கி.பி. 550 முதல் கி.பி. 800க்குள் கேரள சமூகத்தின் மீது நம்பூதிரி பார்ப்பனர்கள் தங்களின் குல மேன்மைக்காகவும், தங்கள் குடும்ப நலனுக்காகவும் ‘சம்பந்தம்’ எனப்படும் முறையற்றத் திருமண முறையைப் புகுத்தினார்கள். நம்பூதிரிப் பார்ப்பனர்கள் இந்த சம்பந்தம் முறையை நடைமுறைப் படுத்துவதற்காக நாயர், சமந்தா, காசுட்ரியா, அம்பலவாசி போன்ற சமூகங்களிடையே மறுமக்கள் தாயமுறையைக் கொண்டு வந்தனர். நம்பூதிரி பார்ப்பனர்கள் மேன்மையானவர்கள், கடவுளுக்கு நிகரானவர்கள் போன்ற போலிக் கருத்துகளின் அடிப்படையில் இதுபோன்ற மாற்றங்கள் கேரள சமூகத்தில் நிகழ்ந்தன. கி.பி. 250 வரை அதாவது களப்பிரர் படையெடுப்பு வரை பண்டைய கேரளா என்பது பண்டைய பழந்தமிழ்ச் சமூகத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. அங்கு அன்று தொழில் பிரிவுகளும் வர்க்க வகுப்பு பிரிவுகளும் இருந்தன. பிறப்பின் அடிப்படையிலான சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கவில்லை. ‘உடன்போக்கு’ திருமணமுறை இருந்தது. தொழில், பொருளாதார நிலை, வகுப்பு ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்ட மேல்மக்கள் கீழ் மக்கள் என்ற வேறுபாடு இருந்தது. ஆனால் கீழ் மக்கள் மேல் மக்கள் ஆவதும், மேல்மக்கள் கீழ் மக்கள் ஆவதும் நடைமுறையில் இருந்து வந்தது. அனைவரும் அடிப்படையில் சமமானவர்களாகவே கருதப்பட்டனர். உடன்போக்கு முறையில் யாரும் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்யும் நிலை இருந்து வந்தது.

history of keralaஆனால் கி.பி. 250இல் களப்பிரர் படையெடுப்பின் விளைவாக ஏற்பட்ட பேரழிவால் பழந்தமிழ்ச் சமூகமும் கேரளச் சமூகமும் ஒரு பின்தங்கிய பிற்போக்கான கிராமச் சமூகமாக மாறிப்போயின. நாளடைவில் பழந்தமிழ்ச் சமூகமும் கேரளச் சமூகமும் சமயம் சார்ந்த சடங்குகளும் மூடநம்பிக்கைகளும் கொண்ட சமூகமாக மாற்றமடைந்தன. இதுபோன்ற சூழ்நிலையில்தான் நம்பூதிரி பார்ப்பனர்கள் கேரளாவில் குடியேறி கேரளாவின் பெரும்பகுதிகளில் நிலபுலன்களும் செல்வவளமும் உடைய, அரசியல் அதிகாரமும், சமூகச் செல்வாக்கும் கொண்ட ஒரு ஆதிக்கமிக்க சமூகமாக உருவானார்கள். இந்தச் சூழ்நிலையில் தான் நம்பூதிரி பார்ப்பனர்கள் தங்களின் குலமேன்மைக்காகவும் தங்கள் குடும்ப நன்மைக்காகவும் ‘சம்பந்தம்’ முறையையும், மறுமக்கள் தாயமுறையையும் கேரள சமூகத்தில் நடைமுறைப்படுத்தினர்.

‘சம்பந்தம்’ முறை (Sambandham):

சம்பந்தமுறை என்பது முறைசாரா, முறையற்ற திருமணமுறை. சம்பந்தமுறை என்பது நாயர், சமந்தா காசுட்ரியா, அம்பலவாசி ஆகிய சாதிகளின் பெண்கள் நம்பூதிரி பார்ப்பன ஆண்களோடு கொள்ளும் உறவு முறை. இம்முறை தற்பொழுது பின்பற்றப்படுவதில்லை. இதற்கு புடவைமுறி, புடவைக்கொடை, வாசுட்ரதானம், மங்களம், விதரகாயருகா, உழம்பொருக்குக என ஒவ்வொரு சமூகம், இடம் ஆகியவற்றுக்கேற்ப பல பெயர்கள் உண்டு. இம்முறை இப்பொழுது நடைமுறையில் இல்லை.

நம்பூதிரி பார்ப்பனர்களின் சம்பந்த முறை:

பார்ப்பன நம்பூதிரி குடும்பங்களில் மூத்த ஆண்மகன் மட்டுமே நம்பூதிரிப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள உரிமை கொண்டவன். நம்பூதிரி குடும்பத்தின் சொத்துகள், அதன் அதிகாரம், செல்வாக்கு முதலியன தனித்தனியாகச் சிதறிவிடக்கூடாது என்பதற்காக பிற இளவயது ஆண்கள் நம்பூதிரி பெண்களைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்ற முறை நடைமுறையில் இருந்தது. ஆகவே இந்த இளைய நம்பூதிரி ஆண்கள் நாயர் பெண்களோடு ‘சம்பந்தம்’ முறைப்படி உறவு வைத்துக் கொள்வர். மூத்த நம்பூதிரியும் தன் நம்பூதிரி மனைவிகள் போக சம்பந்த உறவை நாயர் பெண்களோடு வைத்துக் கொள்வார். நம்பூதிரிகள் இந்த நாயர் பெண்களோடு கொள்ளும் உறவு முறையை வைப்பாட்டி (concubinage) முறை என்றே கொள்வர். ஆனால் நாயர்கள் தாய்வழி முறையைப் (matrilineal) பின்பற்றுவதால் இதனை முறையான சட்டப்படியான திருமண உறவு முறையாகக் கொள்வர். நம்பூதிரிகள் தாங்கள் சடங்குமுறையில் தூய்மை (ritually pure) உடையவர்கள் எனக் கருதுவதால் பகல் நேரத்தில் தனது சம்பந்த முறைப்படி இரவில் உறவு கொள்ளும் பெண்ணையோ, அவர்களது குழந்தைகளையோ நாயர் குடும்ப மனிதர்களையோ தொட மாட்டார்கள். இரவில் நாயர் பெண்களோடு மட்டும் உடலுறவு கொண்டுவிட்டு அதிகாலையில் அவர்களது வீட்டைவிட்டு வெளியேறி விடுவர். பகலில் தீண்டாமை முறையைப் பின்பற்றித் தூய்மை காப்பர். இவை இன்று நடைமுறையில் இல்லை.

மறுமக்கள் தாயமுறை (Marumakkalthayam):

கேரளாவில் இம்முறை நாயர், அம்பலவாசி போன்ற சாதிகளிடம் இருந்து வந்த தாய்வழி உரிமை முறை. இவர்கள் வசிக்கும் வீடு தரவாடு(Tharavad) எனப்படும். வீட்டின் மூத்த சகோதரர் தலைவராக இருப்பார் அவருக்கு கார்னவார் (Karanavar) எனப்பெயர். அவர் குடும்பத்தின் அனைத்துச் சொத்துக்களுக்கும் சொந்தக்காரராகவும், பொறுப்பாளராகவும் இருப்பார். அவருக்குப்பின் அச்சொத்துக்கள் அவருடைய சகோதரிகளுடைய மகன்களில் மூத்தவன் பொறுப்பில் விடப்படும். பெண்வழியில் உள்ளவர்களுக்கே சொத்துரிமை வழங்கப்படும். இந்த முறையில் பெண்கள் 10க்கு மேற்பட்ட சம்பந்தமுறைக் கணவர்களை மணந்து கொள்ள உரிமை உண்டு. ஆனால் மூன்று, நான்கு பேர் அப்பெண்ணின் முக்கிய நெருங்கிய சம்பந்தமுறைக் கணவர்களாக இருப்பார்கள். அவ்வழியில் செல்லும் நாயர் வீரர்களோடும் இந்த நாயர் பெண்கள் உறவு வைத்துக் கொள்வார்கள். ஆண்கள் இது குறித்து வருத்தப்படுவதில்லை.

நாயர் ஆண்களும் பல பெண்களை சம்பந்தமுறைப்படி மனைவிகளாக வைத்துக் கொள்ளும் உரிமை கொண்டவர்கள். இரவில் இந்த நாயர் பெண்ணோடு இருக்கும் ஒரு கணவன் அறைக்கு வெளியே தனது ஆயுதங்களை விட்டுச்செல்வார். அங்கு வரும் பிற கணவர்கள் அதனை அறிந்து கொண்டு அன்று விலகிச் சென்று விடுவர். ஆனால் நாயர் பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் பொழுது யாராவது ஒரு கணவர் அக்குழந்தைக்கு நான் தான் தந்தை என்று பொறுப்பை ஏற்றுக்கொள்வார். யாரும் பொறுப்பை ஏற்கவில்லை எனில் அப்பெண் கீழ் சாதி ஆணோடு உறவு கொண்டாள் என அனைவர் முன்னிலையிலும் குற்றம் சாட்டப்பட்டு சாதியிலிருந்து விலக்கப்படுவதோடு அடிமையாக விற்கப்படுவாள். இந்த நடைமுறை சம்பந்த முறை உள்ள சமூகத்தில் பெண்ணை மறைமுகமாக ஆணுக்கு அடிமையாக ஆக்குகிறது எனலாம். இன்று இந்நடைமுறை பின்பற்றப்படுவதில்லை.

கேட்டு கலியாணம் (Kettu Kalyanam):

கேட்டு கலியாணம் என்பது நாயர், மாரர், அம்பலவாசி ஆகிய சாதிகளின் மிக ஆடம்பரமான போலித்திருமணச் சடங்கு. இதற்கு தாலிகேட்டு கலியாணம் என்ற பெயரும் உண்டு. இம்முறையில் இளவயது நாயர் பெண்ணுக்கு, ஒரு நாயர் ஆணோடு திருமணச் சடங்கு அவர்களுடைய தரவாடு வீட்டில் ஆடம்பர முறையில் நடக்கும். அதன்பின் அந்த கணவன் மூன்று நாட்கள் அந்த பெண்ணோடு தனி அறையில் இருந்து விட்டு வெளியேறி விடுவான். அத்துடன் அவர்கள் உறவு முடிந்துவிடும். அதன்பின் அந்தப் பெண் வயதுக்கு வந்தபின் சம்பந்த முறையில் பிற நாயர் ஆண்களோடும், நம்பூதிரி ஆண்களோடும் உறவு வைத்துக் கொள்ளலாம். ஆகவே இச்சடங்கு என்பது பிற நாயர், நம்பூதிரி ஆண்களோடு சம்பந்த முறையில் உறவு வைத்துக் கொள்வதற்கான ஒரு அங்கீகாரம் வழங்கும் நிகழ்வு.

தரவாடு வீடு (Tharavad House):

மறுமக்கள் தாயமுறையைக் கொண்ட பெண்வழியில் உருவான இரத்த உறவுகள் ஒன்று சேர்ந்து வாழும் நாயர் வீடுதான் தரவாடு வீடு. இந்த குடும்பத்தில் பெண்வழியில் பிறந்த சகோதர, சகோதிரிகள் அனைவரும் ஒன்றாக வாழ்வர். இந்த குடும்பத்தின் தலைவனாக அதன் மூத்த சகோதரன் இருப்பான். ஆனால் பெண்களின் கணவர்கள் இங்கு வசிக்காமல் அவர்களுடைய அம்மாவும் சகோதரிகளும் வசிக்கும் அவரவர் தரவாடு வீட்டில் வசித்து வருவர். அந்தத் தரவாடு வீடுதான் அவர்களுடைய சொந்த வீடாக இருக்கும். இன்று இது பூர்வீக வீடு எனச் சொல்லப்படுகிறது.

கேரள சமூகத்தில் ஏற்பட்ட விளைவுகள்:

நம்பூதிரி பார்ப்பனன் தூய்மையானவன் என்பதால் இரவில் மட்டும் நாயர், அமபலவாசி போன்ற சாதிப் பெண்களோடு உறவு கொள்வான்; பகலில் அவர்களிடமே தீண்டாமையைப் பின்பற்றுவான். நம்பூதிரி பார்ப்பனர்களின் குலமும், குடும்பமும் மேன்மையானது என்பதால் அவனது மூத்த மகன் மட்டுமே குடும்ப வாரிசு. ஆகவே அவன் மட்டுமே பார்ப்பனப் பெண்களைத் திருமணம் செய்து கொள்ள முடியும். மற்ற ஆண்கள் வாழ்வின் இறுதிவரை நாயர், அமபலவாசி போன்ற சாதிப் பெண்களோடு உறவு கொண்டு வாழ வேண்டும். அவர்களுக்கு குடும்பமோ, வாரிசுகளோ இருக்காது. பார்ப்பனப் பெண்கள் தூய்மையான கற்போடு இருக்க வேண்டும். ஆனால் நாயர், அம்பலவாசி போன்ற சாதிப்பெண்களுக்குக் கற்பு தேவையில்லை.. நம்பூதிரிகளின் நன்மைக்காக கற்பு புனிதமானது என்ற கருத்து அவர்களுக்கு நீக்கப்பட்டது. நாயர், அம்பலவாசி போன்ற சாதிகளின் ஆண்களுக்கு வாரிசோ,. குடும்பமோ இருக்க முடியாது. ஆனால் நம்பூதிரிக்கு மட்டும் குடும்பம் இருக்கும்; வாரிசும் இருக்கும்; நம்பூதிரி பெண்களுக்கு மட்டும் கற்பு புனிதமானதாக இருக்கும்.

மறுமக்கள் தாயமுறையில் பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டிருப்பதுபோல் சிலர் சொல்லலாம். ஆனால் நாயர் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கு தனது கணவர்களில் யாரோ ஒருவர் பொறுப்பேற்க வேண்டும். யாரும் பொறுப்பை ஏற்கவில்லை எனில் அப்பெண் கீழ் சாதி ஆணோடு உறவு கொண்டாள் என அனைவர் முன்னிலையிலும் குற்றம் சாட்டப்பட்டு சாதியிலிருந்து விலக்கப்படுவதோடு அடிமையாக விற்கப்படுவாள். அடிப்படையில் ஆண்கள் நினைத்தால் ஒரு பெண் சாதியிலிருந்து விலக்கப்பட்டு அடிமையாக விற்கப்படுவாள். ஆகவே அவள் எப்பொழுதும் ஆண்களுக்கும் நம்பூதிரி பார்ப்பனர்களுக்கும் கட்டுப்பட்டுதான் நடந்தாக வேண்டும். பார்ப்பனப் பெண்கள் ஒருத்திக்கு ஒருவன் என்ற கற்பு நிலையில் வாழ முடியும். ஆனால் நாயர் பெண்களுக்கு கற்பு என்பது இருக்கவில்லை. ஆனால் அவள் குழந்தைகளை வளர்த்தெடுக்கும் பொறுப்பையும் குடும்பப் பொறுப்புகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் அவள் தனது கணவர்களான நாயர் ஆண்களுக்கு மட்டுமின்றி நம்பூதிரி பார்ப்பனர்களுக்குக் கட்டுப்பட்டும் வாழ்ந்தாக வேண்டும்.

இந்த மறுமக்கள் தாயமுறை இனக்குழுகால அநாகரிக நடைமுறை. நாகரிக கால நடைமுறையில்தான் ஒருதாரத் திருமண முறையும், குடும்பமும், வாரிசும் இருக்கும் என்பதோடு கற்பும் புனிதமானதாகக் கருதப்படும். இனக்குழுகால நடைமுறையில் அவை இருக்காது. நாகரிக கால நடைமுறை அனைத்தும் நம்பூதிரி பார்ப்பன குடும்பத்துக்கு வழங்கப்பட்டு இருந்தது. அவை அனைத்தும் நாயர், அம்பலவாசி போன்ற சாதிகளுக்கு மறுக்கப்பட்டிருந்தது. இந்த சம்பந்தம் முறையாலும், மறுமக்கள் தாயமுறையாலும் நம்பூதிரி பார்ப்பனன் சட்டப்படியான பாலியல் சுரண்டலிலும் ஈடுபட முடிந்தது. இது உலகில் எங்குமே இல்லாத நடைமுறை.

பொதுவாக ஒரு சமூகம் முழுவதுமே மறுமக்கள் தாயமுறை எனப்படும் தாய்வழியுரிமையைப் பின்பற்றி வாழ்வதை நாம் காண முடிகிறது. ஆனால் மேலே உள்ளவர்களின் நலனுக்காக அவர்களின் குல, குடும்ப மேன்மைக்காக அவர்கள் தந்தைவழி உரிமையையும், அதற்குக் கீழே உள்ளவர்கள் தாய்வழியுரிமையையும் பின்பற்றி வாழ்ந்ததை உலகில் கேரள வரலாற்றில் மட்டுமே காண முடிகிறது. மேலும் 1000 வருடங்களுக்கு மேலாக நகர நாகரிகத்தைக் கொண்ட கேரளச் சமூகம், புதிதாகக் குடியேறிய நம்பூதிரிகளின் குல, குடும்ப மேன்மைக்காக இனக்குழுகால, அநாகரிக கால நடைமுறையான தாய்வழியுரிமையைப் பின்பற்ற வேண்டிய ஒரு சூழ்நிலை கேரள சமூகத்திற்கு ஏற்பட்டிருந்தது. அதனை அவர்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னரே உணர்ந்தனர். அதன்பின் போராடி அம்முறையை நாகரிக காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்தனர். நம்பூதிரிகளின் ஆதிக்கத்தால் கேரளாவில் சாதியமும், தீண்டாமையும் மிகக் கடுமையாகப் பின்பற்றப்பட்டது. சம்பந்தம் முறையும், மறுமக்கள் தாயமுறையும் இயற்கையாக உருவானது என்று சொல்வது முட்டாள்தனமும் ஏமாற்றும் நோக்கமும் கொண்டது. ஆனால் இந்த சம்பந்தம் முறை, மறுமக்கள் தாயமுறை போன்றனவற்றை கேரள ஆட்சியாளர்களின் குடும்பங்களும் ஏற்று பின்பற்றின என்பதுதான் வருத்தத்திற்கு உரியது. 

ஆ.கேரளாவில் பார்ப்பன ஆதிக்கம்

கி.பி. 500 முதல் கி.பி. 800 வரை கேரளாவில் இருந்த ஆட்சிமுறை குறித்துத் தெளிவாக அறிய இயலவில்லை. கி.பி. 550 வாக்கில் ஏற்பட்ட களப்பிரர் வீழ்ச்சிக்குப் பிறகு கேரளாவில் ஏற்பட்ட குழப்பமான நிலைமை, வெளியிலிருந்து வந்த பார்ப்பனக் குழுக்கள் தங்களுக்கான குடியிருப்புகளை கோயிலை மையமாகக் கொண்டு உருவாக்கி, கேரளாவின் பெரும்பகுதிகளில் நிலபுலன்களும் செல்வவளமும் உடைய, அரசியல் அதிகாரமும், சமூக செல்வாக்கும் கொண்ட ஒரு ஆதிக்கமிக்க சமூகமாக உருவாக வாய்ப்பளித்தது. பெரு நிலப்பிரபுக்களாக உருவான இந்த நம்பூதிரி பார்ப்பனர்கள் கேரள சமூகத்தையும் அதன் அரசியலையும் தங்களின் சொந்த நலன்களுக்கேற்றவாறு வடிவமைத்தார்கள் எனவும், அதன் காரணமாக கி.பி. 6ஆம் 7ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு கி.பி. 800 வரை பார்ப்பனத் தன்னலக் குழுக்களின் (Oligarchs) ஆட்சி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. கோயிலை மையமாகக் கொண்ட பார்ப்பன நிலப்பிரபுக்கள் ஒன்றிணைந்து ஒரு குழுவாக உருவாகி ஆட்சி செய்து வந்துள்ளனர் எனக் கருதப்படுகிறது.

இந்த பார்ப்பனக் குழுக்களின் தலைவர்கள், 12 வருடங்களுக்கு ஒருமுறை வெளியிலுள்ள ஆளும் குடும்பத்திலிருக்கும் ஒருவரைக் கொண்டு வந்து அவருக்கு பெருமாள் என்ற பட்டத்தை அளித்து 12 வருடங்களுக்கு அவர் கேரளாவை ஆட்சி செய்ய அனுமதித்து வந்தனர் எனக் கேரளோற்பத்தி குறிப்பிடுகிறது. ஆனால் பெரிய புராணம் கி.பி. 800வாக்கில் கேரளத்தை ஆண்ட இறுதி வேந்தன் சேரன் பொறையன் எனவும் அவனது அமைச்சர்கள் அவர் பதவியைத் துறந்து காட்டுக்குப்போனதால் ஏற்பட்ட குழப்ப நிலையைப்போக்க, சேரமான் பெருமாள் நாயனாரை அழைத்து வந்து அரசராக ஆக்கினர் எனவும் கூறுகிறது (9). ஆகவே கேரளோற்பத்தியின் கதைகளை முழுமையான வரலாறாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை எனினும் கி.பி. 800ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து சேரர் பெருமாள் ஆட்சி கேரளத்தில் தொடங்குகிறது எனக்கருதலாம். கேரளாவின் அரசியலில் கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் நம்பூதிரி பார்ப்பனர்கள் மிகப்பெரிய செல்வாக்கு செலுத்தி வந்தனர் எனவும் கி.பி. 800க்குப்பிறகு உருவான சேரர் பெருமாள்களின் ஆட்சியிலும் நம்பூதிரி பார்ப்பனர்களின் செல்வாக்கு இருந்து வந்தது எனவும் கருதப்படுகிறது.

கேரளாவில் ஏற்பட்ட பார்ப்பனக் குடியேற்றத்தாலும் அவர்கள் ஏற்படுத்திய சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களின் விளைவுகளாலும் முன்பிருந்த சமூக அமைப்பில் மாற்றம் தேவைப்பட்டது. அந்தத் தேவையின் விளைவாக உருவானதுதான் புதிய சேரர் பெருமாள் ஆட்சி எனக் கருதப்படுகிறது(10). பார்ப்பனக் குடியேற்றத்தால் கேரளாவில் பார்ப்பனர்களைக் கொண்ட கிராமங்களும், பார்ப்பனர்கள் இல்லாத கிராமங்களும் உருவாகின. தொடக்கத்தில் சொல்லப்பட்ட பாரம்பரிய 32 பார்ப்பனக் குடியிருப்புகள் போக பல பார்ப்பனக் குடியிருப்புகள் இந்தக் காலகட்டத்திலும் உருவாகின. இவை பழைய குடியிருப்புகளில் உள்ள பார்ப்பனர்களை வரவழைத்து உருவாக்கிய புதிய குடியிருப்புகள். சான்றாக தாலிபரம்பா என்ற இடத்திற்கு அருகில் உள்ள திருவத்தூர் கோயில் கல்வெட்டு ஒன்று 10ஆம் நூற்றாண்டில் வைக்கம் என்ற இடத்தில் இருந்து கொண்டு வந்த 24 பார்ப்பனர்களைக் கொண்டு ஒரு புதிய பார்ப்பனக் குடியிருப்பு உருவாக்கியது குறித்துக் கூறுகிறது. அதுபோன்றே கொள்ளூர் மடம் செப்புப்பட்டயம் 23 பார்ப்பனக் குடும்பங்களைக் கொண்ட பார்ப்பனக் குடியிருப்பு ஒன்று தென்கேரளாவில் உருவானது குறித்துக் கூறுகிறது(11).

ஆகவே கி.பி. 550க்கு முன்பிருந்து கி.பி. 800 வரையிலும் அதன் பின்னர் சேரர் பெருமாள் ஆட்சியிலும் புதிய புதிய பார்ப்பனக் குடியிருப்புகள் தொடர்ந்து உருவாகி வந்தன. இந்தப் பார்ப்பனக் குடியிருப்புகள் பெரும்பாலும் முன்பு கூறியது போல் ஆறுகள் பாய்ந்து நெல் விளைகிற செழிப்பான இடங்களில்தான் உருவாக்கப்பட்டிருந்தன. பிற இடங்களில் பார்ப்பனர் இல்லாத ஊர்கள் இருந்தன. தமிழ் நாட்டில் பார்ப்பனக் கிராமங்களை பிரமதேயம் எனவும் பார்ப்பனர் இல்லாத கிராமங்களை ஊர் எனவும் அழைத்தனர். தமிழகத்தில் 80 விழுக்காட்டுக்கு மேல் பார்ப்பனர் அல்லாத ஊர்கள்தான் இருந்தன. ஆனால் கேரளாவில் வளமான நிலங்களைக் கொண்ட ஊர்களில் பெரும்பாலானவை பார்ப்பனக் குடியிருப்புகளைக் கொண்டனவாக இருந்தன. கேரளாவில் பார்ப்பனர், பார்ப்பனர் இல்லாத கிராமங்கள் இரண்டுமே ஊர்கள் என்றே அழைக்கப்பட்டன. பார்ப்பனக் குடியிருப்புகள் உருவாக்கப்படும்பொழுது அத்துடன் வண்ணார், ஈழவர், தச்சர், வாணியர்(எண்ணெய் ஆட்டுபவர்) போன்றவர்களும் குடியமர்த்தப்பட்டனர். இதனை தாரிசப்பள்ளி செப்புப் பட்டயமும் (கி.பி.849), கொள்ளூர் மடம் பட்டயமும் (கி.பி. 1189) எடுத்துக் கூறுகின்றன(12).

ஊர்களில் பார்ப்பன நிலப்பிரபுக்களைக் கொண்ட சபை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. அதன் உறுப்பினர்கள் சபையார் அல்லது ஊரார் என அழைக்கப்பட்டனர். பார்ப்பனக் குடியிருப்புகள் இருக்கும் ஊர்களில் பெரும்பாலான நிலங்கள் பார்ப்பனர்களுக்குச் சொந்தமானதாக அல்லது கோயில்களுக்குச் சொந்தமானதாக இருந்தன. கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களும் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. ஆகவே ஊரின் சபையார் அல்லது ஊரார் என்ற அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் பெரும்பாலும் பார்ப்பனர்களாகவே இருந்தனர்.

பார்ப்பனர் இல்லாத ஊர்கள்:

பார்ப்பனர் இல்லாத ஊர்களில் இருந்த வேளாண்மை நிலங்கள் நாடுவாலிகள் அல்லது அவர்களது வம்சாவழியைச் சேர்ந்த உள்ளூர் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. அந்த நிலங்கள், சேரிகள் அல்லது ஆட்சியாளர்களின் நிலங்கள் என அழைக்கப்பட்டன. அதன் குத்தகைதாரர்களாக வெள்ளாளர்கள் (காராளர்கள்) இருந்தனர். அவர்களின் நிலத்தை உழுது வேளாண்மை செய்பவர்கள் ஆலத்தியார் எனப்பட்டனர். இதனை கி.பி. 849ஆம் ஆண்டு தாரிசப்பள்ளி செப்புப்பட்டயம் கூறுகிறது(13).

கி.பி.1005ஆம் ஆண்டு திருநெல்லி செப்புப்பட்டயம் கிழக்குக் குரும்பொறை நாட்டின் ஆட்சியாளர் குரும்பொறை என்பவர் திருநெல்லி கோயிலுக்கு கிழக்காட்டிப்புழா சேரிகள் என்ற ஊரின் நிலப்பகுதியைத் தானமாக வழங்கியுள்ளதாகக் கூறுகிறது. இந்த பட்டயம் கிழக்காட்டிப்புழா சேரிகள் என்ற ஊரில் இருந்தவர்கள் வெள்ளாளர்களும் ஐங்கம்மாளர்களும் தான் என்பதையும் குறிப்பிடுகிறது (14). தமிழக ஊர்களில் வெள்ளாளர்கள் நிலச்சொந்தக்காரர்களாகவும் அந்த ஊர் அவையின் (ஊரார்) தலைவர்களாகவும் இருந்தனர். பார்ப்பனர் அல்லாத ஊர்களின் தலைவர்களை ஊரார் எனவும் பார்ப்பன ஊர்களின் தலைவர்களை சபையார் எனவும் தனித்தனியாகச் சில கேரள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செம்பரா கல்வெட்டு ஒன்று ஊரார், ஈத்தனூர் சபை ஆகிய இரண்டும் சேர்ந்து முடிவு எடுத்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. அதே நூற்றாண்டைச் சேர்ந்த இன்னொரு செம்பரா கல்வெட்டு ஊரார் மட்டுமே முடிவெடுத்ததாகக் கூறுகிறது. கி.பி. 1050ஆம் ஆண்டைச்சேர்ந்த திரிக்கடித்தனம் கல்வெட்டு ஊரார், சபையார், பரத்தையார் (கோயில் நிர்வாகிகள்) ஆகிய மூவரும் சேர்ந்து முடிவெடுத்ததாகக் கூறுகிறது(15). இவைகளை வைத்துப் பார்க்கும்பொழுது பார்ப்பனர் இல்லாத ஊர்களில் பார்ப்பனர் அல்லாதவர்கள் அதன் ஊராராக இருந்தனர் என அறிய முடிகிறது.

நில உரிமை:

நிலம் பொதுவாக அரசனுக்குச் சொந்தமானதாகக்கருதப்பட்டது. ஆனால் நடைமுறையில் நிலங்கள் பார்ப்பனர்களுக்குச் சொந்தமான பிரமசுவம் நிலமாகவும், கோயில்களுக்குச் சொந்தமான தேவசுவம் நிலங்களாகவும், உள்ளூர் ஆட்சியாளர்களுக்குச் சொந்தமான சேரிகள் நிலங்களாகவும் மூன்று வகையான நிலங்கள் இருந்தன. பார்ப்பனக் குடும்பங்கள் ஊருக்கு 10 முதல் 27 குடும்பங்கள் வரை இருந்ததாகக் கல்வெட்டுகளும் பட்டயங்களும் கூறுகின்றன. பார்ப்பனக் குடும்பங்களில் மூத்தவன் தான் அனைத்து நிலங்களுக்கும் சொந்தக்காரனாக இருந்தான். இக்குடும்பங்கள் மூத்த ஆண் வாரிசு (Primogeniture) முறையைப் பின்பற்றின. அவன்தான் குடும்பத்தின் அனைத்துச் சொத்துக்களுக்குக்கும் அக்குடும்பத்தில் உள்ள அனைவருக்குமான பிரபுவாக (Lordship) இருந்தான். நிலப்பிரபுவின் நில உரிமை சன்மம் (Janmam) எனப்பட்டது. அவன் தனது நிலங்களை காராளர்களுக்கு குத்தகைக்குக் கொடுத்தான். அதற்கு பாட்டம் என்ற நிலவாடகையை (Rent) நெல்லாகப் பெற்றுக் கொண்டான். இந்தக் காராளர்களின் நிலக்குத்தகை உரிமை என்பது காராண்மை எனப்பட்டது. இவனுக்கு கீழ் உழைப்புப் பணியைச் செய்யும் அதியாலர் புலையர் போன்றவர்கள் இருந்தனர். அவர்களது உரிமை அதியாய்மை எனப்பட்டது. இவர்கள் போக அவ்வூரில் இருந்த மருத்துவர், கொல்லர், வண்ணார், தச்சர், ஐங்கம்மாளர் போன்ற பல்வேறு தொழிலாளர்களின் உரிமை குடிமை எனப்பட்டது(16).

தேவசுவம் எனப்படும் கோயில் நிலங்களைத் தங்களது கட்டுப்பாட்டில் பார்ப்பனர்கள் வைத்திருந்தனர். அக்கோயில்களில் பணி செய்பவர்களுக்கு அப்பணிக்காக சிறிதளவு நிலங்கள் வழங்கப்பட்டன. அவை விருத்தி அல்லது சீவிதம் எனப்பட்டன. கோயில் நிலங்களுக்கு வாங்கப்படும் குத்தகைகள் அதாவது பாட்டம் என்பது ஐந்தில் இரு பங்கு, மூன்றில் ஒரு பங்கு, ஐந்தில் ஒரு பங்கு என நிலத்தின் வளத்தையும் இன்னபிற காரணிகளையும் கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டன. வருடத்திற்கு இருமுறை இந்த பாட்டம் வழங்கப்பட்டது. இந்தக் காரண்மை என்பது வழிவழியான பாரம்பரிய உரிமையாக இருந்தது. அதனை நிலச்சொந்தக்காரர் தன் விருப்பப்படி மாற்றியமைக்க முடியாது. ஆனால் காராளர் தனது குத்தகையை வழங்காதபோது இருமடங்கு தரவேண்டும் என தண்டனை விதிக்கவும் தேவையானால் அவரை நீக்கவும் கோயில் அல்லது நிலச்சொந்தக்காரர்களுக்கு உரிமை இருந்தது(17).

உற்பத்தியும் பிரித்து வழங்குதலும்:

காராண்மையாளர் தனக்குக் கீழ் உள்ள அதியாலர் அவருக்கும் கீழ் உள்ள புலையர் போன்றவர்களுடைய உழைப்பின் உதவியோடு வேளாண்மை செய்து அதன் விளைச்சலை காராண்மையாளர் எடுத்துக் கொள்வார். அதில் ஒரு சிறு பங்கு அதியாலர், புலையர் ஆகியவர்களுக்கு வழங்கப்படும். அதன்பின் காராளர் பாட்டம் எனப்படும் குத்தகையை நாடுவாலி, பார்ப்பன நிலபிரபு, கோயில், சர்ச் நிர்வாகிகள் போன்றவர்களில் யாரிடமிருந்து நிலத்தைப் பெற்றாரோ அவருக்கு வழங்குவார். அதன்பின் தன் கீழ் இருக்கும் மருத்துவர், கொல்லர், வண்ணார், தச்சர் போன்ற அனைத்துக் குடிகளுக்கும் உரிய பங்கினை வழங்குவார். அதன்பின் மீதியாவதைத்தான் வைத்துக் கொள்வார். இந்த நிலப்பிரபுக்கள் அல்லது நிலச் சொந்தக்காரர்கள் உள்ளூர் ஆட்சியாளரான நாடுவாலி அல்லது சேரர் பெருமாளுக்கு வருடா வருடம் தரவேண்டிய பங்கைச் செலுத்துவார்கள்.

கேரளாவில் கோயில்கள்:

கேரளாவில் கோயில்கள் மிகப் பெரிய நிறுவனங்களாக ஆகியிருந்தன. அவைகளுக்குப் பேரளவிளான நிலங்கள் இருந்தன. சான்றாக, 10ஆம் 11ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த திருவல்லா செப்புப்பட்டயம் திருவல்லா கோயிலுக்கு 27,105 பாராக்கள் அளவு நெல் குத்தகையாகக் கிடைத்தது எனவும், அதன் கீழ் இருந்த நிலங்களுக்கு, 30,000 பாராக்கள் விதை நெல்கள் தேவைப்படும் எனவும் கூறுகிறது(18). ஆகவே அதிக அளவான நிலங்கள் கோயில்களுக்கு சொந்தமான நிலங்களாக இருந்தன. இவைபோக அவை நிறையத் தங்க ஆபரணங்களையும் பிற செல்வங்களையும், சொத்துகளையும் கொண்டிருந்தன. கோயிலுக்குப் பெறப்படும் அரிசியிலிருந்து ஒரு பகுதி கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும். வேலையாட்கள், நடனப் பெண்மணிகள், இசை இசைப்பவர்கள், பாதுகாவலர்கள் போன்ற பலருக்கும் ஊதியமாக அவை வழங்கப்படும். இந்த கோயில்கள் சாலைகள் எனப்படும் வேதப்பள்ளிகளை நடத்தி வந்தன. 95 முதல் 175 பார்ப்பன மாணவர்கள் அதில் படித்தனர். இந்த சாலைகளில் போர்ப்பயிற்சிகளும் வழங்கப்பட்டன(19). இதற்கான மொத்த செலவையும் கோயில்கள் ஏற்றுக் கொண்டிருந்தன. இவை போக இந்தக் கோயில்கள் ஆதுரசாலை எனப்படும் மருத்துவ மனைகளையும் நடத்தி வந்தன.

கோயில் பணியாளர்கள்:

கோயில்களில் பல்வேறு பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். தலைமை குருக்கள் தந்திரி எனப்பட்டார். கோயில் செயலாளர் எனப்படும் பொதுவாள் இருந்தார். குருக்கள் இருந்தனர். வாரியர் எனப்படும் பூசைக்கான பூக்கள், கோயிலின் தூய்மை முதலியனவற்றைச் செயல்படுத்துபவர் இருந்தார். இன்னும் பல்வேறு கோயில் அலுவலர்கள் இருந்தனர். இவர்கள் போக நடனம் ஆடுகிற பெண்கள் (நங்கையர்), இசை நிழ்ச்சி நடத்துகிற சாக்கையர், கூத்து நடத்துபவர், நட்டுவனார் போன்ற பல கலைஞர்கள் இருந்தனர். கோயிலில் பணி புரிந்த இவர்கள் அனைவரும் அம்பலவாசிகள் எனப்பட்டனர். இவர்கள் போக கோயில்களில் உழைப்புப் பணிகளைச்செய்யும் பணியாளர்கள் பலர் இருந்தனர். இவர்கள் அனைவருக்கும் கோயில் ஊதியம் தந்து வந்தது. பார்ப்பனர்களைக் கொண்ட கோயிலின் நிர்வாகக்கமிட்டிகள் மூலம் இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டன. இந்தக் கோயில்கள் பொதுமக்களுக்கான வங்கிகளாகவும் செயல்பட்டன.

தமிழகக்கேரளக் கோயில்கள்:

அன்றைய கேரளச் சமூகம் வேளாண்மைப் பொருளாதாரத்தைக் கொண்டு குறைந்த வருமானம் கொண்ட சமூகமாகவே இருந்தது. அங்கு மிகை உற்பத்தி என்பது குறைவு. அதனால் தமிழகத்தில் சோழர் பாண்டியப்பகுதிகளில் இருந்தவாறு மிகப்பெரிய கோயில்களையோ, மிகச் சிறந்த சிற்பங்களையும், ஓவியங்களையும் கொண்ட மாபெரும் மண்டபங்களையும் இன்னபிற கட்டடங்களையும் கொண்ட பெருமிதமிக்க கட்டடக்கலை அமைப்புகளை உருவாக்க இயலவில்லை. சோழ பாண்டிய தேசங்கள் பேரளவான மிகை உற்பத்தி கொண்ட வேளாண்மைப் பொருளாதாரத்தையும், வேறுபல தொழில் வளங்களையும் கொண்ட நாடுகளாக இருந்தன. அங்கு காவேரிச் சமவேளியின் மிகை உற்பத்தியும், படையெடுப்புகளால் கிடைத்த செல்வ வளமும் இருந்தன. ஆனால் கேரளா ஒப்பீட்டளவில் சிறியதாகவும் மிகை உற்பத்தி குறைவாகவும் இருந்த தேசம் என்பதால் கேரளக் கோயில்கள் சிறியதாகவும் அதிக அளவிலான சிற்பக்கலை, கட்டடக்கலை முதலியன இல்லாததாகவும் இருந்தன(20). இது ‘கேரள வரலாறு’ நூல் தரும் கருத்தாகும். ஆனால் பார்ப்பன நிலச்சொந்தக்காரர்கள், ஆட்சியாளர்கள் போன்றவர்களின் ஆதிக்கமும் சுரண்டலுமே அவை செல்வமும், வளமும் பெறாததற்குக் காரணம். இதே கேரளா, சங்ககாலத்திலும்(கி.மு. 750-50), குறுநில அரசுகளின் காலத்திலும்(கி.பி. 1200-1500) அதிகச்செல்வவளமும் வளர்ச்சியும் பெற்ற நாடாக இருந்துள்ளது.

கேரள சமூகத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கம்:

கேரளாவில் இருந்த வளமான நிலங்கள் அனைத்தும் நம்பூதிரி பார்ப்பன நிலச் சொந்தக்காரர்களுக்கும் கோயில்களுக்கும் சொந்தமானதாக இருந்தது. நாலுதாலிகள் எனப்படும் பார்ப்பனக் குடியிருப்புகளின் கூட்டமைப்பு நாடு தழுவிய அரசியல் அதிகாரங்களைக் கொண்டதாக இருந்தது. கேரள சமூகத்தில் பார்ப்பனர்களுக்கு அடுத்தநிலையில் அதிக நிலபுலங்களையும் செல்வாக்கையும் கொண்டிருந்த நாயர்கள், பணிக்கர்கள், சர்மாக்கள், மேனன்கள், அம்பலவாசிகள் போன்றவர்கள் சம்பந்தம் முறையில் பார்ப்பனர்களுக்கு இரத்த உறவு கொண்ட கீழ்நிலைச் சாதிகளாகவும், பார்ப்பனர்களுக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் இருந்தனர். உள்ளூர் ஆட்சியாளர்களான நாடுவாலிகளும் கூட அவர்களின் அரசியல் ஆட்சி அதிகாரத்துக்கு பார்ப்பனர்களின் ஏற்பிசைவை வேண்டுபவர்களாகவும், பார்ப்பனர்களின் சமய ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் இருந்தனர். இப்படியாக நாடு முழுவதும் மறைமுகமாகவும் நேரடியாகவும் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால்தான் அவர்கள் கேரள சமூகத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய முடிந்தது.

பார்ப்பனமயமாக்களின் விளைவுகள்:

கேரள சமூகத்தின் மீதும் அதன் பண்பாட்டின் மீதும் நம்பூதிரிகளின் குடியேற்றம் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தியது. சாதியில்லாத சமூகத்தில் அவர்கள் சாதியை உருவாக்கினார்கள். இவர்கள் கருத்தியல் ஆட்சியாளர்களை மிகவும் மேன்மையானவர்களாக மாற்றியமைத்தது. இவர்களால் பெண்களின் நிலை மிகவும் தாழ்வானதாக ஆகியது. நம்பூதிரிகள் சம்பந்தம், தேவதாசி முறை, சுமார்த்தாவிசாரம் போன்ற பல சமூகத் தீமைகளைக் கொண்டு வந்தனர். பரசுராமன் குறித்த புராணக்கதைகள் நம்பூதிரிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தியது. இவர்கள் கேரள சமூகத்தில் கொண்டு வந்த மாற்றங்களால் உருவான சேரர் பெருமாள் ஆட்சி நம்பூதிரிகளை வளமுடைய நிலங்களின் சொந்தக்காரர்களாக உறுதிப்படுத்தியதோடு மக்களின் மீதான சமய அதிகாரங்களைக் கொண்டவர்களாகவும் மாற்றியமைத்தது(21).

பார்வை:

1. Fuller, C. J. (30 December 1976). The Nayars Today. CUP Archive. ISBN 978-0-521-29091-3.& Fuller, Christopher John (Winter 1975). "The Internal Structure of the Nayar Caste". Journal of Anthropological Research. 31 (4): 283–312. JSTOR 3629883.(subscription required)

2.Kodoth, Praveena (May 2001). "Courting Legitimacy or Delegitimizing Custom? Sexuality, Sambandham and Marriage Reform in Late Nineteenth-Century Malabar". Modern Asian Studies. 35 (2): 351. doi:10.1017/s0026749x01002037. JSTOR 313121. PMID 18481401.

3. Collins, Randall; Randall, Collins; Collins, Professor of Sociology Randall; Collins, Randall Alfred (28 February 1986). Weberian Sociological Theory. Cambridge University Press. pp. 300, 301. ISBN 978-0-521-31426-8.

4.Thomas Johnson Nossiter (1 January 1982). Communism in Kerala: A Study in Political Adaptation. University of California Press. p. 26. ISBN 978-0-520-04667-2.

5. "CiNii - Transformation of the Marumakkathayam System in Malabar: The Malabar Marriage Act, 1896 and the Nayar Tarawads". ci.nii.ac.jp. Retrieved 9 March 2008.

6. Kandamathu Kudumba Sangamam Published by K. K. N., Neyyattinkara, S. India 1995, Page 35-39.

7.Jeffrey in the Decline of Nayar Dominance in Travancore, See notes under C V Raman Pillai

8.Levine, Nancy E.; Sangree, Walter H. (1980). "Conclusion: Asian and African Systems of Polyandry". Journal of Comparative Family Studies. XI (3): 399

9. History of KERALA, Rajan Kurukkal/Raghava Varier, Orient Black Swan, 2020, Page: 111.

10.Formation of kerala society and culture, Ancient and Medivel, University of Calicut(767), B.A. History, V semester, G. Sunil Kumaar, 2014, page: 27, 28 & Formation of kerala society and culture, University of Calicut(241), B.A. History, VI semester, N. Padmanabhan, 2011, page: 33.

11.History of KERALA, Rajan Kurukkal/Raghava Varier, Orient Black Swan, 2020, pa: 79.

12. “ “ “ pa: 83

13, 14, 15. “ “ “ pa: 80-81

16, 17. “ “ “ pa: 85-86

18, 19. “ “ “ pa: 88-89.

20. History of KERALA, Rajan Kurukkal/Raghava Varier, Orient Black Swan, 2020, pa: 90

21.Formation of kerala society and culture, Ancient and Medivel, University of Calicut(767), B.A. History, V semester, G. Sunil Kumaar, 2014, page: 26, 27 & Formation of kerala society and culture, University of Calicut(241), B.A. History, VI semester, N. Padmanabhan, 2011, page: 44.

- கணியன் பாலன்

Pin It