1.எல்லாப் பறவைகளையும்
'கா..கா' என்றும்
எல்லா விலங்குகளையும்
'தோ..தோ' என்றும்
எளிமைப்படுத்தி நீ அழைக்கையில்
குழந்தையாய் மாறி நிற்கிறது
சங்கத்தமிழ்.

2.'...க்கம்' என்று நீ
கை கூப்பி வணங்குகையில்
வணக்கத்திற்கே 'வணக்கம்' போட்டதுபோல்
பெருமை கொள்கிறது.

3. எப்போது நினைத்தாலும்
சிரிப்பாய் வருகிறது
சிவன் கோவில் நந்தியை
'..ம்பா' என்று நீ விளித்ததும்
'சாமியை அப்படி சொல்லப்படாது'
என்றபடி வந்த அய்யரின்
குடுமியை இழுத்ததும்.

4.உன்னைக் கொஞ்சும் பெண்கள்
'அப்படியே அப்பா மாதிரி'
என்கிற போது
உன்னைக் காட்டிலும்
வெட்கம் நேரிடுகிறது
எனக்கு.

- ஜெ.நம்பிராஜன்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It