப் ப+ட்டுப் போடப்பட்டது. இதனால் சென்னை முதல் திருநெல்வேலி வரையுள்ள எல்லாத் தமிழ் ஜில்லாக்களிலும் நடக்க வேண்டிய காங்கிரஸ் கமிட்டித் தேர்தல்கள் அக்கிரகாரத்துக் குள்ளேயே நடந்த விவரம் எல்லோருக்கும் தெரியும்” (மேற்கண்ட அதே நூல்: பக்.41). காங்கிரசு உட்கட்சித் தேர்தலின் சனநாயக யோக்கியதை இப்படித்தான் இருந்தது.
வாக்காளர்களைத் தங்கள் கட்சிக்கே வாக்களிக்கச் செய்ய எல்லா முறைகேடு களையும் காங்கிரசார் பயன்படுத்தியுள்ளனர். வாக்கு வேட்டையில் அன்று அவர்களுக்கு ஈடாக யாரும் இருக்கவில்லை. 1935ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டம் வழங்கிய எழுத்தறிவு பெற்றவர்களுக்கான வாக்குரிமை யைப் பெற உள்ளுர் வாக்காளர் பதிவு அலுவலகங்களுக்குச் சென்று பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். காங்கிரசுக் கட்சி இதைத் தக்கவாறு பயன்படுத்திக் கொண்டது. தம் கட்சியைச் சேர்ந்தவர் களையும் வேண்டியவர்களையும் பதிவு அலுவலகங்களுக்கு அழைத்துச் சென்று பதிவு செய்து கொண்டது. இப் பதிவிற்குத் தாங்கள் எழுத்தறிவு பெற்றவர்கள் என்று ஏதோ ஒரு வகையில் மெய்ப்பித்தால் போதுமானது. (குணாவின் இந்தியத் தேசியமும், திராவிடத் தேசியமும் -பக்.335)
வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு வாகனங்களில் அழைத்து வருவது, தேர்தல் அறிவித்த நாள் தொடங்கி தேர்தல் முடியும் வரை மூன்று நேரமும் கறிவிருந்து வைப்பது என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் வாக்காளர்களை மிரட்டுவதையும் காங்கிரசு தன் வாடிக்கையாகக் கொண்டிருந்தது. காங்கிரசின் இத் தேர்தல் திருவிளையாடல்கள் 1967 வரை தமிழ்நாட்டில் தொடர்ந்தன. காங்கிரசிலிருந்த பட்டாக்காரர்களும், மன்றாடியார்களும், வாண்டையார்களும், மகாலிங்கங்களும், டி.வி. சுந்தர அய்யங்கார் களும், கோவைப் பஞ்சாலை நாயுடுகளும் காங்கிரசின் தேர்தல் வெற்றிக்கு வேண்டிய உதவிகளை வேண்டியவாறு செய்தனர். இவர்களின் பேராதரவுடன்தான் கல்விக் கண் திறந்த காமராசர் ஏழைப் பங்காளராக வெற்றி உலா வந்தார்.
தேர்தல்களைத் திட்டமிட்டு மோசடியாக நடத்த முடியும் என்பதற்கு இன்றுவரை எடுத்துக் காட்டாகத் திகழ்வது ஜம்மு - காசுமீர் மாநிலத் தேர்தல்களே. உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஈடிணையற்ற ஜனநாயகவாதி சவகர்லால் நேருவின் தலைமையில் தான் காசுமீரத்தில் மோசடித் தேர்தல்கள் தொடங்கி வைக்கப் பட்டன. நேரு காலத்தில் நடைபெற்ற 1952,1957,1962 ஆகிய மூன்று தேர்தல்களுமே நேர்மையற்ற முறையில் நடத்தப் பெற்ற தேர்தல்களே. இந்தியாவுடனான இணைப்பைக் காசுமீர மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதற்குத் தேர்தல் மூலம் ஏற்பிசைவு வழங்கியுள்ளனர் என உலக அரங்கில் நிறுவவே இம்மோசடித் தேர்தல்கள் அங்கே அரங் கேற்றப்பட்டன. இந்தியாவுடனான இணைப்புக் குறித்து காசுமீர மக்களிடம் தனியான பொது வாக்கொடுப்பு இனித் தேவையில்லை எனத் தர்க்கமிட இத்தேர்தல்கள் பயன்படுத்திக் கொள்ளப் பட்டன. அம்மாநிலத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் 1977 தேர்தல் ஒன்றைத் தவிர அனைத்துமே திட்டமிட்டப்பட்ட மோசடித் தேர்தல்களே.
தேர்தல் வெற்றிக்கான கமுக்கங்களைக் காங்கிரசிடமிருந்தே மற்ற கட்சிகள் கற்றுக் கொண்டன.தேர்தல் வெற்றி ஒன்றே குறிக்கோளாகிய பின் கொள்கையைப் பற்றிக் கவலைப்படாமலிருப்பது கட்சிகளுக்கு இயல்பாகிப் போனது. இதில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றெல்லாக் கட்சிகளுக்கும் முன்காட்டாய்த் திகழ்;ந்தது. தேர்தலுக்காய்க் கட்சியின் அடிப்படை உயிர்நாடிக் கொள்கையான திராவிட நாட்டு விடுதலைக் கொள்கையையே அது கைவிட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்குச் செல்லவிடாமல் முடக்கிப் போட்டது. கடவுள் மறுப்பு, வடவர் எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு ஆகியனவற்றைப் படிப்படியாகக் கை கழுவியது. இன்றுள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர் களுக்கு இக்கொள்கையைப் பற்றித் தெரிந்திருக்கக் கூட வாய்ப்பில்லை. கட்சியின் முன்னணித் தலைவர்களே அவற்றை மறந்து பல்லாண்டுகள் ஆயிற்று. இன்று அக்கட்சி பெயரளவில் திராவிட முன்னேற்றக் கழகமாயிருக்க, மெய்; நடப்பில் இந்தி, இந்து, இந்திய, முன்னேற்றக் கழகமாய்த் திரிந்து போயிற்று.
இன்னொரு வகையிலும் திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியத் துணைக் கண்ட அரசியலுக்கு முன் வழிகாட்டுப் பாதை ஒன்றை அமைத்துக் கொடுத்தது. 1967இல் அண்ணா கண்ட கூட்டணிப் பாதைதான் அது. மக்கள் பகைக் காங்கிரசைத் தோற்கடிப்பதை நோக்கமாய்க் கொண்டு அக்கூட்டணி அமைக்கப்பட்டதாய்க் கூறப்பட்டாலும், இன்றுவரை அது அண்ணாவின் அரசியல் விரசாண்மை (சூழ்ச்சி) என்று பாராட்டப் பட்டாலும், உண்மையில் அக்கூட்டணியும் கொள்கைகளைக் கைவிட்டு அமைக்கப்பட்ட கூட்டணிதான். திராவிட இயக்கப் பகைவரான குல்லுகப்பட்டர் இராசாசியுடன் அண்ணா கைகோக்க, இராசாசியோ ப+ணூலை ஒரு கையில் பிடித்துக் கொண்டு மறுகையில் உதயசூரியனுக்கு வாக்களிக்கப் பார்ப்பனருக்கு வேண்டுகோள் விடுத்தார். இக்கூட்டணியே பின்னாளில் 1977இல் நெருக்கடி காலச் சட்டத்தை நடைமுறைப் படுத்திய இந்திராகாந்தி ஆட்சியை முடிவிற்குக் கொண்டுவர பாரதிய சனதா கட்சியின் அன்றைய வடிவமான சனசங்கம் இடம்பெற்ற சனதாக் கட்சியை இடதுசாரிகள் ஆதரிக்க வழி வகுத்தது.
1967இல் அண்ணா இராசாசியுடன் கூட்டுச் சேர்ந்ததை நாம் குறை கூறினாலும், அன்று காங்கிரசைத் தோற்கடிப்பது கட்டாயத் தேவையாக இருந்தது. அதனால்தான் அக்கூட்டணிக்கு மக்களிடம் வரவேற்பு இருந்தது. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. காங்கிரசைக் குழி தோண்டிப் புதைத்தது. அதுபோலவே 1977 கூட்டி யக்கமும் நெருக்கடி காலக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால் பின்னாளில் வந்த எந்தக் கூட்டணியையும் கூட்டியக்கத் தையும் பாராட்ட அவற்றிற்கு எந்த நோக்கமும் குறிக்கோளும் இல்லை. பதவி நோக்கம,; ஆட்சியைக் கைப்பற்றுவது மட்டுமே இருந்தது. நெருக்கடி காலத்தில் ஸ்டாலின் உட்பட முன்னணித் தலைவர்கள் சொல்லவொண்ணாக் கொடுமைகளுக்கு உள்ளாகியும், சிட்டி பாபுவையும், சாத்தூர் பாலகிருட்டிணனையும் இழந்தும் அடுத்த தேர்தலில் நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக! என்று அழைத்த கொடுமையை என்ன சொல்ல? இந்துத்துவ பாரதிய சனதாவுடன் கூட்டணி சேர்ந்ததை என்ன சொல்ல? மீண்டும் காங்கிரசு கூட்டணிக்கே திரும்பியதை என்னவென்று அழைக்க? அதேபோல இடதுசாரிகள் திமுக,அதிமுக என்று மாறி மாறிக் கூட்டணிகள் வைத்துக் கொள்வதைப் புரட்சியை விரைவுபடுத்த என்று விளம்பவா?
ஏற்றுக் கொண்ட நோக்கத்தைக் கைவிட்டு விட்டுக் கூட்டணி தேடி ஓடிய கட்சியைக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பார்த்தோம். நெடுமாறன் தலைமையில் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் பாதுகாப்புக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகள் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே, போர்க்களத்தில் ஆயிரம் ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டுக் கொன்றிருந்த நேரத்திலேயே, துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடோடிப் போய்க் கருணாநிதி பின்னாலும் செயலலிதா பின்னாலும் அணி அமைத்துக் கொண்டு ஈழத்தமிழரையே மறந்து போயினரே!
தேர்தல் மீதிருந்த ஒருசில மாயைகளையும் அண்மைக்கால இடைத்தேர்தல்கள் உடைத் தெறிந்தன. அதிகார வலிமையும், பண வலிமையுமே தேர்தல் முடிவைத் தீர்மானிக்க வல்ல பெரும் ஆற்றல்கள்என்பதை அவை மெய்ப்பித்துள்ளன. இவ்விரு வலிமைகளுடன் அழகிரியின் அடியாள் வலிமையும் சேர்ந்து கொண்டபோது எதிரிகள் காணாமல் போயுள்ளனர். இவ்வெற்றிகளை செயலலிதா குறை கூறுவதுதான் நகைப்பிற்கிடமானது. இவர் முதலமைச்சராக இருந்தபொழுது நடைபெற்ற நான்கு இடைத்தேர்தல்களிலும் (2002) அதிமுகவே வெற்றி பெற்றது. இப்பொழுது செயலலிதா முன்வைக்கும் அதே குற்றச் சாட்டுகளைத்தான் அப்பொழுது கருணாநிதி செயலலிதா மீது சுமத்தினார். செயலலிதா காலத்தில் சென்னை மாநகராட்சித் தேர்தலில் நடந்த வன்முறைகளையும், கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நடந்த அதனினும் மோசமான வன்முறைகளையும் பார்த்தோம். இவ்விருவரில் எவரும் புனிதரில்லை. இருவரும் கடைந்தெடுத்த கயவர்களே! மக்கள் பகைவரே!
தேர்தல் கட்சிகள் மூடி மூடி மறைத்த பச்சையான உண்மை ஒன்றை இவ்விடைத் தேர்தல்கள் வெளிச்சமிட்டுக் காட்டின. தொடர்ந்து இடைத்தேர்தல்களில் அடிவாங்கிய செயலலிதா கம்பம், தொண்டாமுத்தூர், இடையான்குடி இடைத்தேர்தல்களைப் புறக்கணிப்பதாய்த் தடாலடியாக அறிவித்தார். ஆனால் புரட்சித்தலைவியை வாயாரப் புகழும் எந்தத் தொண்டனும், அவரது அறை கூவலுக்குச் செவிசாய்க்கவே இல்லை. இவ்விடைத் தேர்தல்கள் அனைத்திலும் இதுவரை அங்குப் பதிவாகாத அளவி;ற்கு 70,75 விழுக்காட்டிற்கு மேல் வாக்குகள் பதிவாகின, நாளிதழ்கள் வியந்து செய்திகளாக்கின. புரட்சித் தலைவி வெளிறிப் போனார் என்பதே உண்மை. கட்சிகளுக்குக் கொள்கைப் பிடிப்புகள் இருந்தால் தொண்டர்கள் தலைமைக்குக் கட்டுப்பட்டு நடப்பர். பெயரளவுக்கேனும் கொள்கை, குறிக்கோள் என்று ஒன்றுமில்லாத இக்கட்சிகள் பணம், பதவி என்பனவற்றிற்கு மட்டுமே இயங்கும் பொழுது அவை எங்குக் கிடைக்கின்றனவோ அங்குத் தாவுவது தானே இயல்பாயிருக்கும்! அண்ணா திமுக தொண்டர்கள் திமுக வாரியிறைத்த பணத்திற்கு இறையாகிப் போயினர். ஏற்கெனவே நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணா திமுகவின் வாக்குச் சாவடி முகவர்கள் பலர் திமுகவின் பிடியில் இருந்ததாக அடிபட்ட பேச்சை இவ்விடைத் தேர்தல்கள் உண்மையாக்கின. இவ்விடைத் தேர்தல்களில் தேர்தல் சனநாயகத்தைக் காப்பாற்றுவதே தம் புரட்சிக் கடமைகளில் முதன்மையானது என்று அறிவிக்காத அறிவிப்போடு தேர்தலில் குதித்த இடதுசாரிகள் கட்டுத் தொகையையும் இழந்து போனது சோக நகைச்சுவை. வந்தவாசியிலும், திருச்செந்தூரிலும் பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்த 49ஓ தோற்றுப் போனதும் இந்த அடிப்படையில்தான். கட்சிகளின் கொள்கை வெறுமைகள் ஊரறிய உலகறிய அம்பலப்பட்டுப் போயின.
கடைசியாக நடைபெற்ற பெண்ணாகரம் இடைத்தேர்தல் இன்றைய தேர்தல் சனநாயகம் எவ்வளவு கேலிக் கூத்தானது என்பதை மேலும் மெய்ப்பித்துள்ளது. இத்தேர்தல் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதற்காக நடைபெற வில்லை. யாரை இரண்டாவது இடத்தில் வெற்றி பெறச் செய்வது என்பதற்காகவே நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் விலைவாசி உயர்வு உள்ளிட்ட அத்தனை வாழ்க்கைச் சிக்கல்களையும் ஒதுக்கி எறிந்துவிட்டு, ஈழமக்களின் முள்வேலி வாழ்க்கை பற்றிய கவலை(?) சிறிதும் இன்றி கட்சிகள் அனைத்தும் இரண்டாவது இடத்தை முடிவு செய்ய பெண்ணாகரம் தேர்தல் களத்தில் ‘போர்’ செய்தன.
இதில் உச்சகட்ட நகைச்சுவை என்னவென்றால் ஆளும்கட்சித் தலைவர் முதல்வர் கருணாநிதியும், எதிர்க்கட்சித் தலைவர் செல்வி செயலலிதாவும் ‘இந்த இரண்டாவது இடத்தை’ப் பற்றியே பெரிதும் கவலைப்பட்டனர். பெரிய மருத்துவர் அய்யாவும், சின்ன மருத்துவர் அய்யாவும் இந்த இரண்டாவது இடத்தைப் பெற்றே தீருவது எனக் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்தனர். இரண்டாவது இடம் கிடைத்த பொழுது வெற்றியைக் காட்டிலும் இதுவே மகத்தானது எனக் கொண்டாடி மகிழ்ந்தனர். இரண்டாவது இடம் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணியைத் தீர்மானிக்க வல்லது என்கின்றனர் தேர்தல் அரசியல் திறனாய்வு வித்தகர்கள். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட அடுத்த ஓரிரு நாள்களிலேயே பாமக தலைவர் கோ.க.மணி மீதான வழக்குத் திரும்பப் பெறப்பட்டது நோக்கத்தக்கது.
சாதி வர்க்க ஏற்றத் தாழ்வுகளுள்ள குமுகாயத்தில் நடைபெறும் தேர்தல்கள் சம ஆற்றல் பெற்றவர்களுக்கு இடையிலான, சமமான போட்டியுடைய தேர்தல்களாக, நேர்மையான தேர்தல்களாக இருக்க வாய்ப்பில்லை என்பதையே தேர்தல் வரலாறு நமக்குச் சுட்டி நிற்கிறது. இங்கு உண்மையான சனநாயகம் என்பதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. இத்தேர்தல்களில் போட்டியிட்டுக் குமுகாய மாற்றத்தைக் கொண்டு வருவது என்பது கானல்நீர்த் தேடலே. இத்தேர்தல்களில் போட்டியிடுவதற்கான முதல் நிபந்தனையே கொள்கைளில் சமரசம் செய்து கொள்வதுதான்! இக்கொள்கைச் சமரசம் இறுதியாகக் கொள்கைகளைக் கைகழுவுவதி லேயே கொண்டு போய்விடும் என்பதையே திராவிட, பொதுமை இயக்க வரலாறுகள் காட்டுகின்றன. தம் கட்சி உறுப்பினர் களிடையே பொதுமைப் பண்பு குறைந்து போனதற்குக் கூட்டணித் தேர்தல்களே காரணம் என காரத் அண்மையில் ஒப்புக் கொண்டுள்ளார்.
தமிழ்த் தேசிய விடுதலையையும் சமூக நீதியையும் இரு கண்களாகக் கொண்டுள்ள நாம் ஒருபோதும் தேர்தலில் பங்கேற்பதின் மூலம் இவற்றைக் கண்டடைய முடியாது. அதிகாரமே இல்லாத தமிழ்நாடு சட்டமன்றத்திற்குச் செல்வதின் மூலமாகவோ, நாடாளுமன்றத்திற்கு நாற்பது உறுப்பினர்களை அனுப்புவதின் மூலமாகவோ எதனையும் சாதித்துவிட முடியாது என்பதே வெள்ளிடைமலை.
நாம் தேர்தலைத் தேர்தல் என்பதற்காகவோ, முதலாளித்துவ சனநாயகத் தேர்தல் என்பதற்காகவோ புறக்கணிக்கவில்லை. இங்கு நடைபெறும் தேர்தல்கள் மூலம் நம் நோக்கங்கள் நிறைவேற மாட்டா, மாறாகச் சிதைந்துவிடும் என்பதனாலேயே புறக்கணிக்கிறோம்.
பெரும்பாலான மக்களும் தேர்தலினால் தமக்கு எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்தே உள்ளனர். யார் வெற்றி பெற்றாலும் தம் சிக்கல்கள் தீரப்போவதில்லை என்பதில் தெளிவாக உள்ளனர். அதனாலேயே அப்போதைக்குக் கிடைக்கும் பயன்களைப் பெற்றுக் கொள்கின்றனர். இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என்ற மனநிலையில் வாக்களிக்கின்றனர். அவர்களுக்கு மாற்று அரசியல், போராட்ட அரசியல் முழுமையாய்ச் சென்றடையவில்லை.
சமூகநீதித் தமிழ்த் தேசிய அரசியலாளர்கள் மக்களை நோக்கிப் பயணிக்க வேண்டும். மக்களிடம் கற்றுக்கொண்டு மக்களிடையே பணியாற்ற வேண்டும். சரியான அரசியல் மக்களைப் பற்றிக் கொள்ளும் பொழுது போராட்டப் பாதைக்கு வழி திறக்கும்.
பல கட்சிகள் பங்கேற்கும் தேர்தல் வடிவத்திற்கு மேலான சனநாயக வடிவம் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை. இப்போதைக்கு இதுவே உயர்ந்த வடிவம். சாதிகளற்ற, வர்க்கங்கள் ஒழிந்த பொதுமைச் சமூகத்தில் கட்சிகளற்ற தேர்தல் சாத்தியப்படலாம். சோவியத்தில் நடந்த தேர்தல்கள் ஒரு கட்சி வல்லாட்சிக்கும், பின்னர் வரம்பற்ற தனியாள் ஆட்சிக்குமே வழிகோலின. இன்று சீனா, கிய+பா நாடுகளிலுள்ள சனநாயகம் ஒரு கட்சி சார்ந்ததாகவே உள்ளது.
எதிர்காலச் சமூக நீதித் தமிழ்த் தேசக் குடியரசில் உண்மையான மக்களாட்சிக் கோட்பாடுகள் தழைக்கத் திட்டமிடுவோம்! வழி காண்போம்.
- கலைவேலு
(சமூகநீதித் தமிழ்த் தேசம் ஏப்ரல் 2010 இதழில் வெளியான கட்டுரை)