சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலம் அது. ஒருமுறை மதுரையில் உள்ள இளம் தேசபக்தர்கள் ஒன்றுகூடி மதுரை நகரில் விடுதலை நாளை வித்தியாசமாகக் கொண்டாட முடிவு செய்தனர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலுள்ள கோபுரங்களின் உச்சியில் சுதேசிக் கொடியை பறக்கவிடத் திட்டமிட்டனர், அப்பொதெல்லாம் அவ்வாறு கொடியைக் கட்டினால் கட்டுபவர்களின் எலும்புகள் எண்ணப்படும்.
மதுரையின் துடிப்புமிக்க வீர இளைஞர்கள் அன்று இரவு விடுதலை நாளைக் கொண்டாடப்படும் பொருட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயில் கோபுரத்தில் சுதேசிக்கொடி கட்டப்படும் என்ற செய்தியைத் துணிச்சலுடன் அறிவித்தனர். அச்செய்தி காற்றில் கலந்து காவல் துறையின் காதுகளையும் எட்டியது. எட்ட வெண்டுமென்று திட்டமிட்டுப் பரப்பப்பட்ட செய்தி தானே அது!
நூற்றுக்கணக்கான இரும்புத் தொப்பிப் போலீசார் ஒரு கையில் லத்தியுடனும், இன்னொரு கையில் மூங்கில் கேடயத்துடனும் குவிந்தனர். மதுரை மீனாட்சியம்மன் கோயில் நுழைவாயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மீதமுள்ள மூன்று கோபுரங்களில் கொஞ்சம் போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டனர். சூரியன் மறைத்து இருள் சூழ்ந்தவுடன் காவல் துறையினரின் படபடப்பு அதிகரித்தது! கண் துஞ்சாமல் கோயிலின் வாயிலில் விழிப்புடன் காத்திருந்தனர்!
அச்சமில்லாமல் “கோயிலின் உச்சியிலுள்ள கலசத்தில் கொடி எற்றுவோம்” என்று அறிவித்த விடுதலை வீரர்கள், தங்களை ஏமாற்றி கோபுரத்தின் மீது கொடியேற்றிவிட்டால், தங்களுக்குப் பெருத்த அவமானம் என்று கருதிய காவல் துறையினர், தங்களது உயர்மட்ட அதிகாரிகளால் மிகவும் உஷார்படுத்தப்பட்டனர்.
இறுக்கமும் இருட்டும் இரண்டறக் கலந்து விட்ட இச்சுழலில் நிசப்தம் நிலவியது. கோயில் மதிற்சுவருக்கு கொஞ்சம் தள்ளி ஓர் ஒற்றைத் தென்னை மரம் ஓங்கி உயர்ந்து வளர்ந்து கம்பீரமாகக் காட்சியளித்தது அந்தத் தென்னை மரத்தில் ஓர் இளைஞன் மேற்சட்டையோ, வேட்டியோ இல்லாமல் வெறும் டவுசர் மட்டும் அணிந்தவாறு கிடுகிடுவென ஏறினான்.
ரோந்து செல்லும் போலிசார் கண்கணாமல் மறைந்து வேறு திசை நோக்கித் திரும்பிய பிறகு, தென்னைமரத்தின் உச்சிக்குச் சென்று அங்குள்ள குருத்தோலையை இறுக்கிப்பிடித்து நேராக நிமிர்ந்து நின்றான். அப்படியே தென்னை மரத்தை ஆட்டி ஆட்டி வளைத்தான், மீண்டும் மீண்டும் வளைத்தான். இதற்குமேல் வளைத்தால் தென்னைமரமே ஒடிந்து விடும் என்கிற அளவுக்கு நன்றாக வளைத்தான்.
இறுதியாக தென்னை மரத்திலிருந்து கோயில் மதிற் சுவரின் மீது எட்டி குதித்தான். மதிற் சுவர் அகலமானதாக இருந்தது. சுவரின் மீது எட்டிக்குதித்த பிறகு அப்படியே நேராக நின்றால் தூரத்திலிருந்த போலீசார் பார்த்துவிடக்கூடும். பார்த்துவிட்டால் அங்கிருந்தே சிட்டுக்குருவியைப் போன்று சுட்டுக் கொன்றுவிடக் கூடும். ஆகவே, இராணுவத்திலும் என்.சி.சி யிலும் முழங்கை முட்டியைத் தேய்த்து ஊர்ந்து செல்வார்களே அப்படி கோபுரத்தின் அடிவாரம் வரை குப்புறப்படுத்து ஊர்ந்து சென்றான். இவ்வாறு ஐந்து ஆறு பேர் நான்கு கோபுரங்களின் அடிப்பகுதியில் நின்றனர்.
நுழைவாயிலுள்ள கோபுரத்தின் அடிவாரத்திலிருந்து கீழே பார்த்தால் நூற்றுக்கணக்கான போலீசார் நிற்கின்றனர். மேலே பார்த்தால் கோபுரத்தின் உச்சி தெரியாத அளவுக்கு உயரம். கும்மிருட்டில் சாமி சிலைகளைப் பிடித்து கிடுகிடுவென கோபுரத்தின் மீது ஏறினர். கோபுரத்தின் உச்சியை அடைந்தனர்.
டவுசர் பாக்கெட்டில் வைத்திருந்த சுதேசி கதர்க்கொடியை கலசத்தில் கட்டினர். ஏறிய வண்ணமே இறங்கினர். மதிற்சுவரில் மீண்டும் குப்புறப்படுத்து ஊர்ந்து சென்று, பின் பகுதிக்குச் சென்று பின்னர் கீழே குதித்துத் தப்பினர். நடந்தது எதுவுமே தெரியாத போலீசார் இரவு முழுவதும் மிகுந்த எச்சரிக்கையுடன் கண்விழித்து நின்று கொண்டிருந்தனர்...!
காலை எழுந்தவுடன் மீனாட்சியம்மன் கோயிலின் நான்கு மாடவீதிகளிலும் நின்றவர்கள் கோபுரத்தின் உச்சியில் சுதேசிக் கொடி பறப்பதைப் பார்த்து பரவசமடைந்தனர். முந்தைய நாள் இரவு கோபுரத்தில் தேசபக்த இளைஞர்கள் கொடியேற்றப் போகிற செய்தி முன்கூட்டியே நகரம் முழுக்க பரவியிருந்த காரணத்தால், என்ன ஆகுமோ?’ என்று நெஞ்சில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருந்த தாய்மார்களுக்கு, பட்டொளி வீசிப் பறந்த கொடியைப் பார்த்தவுடன், காவல் துறையின் காட்டுத் தர்பாருக்கு நாட்டுப்பற்று மிக்க இளைஞர்கள் அகப்படவில்லை என்பதை உணர்ந்து மகிழ்ந்தனர்.
இந்தச் செய்தியைக் கள ஆய்வின்போது தெரிவித்த மதுரை தியாகி ஐ.மாயாண்டி பாரதியிடம், “கோபுரத்தில் ஏறியபோது கீழே நின்று கொண்டிருந்த போலிசார் பார்த்திருந்தால் ...?” என்று கேட்டோம். “பார்த்தால் ஈவு இரக்கமின்றி கடுங்கோபத்துடன் சுட்டுத் தள்ளுவார்கள் என்று அனைவருக்கும் தெரியும். கோபுரத்தின் மீது கொடியை ஏற்றுவோம்; இல்லையெனில் கொடியேற்ற முயன்ற போது சுட்டுக் கொல்லப்பட்டு செத்து மடிவோம் என்ற முடிவோடுதான் இச்செயலில் அனைவரும் ஈடுபட்டனர்” என்றார் உணர்ச்சிகரமாக.
- (ஸ்டாலின் குணசேகரன் எழுதிய ‘வரலாற்றுப் பாதையில்’ நூலிலிருந்து)