தான் வரைந்த ஓவியங்களால் அளவுக்கதிகமான புகழையும், விமர்சனங்களையும் அடுத்தடுத்து பெற்றவர் கிளிம்ட். ஆரம்பகால கட்டத்தில் கிளிம்ட் வரைந்த நேச்சுரல் ஆர்ட் பாணி ஓவியங்களை வரவேற்ற கலை விமர்சகர்கள், புதிய பாணி ஒன்றை அவர் உருவாக்கிய போது அதை ஆபாசம் என்று கடுமையாக எதிர்த்தனர். ஆனால் அத்தகைய ஒவியங்களால்தான் கிளிம்ட் உலகின் உன்னத ஓவியர்களில் ஒருவராக இன்றும் கொண்டாடப்படுகிறார். 

2. கஸ்டவ் கிளிம்ட் (1862-1918): பாசாங்கற்ற பாலியலின் அலங்காரவெளி


முழுநீள அங்கி போன்ற வித்தியாசமான உடையுடன் தன் ஓவியக் கூடத்தின் வாசலில் நிற்கும் ஓவியர் கஸ்டவ் கிளிம்டின் இப்புகைப்படம் அவர் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படமாகும். இவ்வுடையோடுதான் தன்னைச் சந்திக்க வரும் அனைவரையும் வரவேற்பதுடன், ஓய்வற்ற இடைவிடாத ஓவியப் பணியிலும் எப்போதும் மூழ்கி இருப்பார். அமைதி மிக்கவரான இவர் வியன்னாவையும், விமர்சகர்களையும் எப்போதும் தன்வாழ்நாளில் பிரமிப்பிற்கும் ஆச்சர்யத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கினார்.
Gustav Klimpt


ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் 1862ம் ஆண்டு ஜீலை 14ம் தேதி கிளிம்ட் பிறந்தார். அப்பா நகை வியாபாரி என்பதால் குடும்பம் வளமையுடன் இருந்தது. கிளிம்ட்டுடன் பிறந்தவர்கள் 6 பேர். இவர்தான் மூத்தவர். 7 பேரும் ஒவ்வொரு துறையில் சிறந்தவர்களாக விளங்கினர். ஒருவர் அப்பா வழியில் நகை வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தார். கிளிம்ட்டும், மற்றொரு சகோதரர் எர்ன்ஸ்டும் ஓவியத்துறையில் தடம் பதித்தனர்.

இளமைக் காலத்தில் இருவரும் வியன்னாவில் அப்போது புதிதாகக் கட்டப்பட்டிருந்த ஒவியக் கல்லூரியில் சேர்ந்தனர். அங்கு பேராசிரியர் பெர்டிணன்ட் லாப்பெர்கரிடம் இருந்து ஓவியக்கலையின் அனைத்து நுட்பங்களையும் கற்றுத் தேர்ந்தனர். ஓய்வு நேரங்களில் புகைப்படங்களை ஓவியங்களாக பிரதி எடுக்கும் வேலையில் ஈடுபட்டு கணிசமாக சம்பாதிக்கவும் தொடங்கினர். அப்போது ஓவியப் பள்ளியில் உடன் பயிலும் மாணவர் பிரான்ஸ் மாட்ச்-ன் தோழமையும் கிடைத்தது. இந்த மூவர் கூட்டணி மீது பேராசிரியர் பெர்டிணென்டிற்கு நல்லபிப்ராயம் இருந்தது. பல மாளிகைகளின் அலங்கார வடிவமைப்பு வேலைகளுக்கு மூவரையும் பெர்டிணென்ட் சிபாரிசு செய்தார்

அப்படித்தான் ஆஸ்திரிய மன்னர் பிரான்ஸ் ஜோசப்பின் திருமண வெள்ளி விழா நடைபெறவிருந்த மாளிகைக்கு அலங்காரம் செய்யும் பொறுப்பு கிளிம்ட்டிற்கு வந்தது. அப்போது அவருக்கு வயது 17தான். 

Emilie
கஸ்டவ் கிளிம்டின் ஓவியத்தில் பெண்கள் வசீகரம் மிக்கவர்களாக இருந்தனர். அவ் ஓவியங்களுக்கு பெரும் ஆதரவு இருந்தது. இப்புகைப்படத்தில் உள்ளவர் கிளிம்டின் உறவுப் பெண் எமிலி. இவர் வியன்னாவில் நடத்தி வந்த ஆடை அலங்கார அங்காடிக்கு ஆடை வடிவமைப்பு செய்து உதவிய கிளிம்ட்டிற்கு கைமாறாக எமிலி அவர் ஓவியங்களுக்கு மாடலாக இருந்தார். கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாத கிளிம்ட்டுடன் நீண்ட காதல் உறவு எமிலிக்கு இருந்தாலும் இருவரும் திருமண பந்தத்திற்குள் வரவில்லை. இருப்பினும் இருவருக்குமான உறவு கடைசிவரை இருந்ததுடன் எமிலி குடும்பத்தாருடன் கோடை விடுமுறைக்கு அவர்களின் ஏரிக்கரை இல்லத்திற்கு சென்று வருகிற அனுபவத்தின் வெளிப்பாடுதான் கிளிம்டின் புகழ் பெற்ற இயற்கைக் காட்சி ஓவியங்கள்.


1883ல் மூவரும் ஓவியப் பள்ளியில் இருந்து விலகி, தங்களுக்கென ஓவிய அரங்கினை ஏற்படுத்திக் கொண்டனர். உடனே வியன்னாவில் பிரபல மாளிகைகளுக்கு அலங்காரம் செய்யும் பணிகளை ஏற்று சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்கினர். அலங்காரம் செய்வது என்றால் வெறுமனே அலங்கார விளக்குகளையும், திரைச் சீலைகளையும் அமைப்பது அல்ல. மாளிகையின் சுவர்கள், மேல்தளக் கூரைகள், திரைச் சீலைகள் என அனைத்து இடங்களிலும் அழகிய ஓவியங்களை வரைவது, ஓவியத்திற்கு ஒத்திசைவான வண்ணங்களில் வண்ணப்பூச்சு செய்யச் சொல்வது, மாளிகையில் பயன்படுத்த மேசை, அலமாரி, பீங்கான் டம்ளர்கள், நாற்காலி ஆகியவற்றை கலைநயத்துடன் வடிவமைத்துத் தருவது உள்ளிட்ட பணிகளும் அதில் அடங்கும். 

இவர்களது வேலைகளுக்கான அங்கீகாரம் உடனடியாக இவர்களைத் தேடி வந்தது. 1886ல் வியன்னாவில் புதிதாகக் கட்டப்பட்ட ‘பர்க்தியேட்டர்’ மாளிகையின் கூரை மற்றும் படிக்கட்டுகளின் பக்கவாட்டுப் பகுதிகளில் ஓவியம் வரையும் மதிப்பு வாய்ந்த பணி கிடைத்தது. அதில் மூவரும் தங்கள் திறமையைக் காட்ட, அதைவிட மதிப்பு வாய்ந்த ஒரு பணி தானாகவே இவர்களை வந்து சேர்ந்தது. அது வியன்னாவின் ‘குன்ஸ்திஸ்டாரிஸ்க்ஸ்’ மியூசியத்தின் படிக்கட்டுகளை அலங்கரிக்கும் பணியாகும். ஆஸ்திரியாவின் உன்னத அருங்காட்சியகம் எனப் போற்றப்பட்ட அந்த அரங்கிற்கு அலங்காரம் செய்ய கிடைத்த வாய்ப்பை மூவரும் கிடைத்தற்கரிய பேறாகவே கருதினர். 

ஆஸ்திரியாவின் மூத்த ஓவியர் ஹான்ஸ் மார்ட்டிடம் தான் முதலில் இந்தப் பணி தரப்பட்டது. ஆனால் அவர் தனது முழுமையாக முடிக்கும் முன்னர் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். அவர் விட்ட இடத்திலிருந்து பணியைத் தொடரும் வாய்ப்பு கிளிம்ட் கூட்டணிக்கு கிடைத்தது. 

மாகர்ட்டின் ஒவியங்களை முன்மாதிரியாக நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அவரது ஓவியங்களை முழுமையடையச் செய்யும் வாய்ப்பு. மூவரும் அந்தப் பரவசத்தில் நெகிழ்ந்து போனார்கள். மாளிகையைத் தாங்கி நிற்கும் தூண்களுக்கு இடைப்பட்ட வெற்றிடத்தை தனித் தனி ஓவியங்களால் நிரப்பும் வேலை கிளிம்ட்டிற்குத் தரப்பட்டது. பண்டைய கிரேக்க காலத்திலிருந்து சமகாலம் வரையிலான மனித வரலாற்றை தனித்தனி ஓவியங்களாக வரைவது என கிளிம்ட் தீர்மானித்துக் கொண்டார். அதற்கான தகவல்களை நூலகம் நூலகமாக தேடியலைந்தார். புத்தகங்களிலும், அருங்காட்சியகங்களிலும் முழுமையாக தன்னைப் புதைத்துக் கொண்டார். இதன் விளைவுவாக குன்ஸ்திஸ்டரிஸ்க்ஸ் மாளிகையில் பல்வேறு வகை சிறப்பான ஓவியங்கள் உருவெடுத்தன. ஒவ்வொரு ஓவியமும் ஒவ்வொரு பாணியில் அமைந்து பார்வையாளர்களின் ஏகோபித்த பாரட்டை கிளிம்ட்டிற்குப் பெற்றுத் தந்தன. 

Egon Schiele
இகான் சீலி (Egon Schiele) வியன்னா ஓவியக் கல்லூரியில் தான் கிளிம்ட் ஓவியர் சீலியை சந்தித்தார். தீவிர நட்பு ஒருவருடைய ஓவியத்தை மற்றவர் பெரும் மதிப்பு கொள்ளச் செய்து, ஒருவர் பாதிப்பு மற்றவருக்கும் ஏற்பட்டதை அவர்களின் ஓவிய வெளிப்பாட்டிலும் காணலாம். தொடர்ந்து ஒன்றாக காட்சிகளில் பங்கேற்றாலும், சீலி காலப்போக்கில் தனக்கென ஒரு தனித்த பாணியைக் கண்டு நிறுவினார். உணர்ச்சிப் பூர்வமாக வெளிப்பட்டாலும் சக்திமிக்க கோடுகளாலும் உள்ள சீலியில் ஓவியங்கள் அவரையும் முக்கியமான வியன்னாவின் ஓவியராக நமக்கு காண்பிக்கிறது.


கிளிம்ட் தன்னுடைய 35 வயதில் ஹான்ஸ் மாகர்ட்டின் இடத்தை நிரப்ப வல்ல ஓவியர் என்ற பெயரைப் பெற்றார். வியன்னா கலை இலக்கியத்தின் முக்கிய தூணாகக் கருதப்பட்டார். அக்காலகட்டத்தில் வியன்னாவின் முற்போக்குக் கலைஞர்களுடனும், சிந்தனையாளர்களுடனும் கிளிம்ட்டிற்கு தொடர்பு ஏற்பட்டது. மேலும் ஐரோப்பிய ஓவியர்கள் வியன்னாவில் நடத்திய ஓவிய கண்காட்சிகள் இவரது பார்வையை விசாலப்படுத்தின. 

இயல்பிலேயே கலைஞனுக்குரிய சுதந்திரத்துடன் உலாவி வந்த கிளிம்ட்டால் இதற்குப் பின் பழமைவாதம் பேசும் கலைஞர்களுடன் ஒத்துப் போக முடியவில்லை. 1897ல் தன்னைப் போல் முற்போக்கு எண்ணம் கொண்ட ஓவியர்களுடன் ‘வியன்னா ஓவியக்கலைஞர்கள் சங்கத்தி’லிருந்து விலகி, முற்போக்கு ஓவியர்கள் சங்கத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். 

Emilie
கிளிம்டின் ஆசைநாயகி எமிலியின் ஓவியம். அவருடைய ஓவியப் பணியின் சிறப்புகள் நிறைந்த 1902 ல் வரைந்த ஓவியம்.

இந்த சங்கத்தின் முக்கிய நோக்கங்கள்: புதிய பாணி ஓவியங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பழமைவாத ஓவியங்களுக்கு எதிராக போராடுவது வியன்னாவின் ஓவியர்களுக்கு உலகளாவிய ஓவியர்களின் படைப்புகளை அறிமுகப்படுத்துவது. 

முற்போக்கு ஓவியர்கள் சங்கத்தில் சேர்ந்தவர்களில் பலர், எதற்கு வம்பு என்று வியன்னா ஓவியர்கள் சங்கத்திலும் உறுப்பினர்களாகத் தொடர்ந்தனர். ஆனால் முற்போக்காளர்களின் போக்கைப் பிடிக்காத பழமைவாதிகள் தங்கள் சங்கத்திலிருந்து வெளியேறுமாறு அவர்களை நிர்ப்பந்தித்தனர். ஏராளமானோர் பழைய சங்கத்திலிருந்து விலகி, முற்போக்காளர்கள் சங்கத்தில் இணைந்தனர். இதனால் இரண்டு மாதங்களில் முற்போக்கு ஓவியர்களின் சங்கம் வலுப்பெற்றது. 

சங்கத்தின் முதல் தலைவராக கிளிம்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். குறைவாகப் பேசும் இயல்புடைய கிளிம்ட், சங்கத்தின் முதல் ஓவியக் கண்காட்சியை நடத்துவதில் முனைப்பு காட்டினார். நவீன ஓவியங்களைக் காண வாருங்கள் என்று நாட்டு மக்களுக்கு ஓவியர்கள் அழைப்பு விடுத்தனர். முதல் ஓவியக் கண்காட்சி மாபெரும் வெற்றியாக அமைந்தது. 57,000 க்கும் அதிகமானோர் ஓவியங்களை கண்டு ரசித்தனர். வியாபாரரீதியாகவும் அக்கண்காட்சி வெற்றிகரமாக அமைந்தது. 

கண்காட்சியில் வெறுமனே ஓவியங்கள் மட்டும் பார்வைக்கு வைக்காமல் சிற்பங்கள், கலைநயமிக்க வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றையும் மக்கள் முன் வைத்தன்ர். ‘உங்களுக்கு ஓவியங்கள் ஏதும் பிடிக்காதா? பரவாயில்லை, அழகான திரைச் சீலைகளை வாங்கிச் செல்லுங்கள், சாதாரண கிளாஸில் மது அருந்தி அருந்தி உங்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விட்டதா? வாருங்கள், கலைநயமிக்க கிளாஸ்கள் மூலம் மது அருந்தும் நேரத்தை மேலும் இனிமையாக்குகிறோம்’ என்று முற்போக்கு ஓவியர்கள் தங்களை அணுகிய விதத்தால் மக்கள் கவரப்பட்டனர். இரண்டாவது கண்காட்சிக்கு முன் தங்களுக்கென ஒரு கட்டடத்தை அமைக்கும் அளவிற்கு சங்கத்தின் வருமானமும் உயர்ந்தது. வெகு விரைவில் நவீன ஓவியங்களை வளர்த்தெடுக்கும் முக்கிய இடமாக ஐரோப்பாவில் வியன்னா மாறியது. 

கிளிம்ட் வாழ்ந்த காலம் வியன்னா கலாச்சார வரலாற்றில் மிக முக்கிய காலமாகும். உலகின் மிகப்பெரும் தத்துவ மேதையான சிக்மண்ட் பிராய்டு பிறந்தது கிளிம்ட் பிறந்ததற்கு 6 வருடங்கள் முன்புதான். பழமைவாத கருத்துக்களுக்கு எதிராக புதியதோர் உலகத்தை நிர்மாணிக்கும் முனைப்பில் மனோதத்துவம், பாலியல் தொடர்பாக புதிய கருத்தாங்கங்களை வியன்னா எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் வெளியிட்டதும் அப்போதுதான். சமகாலத்தில் நடந்த இந்த மாற்றங்களை சரியான அளவில் உள்வாங்கிய ஓவியராக கிளிம்ட் செயல்பட்டார். அவரது ஓவியங்களில் பாலியல் சார்ந்த கூறுகள் அதிகமாக பிரதிபலித்தது. வாழ்க்கைச் சுழற்சியில் மாறி, மாறி வரும் மகிழ்ச்சி மற்றும் சோகத்தை பெண்மை சார்ந்த ஓவியங்களின் மூலம் வெளிப்படுத்துபவராக கிளிம்ட் விளங்கினார். 

The kiss
'The Kiss' (1907-1908)

-முத்தம்-

முத்தம் என்ற தலைப்பு கொண்ட இவ்வோவியம் ஓவியர் கிளிம்ட் வரைந்த ஓவியங்களிலேயே புகழ் பெற்றதாகும். இவ் ஓவியம் முதன்முறையாகக் காட்சிக்கு வைக்கப்பட்டபோதே அரசு இவ் ஓயியத்தை வாங்கியது. காதலர்களின் மெய்மறந்த நிலையை ஓவியத்தின் கட்டமைப்புடன் தெளிவாகச் சொல்வதுடன் தங்க வண்ணப் பூச்சுடன் பூக்களும் வண்ணத்துகள் வடிவங்களும் நிறைந்த இவ் ஓவியம் அவருக்கு அலங்காரக் கலைகளின் மீது உள்ள ஈடுபாட்டையும், மேசை ஓவியப் பாணியின் மீது உள்ள ஈடுபாட்டையும் அறிவிப்பதை அறியலாம்.


முற்போக்கு ஓவியர்களுடன் கிளிம்ட் பழக ஆரம்பித்த காலகட்டத்தில் முக்கியமான வேலை ஒன்று அவரை நாடி வந்தது. வியன்னா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு கட்டடக் கூரையில் ஓவியங்களை வரையவேண்டும் என்று 1894ம் ஆண்டு ஆஸ்திரிய கல்வித் துறை கிளிம்ட்டையும், அவரது சகா பிரான்ஸ் மாட்ச்சையும் (கிளிம்டின் சகோதரர் எர்னஸ்ட் 1892ம் இறந்து விட்டார்) கேட்டுக் கொண்டது. இருவரும் ஒப்புக்கொண்டனர். பல்கலைக் கழகத்தின் முக்கிய துறைகளைக் கருப்பொருளாகக் கொண்டு ஓவியங்களை வரைவது என கிளிம்ட்டும், பிரான்சும் தீர்மானித்தனர். தத்துவம், மருத்துவம் மற்றும் சட்டம் தொடர்பான ஓவியங்களை கிளிம்ட் வரைய ஆரம்பித்தார். 

தத்துவம் தொடர்பான ஓவியத்தை வரைந்து கொண்டிருந்தபோது கிளிம்ட்டின் ஓவிய அரங்கிற்கு வந்த அவரது நண்பர் கிளிம்ட்டின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு பற்றி இவ்வாறு எழுதினார். “அது ஒரு மதிய நேரம், 35 டிகிரி வெயிலால் ஓவிய அரங்கு தகித்துக் கொண்டிருந்தது. வழக்கமாகத் தான் அணியும் கருப்பு தொள தொள சட்டையில் கிளிம்ட் வியர்வை வழிய வழிய தனது தூரிகையால் விறுவிறுப்பாக ஒரு ஓவிய யுத்தம் நடத்திக் கொண்டு இருந்தார். இந்தப் பிறவி எடுத்ததே இந்த ஓவியத்தை வரைவதற்குத்தான் என்பது போல ஏணிகளில் ஏறியும், இறங்கியும், தூர நின்று சரிபார்த்தும், சரியில்லை என்று கோபப்பட்டு அதை திருத்தியும் மெருகூட்டியும் அவரது சிந்தனை, உடல் உறுப்புகளின் ஒருங்கினைந்த செயல்பாடுகள் அனைத்தும் அந்த ஓவியத்தை நோக்கியே அமைந்திருந்தன. மாயலோகத்தில் கண்ணுக்குப் புலப்படாத ஓர் எதிரியுடன் தீரமாகப் போராடும் வீரனாக அவர் காட்சி அளித்தார்”. 

ஆனால் அத்தகைய உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. பழமையில் ஊறியிருந்த பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கிளிம்ட்டின் முந்தைய ஓவியங்களைப் போலவே இவையும் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். முற்போக்காளர்களுடன் ஏற்பட்ட தொடர்பால் அவரது சிந்தையில் ஏற்பட்ட ரசாயன மாற்றங்களை அவர்கள் அறியவில்லை. ஓவியங்களில் காமச்சுவை கூடிவிட்டதாக அதிருப்தி தெரிவித்தனர். அதைப் பற்றி கவலைப்படாமல் மருத்துவம், சட்டம் தொடர்பான ஓவியங்களையும் கிளிம்ட் வரைந்து முடித்தார். 

அவை எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியது போல அமைந்தன. வியன்னாவின் புகழ் பெற்ற பத்திரிகையொன்று, கிளிம்டின் ஓவியங்களை சுத்த ஆபாசம் என்றும், இந்த ஓவியங்கள் மூலம் இளைய தலைமுறையை கிளிம்ட் கெடுக்க முயற்சிக்கிறார் என்றும் விமர்சித்தது. தொடர்ந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. முதலில் இதைப் பற்றி கவலை கொள்ளாத கிளிம்ட் ஒரு கட்டத்தில் பல்கலைக் கழகத்திற்கு ஓவியம் வரையும் வேலையில் இருந்து விலகுவதாக அறிவித்தார். படைப்புச் சுதந்திரத்தில் ஏற்பட்ட தலையீடுகளை அவரால் பொறுக்க முடியவில்லை 

‘மணப்பெண்’ என்ற தலைப்பிடப்பட்ட முற்றுப் பெறாத கிளிம்டின் இவ் ஓவியம் அவருடைய ஓவியக் கூடத்தில் அவர் மரணத்திற்குப் பின் கிடைத்தது. அவருடைய செய்முறையை ஓவியம் முற்றுப் பெறாதிருப்பினும் நமக்கு விளக்குகிறது. The bride


இத்தகைய விமர்சனங்கள் அவரது கலை வாழ்வில் எந்த தடைகளையும் ஏற்படுத்தவில்லை. நீண்ட காலத்திற்கு அரசுத் தரப்பிலிருந்து எந்த வேலையும் வழங்கப்படவில்லை என்பதைத் தவிர பெரிய இழப்பு ஏதுமில்லை. ஒருவகையில் இத்தகைய விமர்சனங்கள் அவருக்கு அதிக விளம்பரத்தையும் அதன்மூலம் அதிக வேலை வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தன. 

குறிப்பாக வியன்னா செல்வந்தர்கள் தங்களது மனைவியரை ஓவியமாக வரைந்து தருமாறு கிளிம்ட்டை அதிகளவில் அணுக ஆரம்பித்தனர். அவ்வாறு வரையும் போதுதான் கிளிம்ட் தனது ஓவியங்களில் சோதனை முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். பெண்மையின் பல்வேறு பரிமாணங்களை தனது தூரிகைக்குள் கொண்டு வந்தார். இளமங்கை, கர்ப்பிணிப் பெண், அப்பட்டமான நிர்வாணத் தன்மை பொருந்திய பெண்கள் என வியன்னா பெண்கள் அவரது ஓவியங்களில் வலம் வந்தனர். 

வியன்னாவின் அழகான பெண் என்று அக்காலத்தில் பிரபலமாக இருந்தவர் அல்மர் மலெர். இவரை ஓவியம் வரையும் பொருட்டு பார்க்கச் சென்ற கிளிம்ட் அல்மரின் அழகில் மயங்கி காதலிக்கத் தொடங்கினார். தனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி அவரிடம் மன்றாடினார். ஆனால் கிளிம்ட்டின் ஆசை நிறைவேறவில்லை. அல்மர் கிளிம்ட்டை நிராகரித்தார். அதன் பின்பு தனது உறவுக்கார பெண் எமிலி பிளாக்கிடம் கிளிம்ட் காதல் உறவு வைத்திருந்தார். அவரைத் திருமணம் செய்து கொள்ளா விட்டாலும் கிளிம்ட் தன் வாழ்நாளின் இறுதி வரை எமிலியைத் தவிர வேறு யாரையும் திரும்பிப் பார்க்கவில்லை. ஒவ்வொரு கோடை விடுமுறையையும் எமிலியுடன் கழிப்பதை 20 வருடங்களாகத் தொடர்ந்தார். 

மழைக்காலங்களில் முழுக்க முழுக்க ஓவியம் வரைவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதிகாலையில் எழுந்து ஓவிய அரங்கிற்குப் போய் விடுவார். இந்த உலகிற்கும் தனக்கும் துளியளவு சம்பந்தமும் இல்லை என்பது போல் ஓவியம் வரைவார். சாப்பிடும் நேரத்தில் மட்டும்தான் அவரது கைகளில் இருந்து தூரிகை இறங்கும். அவரது ஓவியங்களுக்கு மாதிரியாக இருக்க பல மாடலிங் பெண்கள் அந்த அரங்கிலேயே தங்கியிருந்தனர். முன்னிரவு வரை வரைந்து விட்டு ஒரு உணவு விடுதியில் தனது நண்பர்களை சந்திக்கப் போவார். எல்லோரும் ஓவியர்கள்தான். தங்களை விட சிறந்த ஓவியர் கிளிம்ட்தான் என்ற எண்ணம் அவர்கள் அனைவருக்கும் இருந்தது. அதனால் அத்தகைய பொழுதுகளில் கிளிம்ட் வேண்டாமலேயே அவர்கள் மத்தியில் சிம்மாசனம் தரப்பட்டு வந்தது. 

Woman
மிகச் சிறிய நேரத்திலேயே சில கோடுகளால் வரையப்படும் கிளிம்டின் கோட்டுச் சித்திரம். இவற்றில் இருக்கும் பெண் உருவங்கள் அனைத்தும் வசீகரம் மிக்கவை என்பதுடன் கலவி இன்ப நிறைவுக்குப் பின் ஓய்வாக அயர்ந்த நிறைவுடன் இருப்பது போலவே காட்டுகிறது.


1905ல் கிளிம்ட்டும், அவருக்கு நெருக்கமான நண்பர்களும் முற்போக்கு ஓவியர்கள் சங்கத்தை விட்டு வெளியேறினர். அதன்பின்பு தனித் தனியாக ஓவியக் கண்காட்சி நடத்தத் தொடங்கினர். அதுவரை அவர்களது ஓவியங்கள் மொத்தமும் சங்கத்தின் சார்பில் கண்காட்சியாக (18 கண்காட்சிகள்) நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தனியாக ஓவியக் கண்காட்சி நடத்த ஆரம்பித்த பின்பு கிளிம்டின் புகழ் மேலும் அதிகமாகப் பரவியது. இளைய தலைமுறை ஓவியர்கள் அனைவரும் தங்களது வழிகாட்டியாக கிளிம்டைப் பின்பற்றத் தொடங்கினர். கிளிம்ட் மேலும் மேலும் ஓவியத்தில் மூழ்கத் தொடங்கினார். வெளியுலக வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்க்க ஆரம்பித்தார். எப்போதாவது தான் நண்பர்களை சந்தித்தார். வருடத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறைதான் வியன்னாவை விட்டு வெளியே செல்வது என்றளவிற்கு அவரது பயணம் குறுகியது. 

1918 ஆம் வருடம் ஜனவரி 11ம் தேதி காலைச் சிற்றுண்டிக்காக உணவு விடுதிக்கு செல்வதற்காக உடையணிந்து கொண்டிருந்தார். அப்போது கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 3 வாரங்கள் மருத்துவமனையில் இருந்தார். இறுதியில் கடுமையான நிமோனியா காய்ச்சலுக்குள்ளாகி பிப்ரவரி 6ம் தேதி மரணமடைந்தார். 

அவர் பாதியில் விட்டுச்சென்ற ஓவியங்கள் ஏராளமாக அவரது ஓவிய அரங்கில் இருந்தன. கிளிம்ட் மருத்துவமனையில் இருந்தபோது திருடர்கள் அரங்கின் கதவை உடைத்து அவற்றை அள்ளிச் சென்றனர். திருடர்கள் விட்டுச் சென்ற ஓவியங்களில் ஒன்று ‘மணப்பெண்’. அந்த ஓவியத்தைப் பார்த்த அந்தக் கால கலை விமர்சகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதிலிருந்த காம உணர்வு பற்றி, கிளிம்ட் மரணமடைந்திருந்தாலும், கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். ஆனால் முற்றுப்பெறாத அந்த ஓவியம் கிளிம்ட்டின் முக்கியமான ஓவியங்களில் ஒன்றாகக் இன்று கருதப்படுகிறது. 

கிளிம்ட் அந்த ஓவியத்தை எப்படி முடித்திருப்பார் என்று ஒவ்வொரு ஓவியரும் மனதில் வரைந்து பார்த்துக்கொண்டிருக்கின்றனர். கிளிம்ட் மற்ற ஓவியங்களினூடாக அவற்றை கவனித்துக் கொண்டிருக்கிறார். 

(நன்றி : புது விசை ஆகஸ்ட்-செப்டம்பர் 2005)