இன்று திரையரங்குகளில் நாம் பெரும்பாலும் இரண்டு பரிமாணத்தில் திரைப்படம் காண்கிறோம். சில திரைப்படங்கள் முப்பரிமாணத்தில் வெளியாகின்றன. இன்னும் முன்னேறி, நாம் அதிகபட்சம் ஏழு பரிமாணத் திரைப்படங்களை சில நாடுகளில் பார்க்கிறோம்.

ஆனால் உண்மையில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு முப்பரிமாணம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..?

இதையும் தாண்டி இன்று அறிவியல் உலகில் ஐந்து பரிமாணம் வரை விவரிக்கின்றனர். இதைத் தான் இன்டெர்ஸ்டெல்லர் படத்தினில் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் அவர்கள் சொல்லி இருப்பார். அந்த ஐந்து பரிமாணங்கள் என்பவை யாவை, அவை எவ்வாறு வரையறுக்கப்படுகின்றன போன்ற கேள்விகளுக்கு இங்கு விடைகளைக் காண்போம்

நீங்கள் இன்டெர்ஸ்டெல்லர் படம் பார்த்திருப்பீர்களானால், அதில் ஆங்காங்கே, எதிர்கால மனிதர்கள் ஐந்து பரிமாணம் மூலம் அந்தக் குழுவை தொடர்பு கொள்வதாய் வரும். அப்படத்தின் உச்சகட்ட காட்சியில் Cooper மற்றும் ரோபோட் TARS உடன் gargantua கருந்துளையினுள் விழுந்து விடுவார். அதன் பின் அவர் ஒரு ஐந்து பரிமாணப் பகுதிக்குள் கண் விழிப்பார். அந்த ஐந்து பரிமாணம் மூலம் இறந்த காலத்தில் உள்ள தன்னையும், தன மகளையும் காண்பார் மற்றும் தன மகளுடன் ஈர்ப்பு விசையின் மூலம் தொடர்பு கொள்வார். இது எப்படி சாத்தியம் என உங்களுக்குத் தோன்றினால் தொடர்ந்து படியுங்கள்.

satelite planetபரிமாணங்களைப் பற்றி நாம் கலந்துரையாடுவதற்கு முன்பு நாம் இந்தப் பிரபஞ்சத்தின் பிரதான அளவான "புள்ளியை" எடுத்துக் கொள்வோம். ஓர் ஒற்றைப் புள்ளி பற்றிய கோட்பாடுகளை நாம் நம் பள்ளிப் பருவத்தில் படித்திருப்போம். அதனை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

பரிமாணம் 1 :

ஒரு கோட்டினை கற்பனை செய்து கொள்ளுங்கள். ஏதோ ஒரு கோடு, நேரானது அல்லது சற்று கோணலானது . இரு புள்ளிகளை இணைக்கும் ஒரு கோடு. ஆனால் அந்த கோட்டிற்கு அகலம் கிடையாது. எளிதாகச் சொல்வதென்றால் அப்படியொரு உருவம் அல்லது பொருள் உண்மையில் இருக்க இயலாது. ஏனெனில் நாம் இந்த உலகத்தை காணும் விதத்தில் ஒரு பரிமாணப் பொருட்களை காண இயலாது. மேலும் நாம் காணும் எந்த ஒரு பொருளும் கண்டிப்பாக நீளம் மற்றும் அகலத்தைக் கொண்டிருக்கும்.

பரிமாணம் 2:

இது ஒரு குறிப்புச் சட்டகத்தைக் குறிக்கும் (datum reference frame). அதாவது நாம் எந்த ஒரு பொருளையும் நேர்கோட்டில் காண்போமானால் இந்த சட்டகத்தைப் பெறலாம். உதாரணமாக, திரை, தொலைக்காட்சிப் பெட்டி , தரை, தளம், மேஜை மேற்பகுதி மற்றும் பல .. மேலும் அகலமே இல்லாத ஒரு கோட்டினை கற்பனை செய்வதை விட இது மிக சுலபமே. இருந்தாலும் இப்படிப்பட்ட குறிப்புச் சட்டகமும் உண்மையில் இருப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை. அதாவது முன் கூறியது போல் இதனையும் நம்மால் காண இயலாது என எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் இவ்வுலகில் நாம் காணும் எதுவும் சிறிதளவாவது ஆழத்தினைக் கொண்டிருக்கும்.

பரிமாணம் 3:

ஒரு கோட்டிற்கு அகலத்தை அளித்தால் அது ஒரு குறிப்புச் சட்டகமாக மாறும். அதேபோல் ஒரு குறிப்புச் சட்டகத்தை ஓர் ஆழத்திற்கு அல்லது ஓர் உயரத்திற்கு மேம்படுத்தும் போது, அது நாம் அதிகமாகப் பார்த்து பழகிய ஒரு பொருளாக மாறுகிறது. இங்கு நீங்கள் இன்னும் சில இயற்பியல் அளவீடுகளைக் கூறலாம். அனால் அவை நான்காம் பரிமாணத்தில் விவரிக்கப்படும்.intersteller movie

பரிமாணம் 4:

இங்கு நான்காம் பரிமாணம் என்பது நேரம். ஆம் அது நேரம் தான். நான் முன் கூறியது போல் இந்தப் பூமியில் நீளம், அகலம், மற்றும் உயரம் அல்லது ஆழம் உள்ளது போல் நேரமும் உள்ளது. ஆனால் இந்த பூமியினுள் நீங்கள் இருக்கும் வரை உங்களால் நான்காம் பரிமாணத்தை உணர முடியாது அல்லது அது மிகக் கடினம். ஏனெனில் உங்களால் இங்கு நேரத்தைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் இதனைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணம் கூறுகிறேன்.

நீங்கள் உங்கள் நண்பரைச் சந்திக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்வோம். அதற்கு முதலில் நீங்கள் அவருக்கு இதனை தெரியப்படுத்த வேண்டும். அடுத்து எங்கு எப்பொழுது சந்திக்கப் போகிறீர்கள் என தெரியப்படுத்த வேண்டும். அதாவது இடம் அல்லது வெளி உதாரணமாக வெள்ளிக் கிழமை மாலை 4 மணிக்கு உணவகத்தில் சந்திப்பதாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்களால் உங்கள் நண்பரை முழு நேரமும் அங்கு காண முடியாது. ஆகையினால் நீங்கள் ஒரு நேரத்தை முடிவு செய்து உங்கள் நண்பரை அதே நேரத்திற்கு வரச் செய்து சந்திப்பீர்கள் அல்லவா... இங்கு நீங்கள் உங்களையே அறியாமல் மூன்றாம் பரிமாண‌த்துடன் நேரத்தை நான்காம் பரிமாணமாக சேர்க்கிறீர்கள். ஆனால் உங்களால் இந்த நேரத்தைக் கட்டுப்படுத்த முடியாது. அதாவது உங்களால் மற்ற பொருட்களின் நீளம், அகலம் மற்றும் உயரத்தைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியும் ஆனால் நேரம் அதுவாகவே ஒரு முன்னோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

தற்பொழுது அந்த உதாரணத்திற்குச் செல்லுங்கள்... நீங்கள் வெள்ளிக்கிழமைக்குப் பதிலாக சனிக்கிழமை மாலை 4 மணிக்குச் செல்கிறீர்கள்... தற்போது உங்கள் நண்பர் அங்கு இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவர் வெள்ளிக்கிழமை மாலை காத்திருந்து விட்டு சென்று இருப்பார். இப்பொழுது உங்களால் நேரத்தைக் கட்டுப்படுத்த முடியும் என கற்பனை செய்து கொள்வோம், நீங்கள் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இருக்கிறீர்கள். உங்கள் நண்பர் அங்கு இல்லை. ஆனால் உங்களுக்கு அவரை எங்கு சென்று பார்க்க வேண்டும் எனத் தெரியும். ஆகையினால் நீங்கள் உங்களது நேரத்தை மாற்றியமைத்து வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்குச் சென்று உங்கள் நண்பரை சந்திக்கிறீர்கள். அறிவியல் ரீதியாக இது இன்னும் சாத்தியமில்லை எனினும் இது கற்பனையே.

பரிமாணம் 5:

இங்கு நாம் ஈர்ப்பு விசையைப் பற்றி பேசப் போகிறோம். இதனைப் புரிந்து கொள்ள இதுவரை நீங்கள் படித்த நான்கு பரிமாணங்களை சிறிது நேரம் ஒதுக்கி வையுங்கள்.

இது நேரம் பன்மடங்காக்கப்பட்ட ஒரு பரிமாணம் எனலாம். ஏனெனில் இதில் உங்களால் ஒரே நேரத்தில் உங்கள் வாழ்க்கையின் பல கட்டங்களைச் சேர்ந்த பதிவுகளை ஒரே நேரத்தில் காண இயலும்.

முன் கூறப்பட்ட உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அதில் நீங்கள் உங்கள் நண்பரைச் சந்திக்கவில்லை. ஏனெனில் நீங்கள் ஒரு நாள் கழித்துச் சென்று இருக்குறீர்கள். ஆனால் உங்களுக்கும் அவருக்கும் ஒரு புரிதல் உள்ளது. அதாவது குறிப்பிட்ட நேரம் மற்றும் நாள் உங்கள் இருவருக்கு மட்டுமே தெரியும். ஆகையினால் உங்களால் அந்த குறிப்பிட்ட நேரத்திற்குச் சென்று ஈர்ப்பு விசையின் மூலம் அவருக்கு நாள் மற்றும் நேரத்தை மாற்றிக் கூற முடியும் அல்லது உங்களை சரியான நேரத்திற்குச் செல்லும்படி எச்சரிக்கை செய்ய இயலும் .

இந்த யுக்தியையே இன்டெர்ஸ்டெல்லர் திரைப்படத்தினில் கூப்பர் அந்த ஐந்து பரிமாணக் கட்டமைப்பில் செய்து கொண்டு இருப்பார். அதாவது அனைத்தும் கையை விட்டுப் போன பிறகு அவருக்கு மட்டுமே தெரியும், எப்பொழுது அவரது மகளுடன் தொடர்பு கொண்டால் அவரால் அந்தக் கட்டமைப்பினுள் உள்ள கற்றை இயங்கியல் தகவல்களைப் பரிமாற இயலும் என்று. அந்தத் தகவல்கள் ஐந்தாம் பரிமாணமான ஈர்ப்பு விசையின் மூலம் மோர்ஸ் கோட் வழியாக பரிமாறப்படும். அந்தத் தகவல்கள் மூலம் மனிதர்கள் சனி கிரகத்தைச் சுற்றி ஒரு காலனியை ஏற்படுத்தி வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.

வரும் கட்டுரைகளில் இன்டெர்ஸ்டெல்லர் படத்தினில் வரும் இன்னும் பல கோட்பாடுகளை விரிவாகக் காண்போம். மேலும் இது பற்றிய உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும்.

- வி.சீனிவாசன்

Pin It