அமெரிக்க நாட்டின் மிகப் பெரும் நகரங்களுள் ஒன்று சின்சினாட்டி. அங்கு ‘லைமன் பீச்சர்’ என்ற புகழ்மிக்க கிறித்துவ மத போதகர் சமயக் கல்லூரி ஒன்றை நடத்தி வந்தார். லைமன் பீச்சரின் பதினொரு குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தார் ஹேரியட் எலிசபெத் பீச்சர்.
‘ஸ்டோவ்’ என்ற மதபோதகரை மணந்த இவர், பிற்காலத்தில் ‘ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்’ என்று உலகமே அறிய உயர்ந்தார்.
ஹேரியட் பீச்சர் ஸ்டேவ் 1811 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி பிறந்தார். சிறு வயதிலிருந்தே அமெரிக்க நாட்டில் வாழும் கறுப்பு இன மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை நேரடியாகப் பார்த்தும், சிலர் சொல்லக் கேட்டும் வளர்ந்தார்.
அடிமைகள் எஜமானர்களுக்கு அடிபணிய மறுத்தால் கொலை செய்யப்படுவர். கறுப்பர்களைக் கண்ணால் பார்ப்பது கேவலம் என்ற நிலை. அடிமைகளின் மீது அனுதாபம் கொண்டு அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு கொடுத்தவர்களுக்குக்கூட தண்டனை காத்திருந்தது.
கொடுமைகள் தாங்க முடியாமல் தப்பி வேறு நாட்டிற்குச் சென்றுவிட்டால் எஜமானன் விரும்பினால் அந்நாட்டிற்குச் சென்று, அந்த நாட்டு அரசாங்கத்தின் உதவியுடன் ஓடிப்போன தனது அடிமையைக் கண்டுபிடித்து, மீட்டு வர வாய்ப்புக் கொடுக்கிற சட்டம் இருந்த சூழல்.
வெள்ளை எஜமானர்கள் கறுப்பு அடிமைகளைத் துரத்தித் துரத்தி நடுரோட்டில் அடித்து, நொறுக்கி பிற அடிமைகளின் அடிமனதில் அச்சத்தையும் பீதியையும் புகட்டி வந்தனர்.
ஹேரியட்டின் தந்தையார் நடத்தி வந்த சமயக் கல்லூரி தொலைவில் இருந்ததாலும், முள்ளும் கல்லும் புதர்க்காடுகளும் நிறைந்த பாதையில் சென்றால் மட்டுமே அக்கல்லூரிக்குச் செல்ல முடியும் என்ற நிலை இருந்ததாலும் பெரும்பாலும் அடிமைகளைத் துரத்துபவர்கள் அவ்வளவு தூரம் செல்வதில்லை. தப்பி வருகிற அடிமைகளின் கண்ணீர்க் கதைகளை நேரடியாகக் கேட்டறிந்தார் ஹேரியட்.
“தனது குழந்தைகளை அடிமையாகக் கட்டாயப்படுத்தி விலைக்கு வாங்க வந்தவர்களிடமிருந்து தப்பிக்க எண்ணிய ஒரு பெண், உறைந்து போய் பனிமண்டலமாக இருந்த நதியின் மீது குழந்தையை இறுக அரவணைத்தபடி ஒடோடி வந்தாள்” என்ற செய்தியை நண்பர் ஒருவரின் மூலம் கேட்டறிந்தார் ஹேரியட்.
எதிர்பாராமல் ஹேரியட்டின் குழந்தை ஒன்று இறந்தது. துக்கம் மேலிட்டிருந்த ஹேரியட், “குழந்தையை இழந்த தாயின் உள்ளம் எப்படித் துடிக்கும்?” என்பதை உணர்ந்திருந்தார்.
கொதித்துக் கொந்தளித்து எழுந்த உணர்வின் வெளிப்பாடாக 1851இல் ‘தி நோனல் எரா’ என்ற இதழில் ‘அன்கிள் டாம்ஸ் கேபிள்’ என்ற தொடர்கதையை எழுதினார். இத்தொடர் மக்களிடம் எழுச்சிமிகு வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொகுத்து இரண்டு பாகங்களைக் கொண்ட நூல் வடிவம் ‘அன்கிள் டாம்ஸ் கேபின்’ என்ற அதே தலைப்பில் 1852 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதுதான் இவர் எழுதி வெளியிட்ட முதல்நூல். இந்நூல் அச்சடித்த ஐயாயிரம் பிரதிகளில் மூவாயிரம் பிரதிகள் வெளிவந்த முதல் நாளிலேயே விற்றுத் தீர்ந்தது. மீதியுள்ள அத்தனை பிரதிகளும் மறுநாளே விற்று முடிந்தது. பிரதிகள் கேட்டு கடிதங்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தன. உடனே பத்தாயிரம் பிரதிகள் அவசர அவசரமாக அச்சடிக்கப்பட்டன. பத்தாயிரம் பிரதிகளும் வெளிவந்த ஒரு வாரத்தில் விற்றுத் தீர்ந்தன.
இப்புத்தகம் வெளிவந்த ஒராண்டிற்குள் மூன்று லட்சம் பிரதிகள் அமெரிக்காவில் மட்டும் விற்றன. அக்காலத்திலிருந்தே நவீன விசையால் இயங்கிய எட்டு அச்சு இயந்திரங்கள் இரவு பகல் ஓடி இந்த நூலை அச்சடித்துத் தள்ளிக் கொண்டேயிருந்தன. மூன்று காகித ஆலைகள் காகிதங்களை உற்பத்தி செய்து அனுப்பும் பணியில் முழுக்க ஈடுபட்டிருந்தன. இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் ஆர்டர்களைப் பூர்த்தி செய்ய முடியாமல் திணறல் ஏற்பட்டது. அந்நாடு முழுக்க ஓரளவேனும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் அத்தனை பேரின் கைகளிலும் இந்நூல் இருந்தது.
இரண்டாண்டுகள் கழிவதற்குள் சுமார் அறுபது மொழிகளில் இந்நூல் வெளியாகி உலகை வலம் வந்தது. “இரண்டு பாகங்களைக் கொண்ட மிகப்பெரிய நூல். இந்நூலை எழுதியதோ ஒரு பெண். உள்ளடக்கமோ ஈர்க்கும் தன்மையுடையதன்று” என்பது போன்ற கருத்துகளை மனதில் வைத்து இதைப் பதிப்பித்த பதிப்பாளர், “இந்நூல் சரியாக விற்பனையாகாது” என்று எண்ணி, தொடக்கத்தில் இந்நூல் உருவாக்கத்தில் மூலதனத்திலும் லாபத்திலும் சரிபாதி வைத்துக் கொள்ளலாம் என்று ஹேரியட்டிடம் கேட்டார்.
நூலாசிரியருக்கும் இந்நூல் இந்தளவு வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை தொடக்கத்தில் இல்லாதிருந்ததால் பத்து சதம் ராயல்டி கிடைத்தால் போதும் என்று பதிலளித்தார். அக்காலத்தில் பதிப்புரிமைச் சட்டம் சர்வதேச அளவில் இருக்கவில்லை. ஆகவே, பிறமொழிகளில் அவரவரே மொழிபெயர்த்து உரிமை பெறாமலேயே அச்சடித்துக் கொண்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துக் குவித்தனர். ஹேரியட்டும் அதுபற்றிக் கவலைப்படவில்லை.
இந்நூலின் வெற்றி பற்றி ‘ஹேரியட்’டின் பேரப்பிள்ளைகள், “அதற்குக் கிடைத்த வரவேற்பு ஒரு பிரமாண்டமான மலை தீப்பற்றி எரிவதுபோல் இருந்தது. எதிர்ப்பின்றி அலையலையாக அதிலிருந்து கிளர்ந்த உணர்ச்சிப் பெருக்கு மோதியது.
வானமெல்லாம் அதன் ஜோதிதான். கடலையும் கடந்து சென்றது. உலகம் அனைத்துமே இதைத் தவிர வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை; பேசவுமில்லை என்பது போல் தோன்றியது” என்று பின்னொரு சமயத்தில் எழுதினர்.
இந்நூல் ஆதிக்க நிறவெறிக்கெதிரான ஒரு பெரும் போரை உருவாக்குவதிலும் வெற்றி பெற்றது. ஹேரியட் குறித்து ஆப்ரகாம் லிங்கன், “இந்த உள்நாட்டு யுத்ததை உருவாக்கிய புத்தகத்தை எழுதிய சிறுபெண்” என்று குறிப்பிட்டார்.
-ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்