தொல்கபிலரின் எண்ணியம் – சட்டோபாத்தியாயா

 தொல்கபிலரை புறநானுறு முதுமுதல்வன் என்கிறது. பத்ரகிரியார் என்கிற சித்தர் அவரை ஆதிகபிலர் எனக் கூறுகிறார். சங்க இலக்கியமோ அவரை தொல்கபிலர் எனப் பாராட்டுகிறது. வடமொழி நூல்கள் அவரை கபிலன், கபிலமுனி எனக்கூறுவதோடு அசுரன் எனவும் கூறுகின்றன. தமிழ் அறிவியல் மரபின் தந்தையான அவரை தமிழகம் மறந்துவிட்டது. வடமொழியாளர்கள் அவரை புதைத்து வைத்துவிட்டனர். வடமொழியில் சாங்கியம் எனக்கூறப்படும் எண்ணியத்தின் மூலவரான தொல்கபிலர் ஒரு தமிழர் என அறுதியிட்டு உரைத்து அவரை வெளிக்கொண்டுவந்த முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்கள் பெரும்பாராட்டுக்குரியவராவார்.

 உலகாயதம் நூலில் தொல்கபிலரின் எண்ணியம் குறித்துத் தேவிபிரசாத் சட்டோபாத்தியாய கூறிய கருத்துக்கள் இங்கு சுருக்கித் தரப்பட்டுள்ளன.

நாத்திகம் – தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா: 

 deviprasath 268புத்தருக்கு முந்தையதாகக் கருதப்படும் ‘சுவேதசுவதரா’ என்ற மறைமம்(மறை என்பது வேதம், மறைமம் என்பது உபநிடதம்), எண்ணியத்தின் மூலவரான தொல்கபிலர் குறித்துக் கூறியுள்ளதை சட்டோபாத்தியாயா தனது ‘இந்திய நாத்திகம்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த மறைம ஆசிரியர் தனது ‘ஒரு கடவுள் கோட்பாட்டை’ எண்ணியத்தின் அடிப்படைகளைவிட மேலானதென நிறுவுவதில் பெருவிருப்பம் கொண்டிருந்தார். அவர் கபிலரின் ஞானம் குறித்தோ அவரின் தொன்மை குறித்தோ கேள்வி எழுப்பவில்லை. கபிலரின் ஞானம் கடவுளின் கொடை எனவும், கபிலரின் பிறப்பு தொன்மையானது எனினும் அவரது பிறப்பை அவன் அறிவான் எனவும் அம்மறைமம் கூறுகிறது. கபிலரையும், அவரின் ஞானத்தையும் பற்றிய இந்த மறைமத்தின் கண்ணோட்டம் மகாபாரதத்திலும், புராணங்களிலும் உள்ள சான்றுகளால் மெய்ப்பிக்கப்படுகிறது எனவும் இந்நூல்கள் கபிலரின் புகழை ஆர்ப்பாட்டமாகப் பாடுபவை என்பதோடு, எண்ணியத் தத்துவத்தின் அடிப்படைகளை வெகுவாகச் சார்ந்திருப்பவை எனவும் சட்டோபாத்தியாயா கூறுகிறார்.

 சுமிருதிகள் கபிலரின் மீது அளவற்ற மதிப்பு கொண்டவை என்பதையும், அவரின் போதனைகளைப் பெருமளவில் தாங்கியவை என்பதையும் சங்கரரும் அறிந்திருந்தார் என்கிறார் சட்டோபாத்தியாயா. மகாபாரதமும், புராணங்களும் எண்ணியத்தின் தொன்மையை மட்டுமின்றி ஆதிகாலத்தில் இத்தத்துவத்துக்கு இருந்த பிரமிக்கத்தக்க செல்வாக்கை ஐயத்திற்கிடமின்றி மெய்பிக்கவும் செய்கின்றன எனவும், இதன் தொன்மையும், மறைமங்களின் அடிப்படைகளுக்கு எதிரான இதன் தெளிவான பார்வையும் இதன் தொடக்கத்தை வேதகாலத்துக்கு முந்தைய, ஆரியம் சாராத சிந்தனைத்தொகுப்பில் தேடவேண்டும் எனத் தற்கால அறிஞரில் சிலரைப் பேச வைத்துள்ளது எனவும், அக்கருத்து சரியானதுதான் எனவும் சட்டோபாத்தியாயா கூறுகிறார். கடவுள் குறித்த கருத்து மெய்ப்பொருள் ஆராய்ச்சிக்குப் பொருத்தமற்றது, தருக்கவியலின்படி வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியது போன்ற கருத்துக்கள் எண்ணிய நாத்திகத்தில் இருப்பதாகவும், முழுமுதற் பொருளின் உள்ளார்ந்த இயக்கவிதிகளின்படி இவ்வுலகு உருவாயிற்று என்பதே உலகின் தோற்றத்துக்கும் அதன் மாற்றத்துக்கும் காரணமான விளக்கமாகும் எனவும், ஆதலால் கடவுளை உலகின் தோற்றத்திற்குக் காரணமாகக் கருதிடும் கேள்வியே இங்கு எழவில்லை எனவும் சாங்கியகாரிகைக்கு உரையெழுதிய வாசசுபதி மிசுராவும், மாதவரும் குறிப்பிட்டுள்ளனர் எனக்கூறுகிறார் சட்டோபாத்தியாயா.

 கபிலர் சடப்பொருளின் இயல்பு, இயக்கம் ஆகியன குறித்துத் தனக்குக் கிடைத்தத் தரவுகள் அரைகுறையானவையே ஆயினும் அவற்றை முன்னிறுத்தி, சடப்பொருளின் இருப்பு, அதன் தன்னிறைவான தன்மை ஆகியவற்றில் அதன் இயல்புக்கும், இயங்கு நிலைக்கும் வேறெந்த புறக்காரணியும் இருக்க முடியாது என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். உலகத்தத்துவ வரலாற்றில் ஆதிப்பழமையானதும் நன்கு திட்டமிட்டு வகுக்கப்பட்டதுமான நாத்திகத்தின் பிரதிநிதியாக மட்டும் எண்ணியம் விளங்கிடவில்லை. அதன் நாத்திகம் மிகத் தெளிவான அறிவியல் கண்ணோட்டத்தின் முன் மாதிரியால் அமையப்பெற்றதுமாகும் என்கிறார் சட்டோபாத்தியாயா. ஆதி உலகின் ஆச்சரியத்துக்குரிய அறிவுலகச் சாதனைகளின் கூறுகளைக்கொண்டதாக எண்ணியத்தைக் குறிப்பிட மேலே சொல்லப்பட்ட அறிவியல் அடிப்படையிலான ஆராய்வுகளே போதுமானது என்கிறார் சட்டோபாத்தியாயா. இவை அனைத்தும் “இந்திய நாத்திகம்” என்ற நூலில் சட்டோபாத்தியாயா அவர்கள் கூறுபவையாகும்(1). கபிலரது எண்ணியச் சிந்தனையின் தொடக்கத்தை வேதகாலத்துக்கு முந்தைய, ஆரியம் சாராத சிந்தனைத் தொகுப்பில் தேடவேண்டும் என்பதை சட்டோபாத்தியாயா உட்படப் பல அறிஞர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகவே கபிலரது எண்ணியம், மூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபுக்குரியது என்பது மேலும் உறுதிப்படுகிறது.

சட்டோபாத்தியாயா – உலகாயதம் - எண்ணியம்:

 “இறைவனின் ஐந்தாவது அவதாரம் முனிவர்களில் முக்கியமானவரான கபிலர் என்பவராவார். அவர் அசுரிக்கு எண்ணியத்தைக் கற்றுக்கொடுத்தார்” எனப் பாகவதம் கூறுகிறது. எண்ணியத்தில் கடவுளுக்கு இடமில்லை எனினும் பாகவதம், கபிலரைக் கடவுளின் அவதாரமாகக் கூறுகிறது. கபிலர் அசுரிக்கு எண்ணியத்தைக் கற்றுக் கொடுத்தார் என பாகவதம் கூறுவதை, சாங்கியக்காரிகையும் கூறுகிறது. இந்த ‘அசுரி’ என்பதன் பொருள் அசுரனின் மகன் என்பதாகும். வேறொரு பழைய நூலில் பௌதாயனர் என்பவர், கபிலரே அசுரர் எனவும் பிற அசுரர்களைப்போல இவரும் தேவர்களை எதிர்த்துப்போரிட்டார் எனவும் கூறுகிறார். மேலும் அசுரர்களது கருத்துகளுக்கும் எண்ணியத்திற்கும் அடிப்படையான விடயங்களில் ஒற்றுமை உள்ளது. ஆரம்பத்தில் முழுவதும் நாத்திகவாதமாகவும், பொருள்முதல் வாதமாகவும் இருந்த எண்ணியம் காலப்போக்கில் ஆன்மீகமயமாக்கப்பட்டு கருத்துமுதல்வாதம் ஊட்டப்பட்டு இறுதியில் மூல எண்ணியத்திற்கு நேர் எதிராக மாற்றப்பட்டுள்ளது(2).

  கபிலரின் எண்ணியம் மிகவும் புகழ் பெற்றதாக இருந்ததால் கபிலர் கடவுளின் அவதாரமாக ஆக்கப்பட்டார். கபிலர் அசுரர் எனவும் அவர் அசுரர்களுக்கு எண்ணியத்தைக் கற்றுக்கொடுத்தார் எனவும் பண்டைய வைதீக நூல்கள் கூறுகின்றன. அதன்மூலம் அவர் ஆரியர் அல்லர் என்பதை பழைய வைதீக நூல்கள் உறுதி செய்கின்றன. தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா அவர்கள் தனது “உலகாயதம்” (தமிழில் எசு. தோதாத்ரி) என்ற நூலில் எண்ணியம் குறித்து 475 முதல் 589 வரையான 115 பக்கங்களில் பத்து தலைப்புகளில் மிக விரிவாக ஆய்வு செய்துள்ளார். அதன் சுருக்கத்தை அதே பத்து தலைப்புகளில் இங்கு காண்போம். அதன் தொடக்கத்தில், பெரும்பாலான எண்ணிய நூல்கள் வழக்கொழிந்துவிட்டன எனவும் எண்ணியத்தில் காணாமல்போன விடயங்களைக் கற்பனையாகத்தான் முழுமைப்படுத்த வேண்டியதுள்ளது எனவும் இது ஒரு சிக்கலான மீட்டுருவாக்கம் எனினும் இதனை மகிழ்ந்து ஏற்க நாம் கடமைப்பட்டுள்ளோம் எனவும் ஏனெனில் எண்ணியம் ஆக்கபூர்வமான, துணிச்சலான தத்துவம் எனவும் கிருசுண சந்திர பட்டார்ச்சார்யா கூறியதைக் குறிப்பிடுகிறார்(3).

 தமிழரான தொல்கபிலரால் உருவாக்கப்பட்ட எண்ணியம் என்கிற சாங்கியம் மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபுக்குரியது என்பதைப் பற்றியும் தொல்காப்பியத்திலும் பிற தமிழ் இலக்கியங்களிலும் அவற்றின் மூலக்கருத்துக்கள் பல இடம்பெற்றுள்ளன என்பதைப் பற்றியும் வட இந்திய அறிஞர்களான சட்டோபாத்தியாயா போன்றவர்கள் அறிந்திருக்கவில்லை. அதனை அறிந்திருந்தால் எண்ணியம் குறித்தான பல மாறுபட்ட கருத்துக்களுக்கும், முரண்பாடுகளுக்கும் மிக எளிதாக முடிவு கண்டிருக்க முடியும் என்பதை எண்ணியம் பற்றிய சட்டோபாத்தியாயா போன்ற மிகச்சிறந்த வடஇந்திய அறிஞர்களின் கருத்துக்களிலும் காணமுடிகிறது.

1.தோன்றியமும் எண்ணியமும்: சட்டோபாத்தியாயா.

 தோன்றியம்(தாந்திரீகம்) மிகப்பழமையானது. அதன் தோற்றத்தைச் சிந்துவெளி நாகரீகத்திலிருந்தே காண முடியும். தோன்றியத்தின் அடிப்படைக் கொள்கைகள், எண்ணியக்கொள்கைகள் போலவே உள்ளன என்பதைக் கேள்விக்கு உட்படுத்த முடியாது. கபிலரின் சாங்கிய தரிசனம் ‘தோன்றியம்’ என அழைக்கப்படுகிறது என சங்கர் பலஇடங்களில் கூறியுள்ளார். மேலும் சாங்கிய காரிகையின் ஆசிரியர் தந்திரம் என்ற சொல்லைச் சாங்கிய தரிசனத்தைக் குறிப்பதாகவே கொண்டுள்ளார். வேறு எதற்கும் தந்திரம் என்ற பெயர் இருந்ததில்லை. மேலும் இன்னொரு ஆதாரம் கபிலதரிசனம் என்பதைத் தோன்றியம் என்னும் பொருளில் தந்திரம் என சங்கரர் அழைத்தார். இது பிரம்ம சூத்திரத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் பிரம்மசூத்திரத்தில் தோன்றியத்தை நேரடியாக மறுக்கும் சூத்திரம் எதுவுமில்லை. பிரம்ம சூத்திரத்தின் ஆசிரியர் எண்ணியத்தை விரிவாக மறுத்ததால் தோன்றியத்தை மறுக்க வேண்டியதில்லை எனக் கருதியிருக்கலாம். அவருடைய காலத்தில் இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு முக்கியமற்றதாக இருந்திருக்கலாம்.

 உலகாயதம் என்பது தோன்றியத்தில் உள்ள நம்பிக்கைகள் நடைமுறைகள் ஆகியவற்றைக் குறிக்கும் என்றால் மூலஎண்ணியத்தை இந்தியத்தத்துவ வரலாற்றில் உலகாயத்தின் வளர்ச்சி என்றே கூறலாம். எண்ணியத்திற்கும் உலகாயத்திற்கும் எந்தவித அடிப்படையான வேறுபாடுகளும் இல்லை என சைன ஆசிரியர் சிலங்கா கருதுகிறார். மூல எண்ணியம் சமரசம் செய்துகொள்ளாத நாத்திகவாதமாகவும், பொருள்முதல் வாதமாகவும் இருந்தது என்பது இதன்பொருள். மூல எண்ணியத்தின் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் இந்தியத்தத்துவ வரலாற்றில் ஈடிணையற்ற சிறப்பைத்தந்தது. இதன் காரணமாகத்தான் நமது தத்துவப் பாரம்பரியத்திற்கு ஆக்கபூர்வமான அறிவியலுக்கான அடிப்படைக் கருத்துக்களை எண்ணியத்தால் கொடுக்க முடிந்தது. இவற்றில் மிக முக்கியமானவை பொருள் பற்றிய கோட்பாடு, காரணகாரியக்கொள்கை, அறிவுக்கொள்கை, பரிணாமக்கொள்கை ஆகியனவாம். “சிந்தனை வரலாற்றில் எண்ணியம் சிறப்பான கவனத்திற்குரியது. சாங்கிய தரிசனம் உலகப்பரிணாமச் செயல்முறை பற்றிய, தெளிவான விரிவான கருத்தைக்கொண்டுள்ளது” என “சீல்” அவர்கள் கூறுகிறார்(4).

2.மூல எண்ணியச் சிக்கல்: சட்டோபாத்தியாயா.

 கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து எண்ணியம் இந்நாட்டில் பரவலான செல்வாக்கைப் பெற்றிருந்தது என்பதைக் கார்பே அவர்களின் கூற்றிலிருந்து அறியலாம். “கற்பனை நெடுங்கதையான மகாபாரதம் தொடங்கி சட்ட நூலான மனுநீதி சாத்திரம் வரை உள்ள நூல்கள், புராண இதிகாசங்கள் ஆகியன உள்ளிட்ட இந்திய இலக்கியம் முழுவதிலும் எண்ணியக்கொள்கை பரவி வழிகிறது” என்கிறார் கார்பே(5). புகழ்பெற்ற அறிஞர் பலரும் எண்ணியத்தை ஆதரிக்கின்றனர் என்பதை மீண்டும் மீண்டும் சங்கரர் ஒப்புக்கொள்கிறார். எண்ணியத்தை நேரடியாக விவரிக்கும் மூல நூல்கள் “சாங்கிய காரிகை”, “சாங்கிய சூத்திரம்” ஆகிய இரண்டுமாகும். கார்பேயின் கருத்துப்படி “சாங்கிய சூத்திரம்” கி.பி. 1400க்குப் பிற்பட்டது. தாசுகுப்தா இதனை 500 ஆண்டுகள் முன்கொண்டு போகிறார். எண்ணியம் பற்றிய ஆரம்பகால நூல்கள் பலவற்றைக் குறிப்பிடும் குணரத்னா, சூத்திரங்கள் பற்றிக் குறிப்பிடவில்லை. எண்ணியம், வேதாந்தம் ஆகிய இரண்டுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளை அகற்றுவதற்கு இடைவிடாத முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதைக் காணும்பொழுது இச்சூத்திரங்களை நாம் ஆதாரமாகக் கொள்ளமுடியாது. இதனோடு ஒப்பிடும்பொழுது ஈசுவர கிருசுணரின் சாங்கியக் காரிகை காலத்தால் முற்பட்டதாகும். இதன் காலம் கி.பி. 500 என கார்பேயும், கி.பி. 200 என தாசுகுப்தாவும் கூறுகின்றனர்.

 சாங்கிய காரிகையிலிருந்து உண்மையான மூல எண்ணியத்தைக் கண்டுபிடிப்பது இயலாது என அறிஞர்கள் கருதுகின்றனர். ஈசுவர கிருசுணர் கூறும் எண்ணியத்தைச் சரகர்(கி.பி. 87) குறிப்பிடவில்லை. மகாபாரதத்தின் சில பகுதிகளில் எண்ணியம் இடம்பெறுவதை அவர் குறிப்பிடுகிறார். எனவே ஈசுவர கிருசுணரின் எண்ணியம் காலத்தால் பிற்பட்டது. அது சரகர் காலத்தில் இல்லை. திபெத்திய ஆதாரங்களைக் கொண்டு, விந்தியவாசி(ஈசுவர கிருசுணர்) எண்ணியத்தினை அவருக்கு ஏற்றபடி திருத்தினார் என்று வாசிலீப் கூறுகிறார். ஆக வேதாந்தக் கருத்துக்களை இந்நூலில் சேர்க்க முயன்ற போக்கு மிகத்தெளிவாகக் காணப்படுகிறது. சாங்கிய காரிகைக்கு உரை எழுதியவர்கள் கௌடபாதரும், வாசசுபதி மிசரரும் ஆவர். கௌடபாதர் மாண்டூக்ய மறைமத்திற்கு உரை எழுதிய சிறந்த வேதாந்தி எனினும் காரிகைக்கு அவர் எழுதிய உரை வேதாந்தச் சார்பு உள்ளதாக இருக்கிறது. வாசசுபதி மிசரரும் எண்ணியத்தில் உள்ள நாத்திகவாதத்தை ஆத்திகவாதமாக மாற்ற வேண்டுமென்றே விரும்பினார். ஆகவே எண்ணியத்தை உறுதியாகப் பின்பற்றுபவர் எழுதிய உரை எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை(6).

3.மூல எண்ணியத்தின் ஆதாரங்கள்: சட்டோபாத்தியாயா.

  எண்ணியம் பற்றிய பழைய நூல்களில் சாங்கிய காரிகை நூலின் இறுதியில் குறிப்பிடப்பட்ட சசுதி தந்திரம் என்பதும் ஒன்றாகும். ஆனால் சசுதி தந்திரம் என்பது எண்ணிய நூலன்று என கோல்புரூக் கூறுகிறார். இந்நூல் 60 விடயங்களைக்கொண்டது என மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. ஆனால் வைதீக மரபுப்படி எண்ணியம் என்பது 25 விடயங்களைக் கொண்டது ஆகும்(ஆனால் தமிழ் மரபுப்படி எண்ணியம் என்பது 24 விடயங்களை மட்டுமே கொண்டது). சரகரால் எழுதப்பட்ட மருத்துவ நூலில் எண்ணியம் குறித்துக் கூறப்பட்டுள்ளது. சரகர் விவரிக்கும் எண்ணியம் ஒரு ஆதிகாலப்பிரிவு என தாசுகுப்தா கருதினார். குணரத்னா அவர்கள் மூல எண்ணியம்(மௌலிக்கிய சாங்கியம்), பிந்தைய எண்ணியம்(உத்தர சாங்கியம்) என இரு பிரிவுகளைக் குறிப்பிடுகிறார். இதில் சரகர் எழுதியது மூல எண்ணியம் ஆகும். மகாபாரதத்தில் எண்ணியம் பற்றி மிதிலையின் அரசரான சனகருக்குப் போதிக்கப்பட்டவை தாசுகுப்தாவின் கருத்துப்படி சரகரின் மூல எண்ணியத்தோடு ஒத்துள்ளது. எண்ணியம் மிகப்பழமையானது. பண்டைக்காலம் தொட்டே அதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வந்துள்ளன.

 மகாபாரதத்தில் எண்ணியம், ஓகம்(யோகம்) ஆகிய இரண்டும் நிரந்தரமான தத்துவங்கள் எனக் கூறப்பட்டுள்ளன. கௌடில்யர் “எண்ணியம், ஓகம், உலகாயதம்” ஆகிய மூன்று தத்துவங்களைப்பற்றிக் குறிப்பிடுகிறார். கபிலர் என்பதிலிருந்துதான் புத்தர் பிறந்த இடத்தின் பெயரான ‘கபிலவசுது’ என்பது தோன்றியிருக்கவேண்டும் என்ற கருத்தினை சாத்திரி ஆதரித்தார். பௌத்தமதக் கோட்பாடுகள் எண்ணியத்திலிருந்து தோன்றியவை என அசுவகோசர் கூறியுள்ளார். புத்தரின் ஆசிரியர்களான ஆதாரகலமா, உத்தகா ஆகியோர் எண்ணியக்கருத்துக்களை ஏற்றுக்கொண்டவர்கள். இவைகள் எண்ணியத் தத்துவம் புத்தருக்கு முந்தையவை என்பதை நிரூபிக்கின்றன. இவைகளைக்கொண்டு எண்ணியம் என்பது இந்தியத் தத்துவங்களில் மிகப்பழமையானது எனக் கார்பே கூறுகிறார்(7).       

4.பிரம்ம சூத்திரமும் எண்ணியமும்: சட்டோபாத்தியாயா.

  பிரம்ம சூத்திரம் என்பது மறைமங்களில்(உபநிடதங்களில்) உள்ள தத்துவக் கருத்துக்களை முதன்முறையாக ஒழுங்கு செய்த ஒரு முயற்சியாகும். இதில் 555 சூத்திரங்கள் உள்ளன. இந்நூல் நான்கு அதிகாரங்களும், அதிகாரங்கள் ஒவ்வொன்றும் நான்கு பகுதிகளையும் கொண்டுள்ளது. தாசுகுப்தாவின் கருத்துப்படி இதன் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டாகும். இந்தச்சூத்திரங்களின் பின்னால் தர்க்கபதம் என்ற பௌத்தத்தின் அறிவியல் பிரிவை மறுக்கும் பகுதி உள்ளது. இந்நூலின் சூத்திரங்களை உரையாசிரியரின் துணையின்றி புரிந்துகொள்ள முடியாது. காலத்தால் முற்பட்ட இந்நூலின் சிறந்த உரையாசிரியர் ஆதி சங்கரர் ஆவார். சங்கரர் கி.பி. 8ஆம் நூற்றாண்டைச்சேர்ந்தவர் என்பதால் சங்கரருக்கும் இந்நூலுக்கும் இடையே உள்ள கால இடைவெளி மிகவும் அதிகமாகும். அடுத்த சிறந்த உரையாசிரியர் கி.பி. 11ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த இராமானுசர் ஆவார். இவர்கள் இருவருக்குமிடையே வேறுபாடுகள் இருந்தாலும் அது பொது அமைப்பிற்குள் இருக்கும் வேறுபாடுதான் எனலாம்.

 பிரம்ம சூத்திரத்தின் ஆசிரியர்கள் எண்ணியத்தை எதிர்ப்பதில் முக்கியக் கவனம் செலுத்தினர். எண்ணியத்தை வேதாந்தத்திற்கு எதிராகக் கருதினர். ஆகவே எண்ணியத் தத்துவத்தை மறுக்க பிரம்ம சூத்திரத்தில் சொல்லப்படும் கருத்துக்களைக்கொண்டு, மூல எண்ணியத்தினை நாம் அறிந்துகொள்ள முடியும். அவைபோக மகாபாரதம், சரக சம்கிதை, பிந்தைய கால மறைமங்கள், சாங்கிய காரிகை ஆகியவற்றை ஆய்வு செய்வதன் மூலமும் மூல எண்ணியம் எது எனக் கண்டறியலாம். எண்ணியத்தில் வைதீக மறுப்பு இருந்ததால்தான், பிரம்மசூத்திரத்தை எழுதிய பாதராயணர் எண்ணியத் தத்துவத்தை எதிர்த்து வாதிட்டார் எனலாம்(8).

5.கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும்: சட்டோபாத்தியாயா.

 எண்ணியத்தினை பாதராயணர் மறுத்தது என்பது தர்க்க முறையிலான ஒரு தேவையாகும். பிரம்ம சூத்திரத்தின்படி எண்ணியம் ‘முதன்மைப்பொருள் காரணவாதம்’ எனப்படுகிறது. எண்ணியத்தில் முதன்மைப்பொருள் என்பது ஆதிமூலப்பொருள் என்னும் முதல் காரணம் ஆகும். ஆனால் வேதாந்தத்தில் ‘பிரம்ம காரணவாதம்’ என்பது பிரம்மம்தான் முதல் காரணம் என்பதாகும். பிரம்ம சூத்திரத்தின் பிரம்ம காரண வாதத்திற்கும், எண்ணியத்தின் முதன்மைப்பொருள் காரணவாதத்திற்கும் உள்ள வேறுபாடு என்பது கருத்துமுதல்வாதத்திற்கும் பொருள்முதல் வாதத்திற்கும் உள்ள வேறுபாடு ஆகும். அதாவது உணர்வு என்பதற்கும் சடப்பொருள் என்பதற்கும் இடையே உள்ள வேறுபாடு எனலாம்.

 பிரம்ம சூத்திரத்தின் முதல் நான்கு சூத்திரங்களில் பிரம்மத்தின் இயல்பு, வேதாந்த நூல்களின் இயல்பு ஆகியவற்றை ஆசிரியர் விளக்குகிறார். அடுத்த ஏழு சூத்திரங்களில் பிரம்மம் என்பது சித்துப்பொருள் எனவும், இதனை எண்ணியத்தின் அசித்துப்பொருளான முதன்மைப்பொருளோடு குழப்பிக்கொள்ளக்கூடாது எனவும் விளக்குகிறார். இந்த ஏழு சூத்திரங்கள் தவிர முதலாவது அதிகாரத்தின் நான்காவது பிரிவு மற்றும் இரண்டாவது பிரிவுகளின் ஆரம்பப் பகுதிகள் ஆகியவற்றில் எண்ணியம் மறுக்கப்படுகிறது. எண்ணிக்கை அடிப்படையில் 555 சூத்திரங்களில் குறைந்த பட்சம் 60 சூத்திரங்களில் எண்ணியத்தின் முதன்மைப்பொருள்கொள்கை மறுக்கப்படுகிறது. 43 சூத்திரங்களில்தான் மற்ற எதிர் தத்துவங்கள் மறுக்கப்படுகின்றன. இதில் சைனக் கருத்துக்களுக்கு எதிராக நான்கும், பௌத்தக்கருத்துக்களுக்கு எதிராக பதினேழும் உள்ளன.

  பிரம்ம சூத்திரம் முழுவதிலும் எவ்விடத்திலும் உலகாயதக் கண்ணோட்டம் மறுக்கப்படவில்லை. இதற்குக்காரணம் என்னவென்றால் பிரம்ம சூத்திர ஆசிரியருக்கு உலகாயதத்தை மறுக்க, எண்ணியத்தை மறுத்தாலே போதும் என்ற கண்ணோட்டம் இருந்தது. பிரம்ம சூத்திரம் முதல்முதலாக எண்ணியத்தைக் குறிப்பிடும்பொழுது உலகாயதப் பொருள்முதல்வாதத்தையும் குறிப்பிடுகிறது. எண்ணியத்தில் உள்ள முதன்மைப்பொருள் என்பது சடப்பொருள்தான் என்று சங்கர் விரிவாக விவாதித்துள்ளார். இராமனுசர் ‘புலனறிவற்ற சடமான முதன்மைப் பொருளிற்குச் சிந்திக்கும் திறனில்லை’ என்கிறார். ஆகவே எண்ணியம் என்பது உலகாயதப் பொருள்முதல்வாதத்தின் ஒரு வடிவமாக இருந்ததால்தான் வேதாந்திகள் அதனை வலுவாக எதிர்த்தார்கள்(9).

6.வேத எதிர்ப்பின் தோற்றம்: சட்டோபாத்தியாயா.

 இன்று எண்ணியம் வேதத்தோடு இணைக்கப்பட்ட ஆத்திகத் தத்துவமாகக் கருதப்படுகிறது. ஆனால் இது பிரம்மசூத்திரத்தின் நிலைபாடாக இருந்திருக்க முடியாது. அதன்படி எண்ணியம் என்பது அவைதீக அல்லது எதிர்வேத போக்குகளைக்கொண்ட வலுவான தத்துவம் ஆகும். பிரம்ம சூத்திரத்தில் எண்ணியத்தை மறுக்கும் அறுபது சூத்திரங்களில் முப்பத்தி ஏழு சூத்திரங்கள் இதன் எதிர் வைதீகத் தன்மையைக் கூறுவதற்கென்றே ஒதுக்கப்பட்டுள்ளன. எண்ணியர்களது உணர்வில்லா முதன்மைப்பொருள் என்பதற்கு வேதாந்த நூல்களில் இடமில்லை என்கிறார் சங்கரர். இந்த விடயங்களில் இராமனுசர் சங்கரரிடமிருந்து வேறுபடவில்லை. பிரம்ம சூத்திர நிலைப்பாட்டின்படி எண்ணியத்தில் உள்ள அவைதீகக் கூறுகள் முழுமையானவை. சங்கரர் எண்ணியக்கொள்கைகளை வேதங்களுக்கு எதிரானவை என்று கூறுகிறார். வேதங்களுக்கு எதிரான கொள்கையைக் கொண்டுள்ள கபில சுமிருதியைப் புறக்கணிக்க வேண்டும் என்று இராமனுசர் கூறுகிறார். மூல எண்ணியம் வேதங்களுக்கு எதிரானது என்ற உண்மை வலுவாக உள்ளது. எனவே வைதீகப்போக்கின் முக்கியமான பிரதிநிதிகளான சங்கரர், இராமானுசர் ஆகியோர் எண்ணியத்தை வைதீகத்துக்கு எதிரான ஒரு பலமிக்க தத்துவமாகவே கண்டனர்.

 எண்ணியமும், ஓகமும் வேதங்களைச்சாராத மிகப்பழங்காலத்தைச் சார்ந்தவையாகும். “பிராமணர்கள் ஆதிக்கம் இல்லாமல் இருந்த நிலப்பகுதிகளில், இந்த உலகத்தின் இரகசியம் பற்றியும், நமது இருப்புப் பற்றியும் அறிவியல் கண்ணோட்டத்தில் மட்டுமே விளக்க முதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நாம் இதனைப்புரிந்துகொண்டால்தான் எண்ணியத்தின் துவக்கத்தினைப் புரிந்துகொள்ளமுடியும். எண்ணியத்தத்துவம் நாத்திகவாதம் மட்டுமன்று, வேதங்களுக்கு எதிரானதும்கூட. நமக்குக் கிடைத்துள்ள எண்ணிய நூல்களில், சுருதிகளிலிருந்து காட்டப்படும் மேற்கோள்கள் அனைத்தும் பிந்தைய காலத்தவை. இதனுடன் இணைக்கப்பட்ட எல்லா வேதக்கூறுகளையும் நாம் அகற்றிவிட்டாலும் மூலஎண்ணியமானது எந்தப்பாதிப்பிற்கும் உள்ளாகாது. ஆரம்பத்திலிருந்து இன்றுவரை எண்ணியத்தத்துவமானது அதன் உள்ளடக்கத்தில் வேதங்களைச்சாராமலும், பிராமணிய பாரம்பரியத்திற்கு புறமாகவும் இருந்துள்ளது” என்கிறார் கார்பே(10). மேலும் மகாபாரதத்தில் எண்ணியம், ஓகம் ஆகியன வேதங்களில் இருந்து வேறாக இருந்தன என்பதைச்சுட்டிக்காட்டுகிறார் கார்பே. எண்ணியத்தின் பிறப்பிடமானது தாய்வழி உரிமை, தோன்றியம் ஆகியன வலுவாகப் பரவியிருந்த நிலப்பகுதியாகும். எனவே எண்ணியம் தோன்றியத்தின் வளர்ச்சியாகும் என்கிறார் சட்டோபாத்தியாயா(11). எண்ணியத்தின் மூலவரான தொல்கபிலர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்கள் உறுதி செய்வதற்கு, எண்ணியத்தின் தோற்றம் பற்றிய கார்பே அவர்களின் கருத்துக்களும் ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளது. தொல்கபிலர் எண்ணியத்தின் மூலவர் என்பதோடு மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபிற்கு ஒரு தத்துவ அடித்தளத்தை வழங்கியவரும், அதன் அறிவியல் மரபிற்கு வித்திட்டவரும் ஆவார்.

பார்வை:

1. இந்திய நாத்திகம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் சாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர்-2013, பக்: 76-79, 86, 87.

2. உலகாயதம், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எஸ்.தோதாத்ரி, NCBH, சூன்-2010, பக்: 72, 73.

  1.  “ “ “ 475
  2. “ “ “ 476-480

5 “ “ “ 480; ENCYCLOPAEDIA OF RELIGION AND ETHICS. (ed) J. HASTINGS. EDINBURGH, 1908-1918, XI. 189.

6.உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எஸ்.தோதாத்ரி, NCBH, சூன்-2010, பக்: 480-484

  1.  “ “ “ 484-486
  2.  “ “ “ 486-489
  3.  “ “ “ 489-492
  4.  “ “ “ 498, GARBE, R.ANIRUDDHA’S COMMENTARY ON THE ORIGINAL PARTS OF VEDANTIN MAHADEVA’S COMMENTARY ON THE SNKHYA SUTRAS. CALCUTTA, 1892.

11.உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எஸ்.தோதாத்ரி, NCBH, சூன்-2010, பக்: 492-500

- கணியன் பாலன், ஈரோடு