Nuclear-Free Tamil Nadu Day - டிசம்பர் 21, 2013

தேசியக் கட்சிகளான காங்கிரசும், பாரதீய ஜனதா கட்சியும் “இந்தியாவை வல்லரசாக்கப் போகிறோம்” என்ற பெயரில் பெரும் தீங்கினை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிகச் செலவாகும், அணுக்கழிவை உருவாக்கும், ஆபத்துக்களை வரவழைக்கும் அணுசக்தி வேண்டாம் என்று உலக நாடுகளெல்லாம் மாற்று வழிகளில் மின்சாரம் தயாரிக்க முனைகின்றன. ஆனால் ஒரு பேருந்து நிலைய கழிப்பறையைக்கூட பேணத் தெரியாத நமது ஆட்சியாளர்கள் அணுமின் நிலையங்கள் அமைத்து அளவற்ற மின்சாரம் தயாரிக்கப் போகிறார்களாம். வளரும் நாடான நமக்கு மின்சாரம் தேவைதான். ஆனால் மிக அதிகமாக, மிகவும் நெருக்கமாக மக்கள் வாழும் நமது நாட்டில் சிறு விபத்துக்கூட பேராபத்தை உருவாக்குமே? லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடும் நமது நாட்டில் நம்மைப் போன்ற சாதாரண மக்களுக்கு ஓர் ஆபத்து எழும்போது யார் வந்து நம்மைக் காப்பாற்றுவார்கள்?

மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தமிழர்களை நடத்துகிற தில்லி அதிகார வர்க்கம் ஆபத்தான அணுத் திட்டங்கள் பலவற்றை தமிழர்கள் தலையில் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தை ஆண்டவர்களும், ஆள்கிறவர்களும் இதற்கு ஒத்தாசையாக இருக்கிறார்கள். கர்நாடகத்திலும், மராட்டியத்திலும், கேரளத்திலும் இம்மாதிரியான திட்டங்களைக் கடுமையாக எதிர்க்கும் சில அரசியல் கட்சிகள் தமிழகத்திலே அவற்றுக்குக் கட்டியம் கூறுகின்றன.

அதிகாரமிக்க முறையான கட்டுப்பாட்டு வாரியம் இல்லாதது மட்டுமல்ல, அணுக்கழிவு மேலாண்மைத் திட்டமும் இந்தியாவில் இல்லை. கூடங்குளம் அணுக் கழிவுகளை கர்நாடக மாநிலம் கோலார் தங்கச் சுரங்கங்களில் கொண்டு புதைப்போம் என்று அணுசக்தித் துறை உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்தபோது, கர்நாடக மக்கள் வெகுண்டெழுந்துப் போராடினர். அப்போதைய கர்நாடக முதல்வர் பா.ஜ.க.வைச் சார்ந்த திரு. ஜெகதீஷ் ஷெட்டர் அந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். கோலாரில் மட்டுமல்ல, கர்நாடகத்தில் வேறு எங்குமே வைக்க முடியாது என்று கர்ஜித்தார். கர்நாடகத்தைச் சார்ந்த மத்திய அமைச்சர் காங்கிரசுக்காரரான திரு. வீரப்ப மொய்லி இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என்று சூளுரைத்தார். கர்நாடக அ.தி.மு.க.வினரும் தெருக்களிலே இறங்கிப் போராடினர். இதன் விளைவாக வெறும் மூன்று நாட்களில் கோலார் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் தமிழகம் எதிர்கொள்ளும் அணுத் தீமைகளின் அட்டவணையைப் பாருங்கள்:

[1] கூடங்குளம் அணுமின் பூங்கா, கூடங்குளம், திருநெல்வேலி மாவட்டம்:

ரஷ்யாவின் உதவியோடு இந்தியாவிலேயே மிகப் பெரிய 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக்கூடிய இரண்டு அணுமின் நிலையங்களை கூடங்குளத்தில் கட்டியிருக்கிறார்கள். மேலும் நான்கு அணுமின் நிலையங்கள் கட்டுவதற்கான அரசச் சடங்குகளை முடித்து வைத்திருக்கிறார்கள். இன்னும் கூடுதலாக இரண்டு அசுர அணுமின் நிலையங்களையும், அணுக்கழிவு சுத்திகரிக்கும் ஆபத்தான ஆலை ஒன்றையும் இங்கே அமைக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். கூடங்குளம் திட்டம் பற்றிய தல ஆய்வறிக்கை (Site Evaluation Report), பாதுகாப்பு ஆய்வறிக்கை (Safety Analysis Report) போன்றவற்றை மக்களுக்குக் கொடுங்கள் என்று மத்திய தகவல் ஆணையம் கேட்டுக்கொண்ட பிறகும் மத்திய அரசும், அணுசக்தித் துறையும் தர மறுக்கின்றன. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஜியோ-போடால்ஸ்க், இஷோர்ஸ்‌கி சவோடி போன்ற ஊழல் நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்ட தரமற்றப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன; ஏராளமான ஊழலும், குளறுபடிகளும் நடந்திருக்கின்றன. உலகத்திலேயே உன்னதமான அணுஉலை என்று அரசு தரப்பு சொன்னாலும், கூடங்குளம் அணுமின் நிலையம் முனகிக் கொண்டும் திணறிக்கொண்டும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. கூடங்குளத்தில் ஒரு விபத்து நடந்தால் ரஷ்யா எந்தவித இழப்பீடும் தர வேண்டியதில்லை என்று 2008-ஆம் ஆண்டு ஓர் இரகசிய ஒப்பந்தமும் செய்து வைத்திருக்கிறது மத்திய அரசு. கூடங்குளம் வழக்கில் 2013-ஆம் ஆண்டு மே மாதம் 6-ஆம் நாள் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் பாதுகாப்புத் தொடர்பாக 15 பரிந்துரைகளைத் தெரிவித்தது. ஆனால் அவற்றைக் கடுகளவும் கருத்தில் கொள்ளாமலேயே மத்திய அரசும், அணுசக்தித் துறையும் கூடங்குளம் திட்டத்தை இயக்க எத்தனிக்கின்றன.

[2] கல்பாக்கம் அணுமின் பூங்கா, கல்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்:

கல்பாக்கத்தில் 220 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் இரண்டு அணுஉலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. எரிபொருள் மறுசுழற்சி செய்யும் ஆலை (reprocessing plant) ஒன்றும், அணுக்கழிவு சுத்திகரிக்கும் ஆலை (waste treatment plant) ஒன்றும் இங்கே இயங்குகின்றன. இவற்றோடு இரண்டு அதிவேக ஈனுலைகள் (Prototype Fast Breeder Reactor – PFBR) அமைப்பதற்கான வேலைகள் 2004-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்டன. ஈனுலை என்பது தான் உட்கொள்ளும் எரிபொருளைவிட அதிக எரிபொருளை உருவாக்குகிற திறன் கொண்டது. இவற்றைத் தவிர அணுக்கழிவுகளைச் செயலிழக்கச் செய்யும் ஆலை (Waste Immobilization Plant) ஒன்று 2013 நவம்பர் மாதம் இந்திய குடியரசுத் தலைவரால் வீடியோ கான்ஃப்ரன்சிங்க் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. கல்பாக்கத்தில் அணு ஆயுதங்கள் சம்பந்தமான வேலைகள் நடப்பதாகவும் செய்திகள் நிலவுகின்றன. கல்பாக்கத்துக்கு அருகே கடலில் எரிமலை ஒன்று இருப்பதாகவும், அதனால் கல்பாக்கம் அணுஉலைக்கு ஆபத்து வரலாம் என்ற செய்தியை முதலில் மறுத்த அணுசக்தித் துறை, தற்போது இதை ஆய்வு செய்வதற்கு நிதி ஒதுக்கியிருக்கிறது. கல்பாக்கம் பகுதியில் புற்றுநோய் எதுவுமே இல்லை என்று வாதிட்டுவந்த அணுசக்தித் துறை, 2012-ஆம் ஆண்டு அணுஉலை ஊழியர்கள் பலர் எலும்பு மஜ்ஜை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தது.

[3] நியூட்ரினோ திட்டம், தேவாரம், தேனி மாவட்டம்:

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, போடி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், தேவாரம் பொட்டிபுரம் கிராமத்துக்கு அருகேயுள்ள அம்பரப்பர் மலை அல்லது அம்பரசர் கரடு எனப்படுகிற குன்றின் அடிப்பகுதியில் குகைகள் அமைத்து, நியூட்ரினோ அணுத்துகள் ஆய்வு செய்யும் திட்டம் ஒன்றை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 2.5 கி.மீ. நீளமுள்ள 16,235 ச.மீ. பரப்பளவும், 3,18,181 கன மீட்டர் கொள்ளளவும் கொண்ட நான்கு குகைகள் உருவாக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட எட்டு லட்சம் டன் எடையுள்ள பாறைகள் அகற்றப்படவுள்ளன. இந்தத் திட்டம் 50 லட்சத்துக்கும் அதிகமான தமிழக, கேரள மக்களின் வாழ்வுரிமைகளை பாதிக்கும். அந்தப் பகுதி விவசாயிகளையும், பயிர்களையும், கால்நடைகளையும், காட்டு உயிர்களையும் கதிர்வீச்சினால் அழிக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையும், மலை சார்ந்த சூழலும், அப்பகுதி அணைகளும் ஆபத்துக்குள் தள்ளப்படும். ஒருசில ஆண்டுகள் நியூட்ரினோ ஆய்வுகள் செய்து முடித்துவிட்டு, இந்தக் குகைகளை இந்தியாவெங்கிலுமிருந்து வந்து குவியும் அணுக்கழிவுகளை பாதுகாத்து வைக்கும் ஆழ்நிலக் கிடங்காக (Deep Geological Repository) மாற்றும் திட்டமும் இருக்கும் என்று சந்தேகிக்கிறோம்.

[4] அணுக்கழிவு ஆய்வு மையம், வடபழஞ்சி, மதுரை மாவட்டம்:

மதுரை மாவட்டம், மதுரை தெற்கு தாலுக்கா வடபழஞ்சி கிராமம் “உயராற்றல் இயற்பியல் மையம்” (International Conference on High Energy Physics - ICHEP) அமைக்கப்படும் இடத்தில் அணுக்கழிவு ஆய்வு மையம் அமைக்கப்படுகிறது. முப்பது ஏக்கர் பரப்பளவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்கிறார்கள். தற்போது சுமார் 1.75 கோடி செலவில் சுற்றுச்சுவர், கம்பி வேலி அமைக்கப்படுகிறது. அடுத்தக் கட்டமாக 5.5 கோடி செலவில் அணுக்கழிவு ஆய்வு மையம் கட்டப்படும். “அணு உலைக்கழிவுகளை அழிப்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. எனவே அணுக் கழிவுகளை பாதுகாப்பாக அழிப்பது குறித்துக் கண்டறிவதே மதுரையில் அமையவிருக்கும் மையத்தின் முக்கியப் பணி” என்று பாபா அணுசக்தி ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறுகின்றனர். வடபழஞ்சி பஞ்சாயத்துத் தலைவர் திருமதி. விமலா வைரமணி வேதனையோடு சொல்கிறார்: “இங்கு சிறு கட்டடம் கட்டக்கூட ஊராட்சியின் அனுமதி தேவை. ஆனால், அவர்கள் அனுமதி கேட்கவும் இல்லை. என்ன செய்யப்போகிறோம் என்று சொல்லவும் இல்லை. நியூட்ரினோ என்று பேசிக்கொள்கிறார்கள். எதுவும் புரியவில்லை.” மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சுப்பிரமணியம், “திட்டம் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. விசாரித்துச் சொல்கிறேன்” என்கிறார் (தி இந்து, செப்டம்பர் 16, 2013).

[5] சிர்க்கோனியம் திட்டம் (Zirconium Project), பழையகாயல், தூத்துக்குடி மாவட்டம்:

சிர்க்கோனியம் எனும் வேதியல் பொருள் சிர்க்கோன் எனும் அரியவகை மணலிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அணுமின் நிலையங்களுக்குத் தேவைப்படும் சிர்க்கோனியம் ஆக்ஸைட் மற்றும் சிர்க்கோனியம் உறிஞ்சி (sponge) போன்றவைகளை தயாரிப்பதற்காக அணுசக்தி எரிபொருள் நிலையம் (Nuclear Fuel Complex) நடத்துகிற தொழிற்சாலைதான் தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல் கிராமத்திலுள்ள சிர்க்கோனியம் திட்டம். இது 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் துவக்கி வைக்கப்பட்டது. ஆண்டு தோறும் சுமார் 500 டன் சிர்க்கோனியம் ஆக்ஸைட் மற்றும் 250 டன் சிர்க்கோனியம் உறிஞ்சியை (sponge) அணுமின் நிலையங்களுக்காக இந்த ஆலை உற்பத்தி செய்யும்.

[6] இந்திய அரும்மணல் நிலையம் (Indian Rare Earths Ltd.), மணவாளக்குறிச்சி, குமரி மாவட்டம்:

சிர்க்கோனியம் திட்டத்துக்குத் தேவையான சிர்கோன் மணல் இங்கே பிரித்தெடுக்கப்படுகிறது. அரியவகை மணல் நிலையம் கேரள மாநிலம் ஆலுவா எனுமிடத்தில் ஆகஸ்ட் 18, 1950 அன்று இந்திய அரசு மற்றும் திருவிதாங்கூர் அரசுகளால் ஒரு தனியார் நிறுவனமாகத் தொடங்கப்பட்டது. பின்னர் 1963-ம் ஆண்டு அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் மத்திய அரசின் நிறுவனமாக மாற்றப்பட்டது. அப்போது கேரளாவில் சவர எனுமிடத்திலும், குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியிலும் இரு நிலையங்கள் அமைக்கப்பட்டன. மணவாளக்குறிச்சி அரியவகை மணல் நிலையம் கன்னியாகுமரியிலிருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இங்கே ஆண்டு தோறும் 90,000 டன் இல்மனைட் (Ilmenite), 3,500 டன் ரூட்டைல் (Rutile), 10,000 டன் சிர்கோன் (Zircon), 3,000 டன் மோனோசைட் (Monazite), 10,000 டன் கார்னெட் (Garnet) மணல்கள் கடற்கரையிலிருந்து தோண்டி எடுக்கப்படுகின்றன. அரியவகை மணல்கள் கொண்ட பகுதிகளிலிருந்து மணல் தோண்டி எடுக்கும் உரிமமும் பெற்றிருக்கிறது இந்த நிறுவனம். மணலைத் தோண்டி எடுப்பதோடு, தாது மணல்களைப் பிரித்தெடுக்கும் ஆலையும், சிர்கோனை மேம்படுத்தும் வேதியல் ஆலையும் இங்கே இயங்குகின்றன.

தமிழன் என்று சொல்லடா, தட்டிக்கேட்டு நில்லடா!

மேற்கண்ட அணுசக்தித் திட்டங்கள் அனைத்துமே தமிழர்களின் வாழ்வுரிமைகளை, வாழ்வாதார உரிமைகளை மீறுகின்றன. நம்மை கடும் நோய் நொடிகளுக்குள் தள்ளுகின்றன. நமது வருங்காலத்தை, வரவிருக்கும் சந்ததிகளை அழிக்கின்றன. இந்தத் திட்டங்கள் பற்றிய முழு உண்மைகளை, முழுமையான தகவல்களை நமக்குத் தருவதில்லை. பிரதமரும், மத்திய அமைச்சர்களும், அணுசக்தித் துறை அதிகாரிகளும் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு, உணர்வுகளுக்குக் கடுகளவும் மரியாதை கொடுக்காமல், பொறுப்புணர்வின்றி பேசுகின்றனர்; அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். தமிழர்களின் வாக்குகளையும், ஆதரவையும் மட்டும் விரும்பும் சில அரசியல் கட்சிகள், மேற்கண்ட மக்கள் விரோதத் திட்டங்களை, தீமைகளை தட்டிக்கேட்பதில்லை.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் தமிழர்களே, உங்களின், உங்கள் குழந்தைகள்—பேரக்குழந்தைகளின் பாதுகாப்பு, நல்வாழ்வு, எதிர்காலம் கேள்விக்குறியாவதை கவனிக்கிறீர்களா? தமிழகம் வளர வேண்டும், அதற்கு மின்சாரம் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இயற்கையை அழிக்காத, மக்கள் உடல்நலத்தைக் கெடுக்காத பல வழிகள் இருக்கும்போது, ஏன் ஆபத்தான அணுத் தீமைகளை எங்கள்மீது சுமத்துகிறீர்கள் என்றுதான் கேட்கிறோம். பன்னாட்டு நிறுவனங்களுக்கு லாபமும், உங்களுக்கு ஏராளமான கமிஷனும் கிடைக்கும் என்பதற்காக, எங்களை பலிகடா ஆக்காதீர்கள் என்கிறோம். தமிழர்கள் என்றால் கிள்ளுக்கீரைகள் என்று எண்ணாதீர்கள், நடத்தாதீர்கள் என்று உரிமைக்குரல் எழுப்புகிறோம். அணுத் தீமையற்ற தமிழகம் அமைத்திட விழைந்து நிற்கிறோம்.

- அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் & கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு

Pin It