முஸ்தபா சூபி 1882 ஆம் ஆண்டு சாம்சன் நகரில் பிறந்தார். அவரது தந்தை அலி ரியோபெய். சிரியாவில் பள்ளிக் கல்வியை முடித்தார். இஸ்தான்புல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டம் பயின்றார். மாணவப் பருவத்திலேயே புரட்சிகர இயக்கங்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்.

                Mustafa_Subhi_380சோர்போனில் சமூகவியல் பயின்றார். ‘துருக்கியில் வேளாண் கடன் நிறுவனங்களின் நிலையும் திட்டமும்’ என்ற ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். அவரது ஆய்வுக்கட்டுரை 1911 ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற கடன் நிறுவனங்களின் மாநாட்டில் மிகுந்த பாராட்டைப் பெற்றது.

                இளம் துருக்கியர்களுடன் கொண்ட தொடர்பால் சூபி சோசலிசக் கொள்கையால் கவரப்பட்டார். பாரிசில் தங்கியிருந்த போது ஏராளமான சோசலிச நூல்களைப் பயின்றார். இரண்டாம் அகிலத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு, ஏகாதிபத்தியம், காலனி ஆதிக்கம் மற்றும் போருக்கு எதிராகப் போராட வேண்டியதன் தேவையை உணர்ந்தார்.

                தொழிலாளர்களின் நிலை மற்றும் தொழிற்சங்க இயக்கம் குறித்து ‘டானின்’ என்னும் துருக்கி இதழில் பல்வேறு கட்டுரைகள் எழுதினார்.

                துருக்கியில் இளம் துருக்கியர்களின் முதலாளித்துவப் புரட்சி 1908 ஆம் ஆண்டு நடைபெற்றது. இரயில்வே, புகையிலை, தோல், அச்சுத் தொழிலாளர்கள் இஸ்தான்புலில் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினர். வேலை நிறுத்தங்களிலும் ஈடுபட்டனர். இப்போராட்டம் தொழிலாளர்களிடம் ஒருமைப்பாட்டையும், போர்க்குணத்தையும் ஏற்படுத்தியது.

                தேசிய அரசியல் சாசன ஆதரவாளர்களின் குழு ஒன்றை 1912 ஆண்டு சூபி ஏற்படுத்தினார். ‘தெளிந்த சிந்தனை’ என்ற இதழைத் தொடங்கினார். அந்த இதழில் இளம் துருக்கிய அரசாங்கம் உழைக்கும் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைத்து வந்ததை கடுமையாக எதிர்த்து எழுதினார். துருக்கிய மக்களுக்கு கடுமையான துயரங்களை ஏற்படுத்திய பால்கன் போர் முதலிய இராணுவ நடவடிக்கைகளை கண்டித்து எழுதினார். சூபி, அரசாங்கத்துக்கு எதிராக துணிச்சலுடன் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அதனால், சூபி பொய்யான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டுத் தொலைதூரப் பிரதேசமான சீனாப்பகுதியில் பதினைந்து ஆண்டு காலம் சிறை வைக்கப்பட்டார். 1914 ஆம் ஆண்டு அவர் பெருங்கடலைக் கடந்து ரஷ்யாவுக்குச் சென்றார். முதல் உலகப்போர் வெடித்ததைத் தொடர்ந்து அவர் காலுகாவுக்கும், அதன் பிறகு ஆயிரக்கணக்கான துருக்கிய போர்க்கைதிகளுடன் யூரலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டார்.

                யூரல் பகுதியில் கிராமப்புற உழைக்கும் மக்கள் அனுபவித்து வரும் துன்பதுயரங்கள் மற்றும் தொழிலாளர்கள் மீதான சுரண்டல் குறித்து மக்களிடையே தீவிரமான பிரச்சாரம் செய்தார். மேலும், அங்கு தலைமறைவாக செயல்பட்டு வந்த இரஷ்ய போல்ஷ்விக் கட்சியினருடன் தொடர்பு கொண்டார். அவர்கள் மூலம் மார்க்சிய நூல்களைப் பெற்று கற்றறிந்தார்.

                இரஷ்யாவில் நடைபெற்ற அக்டோபர் புரட்சி சூபியின் அரசியல் பணியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. துருக்கியில் வீழ்ச்சியடைந்து வரும் சுல்தான் ஆட்சிக்கு எதிராகப் போராட புரட்சிகர அமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார். இதற்கு மார்க்சிய லெனினிய பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லவும், சோசலிஸ்டுகளை ஒருங்கிணைப்பதற்கும் கம்யூனிஸ்ட் இதழ் ஒன்றை துவக்க வேண்டியது அவசியமாக இருந்தது. 1918 ஆம் ஆண்டு சூபி, மாஸ்கோவில் ‘புதிய உலகம்’ என்னும் ஒரு இதழைத் தொடங்கினார். இந்த இதழ் துருக்கியப் புரட்சியாளர்களின் போர்க்குணமிக்க கருத்து ஆயுதமாக விளங்கியது.

                முஸ்தபா சூபியின் தீவிர முயற்சியினால் துருக்கிய இடதுசாரி சோசலிஸ்டுகளின் முதல் மாநாடு 1918 ஜூலையில் மாஸ்கோவில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பல்வேறு சோசலிஸ்ட் கட்சிகள் ஒருங்கிணைந்து ஒரே கட்சியாக உருவாக்கப்பட்டது. அதே வேளை அது கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு அங்கமாகச் செயல்பட்டது. புதிய கட்சியின் தலைவராக முஸ்தபா சூபி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                கிழக்குப் பிரதேச மக்களின் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய தலைமைக் குழுவால் தொடங்கப்பட்ட பிரச்சாரப் பணிகளில் சூபி தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். மார்க்சிய தத்துவ நூல்களை கற்றறிந்தார். இதழ்களில் கட்டுரைகள் எழுதினார். காரல் மார்க்ஸ், லெனின் நூல்களையும் மொழிபெயர்க்க ஏற்பாடு செய்தார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, லெனின் தேர்வு நூல்கள், இரஷ்யாவிலும், கிழக்குப் பிரதேசங்களிலும் உள்ள அனைத்து இஸ்லாமிய உழைக்கும் மக்களுக்கு ஒரு வேண்டுகோள், துருக்கியத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இரஷ்ய வெளியுறவுத் துறையின் வேண்டுகோள் முதலிய நூல்களை மொழிபெயர்த்து வெளியிட ஏற்பாடு செய்தார்.

                முஸ்தபா சூபி கம்யூனிஸ்ட் அகிலத்தின் முதலாவது மாநாட்டுக்குப் பிரதிநிதியாகச் சென்று கலந்து கொண்டார். அம்மாநாட்டில், “ரஷ்யாவில் வாழும் துருக்கியத் தொழிலாளர்களும், விவசாயிகளும் முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட வேண்டும். பிரான்கோ பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் தலைப்பகுதி ஐரோப்பாவில் உள்ளது. உடலின் பிற பகுதிகள் ஆசியாவின் மீது உள்ளது. துருக்கி சோசலிஸ்டுகளின் முக்கியக் கடமை கிழக்கில் முதலாளித்துவத்தை வேரறுப்பது முதன்மையானது” -எனப்பிரகடனப்படுத்தினார்.

                ஏகாதிபத்திய படையெடுப்பாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் முன்னணியில் நின்றனர். 1920 ஆம் ஆண்டு மே மாதம் துருக்கி கம்யூனிஸ்டுகள் கொரில்லாப் படைப்பிரிவுகள் மூலம் எதிர்த்துப் போராடி ஆக்கிரமிப்புப் படைகளை வெற்றிகரமாக முறியடித்தனர். துருக்கியில் சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் ஆகியோரை உள்ளடக்கி ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கினார் சூபி.

                துருக்கியில் முஸ்தபா கமால் 1929 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அரசு அமைத்தார். அவரது அரசு கொரில்லாப் படைப்பிரிவின் மீது தமது கட்டுப்பாட்டை நிலைநாட்டியது. அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான போராட்டத்தை மட்டுப்படுத்தியது. துருக்கிய தேசிய முதலாளிகளின் முரண்பாடான இரட்டை நிலையை சூபி அம்பலப்படுத்தினார். துருக்கி நாட்டுத் தொழிலாளர்களும், விவசாயிகளும் தங்களின் உண்மையான இலட்சியத்தை வென்றெடுக்கப் போராட வேண்டுமென வலியுறுத்தினார்.

                “தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காகவும், அனைத்துப் பகுதி மக்களுக்காகவும், விடாப்பிடியாகப் போராட வேண்டும். உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிறுவுவதன் மூலம் மட்டுமே ஒடுக்குமுறையாளர்களை வெற்றி கொள்ள முடியும். துருக்கியத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் படைவீரர்களின் போர்க்குணத்திலும், வீரத்திலும் நம்பிக்கை வைத்துப் போராட வேண்டும்” - என்று அறைகூவல் விடுத்தார்.

                தொழிலாளி வர்க்கம்,விவசாயிகள் மற்றும் துருக்கியின் மிகவும் அரசியல் உணர்வு பெற்ற அறிவுஜீவிகள் ஆகியோரின் நம்பிக்கை நட்சத்திரமாக துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி விளங்கியது. முஸ்தபா சூபி, துருக்கி கம்யூனிஸ்ட் கட்சியின் வேலைத்திட்டம் மற்றும் அமைப்புவிதிகளை உருவாக்கினார். துருக்கி மொழியில் கம்யூனிச நூல்களை வெளியிட்டார். அவரது அணி திரட்டும் திறனும், தேச பக்தியும் புரட்சிகரமான அர்ப்பணிப்பும் துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி வளர்வதற்கு அடிப்படையாக விளங்கியது.

                துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி தமது முதல் மாநாட்டை பாகுவில், 10.09.1920 ஆம் நாள் நடத்தியது. சூபி இம்மாநாட்டிற்கு தலைமை ஏற்றார். தமது தலைமையுரையில், “துருக்கியில் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டிருப்பதானது துருக்கியில் மட்டுமல்லாமல், கிழக்குப் பிரதேசம் முழுவதற்கும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்” எனக் குறிப்பிட்டார். அம்மாநாட்டில், சுல்தான் ஆட்சி முறைக்கு முடிவு கட்டி குடியரசு ஒன்றை நிறுவுதல், நிலச்சீர்திருத்தத்தை மேற்கொள்ளுதல், வேலை நிறுத்த உரிமை, கூட்டம் கூடுவதற்கான உரிமை. முதியோர் உதவித்தொகை, வேலையில்லாக் கால நிவாரணம்,பிரசவகால விடுப்பு, வாராந்திர விடுமுறை போன்ற பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.

                மேலும், கிராமங்களில் விவசாயிகளின் நலன்களைக் காக்க விவசாயிகள் குழுக்கள் அமைப்பது என்னும் முடிவை மாநாடு ஏற்றுக் கொண்டது. அக்குழுக்கள், நிலங்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது, குலாக்குகள், நிலப்பிரபுக்கள், லேவாதேவிக்காரர்கள் முதலியவர்களில் தானியக்கிடங்குகளைக் கைப்பற்றி, சட்ட விரோதமாக வைத்துள்ள சொத்துக்களை கிராமப்புறங்களிலுள்ள அடித்தட்டு மக்களுக்கு வினியோகிப்பது போன்ற பணிகளை மேற்கொள்வதென முடிவு எடுக்கப்பட்டது.

                அம்மானாட்டில், முஸ்தபா சூபி, துருக்கி கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

                துருக்கிய கம்யூனிஸ்ட் கட்சி முதல் மாநாட்டின் தலைமையுரையில் முஸ்தபா சூபி, “சுரண்டும் வர்க்கத்தின் அடித்தளம் ஆட்டம் கண்டுள்ள சூழ்நிலையில் மக்கள் தங்களின் தலைவிதியைத் தாங்களே நிர்ணயித்துக் கொள்ளும் காலம் தவிர்க்க முடியாதது. அவர்களின் சரியான இலட்சியத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சி அவர்களுக்கு வழிகாட்டும். எதிரிகளை முழுமையாக முறியடிப்பது கம்யூனிஸ்ட் கட்சியின் கடமையாகும். அதே சமயம் உள்நாட்டு எதிரிகளை எதிர்த்தும், மக்களின் வரிப்பணத்தில் வயிறு வளர்க்கும் ஒட்டுண்ணி வர்க்கத்துக்கு எதிராகவும் போராட வேண்டியது அவசியமாகும்”- எனக் குறிப்பிட்டார்.

                பாகுவில் படையெடுப்பாளர்களுக்கு எதிராகப் போராடிய சூபி, துருக்கி கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்களுடன் அங்காரா செல்வதென முடிவு செய்தார். இவர்களைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டனர். 1921 ஆம் ஆண்டு சனவரி மாதம் 28 அன்று மாலை டிரெப்ஜாண்ட் என்ற இடத்தை அவர்கள் அடைந்த பொழுது, அவர்களைக் கைத செய்து, அடித்துத் துன்புறுத்தி கரங்களில் விலங்கிட்டு, அங்குத் தயார்நிலையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் படகினுள் தள்ளினர். படகு கடற்கரையை அடைந்தவுடன் முஸ்தபா சூபியும் அவரது தோழர்களும் துப்பாக்கி முனையில் குத்தி படுகொலை செய்யப்பட்டுக் கடலில் தூக்கி வீசப்பட்டனர். அவர்களது உடல் கடல் அலைகளால் ஒதுக்கப்பட்டு மிதந்து கரையோரத்தில் கிடப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர்.

துருக்கி மக்களின் மதிப்புக்குரிய, மிகச் சிறந்த புரட்சியாளர்களின் வாழ்க்கை இவ்வாறு முடிவுக்கு வந்தது. புரட்சியின் எதிரிகள் முஸ்தபா சூபியை படுகொலை செய்து விட்டனர். “சிறைச்சாலைகளோ, சித்ரவரைகளோ, இரத்தவெறியோ, துப்பாக்கிக் குண்டுகளோ மக்களின் போராட்டத்தைத் தடுத்துவிடவோ, தேச விடுதலை மற்றும் ஐனநாயக இயக்கங்களை நசுக்கிவிடவோ முடியாது”. - என முழங்கிய முஸ்தபா சூபி என்றென்றும் துருக்கி மக்களின் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்.

Pin It