என்ன தலைப்பே புரியவில்லை! சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது என்கிறீர்களா? தொடர்பு இருக்கிறது; தொடர்ந்து பார்ப்போம். போக்ஸ்வாகனுக்கும் ஓபன் சோர்ஸ் மென்பொருளுக்கும் இருக்கும் தொடர்பைப் பார்ப்பதற்கு முன்னர், போக்ஸ்வாகன் மோசடி என்பது என்ன என்பதைக் கொஞ்சம் பார்த்து விடுவோம்!

ஃபோக்ஸ்வாகன் மோசடி :

ஜெர்மனியைச் சேர்ந்த போக்ஸ்வாகன் நிறுவனம், உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாகும். டொயோட்டாவிற்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாகத் தொடர்ந்து பல ஆண்டுகளாக போக்ஸ்வாகன் இருந்து வருகிறது.

நிறுவனம் பெரிதாகப் பெரிதாகப் பணத்தாசை வருவதும், அந்த ஆசை பேராசையாகி நிறுவனத்தையே விழுங்குவதும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒன்றும் புதிதில்லை. இதே பணப்பேராசை தான் ஃபோக்ஸ்வாகனையும் விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் நம் ஊரில் இருப்பது போல ஏப்பை சாப்பையாக இல்லாமல் சுற்றுச்சூழல் விதிகள் ஓரளவு பின்பற்றப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு காரும் இவ்வளவு புகையை வெளியிடலாம் என்றும் அதற்கு மேல் வெளியிட்டால் அந்த கார்களுக்கு அனுமதி கிடையாது என்பதும் அங்கு கடைபிடிக்கப்படும் சுற்றுச்சூழல் விதிகளாக உள்ளன.

பேராசை என்னும் பேய் இந்த விதிகளை எல்லாம் ஒழுங்காகக் கடைபிடிக்க விடுமா? அந்தப் பேய் ஃபோக்ஸ்வாகனைப் பிடித்து ஆட்டு ஆட்டு என்று ஆட்டிவிட்டது அவ்வளவு தான்! ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் செய்த தவறு ஒன்றே ஒன்று தான் - இந்தப் புகை அளவைக் குறைத்துக் காட்டும் சிறிய மென்பொருளைத் தன்னுடைய கார்களில் நிறுவி அமெரிக்க அரசை நன்றாக ஏமாற்றி விட்டது. அதுவும் ஆண்டுக்கணக்கில்! சும்மா விடுவார்களா? விளைவு - ஏறத்தாழ 80 ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்த ஃபோக்ஸ்வாகன் இன்று கோடிக்கணக்கான தன்னுடைய கார்களைத் திரும்ப வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்தத் தவற்றால் ஃபோக்ஸ்வாகனுக்கு 6600 கோடி டாலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மேற்கொண்டு 1800 கோடி டாலர் வரை அமெரிக்க அரசுக்குத் தண்டம் வேறு கட்ட வேண்டும்.

புகை அளவுச் சோதனையில்  இருந்து  ஃபோக்ஸ்வாகன்  எப்படித்  தப்பியது ?

புகை அளவுச் சோதனையை அரசாங்கத்திடம் நடத்தி ஒப்புதல் வாங்கித் தானே ஃபோக்ஸ்வாகன் தன்னுடைய கார்களைச் சந்தைக்குக் கொண்டு வந்திருக்கும்? அப்படியிருக்க ஃபோக்ஸ்வாகன் மீது என்ன தவறு இருக்க முடியும் என்கிறீர்களா? உங்கள் கேள்வி நியாயமானது தான்! இங்குத் தான் தன்னுடைய மென்பொறியாளர்களைப் பயன்படுத்தியிருக்கிறது ஃபோக்ஸ்வாகன். அவர்கள் உருவாக்கிய ஒரு மென்பொருள் மூலம் புகை அளவுச் சோதனையில் இருந்து ஃபோக்ஸ்வாகன் கார்கள் தப்பியிருக்கின்றன.

என்ன தான் செய்தது  அந்த மென்பொருள் ?

புகை அளவுச் சோதனையின் போது காரின் வட்டு(ஸ்டீரிங்) எப்படி இயங்கும், காரின் வேகம் எப்படி இருக்கும், இஞ்சினின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பன போன்ற பல விவரங்களை உள்ளிட்டு ஒரு மென்பொருளை(சாப்ட்வேரை) உருவாக்கியிருக்கிறார்கள். இந்த மென்பொருளானது, மேல் சொன்ன விவரங்களைக் கொண்டு வண்டி புகை அளவுச் சோதனையில் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடித்து விடும். அப்படிக் கண்டுபிடித்து, புகை அளவுச் சோதனை என்றால், குறைவான அளவு கரியை வெளிவிடும். சாதாரணமாக, பிற நேரங்களில் சாலையில் செல்லும் போது புகை அளவுச் சோதனையைப் போல, 15 – 40 மடங்கு அதிகக் கரியை வெளிவிடும். இப்படிச் செய்வதன் மூலம் புகை அளவுச் சோதனையில் இருந்து எளிதில் தப்பி விடலாம் இல்லையா? இப்படித் தான் ஃபோக்ஸ்வாகன் கார்கள் அனைத்தும் புகை அளவுச் சோதனையில் இருந்து தப்பியிருக்கின்றன. இதைப் பார்த்துத் தான், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இது திட்டம் போட்டுச் செய்த திருட்டுத்தனம் என்று கொதித்து எழுந்து விட்டார்கள். பின்னே, அவர்கள் கொதிப்பிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது?

சரி, இதெல்லாம் புரிகிறது - இதற்கும் ஓபன் சோர்ஸ் மென்பொருளுக்கும் என்ன சம்பந்தம்? பார்த்து விடுவோம்.

ஓபன் சோர்ஸ் மென்பொருள் :

ஓபன் சோர்ஸ் மென்பொருள் என்பதைத் தமிழில் திறந்த மூல மென்பொருள் என்கிறார்கள். அதாவது, ஒரு மென்பொருளை உருவாக்கிய பிறகு, அந்த மென்பொருளில் என்னென்ன எழுதியிருக்கிறது என்பதை எல்லோர் பார்வைக்கும் படும்படி கொடுத்து விடுவது! கிட்டத்தட்ட, சாப்பிடுவதற்கு இட்லியோ தோசையோ வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த இட்லியிலும் தோசையிலும் என்னென்ன கலந்திருக்கிறது என்று கேட்டால் கடைக்காரர் சொல்ல வேண்டும் அல்லவா? இதே கதை தான்! ஒரு மென்பொருளை நாம் பயன்படுத்துகிறோம் என்றால், (அதுவும், இரகசிய ஒற்றர்களாகப் பல மென்பொருட்கள் உலாவி வரும் இன்றைய காலக்கட்டத்தில்) அந்த மென்பொருளில் என்னென்ன எழுதியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது நம்முடைய உரிமை அல்லவா? இதைத் தான் திறந்த மூல (ஓபன் சோர்ஸ்) மென்பொருள் என்கிறார்கள்.

ஃபோக்ஸ்வாகன்   மோசடியை  ஓபன் சோர்ஸ்  தடுத்திருக்குமா ?

ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் தன்னுடைய மிகப்பெரிய மோசடியை மிக எளிதாக ஒரு சிறிய மென்பொருளை எல்லா கார்களிலும் நிறுவிச் செய்து காட்டியிருக்கிறது. இந்தச் சின்னஞ்சிறிய மென்பொருள் மட்டும் ஓபன் சோர்ஸ் மென்பொருளாக இருந்திருந்தால்? இந்த மென்பொருள் எப்படி இயங்கும் என்பதையும் அதற்குரிய புரோகிராம்களை எப்படி எழுதி வைத்திருக்கிறார்கள் என்பதையும் மென்பொறியாளர்கள் முன்னரே எளிதாகக் கண்டுபிடித்திருப்பார்கள்.

ஃபோக்ஸ்வாகன் கார்களில் இப்படிப்பட்ட தவறான காரணத்துக்காகப் பயன்படுத்தப்படும் மென்பொருள் இருக்கிறது என்பது தொடக்கத்திலேயே தெரிந்திருக்கும். அதன் மூலம் அந்நிறுவனத்திற்குப் பல கோடிக் கணக்கில் தண்டமும் நட்டமும் கெட்ட பெயரும் ஏற்பட்டிருக்காது. இவை எல்லாவற்றையும் தாண்டி அந்த கார்களில் இருந்து அளவுக்கதிகமான கரி வெளிவந்து பூமி மாசு பட்டிருக்காது.

சரி தானே நான் சொல்வது? இது போன்ற தவறுகளையும் மோசடிகளையும் குறைப்பதற்கும் தடுப்பதற்கும் தான் திறந்த மூல மென்பொருளுக்காகப் (இதன் மற்றொரு பெயர் - கட்டற்ற மென்பொருள்) நல்ல பல மென்பொறியாளர்கள் உலகமெங்கும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் உங்களால் முடிந்த அளவு அவர்களுள் ஒருவராகவோ அவர்களுக்கு உதவுபவராகவோ இருக்க முயலுங்களேன். (எனக்குத் தெரிந்தவரை, தமிழ்நாட்டில் கட்டற்ற மென்பொருளுக்காக உழைப்பவர்களைத் தொடர்பு கொள்ள http://fsftn.org/ தளத்தையோ http://www.kaniyam.com/ தளத்தையோ தொடர்பு கொள்ளுங்கள்.)

- முத்துக்குட்டி

(கட்டுரை – அக்டோபர் 16-31, 2015 ‘தமிழ் கம்ப்யூட்டர்’ இதழில் வெளிவந்தது)  

Pin It