அரசின் அணுகுமுறைகளும், அதிகாரிகளின் நடவடிக்கைகளும் மக்களை மதிக்கவில்லை

கன்னியாகுமரி முதல் திப்ருகர் (அஸ்ஸாம்) வரை தொடர்வண்டிப் பரப்புரை, பிப்ருவரி 19-28, 2015

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தொடர்வண்டிப் பரப்புரை பயணம் பிப்ருவரி 19, 2015,வியாழனன்று இரவு 11 மணிக்கு கன்னியாகுமரி ரயில் நிலையத்திலிருந்து துவங்கியது. இந்த பயணத்தை இந்திய பொதுவுடமைக் கட்சி (மா. லெ)--விடுதலை மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் துவக்கி வைத்தார். மா. லெ. தோழர் ஜி. ரமேஷ் உள்ளிட்ட கட்சித் தொண்டர்களும், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத் தோழர்களும், பொதுமக்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய தோழர்கள் நமது நாடு ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளோடு ரகசிய அணுசக்தி ஒப்பந்தங்கள் போடுவதையும், இவை பற்றி மக்களிடம் உண்மைகளைத் தெரிவிக்காமல் இரகசியம் காப்பதையும் கண்டித்தனர். அண்மையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் ஒரு ரகசிய ஒப்பந்தம் போட்டுவிட்டு, அரசியல் அழுத்தத்தின் காரணத்தால் அமெரிக்கா-இந்தியா அணுசக்தி ஒப்பந்தத்தின் அடிப்படையில் இழப்பீடு பற்றி "அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்" என்று ஒரு தகவல் அட்டை வெளியிட்டிருக்கிறது. அதுபோல கூடங்குளம் 1 & 2 அணுமின் நிலையங்களின் இழப்பீடு தொடர்பாக 2008-ஆம் ஆண்டு இந்தியாவும், ரஷ்யாவும் செய்துகொண்ட ரகசிய ஒப்பந்தத்தின் அடிப்படைத் தகவல்களை உள்ளடக்கிய "அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்" உடனடியாக வெளியிட வேண்டும் என மத்திய அரசை வற்புறுத்தினர்.

அதுபோல இரண்டு வருடங்கள் ஏழு மாதங்கள் கழித்து, கடந்த சனவரி 31, 2014 அன்று அதிகாலை கூடங்குளம் அணுஉலை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும், அரசு ஊழியர்கள், அணுசக்தித் துறையினர் பலரும் இருக்கன்துறை எனும் நெல்லை மாவட்ட கிராமத்தில் பேரிடர் பயிற்சி ஒன்றை நடத்தினர். இது 2,000 பேர் மட்டும் வசிக்கும் ஒரு சிறிய கிராமம். ஒருசில அதிகாரிகள் அவரசம் அவசரமாக சில வீடுகளில் நுழைந்து "டெங்கு காய்ச்சலுக்கு மாத்திரை தருகிறோம்" என்று கூறி மாத்திரை விநியோகித்தனர். ஒரு காவல்துறை உயர் அதிகாரி ஊருக்கு நடுவே நின்று யாருக்கும் கேட்காதபடி சன்னமான குரலில் பேரிடரை அறிவிப்பது போன்று ஏதோ சொன்னார். உடனடியாக வெறும் 3 பேருந்துகளில் சுமார் 150 பேரை ஏற்றி "அப்புறப்படுத்தினார்கள்" அதிகாரிகள். அவர்கள் அனைவரையும் அணுஉலை டவுன்ஷிப் வளாகத்துக்குக் கொண்டுபோய் சாப்பாடு கொடுத்து, பரிசுப் பொருட்களும் கொடுத்து அனுப்பிவிட்டனர். இந்த அரைகுறை நிகழ்வை மும்பையிலிருந்து வந்திருந்த அணுசக்தி ஒழுங்காற்று வாரிய அதிகாரி ஒருவர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கருணாகரன் "நாங்கள் 2,000பேருக்கு திறம்பட பேரிடர் பயிற்சி கொடுத்தோம்" என்று சொன்னார். பத்திரிகையாளர்களிடம் பேசிய அந்த கிராம மக்கள் "என்ன நடக்கிறது என்றே எங்களுக்குத் தெரியாது" என்று வாக்குமூலம் கொடுத்திருக்கின்றனர்.

இம்மாதிரியான அரசின் அணுகுமுறைகளும், அதிகாரிகளின் நடவடிக்கைகளும் மக்களை கடுகளவும் மதிக்காமல் தான்தோன்றித்தனமாக செயல்படுவதை சுட்டிக்காட்டுகின்றன.

இந்தப் பயணத்தில் சுமார் 25 தோழர்கள் இந்தியாவிலேயே மிக நீண்ட ரயிலான விவேக் எக்ஸ்பிரஸ்(Train No. 15905) மூலம் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காளம், நாகலாந்து ஆகிய மாநிலங்கள் வழியாகப் பயணித்து தமிழ், மலையாளம், தெலுங்கு, ஒடியா, வங்காளி, அஸ்ஸாமீஸ் இந்தி,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் துண்டுப் பிரசுரங்களை எல்லா ரயில் நிலையங்களிலும் விநியோகிப்பார்கள்.

நமது இழப்பீடு சட்டத்தை நமது மத்திய அரசே அவமதித்து அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு போன்ற அந்நிய நாடுகளுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்கலாமா என்கிற கேள்வியையும் மக்கள் முன்னால் வைக்கப் போகிறார்கள். அடிமைகள் போல நடந்து நாட்டை மறுகாலனி ஆதிக்கத்துக்குள் தள்ள வேண்டுமா, அல்லது தலைவர்கள்போல சிந்தித்து நமது பிரச்சினைகளை படைப்பாற்றலுடன், நமக்கே உரித்தான வழிகளில் தீர்க்க முயல வேண்டுமா என்றும் மக்களிடம் கேட்கவிருக்கிறார்கள்.

Pin It